Published:Updated:

வெள்ளி நிலம் - 13

வெள்ளி நிலம் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 13

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமய மலைப் பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில், பழங்கால மம்மி  ஒன்று தற்செயலாகக் கிடைக்கிறது. அது, ஒரு குறிப்பிட்ட வகையில் கால் மடித்து அமர்ந்திருக்கிறது. அதைச் சிலர் கொள்ளையடிக்க முயல்கிறார்கள். அதன் உடலில் அழிந்துபட்ட பழங்காலச் சீன எழுத்துக்கள் உள்ளன. அவை, திபெத்திலிருந்த பழைமையான பான் மதத்தினரின் ஓவியத் திரைச்சீலைகளிலும் இருந்தன. அந்த மம்மி கிடைத்த தகவல் எவருக்கோ தெரிகிறது. அவர்கள், அந்த மம்மியைத் திருட வருகிறார்கள். அவர்களின் நோக்கம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க, பாண்டியன் பணியமர்த்தப்படுகிறார். அவருக்கு உதவியாக, கொள்ளையர்களை நேரில் பார்த்த சிறுவன் நோர்பாவும் அவனது ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் நாக்போவும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் ஆராய்ச்சியாளர் நரேந்திர பிஸ்வாஸின் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சிசெய்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, பூட்டானில் ஒரு தடயம் இருப்பதாகத் தெரிகிறது. அதை உறுதிசெய்ய பாண்டியன், நோர்பா மற்றும் நாக்போ ஆகியோர் பூட்டான் செல்கிறார்கள்...

வெள்ளி நிலம் - 13

பாண்டியன், நோர்பா, நாக்போ, டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் நால்வரும் அன்று மாலையே ‘லே’ நகருக்கு வந்து சேர்ந்தனர். அன்று, கடுமையான பனி பொழியத் தொடங்கியிருந்தது. வானம் மழை மூட்டம் வந்ததுபோல இருந்தது. பஞ்சுத்தலையணையை உதறியதுபோல திப்பிகளாகப் பனி மெள்ள இறங்கியது. பனி உதிர்ந்த இடங்களில் உப்புபோல குவிந்தது. சூரியனே தெரியவில்லை. ஆனால், பனியின் வெண்மை காரணமாக ஒருவகை வெளிச்சம் இருந்தது. நிலவொளியில் பார்ப்பதுபோல தெரிந்தது.

“இந்தப் பனியில் ஹெலிகாப்டர்கள் செல்லுமா?” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கேட்டார். “சாதாரண ஹெலிகாப்டர்கள் செல்ல முடியாது. அவற்றின் சிறகுகளில் பனி படிந்து, எடை கூடி, அவை முறிந்துவிடும். பாதையும் தெரியாது.  கடும் பனிக்காலத்துக்குரிய ராணுவ ஹெலிகாப்டரை வரச் சொல்லியிருக்கிறேன்” என்றான் பாண்டியன்.

வெள்ளி நிலம் - 13



அவர்கள், லே  ராணுவ முகாமில் ஓர் இரவு தங்கியிருந்தார்கள். நாக்டோவும் நோர்பாவும் சிறிய அறை ஒன்றில் தங்கினர். அன்று முழுக்க அவர்களின் கூரைமேல் பனி கொட்டியது. பனிப்பாளம் உருவான பிறகு, அது பிளந்து சரியும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

`ரஜாய்’ என்னும் மெத்தைக்குள் படுத்தபோது, குளிர்ந்த நீரில் மூழ்கியதுபோல நடுங்கியது. நோர்பா அந்த அறையில் இருந்த வெப்பக் கருவியை உள்ளே சிறிது நேரம் வைத்திருந்தான். மெத்தைக்குள் சூடு நிறைந்ததும் உடல் நடுக்கம் நின்றது. அதன் பிறகே தூக்கம் வந்தது.

காலையில், ராணுவ முகாமில் சங்கு ஊதும் சத்தத்தைக் கேட்டு நோர்பா விழித்துக்கொண்டான். எழுந்துசென்று ஜன்னல் கதவைத் திறந்தான். அது இரண்டு கண்ணாடிகளால் ஆன ஜன்னல். வெளியே இருந்த கண்ணாடியைத் திறக்க முடியவில்லை. அது, பனிப்பாளத்தால் மூடப்பட்டிருந்தது.

