மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி

கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

யாருக்காகவும் என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். சுபாவம் என்பது  கைரேகை மாதிரி; அது மாறவும் மாறாது. மாற்றிக்கொள்வதாகச் சொல்வது நடிப்பு. அதற்காகத்தான் என் திருமண நாள் சம்பவத்தைச் சொன்னேன்.

தமிழில் 100 திரைக்கதைகள் செய்திருக்கிறேன் என்றால், அதற்கு சற்றும் குறைவில்லாமல் கன்னடத் திரைப்படங்களுக்கும் திரைக்கதைகள் செய்திருக்கிறேன். இந்தி, தெலுங்கு, மராத்தி, வங்காள மொழிகளிலும் என் திரைக்கதைகள் பல வந்துள்ளன. தென்னிந்தியப் படங்களில் மலையாளம் மட்டும் மிஸ்ஸிங்.

கன்னடத் திரையுலகுக்கு வருகிறேன். விஷ்ணுவர்தன், சித்தலிங்கையா, ராக்லைன் வெங்கடேஷ், ரவிச்சந்திரன் என எனக்கு அங்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன் சித்தலிங்கையா என்னிடம் ஒரு கதை கேட்டார். பெங்களூரு கனிஷ்கா ஹோட்டலில் எனக்கு ரூம் போட்டு, கதை கேட்க வந்திருந்தார். கன்னடத்தில் அவர் மிகப் பெரிய டைரக்டர். ‘உதய கீதம்’ கதை அவருக்காக உருவாக்கப்பட்டதுதான். அவருடைய மகன், நடிகர் முரளி. அப்போது முரளி நடிக்க ஆரம்பிக்கவில்லை. அப்பாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். அந்தக் கதை சித்தலிங்கையாவுக்குப் பிடிக்கவில்லை. நாயகிக்கு முக்கியத்துவம் தருவதுபோல கதை இருப்பதாக நினைத்தார்.

கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி

உடனே, நான் சென்னை திரும்பிவிட்டேன். அதே நேரத்தில் கோவைத்தம்பி ஒரு கதை கேட்டார். அதே கதையைச் சொன்னேன். அவருடன், டைரக்டர் கே.ரங்கராஜ், எம்.ஜி.வல்லபன் ஆகியோரும் கதையைக் கேட்டார்கள். எல்லோருக்கும் பிடித்திருந்தது. நடிகர் மோகனை வைத்து உடனே படப்பிடிப்பும் ஆரம்பம் ஆனது. அந்த நேரத்தில் முரளி வந்தார். ‘‘அங்கிள், எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருக்கிறது. நானே நடிக்கிறேன். அப்பாவை கன்வின்ஸ் பண்றேன்’’ என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் ஷூட் போய்க்கொண்டிருப்பதைச் சொன்னேன். ‘‘மிஸ் பண்ணிட்டேன் சார்’’ என்று போய்விட்டார்.

படம் ரிலீஸ் ஆன அன்றே முரளி படத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் சொன்னார்: ‘‘அங்கிள், ஐ மிஸ்டு த பிக்சர்!’’ நல்ல படத்தை இழந்துவிட்ட கலைஞனின் ஏக்கம் அது.

கன்னடத்தில் வெங்கடேஷுக்கு ‘மம்மகா’ என்ற திரைக்கதையைக் கொடுத்தேன். அது பிரமாண்டமான வெற்றி பெற்ற படம். ‘மம்மகா’ என்றால், பேரன் என அர்த்தம். அம்மாவழிப் பாட்டி, அப்பாவழிப் பாட்டி... இரண்டு பேரும் பேரன் மீது போட்டி போட்டு அன்பு செலுத்துகிறார்கள். சாப்பாடு ஊட்டுவதில், உடை வாங்கித் தருவதில் என எல்லாவற்றிலும் இரண்டு பாட்டிகளுக்கும் போட்டி. ‘அன்புத் தொல்லை’ என்பார்களே... அப்படி.

இரண்டு பாட்டிகளும் பேரனுக்குப் பெண் பார்க்கிறார்கள். ‘தான் பார்த்த பெண்ணைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும்’ என இரண்டு பாட்டிகளும் உறுதியாக இருக்கிறார்கள். ‘இந்தத் தொல்லையே வேண்டாம்’ எனப் பேரன் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இரண்டு பாட்டிகளும் ஒரே நேரத்தில் எதிரியாகிவிடுகிறார்கள். பாட்டிகளின் சம்மதத்தோடு எப்படி காதலியை மணம் முடிக்கிறான் என்பதுதான் கதை. அந்தக் காதலி கேரக்டரில் மீனா நடித்திருந்தார். செம சென்டிமென்ட் என்பதால், கன்னடத்தில் சக்கைப் போடு போட்டது படம்.

அந்தப் பட வேலையின்போது ஒரு முறை ரவிச்சந்திரன், நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். ‘‘உங்க ஃப்ரெண்ட் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார். வரமுடியுமா?’’ என்றார்.

‘‘போகலாமே’’ எனக் கிளம்பி விட்டேன்.

‘‘ஃப்ரெண்ட் யார்னு கேட்க மாட்டீங்களா?’’

‘‘ஃப்ரெண்ட்னு சொல்லிட்டீங்க. அது சஸ்பென்ஸாவே இருக்கட்டுமே!’’

