பொது அறிவு
Published:Updated:

மலை தந்த மகிழ்ச்சி!

மலை தந்த மகிழ்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
மலை தந்த மகிழ்ச்சி!

தமிழ்மகன், ஓவியங்கள்: அசோக்

அது ஒரு மலைக்கிராமம். சற்று தூரத்தில் இருந்தது ஓர் உல்லாச விடுதி. அந்த மலைக்கிராமத்துச் சிறுவர்களுக்கு, அங்கு வந்து செல்லும் மக்களின் நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கும். காணாததைக் கண்டதுபோல அங்கிருக்கும் மலைகளை வியந்து வியந்து படம் எடுப்பார்கள். ஒரு பூவையோ, பறவையையோ பார்த்துவிட்டால் பூரிப்புக்குப் பஞ்சம் இருக்காது.

மலை தந்த மகிழ்ச்சி!

மலைக்கிராமச் சிறுவர்களுக்கோ அவர்கள் கொண்டுவரும் விதவிதமான செல்போன்களும் கார்களும் அவர்கள் அணியும் ஆடைகளும் பிரமிப்பாக இருக்கும். அவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை, ‘‘அது வேறு உலகம். அதில் இருப்பவர்களுக்கு இந்த இடம் ஓரிரு நாள் ரசனைக்கானது மட்டும்தான். அவர்களால் இங்கே நிரந்தரமாக இருக்க முடியாது. அவர்களின் உலகில் நம்மாலும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது’’ என்பார்.

ஒரு நாள், மலைவாசிச் சிறுமிகள் சிலர் ஓடையில் குளித்துக்கொண்டிருக்கும்போது,  அந்த விடுதிக்கு வந்திருந்த ஒரு சிறுமி, இயற்கைக்காட்சிகளைப் படம் பிடித்தபடி அந்த இடம் நோக்கி வந்தாள். மலைவாசிச்் சிறுமிகளுக்கோ, அவள் வைத்திருக்கும் கேமராவை வாங்கிப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது.

சிறுமிகள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ‘‘ஐ ஆம் அஞ்சலி... செவன்த் ஸ்டாண்டர்ட்’’ என்றாள். மலைவாசிச் சிறுமிகளுக்கு வெட்கமாக இருந்தது. முதலில் ஒரு சிறுமி எழுந்து வந்து, ‘‘என் பெயர் பொன்னி’’ என்றாள். அதைத் தொடர்ந்து, ராஜாளியும் வள்ளியும் தங்கள் பெயர்களைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

‘‘ஐ... ஃபிஷ்... ஃபிஷ்’’ என அஞ்சலி மீன்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். வள்ளி, ‘‘உனக்கு இந்த மீன்களைப் பிடித்துத் தரட்டுமா?’’ எனக் கேட்டாள்.

அஞ்சலிக்கு மீன்களை அத்தனை சுலபமாகப் பிடித்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. சிறிய தொட்டியில் வளரும் வண்ண மீன்களையே அவளால் பிடிக்க முடிந்ததில்லை. அஞ்சலியின் ஆர்வத்தை உணர்ந்த வள்ளி, சற்று தூரத்தில் இருந்த இலைகளைக் கசக்கி, மீன்கள் இருந்த இடத்தில் தூவினாள். அந்த இலையின் சாறு விழுந்த இடத்தில் இருந்த மீன்கள் சிறிது நேரத்தில் ஓடையின் ஓரமாக ஒதுங்கின. இறந்துவிட்டனவோ என அஞ்சலி பதறிப்போனாள். வள்ளி அந்த மீன்களில் சிலவற்றை எடுத்துவந்து அஞ்சலியின் கையில் கொடுத்தாள். அந்த மீன்கள் உயிருடன் இருந்தன. அவற்றின் வாலும் செதில்களும் அசைந்தபடி இருந்தன.

வள்ளி சொன்னாள், ‘‘அவை இறக்கவில்லை. மயக்கத்தில் இருக்கின்றன. சில விநாடிகளில் தெளிந்துவிடும். நீரில் விட்டால், மீண்டும் பழையபடி நீந்திச் செல்லும்.’’

வள்ளி சொன்னதுபோலவே அவ்வளவு நேரம் அஞ்சலியின் கையில் இருந்த அந்த மீன்கள், நீரில் துள்ளி விழுந்து நீந்த ஆரம்பித்தன.தலையைத் துவட்டியபடி மூன்று சிறுமிகளும் வேறு சில ஆச்சர்யங்களைக் காட்டினர். ‘‘இந்தச் செடியைப் பார் அஞ்சலி’’ என்றாள் பொன்னி. ஒரு செடியைத் தொட்டதும் அது வாடி வதங்கிப்போனது. ‘‘இந்தச் செடியின் பெயர், ‘தொட்டால் சிணுங்கி’. தொட்டதும் இப்படி வாடிவிடும். பிறகு, பழையபடி மாறும்.’’