நாக்போ, தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்துக்கு அடியில் போய்ச் சுருண்டு படுத்திருந்தது. மூக்கை அடிவயிற்றில் வைத்து `ர்ர்ர்ர்’ என்று ஓசை இட்டது. நோர்பா, அங்கு இருந்த மின்சார வெந்நீர்க் குடுவையை எரியவிட்டான். அதன் சூடு தெரியத் தொடங்கியதும் நாக்போ எழுந்து அதன் அருகே வந்து சுருண்டு படுத்தது.

நீர் கொதித்ததும் அதை எடுத்துச் சென்று, ஜன்னல் கண்ணாடியின் மேல் ஊற்றினான் வெளியே பனிக்கட்டி உருகுவது தெரிந்தது. ஒரு தள்ளு தள்ளியபோது கண்ணாடி உடைவது போன்ற ஒலியுடன் ஜன்னல் திறந்தது. வெளியே சாம்பல் நிறமான ஒரு திரை தொங்குவதுதான் தெரிந்தது.

நாக்போ, “ஏன் கதவைத் திறக்கிறாய்?” என்றது.

“கதவைத் திறந்தால்தான் விடிந்திருப்பதுபோல தோன்றுகிறது. இல்லாவிட்டால் இரவுதான் என்று படுகிறது” என்றான் நோர்பா.

அவன், கொதிநீரில் டீ தயாரித்தான். அதைக் குவளையில் எடுத்துக்கொண்டு வந்து, ஜன்னல் அருகே நின்றபடி வெளியே நோக்கினான். சாம்பல் நிறமான திரையில் தீப்பிடித்ததுபோல தோன்றியது. அந்தத் தீ பரவுவதுபோல இருந்தது.

அது, சிவந்த விளக்குகளின் ஒளி என்று பிறகுதான் புரிந்தது. ராணுவ ஹெலிகாப்டர் என அவன் உடனே தெரிந்துகொண்டான். மேகங்களில் இடிமுழங்குவதுபோல அதன் ஒலி கேட்டது. அது, கொக்குபோல மெள்ள வந்து இறங்கியது. அப்போதுதான் அதைப் பார்க்க முடிந்தது.

நோர்பா உற்சாகமாக, “நாம் கிளம்புகிறோம்” என்றான்.

“இந்தக் குளிரிலா... மனிதர்களைப்போல முட்டாள்கள் உண்டா?” என்று முனங்கியது நாக்போ.

நோர்பா, வெந்நீரில் துணியை நனைத்து,  முகத்தையும் கைகளையும் துடைத்தான்; பனிக்கான ஆடைகளை அணிந்துகொண்டான்.

ராணுவ வீரர் ஒருவன் வந்து கதவைத் தட்டி, ``அவர்கள் கிளம்பலாம்’’ என்றான்.

அவர்கள், அறைகள் வழியாக நடந்தனர். ஹெலிகாப்டர் தளத்தின் அருகே, இருந்த கண்ணாடி அறைக்குள் சென்றனர். அங்கே, டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் பாண்டியனும் இருந்தனர். அவர்கள், கனத்த பனி ஆடைகள் அணிந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடிகளையும் போட்டிருந்தனர்.

பாண்டியன், “கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொள். பனியில் கண் கூசுகிறது” என்றான்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் “இவர்களின் கண்கள் பனியைப் பார்க்க ஏற்றபடி அமைந்தவை. சிறிய கண்கள். பனியின் வெளிச்சத்தால் கூசுவதில்லை” என்றார்.

ஹெலிகாப்டரின் ஓட்டுநர் உள்ளே வந்தார். அவர் பெயர், கேப்டன் நீரஜ் சிங். அதை, அவரது மார்பில் இருந்த வில்லையில் நோர்பா வாசித்தான்.

நாக்போ, “இவனை எனக்குப் பிடிக்கவில்லை” என்றது. 

“செல்வோம்” என்று நீரஜ் சொன்னார்.

“மிக மோசமான வானிலை. ஆனால், மோசமான வானிலையில் ஓட்டுவது எனக்குப் பிடிக்கும்.”

அவர்கள் வெளியே சென்றதும் கடுமையான பனிக்காற்று அவர்களைத் தாக்கியது. குனிந்தபடி அவர்கள் ஹெலிகாப்டரை நோக்கி ஓடினர். 

வெள்ளி நிலம் - 13

அந்த ஹெலிகாப்டரின் மேல் மூன்று சிறகுள்ள பெரிய காற்றாடி இருந்தது. பக்கவாட்டில் இரண்டு காற்றாடிகள். வாலில் சிறு காற்றாடி ஒன்று என எல்லா காற்றாடிகளும் சுழன்றுகொண்டிருந்தன.

