பொது அறிவு
Published:Updated:

இது, கதைசொல்லிகளின் நேரம்!

இது, கதைசொல்லிகளின் நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது, கதைசொல்லிகளின் நேரம்!

மு.பார்த்தசாரதி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

“ஹாய் குட்டீஸ், எல்லாரும் வந்தாச்சா... சரி, நான் இப்போ உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா?” என்று ஸ்ரீதேவி கேட்டதும் அவர் முன் உட்கார்ந்திருந்த அத்தனை குழந்தைகள் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி! `என்ன கதையாக இருக்கும்?' என்று நமக்கும் குழந்தைகளைப்போல ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.

``ஒரு ஊருல...'' என்று ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. “அட, இது நம்ம பாட்டி வடை சுட்ட கதைதானே?” என்று கூட்டத்திலிருந்த சிறுவன் கத்த, பக்கத்திலிருந்த சுட்டி, “இல்ல, இது ராஜா கதை” என்றாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, தனக்குப் பக்கத்தில் ஒரு ஃப்ரேமை நிறுத்துகிறார் ஸ்ரீதேவி.  வெள்ளைத் துணியில் பல வண்ணங்களால் வரையப்பட்ட படங்கள் ஒவ்வொன்றாகச் சுழற்சி முறையில் வர, அதைப் பார்த்த குழந்தைகள் மீண்டும் குதூகலமானார்கள்.

இப்போது மெள்ள கதைக்குள் நகர்கிறார் ஸ்ரீதேவி... “ஒரு ஊர்ல ஒரு பெரிய மலை இருந்துச்சாம். அங்க சூரியன், காற்று, மேகம்னு எல்லாமே இருந்துச்சாம். அந்த வழியா பறவைக் கூட்டம் ஒண்ணு பறந்து போயிட்டு இருந்துச்சாம். அதுல ஒரே ஒரு பறவை மட்டும் வாயில கொஞ்சம் விதைகளை வெச்சுட்டு இருந்துச்சாம். அந்தப் பறவைக்கு என்ன பேரு வைக்கலாம்?” என்றதும் கதையை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்த குட்டிப்பையன் சுரேஷ் எழுந்து, “நீதுன்னு வைக்கலாமே” என்றான். “ஐ... சூப்பர்! நீது நல்லாருக்கே!” என்றார்கள் மற்றவர்கள்.

இது, கதைசொல்லிகளின் நேரம்!

“நீது தன்னோட நண்பர்களோட ஜாலியா வானத்துல பறந்து போயிட்டு இருக்கும்போது ஒரு பாட்டுப் பாடுச்சாம், அது என்ன பாட்டுனு நீங்க கேக்கணுமா?”

``ஆமா... ஆமா! கேக்கணும்'' என்று தலையாட்டியது குறும்புப் பட்டாளம்.

``சரி, நான் பாடுனா நீங்களும்கூட சேர்ந்து பாடுவீங்களா?''

``ம்ம்ம்... பாடுறோம், பாடுறோம்.''

பாட்டைக் குழந்தைகளுடன் பாடி முடித்துவிட்டு அப்படியே கதைக்குள் சென்றவர், இடையிடையே குட்டீஸ்களிடம் சில கேள்விகள் கேட்டதும், போட்டிபோட்டுக்கொண்டு பதிலளித்த குழந்தைகளைக் கண்டு ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் பெற்றோர்கள்.

“நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறேன். என்னை அம்மாதான் இங்க கூட்டிட்டு வந்தாங்க. இங்க, எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு. வீட்டுக்குப் போய் அம்மாட்ட நெறைய கத கேக்க போறேன்” என்று மழலை மொழியில் பேசிவிட்டுப் போனாள் தேவதர்ஷினி.

இது, கதைசொல்லிகளின் நேரம்!

புரசைவாக்கத்திலிருந்து வந்திருக்கும் சங்கீதா பேசும்போது, “இந்த புரோகிராம் ரொம்ப நல்லா இருந்தது. என் பையன் ஃப்ளாட்ல தனியா இருக்கானேன்னு இங்க கூட்டிட்டு வந்தேன். இந்த ஒரு மணி நேரம்,  அவன் மற்ற குழந்தைகளோட ஹேப்பியா இருந்தான். இதுபோல நான் வீட்டுல வெச்சு கதை சொன்னா கேட்கவே மாட்டான். இனி நிச்சயமா என்கிட்ட கதை கேட்பான். ஸோ, நான்தான் நிறையக் கதைகளைத் தெரிஞ்சு வெச்சிக்கணும்” என்றார்.

கதைசொல்லியான ஸ்ரீதேவியிடம் பேசினோம், “எனக்கு கதை சொல்றதுனா ரொம்பப் பிடிக்கும். இப்போதுள்ள ‘ஹைடெக்’ யுகத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லவே பெற்றோர்கள் மறந்துபோய்விட்டார்கள். ஒரு சிலர் சொல்லத் தயாராக இருந்தாலும் டி.வி, மொபைல் போன்கள்.. குழந்தைகளின் நேரத்தைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான், இப்படியொரு ஐடியா வந்தது. பலதரப்பட்ட குழந்தைகள் ஒன்று  சேர்ந்து வருவதால் அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகும். குழந்தைப் பருவத்திலேயே குட்டிக் குட்டிக் கதைகள்மூலம் அவர்களை நல்ல பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். நானும் என் தோழிகள் ஷோபனா, ரமா, ஸ்ரீமதி மூவரும் சேர்ந்து இரண்டு வருடங்களாக `கூடம்' என்கிற பெயரில் குழந்தைகளுக்காக இதைச் செய்துகொண்டு இருக்கிறோம். எங்களைப் போன்றே இனி பெற்றோர்களும் அவரவர் வீடுகளில் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கி, கதையாடல் நடத்துங்கள்” என்றார்.

குழந்தைகளுக்கு, கதைகள் சொல்லுவோம்... அவர்கள் வாழ்வை வண்ணமயமாக்குவோம்.