
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
‘கிழக்கே போகும் ரயில்’ படப்பிடிப்பின் போதே சுதாகரைப் பார்த்துவிட்டு, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன்.
எண்ணெய் செக்கு வைத்திருப்பவன் தன்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்க முடியாத நிலைமை... ஆயிரம் பேர் கொண்ட ஒரு கிராமத்தில் ஒருவர் அதிகமானாலும் ஒருவர் இறந்துபோவார் என்ற சென்டிமென்ட்... சைக்கிள் கற்றுக்கொள்வதற்கான ‘ஓரம்போ’ பாடல்... இப்படி ரகளையாக வந்திருந்தது படம்.
‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக, ‘கிழக்கே போகும் ரயில்’ ரிலீஸ் ஆனது. ஒரே நாளில் சுதாகர் உச்சத்துக்குப் போய்விட்டார். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவர் வீட்டு வாசலில் க்யூ கட்டி நிற்கின்றன. பெரிய சம்பளம்.

நான் படப்பிடிப்புக்காக எல்லோருக்கும் டிக்கெட் போட்டுவிட்டு போடிநாயக்கனூரில் இருந்தேன். ஜனவரி 15-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம். சுதாகர் வரவில்லை. போன் செய்து கேட்டால், ‘‘நிறைய படங்கள் புக் ஆகிடுச்சு சார். தேதி பிரிச்சுக் கொடுத்திருக்கேன்... அதான்! உங்களுக்கு ஒரு வாரம்தான் கால்ஷீட். அதுக்குள்ள முடிச்சுக்க முடியுமா?’’ என்கிறார்.
அவருக்கு 25 நாட்களுக்கு ஷூட்டிங் இருந்தது. இங்கோ சரிதா உள்ளிட்ட அத்தனை பேரும் முதலிலேயே வந்துவிட்டனர். சரிதா தங்கமான பெண். அப்போது பிரபலமான நடிகை. ஆனாலும் ஒரு புதுமுக நடிகருக்காகக் காத்திருந்தார்.
‘சரி, பரவாயில்லை’ எனச் சொல்லிவிட்டு, சரிதா, விஜயன் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், மற்றவர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளையும் முடித்துக்கொண்டிருந்தேன். சுதாகர் வந்தார். வந்தவர், ஹோட்டல் அறையில் போய்ப் படுத்துவிட்டார். அவருக்கான காட்சி களுக்குத் தயார்படுத்திவிட்டுக் காத்திருந்தால், ஆளைக் காணோம். லஞ்ச் பிரேக்கில் ஹோட்டல் அறைக்குப் போனேன். அப்போதும் ‘தூங்கிக்கொண்டிருக்கிறார்’ என்றார்கள்.
எழுப்பி, ‘‘ஏழு நாள் கால்ஷீட் தர்றதா சொன்னீங்க. அதில ஒருநாள் நீங்க தூங்கறதுக்கே சரியாகிடுச்சே?’’ என்றேன். ‘‘குளிக்க சுடுதண்ணி கொடுக்கலை. அதான் வெய்ட் பண்றேன். நீங்க போங்க, இதோ பத்து நிமிஷத்தில ரெடியாகி வந்துவிடுகிறேன்’’ என்றார். அதெல்லாம் சும்மா காரணம் என்பது புரொடக்ஷன் மேனேஜரை விசாரித்தபோது தெரிந்தது.
மூன்று மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்தார். அவருக்கு முதல் காட்சி. சரிதாவின் மாமியாராக நடித்தவர் நாடக நடிகை ஜெயந்தி. என்னுடைய எல்லா பிரச்னைகளும் தெரிந்தவர். மாவாட்டியபடியே மகன் சுதாகருடன் பேசிக்கொண்டிருப்பார். சுதாகருக்கு சரிதாவின் நடத்தையில் சந்தேகம். மகனுக்கு அறிவுரை சொல்வது போல, ‘‘எவ்வளவுதான் ஒசத்தியானதா இருந்தாலும் மீன், பால்ல வாழ முடியாது. தண்ணியிலதான் வாழணும். அப்படி மீனைக் கொண்டுபோய் பால்ல விட்டா பாலும் கெட்டுப்போகும்... மீனும் செத்துப்போகும்’’ என்பார் சுதாகரின் அம்மா. மகன் வீணாக சந்தேகப்பட்டு, பேசிக்கொண்டே போவார். கோபத்தில் மாவாட்டுகிற கையோடு சுதாகர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிடுவார்.