அவர்கள் ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டனர். நீரஜ் ஒரு கைப்பிடியை இழுக்க, கதவு மேலிருந்து வந்து மூடிக்கொண்டது. இயந்திரங்களின் ஓசையும் காற்றாடி சுழலும் ஓசையும் காற்றின் ஓசையும் சேர்ந்த முழக்கம் குறைந்தது.

``ஏன் இதை ஓடவிட்டிருந்தீர்கள்?” என்றான் நோர்பா.

“வெட்டவெளியில் காற்றாடி ஓடாமல் ஐந்து நிமிடங்கள் நின்றால், பனி படர்ந்து உறைந்துவிடும்” என்றார் நீரஜ்.

“இது, பனிப்பொழிவில் எப்படிச் செல்கிறது?” என்று நோர்பா கேட்டான்.

“இது மிக வேகமான ஹெலிகாப்டர். ஆகவே, இதில் பனி படர்வதில்லை. செயற்கைக்கோள் வழிகாட்டியை நம்பி இது பறக்கிறது. ரேடார் வசதியும் இதில் உண்டு” என்றார் நீரஜ்.

ஹெலிகாப்டர் மேலெழுந்தது. அண்ணாந்து அமர்ந்து செங்குத்தாக அவர்கள் வானில் ஏறினார்கள். மேலும் மேலும் சென்றுகொண்டே இருந்தார்கள்.

“இத்தனை உயரத்துக்குச் சாதாரண ஹெலிகாப்டர்கள் செல்வதில்லையே” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“மேலே சென்றால் பனிப்பொழிவு இருக்காது. இது பனிக்கு மேலேயே செல்லும். இதில் விமானங்களுக்குரிய எல்லா வசதிகளும் உள்ளன. உள்ளே காற்று செறிவூட்டப்பட்டுள்ளது. ஆகவே, மூச்சுத்திணறுவதில்லை” என்றார் நீரஜ்.

“மேலே சென்றால் குளிர் கூடத்தானே செய்யும்?” என்று நோர்பா கேட்டான்.

“ஆமாம். ஆனால், அங்கே குளிரில் பனியாக மாறுவதற்குத் தேவையான நீராவி இருக்காது” என்றார் நீரஜ்.

அவர்கள் மேலே சென்று, நேராக மாறி செல்லத் தொடங்கினர். பளிச்சிடும் வெளிச்சம் வானில் நிறைந்திருந்ததை நோர்பா கண்டான். கோடைக்காலத்து உச்சிவெயில்போல இருந்தது.

“வெளியே மைனஸ் 20 டிகிரி குளிர்” என்றார் நீரஜ் சிரித்தபடி.

அவர்களுக்குக் கீழே இமயமலையின் பனிச்சிகரங்கள் தெரியத் தொடங்கின. அவை, பல்வேறு பொருள்களுக்கு மேல் வெண்ணிறமான போர்வையைப் போர்த்தியவைபோல இருந்தன.

நோர்பா, அந்த மலைகளையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு வந்தான். கீழிருக்கையில் வானத்தில் மேகங்கள்போல தெரியும் மலைச்சிகரங்கள் அவை.

சூரியவெளிச்சத்தில் சில மலைச்சரிவுகள் கண்ணாடி ஒளிவிட்டன. மலைகளின் அடியில், வெண்ணிறப் பனி மென்மையாக வழிந்து நின்றது.

“நாம் லடாக்கிலிருந்து கிளம்பி, ‘ஸ்பிடி’ சமவெளிக்கு மேல் பறந்துகொண்டிருக்கிறோம். உத்தரகாண்டில் ராணுவ விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்ப வேண்டும். அங்கிருந்து நேபாளத்தின் வானம் வழியாகச் சிக்கிமைக் கடந்து, பூட்டான் செல்வோம்” என்றார் நீரஜ்.

``சிக்கிம், இந்தியாவின் பகுதி அல்லவா?” என்றான் நோர்பா.

“சிக்கிம், பூட்டான் இரண்டுமே திபெத்தையும் லடாக்கையும்போல பௌத்த மதத்தால் ஆட்சி செய்யப்பட்ட இடங்கள். சிக்கிம் நெடுங்காலம் மலைக்குடிகள் வாழும் நிலமாகத்தான் இருந்தது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் திபெத்தில் இருந்து பத்மசம்பவர் என்னும் பௌத்த ஞானி இமயமலை வழியாக சிக்கிமுக்குள் சென்றார். அங்கே, அவர் பௌத்த மதத்தைப் பரப்பினார். அங்கிருந்து அவர் பூட்டானுக்குள் சென்றார். அங்கும் பௌத்த மதத்தை நிறுவினார்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்து சொன்னார். “அதன் பிறகு அங்கே பௌத்த மதத்தைச் சேர்ந்த அரசர்கள் ஆண்டார்கள். 16-ம் நூற்றாண்டில், புண்ட்ஸோங் நம்கியால் என்கிற அரசர் உருவாக்கிய அரசவம்சம்தான் கடைசியாக ஆட்சி செலுத்தியது. அதன் பிறகு பிரிட்டிஷார் சிக்கிமைக் கைப்பற்றினர்.”

“இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, சிக்கிம் இந்தியாவுடன் சேரவில்லை அல்லவா?” என்றான் பாண்டியன்.

“ஆம். அப்போதிருந்த அரசர் இந்தியாவுடன் சேர விரும்பவில்லை. ஆகவே, இந்தியாவின் ராணுவப் பாதுகாப்புக்குள் தனி நாடாகவே சிக்கிம் இருந்தது. 1975-ம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைந்து தனி மாநிலமாக ஆனது. ஆனால், இன்று அங்கே ஆட்சி செய்வது பழங்குடிகளின் சபைதான்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

நாக்போ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அவ்வப்போது அதன் இமைகள் மட்டும் அசைந்தன.

“பூட்டான் நம்முடன் இணையவில்லையா?” என்றான் நோர்பா.

“இல்லை. பூட்டான் அப்படியே தனி நாடாக நீடிக்கிறது. அதை ‘நம்கியால்’ வம்சத்தைச் சேர்ந்த ஜிங்மே கெஸர் ஆட்சி செய்கிறார். அவருக்கு ராணுவம் இல்லை. இந்திய ராணுவம்தான் பாதுகாப்பு அளிக்கிறது” என்றார் டாக்டர்.

“சிக்கிம், பூட்டான் போன்ற நாடுகள் எல்லாமே சீனாவைக் கண்டு அஞ்சுகின்றன. திபெத்தை, சீனா கைப்பற்றியது. இப்போது நேபாளமும் மறைமுகமாக சீனாவின் பிடியில் இருக்கிறது. சிக்கிமையும் அருணாசலப்பிரதேசத்தையும் சீனா உரிமை கொண்டாடுகிறது” என்றார் நீரஜ்.

அவர்கள், உத்தரகாண்டில் மலைச்சரிவில் இருந்த ராணுவ விமானத்தளத்தில் இறங்கினர். அங்கு இருந்த அறைக்குச் சென்று, கழிவறைக் கடன்களை முடித்துக்கொண்டனர். அதற்குள் ஹெலிகாப்டருக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அவர்களுக்wகுச் சூடான டீ கொடுத்தனர். தேவையான உணவையும் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டார்கள்.

நேபாளத்தைக் கடந்து செல்வது மிகக் கடினமாக இருந்தது.

“அங்கே கடுமையான பனிச் சூறாவளி அடிக்கிறது” என்றார் நீரஜ்.

“நாம் இன்னும் மேலே செல்ல முடியாதா?” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கேட்டார்.

“ஜெட் விமானங்களைப்போல நாம் செல்ல முடியாது. அவை ராக்கெட் விசையால் செல்பவை. நமக்குக் காற்றாடிகள் சுழல்வதற்கான காற்று வேண்டும்” என்றான் பாண்டியன்.

“மலைச்சிகரங்களுக்கு நேர் மேலே செல்வது ஆபத்தானது. அங்கே காற்றுக்குமிழ்கள் இருக்கும்” என்று நீரஜ் சொன்னார்.

“அப்படியென்றால்?” என்றான் நோர்பா.

“கீழிருந்து வரும் காற்று அங்கே மேலேறிச் சுழிக்கும்” என்றார் நீரஜ்.

கீழே மலைச்சிகரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். மலைகளின் அடியில், காடுகள் முழுக்க பனியால் மூடப்பட்டு வெண்ணிற அலைகளாகத் தெரிந்தன.

“அதோ... அதுதான் எவரெஸ்ட்” என்றார் நீரஜ்.

“எங்கே?” என்று நோர்பா கேட்டான்.

“செயற்கைக்கோள் வரைபடத்தை வைத்துத்தான் அடையாளம் காண முடியும்… இதோ” என்று நீரஜ் சுட்டிக்காட்டினார். 

வெள்ளி நிலம் - 13

அவர்கள் எவரெஸ்டின் மேலேயே சென்றார்கள். எவரெஸ்ட் சிறிய பனிக்குவியல்போல தெரிந்தது.

அதைக் கடந்ததும் நோர்பா பெருமூச்சுவிட்டான். “நான் அம்மாவிடம் இதைச் சொன்னால் நம்பவே மாட்டார்கள்” என்றான்.