அஞ்சலி வரிசையாக அந்தச் செடிகளைத் தொட்டாள். ஒரு நொடியில் அத்தனை செடிகளும் வாடுவதும் சில விநாடிகளில் அவை பழைய நிலைக்கு வருவதும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தன.

அதற்குள், ஒரு மரத்தில் ஏறி சில காய்களைப் பறித்துவந்தாள் ராஜாளி. அது, பேரிக்காய் போலவும் அளவில் சிறியதாகவும் இருந்தது. லேசான இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு கலந்த கலவையாகவும் சுவையாகவும் இருந்தது. அதை, ‘காட்டுப் பேரிக்காய்’ என்றனர்.

அவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த ஆசையை வெளிக்காட்டி, ‘‘அந்த கேமராவில் எப்படிப் படம் பிடிப்பது எனச் சொல்லிக்கொடு அஞ்சலி’’ என்றாள் பொன்னி.

‘‘அது சுலபம்... இதோ இந்த லென்ஸ் வழியாகப் பார்த்து, எதைப் படம் பிடிக்க வேண்டுமோ, அதை போக்கஸ் செய்ய வேண்டும். பிறகு இதைக் க்ளிக் செய்ய வேண்டும்.’’

பொன்னி அந்த கேமராவை வாங்கி, மற்ற அனைவரையும் நிற்கவைத்து ஒரு க்ளிக் செய்தாள். ‘‘போட்டோ எடுப்பவர், போட்டோவில் இடம்பெற முடியாமல் போய்விடுகிறது. எல்லோரும் ஒரே போட்டோவில் இடம்பெற முடியுமா?’’ என்றாள் ராஜாளி. 

மலை தந்த மகிழ்ச்சி!

‘‘அதற்கும் வழி இருக்கிறது. இது ஆட்டோமேட்டிக் க்ளிக். இதை அழுத்திவிட்டு ஃபோகஸ் செய்து, கேமராவை வைத்துவிட்டு எல்லோரும் நின்றால், அரை நிமிடம் கழித்து அது தானாகவே க்ளிக் செய்யும்.’’ எல்லோரும் நின்று அப்படி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டனர். அது எப்படி வந்திருக்கிறது என்பதை அஞ்சலி அவர்களுக்கு கேமராவில் காட்டினாள்.

‘‘எங்களுக்கு ஒரு பிரின்ட் கிடைக்குமா?’’

‘‘உங்களில் யாருக்காவது இ-மெயில் முகவரி இருக்கிறதா?’’ என்றாள்.

‘‘இல்லையே...’’

‘‘செல்போன்?... ஷேர் இட்... வைஃபை?’’

‘‘அப்படி எதுவும் இல்லை.’’

அந்த நேரம் பார்த்து அஞ்சலியின் அம்மா, மலைவாசிச் சிறுமிகளுடன் தன் மகள் இருப்பதைப் பார்த்து, ‘‘ஏய் அஞ்சலி ஏன் அங்கே சென்றாய்? ஏதாவது பூச்சி கடித்துவிடப்  போகிறது... இங்கே வா’’ என்றார். அஞ்சலி, சிறுமிகளுக்கு அவசரமாக டாட்டா சொல்லிவிட்டு, அம்மாவிடம் ஓடினாள்.

‘‘நேரம் ஆகிவிட்டது... இப்போதே நாம் கிளம்பவேண்டும்’’ என அஞ்சலியைக் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினாள். அஞ்சலியின் அப்பாவும், ‘‘உன்னுடைய திங்க்ஸ் எல்லாம் அப்பவே காரில் எடுத்துவைத்துவிட்டோம்’’ என்றார். கார் புறப்பட்டது. அந்தச் சிறுமிகள் அஞ்சலிக்கு டாட்டா காட்டியபடிச் சிரித்தனர். ‘நாம் கேட்காமலேயே அவ்வளவு சந்தோஷங்களைத் தந்த அந்தச் சிறுமிகளுக்கு, அவர்கள் விரும்பிய ஒன்றைச் செய்ய முடியாமல் போய்விட்டதே’ என வருத்தமாக இருந்தது.

அஞ்சலியின் மனதைத் தெரிந்த அவளுடைய அப்பா, ‘‘என்ன யோசனை அஞ்சலி’’ என்றார். நடந்தது அனைத்தையும் சொன்னாள் அஞ்சலி.

‘‘கவலைப்படாதே... அந்தச் சிறுமிகளின் பெயர் தெரியும் இல்ல? நாளைக்கே சென்னை போனதும் அந்த போட்டோவைப் பிரின்ட் போட்டு போஸ்ட் செய்கிறேன்’’ என்றார்.

பொன்னி, ராஜாளி, வள்ளி... மூவருக்கும் அந்த போட்டோ ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும் என்ற மகிழ்ச்சியில், கார் பயணத்தில் கண் அயர்ந்தாள் அஞ்சலி.