பொது அறிவு
Published:Updated:

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

வெ.நீலகண்டன் - படங்கள்: அசோக்குமார்

ன்று போல டிவி, கார்ட்டூன் சேனல்கள், மொபைல் கேம் எல்லாம் போன தலைமுறைக்கு வாய்க்கவில்லை. அவர்களது இளமைக் காலத்தை சுவாரஸ்யமாகவும் கொண்டாட்டமாகவும் மாற்றியது காமிக்ஸ் புத்தகங்கள்தான்.  சினிமா ஹீரோக்களுக்கு இல்லாத ரசிகர்கள் அப்போதைய காமிக்ஸ் கதாநாயகர்களுக்கு உண்டு. இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, லாரன்ஸ் டேவிட், வேதாளம், மாண்ட்ரெக், ஸ்பைடர், ஆர்ச்சி எனச் சிறுவர்களின் கனவுலக நாயகர்களாக இருந்த காமிக்ஸ் ஹீரோக்கள் பலர் உண்டு. 

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என காமிக்ஸ் கதைகள் மட்டுமே வார, மாத இதழ்களாக வந்த காலம் ஒன்று இருந்தது. எப்போது புதிய இதழ் வரும் என்று கடை வாசலில் காத்துக்கிடந்து வாங்குவார்கள். துப்பறியும் கதைகள், சாகசக் கதைகள் என காமிக்ஸ் புத்தகங்கள் வேறொரு உலகத்துக்கு  நம்மை அழைத்துச் சென்று விடும்.

திரைப்படங்களும் தொலைக்காட்சி தொழில்நுட்பங்களும் வளர்ந்த பிறகு, காமிக்ஸ் மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டது. இப்போது, கார்ட்டூன் சேனல்கள் அசைகாட்சிகளாகவே வீட்டின் வரவேற்பறைக்குள் வந்து விடுகின்றன. பாடப் புத்தகங்களைத் தாண்டி பிற நூல்கள்  வாசிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டார்கள்.

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

இந்தச் சூழலில், கற்பனைத் திறனையும் படைப்புத்திறனையும் வளர்க்கும் காமிக்ஸ் புத்தகங்களைத் தேடித் தேடி சேகரித்து, அதை இந்தத் தலைமுறைக்கு அறிமுகம்செய்யும் பணியைத் தீவிரமாகச் செய்து வருகிறார், சிங்கப்பூரில் வசிக்கும் தயாளன். தமிழரான இவரது பூர்வீகம் செஞ்சி.

காமிக்ஸ் புத்தகங்கள் பற்றி இணையத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவர்,  அது குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கென http://www.muthufanblog.blogspot.com

http://www.muthucomics.com ஆகிய வலைதளங்களை நடத்தி வருகிறார். உலகெங்கும் பயணித்து, காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரித்து, அவற்றைத் தமிழ்ப்படுத்தும் பணியையும் செய்கிறார்.  சிங்கப்பூர்  குழந்தைகள், ‘காமிக்ஸ் மாமா’ என்றே தயாளனை அழைக்கின்றனர்.  

காமிக்ஸ் மீதான ஆர்வம் பற்றியும் காமிக்ஸ் பற்றியும் இந்த ‘காமிக்ஸ் மாமா’விடம் பேசினோம்.

“நான் செஞ்சியில் 6-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, நண்பன் ஒருவன் `இரும்புக்கை மாயாவி’யின் காமிக்ஸ் புத்தகத்தைப் பள்ளிக்குக் கொண்டுவந்தான். அதற்கு முன்பு அதுமாதிரியான காமிக்ஸ் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாகவில்லை. அதைப் படித்தபோது, அதிலிருந்த படங்களும் கதையும் என்னை வசீகரித்துவிட்டன. அதற்குப் பிறகு, காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என்று நான் தேட ஆரம்பித்தேன். 

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

நான் படித்த கதைகளில் இருந்த சாகசங்களே என்னை இந்தியக் கப்பற்படையில் சேர்வதற்கு அடித்தளமிட்டன. பல நாடுகளையும், பல ஊர்களையும் நான் ஏற்கனவே காமிக்ஸ் கதைகளில் பார்த்திருந்ததால், வெளிநாடுகளுக்குச் சென்று வேலைசெய்வதில் எனக்கு எப்போதும் தயக்கமிருந்ததில்லை. நியூயார்க்கில் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடத்தையும் லண்டனில் பாராளுமன்றத்தையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நான், காமிக்ஸில் அவற்றைப் பார்த்ததுமே முடிவு செய்தேன்.  