“ஏன்?” என்றான் பாண்டியன் சிரித்தபடி.

“எவரெஸ்ட்டை எங்கள் மொழியில் `சோம்லுங்மா’ (Chomolungma) என்போம். `தெய்வங்களின் மலை’ என்று அதற்குப் பொருள். இந்த மலைக்குமேல்தான் புத்தர் இருக்கிறார் என்று எங்கள் மக்கள் நினைக்கிறார்கள்.’’

நெடுநேரம் அவர்கள் பனிமலைகளின் மேலேயே சென்றார்கள். “டார்ஜிலிங்கைக் கடந்துவிட்டோம்” என்றார் நீரஜ்.

“மாலைக்குள் நாம் திம்புவைச் சென்றடைய வேண்டும்” என்றான் பாண்டியன்.

“பார்ப்போம். கொஞ்சம் பனிப்புயல் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார் நீரஜ்.

சற்று நேரம் கழித்து, “சிக்கிமுக்கு மேல் இருக்கிறோம்” என்றார் நீரஜ்.

அப்போது, கீழிருந்து எவரோ உதைத்ததுபோல ஹெலிகாப்டர் தெறித்துச் சென்றது. மூவரும் அலறினர். நீரஜ் அதன் கருவிகளை மாறி மாறி அழுத்தினார். ஒலிக்கருவியில் பேசிக்கொண்டே இருந்தார்.

பின்னர், “கீழிருந்து வெப்பக்காற்று மேலே வருகிறது… அது நம்மை மேலே தூக்குகிறது’’ என்றார் நீரஜ்.

“வெப்பக்காற்றா?” என்றான் பாண்டியன்.

“ஆம், சில சமயம் தெற்கே வெப்பமான நிலத்திலிருந்து இமயமலைக்குள் காற்று வந்துவிடும். அது, மலைகளில் அடித்து மேலே சுழன்று ஏறும். வெப்பக்காற்று எடை குறைவானது. ஆகவே, அது மேலே மிதந்துவரும். அடிக்கடி நிகழ்வதில்லை. ஆனால், மிக ஆபத்தானது” என்றார் நீரஜ்.

அவர் ஒலிக்கருவியில் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். வானத்தில் ஓர் ஊசலில் கட்டிவிட்டதுபோல ஹெலிகாப்டர் ஆடியது.

திடீரென மீண்டும் ஓர் உதை விழுந்தது. ஹெலிகாப்டர் நிலை தடுமாறி பக்கவாட்டில் பறந்துசென்றது. அவர்கள் கூச்சலிட்டார்கள். ஹெலிகாப்டரின் ஒரு சிறகு முறிந்து தெறித்துக் கீழே பறந்து செல்வதை நோர்பா கண்டான்.

“என்ன சத்தம்... தூங்கவும் விட மாட்டீர்களா?” என்று நாக்போ முனகியது.

(தொடரும்...)

கோபி பாலைவனம் 

வெள்ளி நிலம் - 13

மயமலையின் தட்பவெப்பம் மிகச் சிக்கலானது. அதை ஆராய, தனியாக அறிவியலாளர்கள் உள்ளனர். மொத்த வடஇந்தியாவிலும் பெரிய மலைகள் ஏதும் இல்லை. ஆகவே, வங்காளத்திலிருந்தும் குஜராத்திலிருந்தும் எழும் காற்று நேராக வந்து இமயமலை மேல் மோதுகிறது. இந்தக் காற்றில் உள்ள நீராவி குளிர்ந்து, பனியாகப் பொழிகிறது. கோடைக்காலத்தில் அந்தக் காற்றில் உள்ள வெப்பத்தால் பனி உருகுகிறது. அவ்வாறுதான் கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா போன்ற பெரிய நதிகள் உருவாகின்றன.

இமயமலை மிக உயரமானது. ஆகவே, மொத்தக் காற்றையும் முழுமையாகவே தடுத்துவிடுகிறது. நீராவி முழுக்கப் பனியாகப் பொழிந்துவிடுகிறது. இமயமலைக்கு அப்பால்தான் கோபி பாலைவனம் உள்ளது. ஆசியாவிலேயே பெரிய பாலைவனம் இதுதான். உலகிலேயே மிகக் குறைவாக மழை பெய்யும் இடங்களில் ஒன்று இது. இங்கே கடும்குளிர் உண்டு. ஆனால், பனியாக மாறுவதற்கு நீராவி இல்லை. ஆகவே, வறண்ட குளிர் நிறைந்த பாலைவனம் இது.