கார், பெங்களூரில் பெரிய மனிதர்கள் வசிக்கும் ஒரு பணக்கார ஏரியாவுக்குள் நுழைந்தது. பாரம்பர்யமான ஒரு பெரிய வீட்டு கேட். காரைப் பார்த்ததும், செக்யூரிட்டி சல்யூட் வைத்துக் கதவைத் திறந்துவிடுகிறார். எனக்கோ, ‘பெங்களூரில் எனக்கு யார் இவ்வளவுப் பணக்கார ஃப்ரெண்ட்’ என்று குழப்பம். வீட்டு வாசலில் போய் நின்றதும், ‘‘வாங்க செல்வா’’ என்றது ஒரு பழக்கமான குரல். ரஜினி! என்னால் நம்பவே முடியவில்லை. ‘கொடி பறக்குது’ ஷோ பார்த்தோமே... அதோடு இப்போதுதான் பார்க்கிறேன்.

‘‘நீங்களா?’’ என்கிறேன்.

வீட்டில் வேறு யாரும் இருப்ப தாகத் தெரியவில்லை. நான், ரஜினி, ரவி மூன்று பேர்தான். நண்பகல் 11 மணிக்குப் பேச ஆரம்பித்த நாங்கள், மாலை வரை பேசிக்கொண்டே இருந்தோம். எனக்குப் பசி தாளவில்லை.

‘‘ரஜினி, பசி எடுக்கிறது.’’

‘மணி என்ன’ என அப்போது தான் கடிகாரத்தைப் பார்க்கிறார். ‘‘ஓ சாரி! கொஞ்சம் இருங்க’’ சமையல் கட்டு நோக்கி வேகமாகப் போகிறார். காபி மேக்கர் இருக் கிறது. மூன்று பேருக்கும் அவரே காபி போட்டுக் கொண்டு வந்தார்.
அந்தப் பசிக்கு அது தேவாமிர்தம்.

‘‘எப்பிடி... எப்பிடி இருக்கு காபி?’’ என ரஜினியின் உற்சாக மான கேள்வி.

‘‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார் போட்ட காபியைக் குறை சொல் வேனா..? சூப்பர்’’

‘‘ஹ்ஹ ஹா ஹா!’’ ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பு.

ரஜினியிடம் எப்போதும் நான் கண்டு வியப்பது அவருடைய ஆர்வத்தைத்தான். ‘16 வயதினிலே’, ‘கவிக்குயில்’ நாளில் இருந்து அதில் எந்த வித்தியாசமும் இல்லை. எப்போதும் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இருப்பார். முடிவெடுப்பது அவராக இருந்தாலும், எல்லா கருத்துகளையும் ஆர்வம் குன்றாமல் கேட்பார். அது, அவரிடம் பயில வேண்டிய பாடம்!

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

தோ பிகா ஜமீன்!

ன்னுடைய ‘உதயகீதம்’ படத்தின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. வங்காள மொழியில் ‘தோ பிகா ஜமீன்’ என்றொரு சினிமா வந்தது. கம்யூனிஸ்ட்கள் எடுத்த ‘பேரலல்’ சினிமா. ‘பிகா’ என்றால் நிலத்தை அளக்கிற ஓர் அளவு. ‘இரண்டு பிகா’ என்பது ஓர் ஏக்கருக்கும் குறைவான நிலம். ஒரு ஃபேக்டரி கட்டுவதற்காக ஊரையே வளைத்துப்போட நினைக்கிறார் ஒரு நிலச்சுவான்தார். நடுவிலே ஒரு குடியானவனின் அந்த நிலம் இருக்கிறது. ‘‘நீ வாங்கிய கடனுக்கு அந்த நிலம் சரியாகப் போய்விட்டது’’ என்கிறார். ‘‘நான் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்’’ என்கிறான் விவசாயி. 235 ரூபாய்! மனைவியின் நகை, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் விற்றாலும் அந்தத் தொகை வரவில்லை. மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறது கோர்ட். கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், ரிக்‌ஷா இழுத்துப் பணம் சம்பாதிக்கிறான். கணவனிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் அந்தக் குடியானவனின் மனைவி, அவனைத் தேடி கல்கத்தா வருகிறாள். அவளுக்கு விபத்து ஏற்படுகிறது. உயிருக்குப் போராடுகிறாள். சம்பாதித்த பணத்தை வைத்து மனைவியின் உயிரைக் காப்பாற்றுகிறான். நிலத்தை மீட்க முடியவில்லை. அவனுடைய நிலத்தில் ஃபேக்டரி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுக்கிறான். செக்யூரிட்டி ஓடிவந்து தடுத்து, துரத்தி விடுகிறான். அவனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் அங்கிருந்து வெறும் கையுடன் இலக்கில்லாத பயணமாகப் புறப்படுகிறார்கள். இதுதான் கதை.

கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி

கதாநாயகனாக நடித்தவர் பல்ராஜ் சஹானி என்ற புகழ்பெற்ற நடிகர். உழைக்கும் மக்கள்மீது நேசம் பொழிந்த கம்யூனிஸ்ட். அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அவரை காவல் துறை கைதுசெய்துவிட்டது. திரைக் கலைஞர்கள் மனு செய்து, அவரை ஜெயிலில் இருந்து வெளியில் மீட்டு, அந்தப் படத்தை எடுப்பார்கள். மாலை ஆனதும் அவர் சிறைக்குப் போய்விடுவார். தினமும் அப்படி மனுசெய்து அவரை வெளியே கொண்டுவந்து எடுக்கப்பட்ட படம் அது. ‘உதயகீதம்’ படத்தின் நாயகனும் சிறைக்குள் இருந்துவந்து அனாதை இல்ல நன்கொடைக்காகப் பாடுவதாகக் காட்சி அமைப்பதற்கு அந்தச் சம்பவம் உந்து சக்தி.

படம் உதவி: ஞானம்