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!



17 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். காமிக்ஸுக்கு நம்முடைய குகை ஓவியங்கள்தான் முன்னோடி. பிரின்ட் வடிவில் 1800-களிலே காமிக்ஸ் வந்துவிட்டது. 1841-ம் ஆண்டு, இங்கிலாந்தில் ‘பன்ச்’ என்ற புத்தகம் வெளியானது. அரசியல் கேலிச்சித்திரங்களைக் கொண்ட இந்தப் புத்தகமே, ‘கார்ட்டூன்’ என்ற பாணியைப் பிரபலப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மையமாகவைத்து எழுதப்பட்ட முதல் காமிக்ஸ் தொடர் 1867-ல் இங்கிலாந்தின் ‘ஜூடி’ என்ற இதழில் வெளியானது.

தமிழைப் பொறுத்தவரை, 1945-46-ம் ஆண்டு, ‘பாலபாரதி’ என்ற இதழில் ஓவியர் மாயா உருவாக்கிய ‘வீர சிவாஜி’ என்ற கதைதான் தமிழின் முதல் சித்திரக் கதை என்று கூறலாம். ஆனந்த விகடனில் 1956-ம் ஆண்டு, ஓவியர் மாயாவின் கைவண்ணத்தில் ‘ஜமீன்தார் மகன் என்ற  முழுவண்ண காமிக்ஸ் தொடர் வெளி வந்தது.

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

அம்புலிமாமா (டால்டன் காமிக்ஸ்), இந்திரஜால் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் எனத் தமிழில் நிறைய பதிப்பகங்கள் காமிக்ஸை வெளியிட்டிருக்கின்றன.

காமிக்ஸ் படிக்காத குழந்தைகள் அவர்களது குழந்தைப்பருவத்தை இழக்கிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய கற்பனை வளம் மிக முக்கியம். நான், என்னுடைய வரலாறு, புவியியல், கணிதம் என எல்லாப் பாடங்களையுமே காட்சிப்படுத்தி (visualise) படித்து, நினைவில் வைத்துக்கொள்வேன். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள காமிக்ஸ் மிகவும் முக்கியமான கருவி. எழுத்துக் கதைகளைப் படிக்கும்போது, அவற்றை உருவகப்படுத்துவது ஒரு குழந்தைக்கு மிகவும் சிரமம். சினிமா மற்றும் கார்ட்டூன் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு உருவகப்படுத்தப்படுவதால், கற்பனை செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால், காமிக்ஸ்களில் நமக்கு இந்த இரண்டு வெவ்வேறு துருவங்களிலும் உள்ள நல்ல விஷயங்கள் கிடைக்கின்றன. இந்தக் கற்பனை வளம் படிப்பதற்கு மட்டுமில்லாமல் வாழ்கையின் எல்லா காலகட்டத்திலும் தேவைப்படுகிறது. 

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

செல்லம் (எ) செல்லப்பன், புஜ்ஜாய், கோபுலு, ஸ்ரீகாந்த் போன்ற ஓவியர்களும் வாண்டுமாமா, முல்லை தங்கராசன், பூவண்ணன், பெரியசாமி தூரன் போன்ற  எழுத்தாளர்களும் காமிக்ஸ் உலகுக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.   

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

ஆனந்த விகடனில் 1957 - ஆண்டு எழுத்தாளர் தேவன் மற்றும் ஓவியர் கோபுலு ஆகிய இரண்டு ஜாம்பவன்களால் உருவாக்கப்பட்ட ‘துப்பறியும் சாம்பு’ காமிக்ஸ் தொடர், காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கானது மட்டுமே என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்தது.

காமிக்ஸ், வெறும் வாசிப்பு அனுபவத்தை மட்டும் தருவதில்லை. கற்பனையைத் தூண்டி, படைப்பாற்றலை வளர்க்கும்; கவனத்தைக் குவிக்கும்; காட்சிகளை விரிக்கும். இந்தக் கோடை விடுமுறையை காமிக்ஸோடு கொண்டாடுங்கள்!