காட்சி எடுக்கப்படுகிறது. அம்மா அறை விடுகிறார். அது, நிஜமான அறை. அடித்த அடியில் மாவுதான் தெறித்து விழுந்தது எனப் பார்த்தால், சுதாகரின் ஒரு பல்லும் அங்கே கிடந்தது. கிறுகிறுத்துப் போனது சுதாகருக்கு. அதுமுதல் ஒரு தகராறு இல்லை.
என்னுடைய கேமராமேன் வாசுதேவனைக் கூப்பிட்டேன். ‘‘இவன் இந்த ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் கால்ஷீட் தருவான்ங்கிற நம்பிக்கை இல்லை. 25 நாளில் இவனை வெச்சு எடுக்க வேண்டிய காட்சிகளை, இந்த ஏழு நாள்ல எடுத்தாகணும். குவாலிட்டியைப் பத்திக் கவலைப்படாதே’’ எனச் சொல்லிவிட்டேன். பாடல் காட்சிகள், சரிதாவும் சுதாகரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் எனச் சுட்டுத் தள்ளினோம். அந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றால், டெக்னிக்கலாக சுமாராகத்தான் இருக்கும். படத்தில் நல்ல சீன்கள் நிறைய இருக்கும்.

எங்களுக்கு ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது. சுதாகர், சரிதாவை காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, நாங்கள் எல்லோரும் கடைசி பஸ்ஸில் ஏறி அறைகளுக்குப் போவோம். தினமும் அப்படி பஸ்ஸில் ஏறிப் போவதால், காலையிலும் இரவிலும் பஸ் டிரைவரும் எங்களுக்காகக் காத்திருந்து ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பழக்கமாகிவிட்டனர். எங்கள் கஷ்டத்தைப் பார்த்த சரிதா, ‘‘நானும் பஸ்லயே வர்றேன் சார்’’ எனச் சொல்வார். நடிகையை மஃபசல் பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போக முடியுமா?
அப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையே ரெடியாகி வெளிவந்த படம்தான் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’. ஆனால், பிரமாதமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
ஒரு படம் டெக்னிக்கலாக சுமாராக இருந்தாலும், விறுவிறுப்பான கதையால், காட்சிகளால் பேசப்படும். நான் எழுதிய ‘ஆளுக்கொரு ஆசை’ படத்தில் ஜெயசித்ராவும் முத்துராமனும் நடித்தார்கள். கதையின் முடிச்சு இதுதான். தினம் தினம் பஸ்ஸிலும், வேலை செய்யும் இடத்திலும், ஆண்களின் சில்மிஷங்களால் அவதிப்படும் ஒரு பெண். வேலைக்கு எங்கும் அனுப்பாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் ஒரு கணவனுக்காகக் காத்திருக்கிறாள். இன்னொரு பக்கம் முத்துராமன். மிகவும் சிக்கனம். ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணி செலவு செய்பவர். கைநிறைய சம்பாதிக்கும் மனைவி வேண்டும் எனக் காத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் கதை தருகிற சுவாரஸ்யம்.
அது நல்ல கதை... ஆனால், அவ்வளவு சரியாக அது எடுக்கப்படவில்லை. நான் டெக்னிக்கலாக சிறப்பாக இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. ஒரு கதையை அதன் ஜீவன் கெடாமல் எடுப்பதுதான் சாமர்த்தியமான வேலை. ஆனால், அதே கதையைக் கொஞ்சம் மாற்றி வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன் என்பது வேறு விஷயம். பேன்ட் போட்ட கதைக்கு வேட்டி கட்டிவிட்டால் அது வேறு கதை... அவ்வளவுதான்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)
பன்றிகளோடு ஒரு பயணம்!
ஒவ்வொருவருக்கும் ஊரைவிட்டு ஓடுவதற்கு ஒரு கதை இருக்கும். சினிமாக் கதைகளில் மட்டுமல்ல; நிஜ வாழ்விலும்தான். எனக்கும் ஒரு கதை உண்டு. எங்கள் தெருவில் ஒரு தம்பதி இருந்தனர். கணவர், இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இன்னொரு கல்யாணம் செய்வது சட்டப்படி குற்றம். அதற்காக முதல் மனைவியை அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துகொண்டிருந்தார். எனக்கு ஆத்திரம் தாளவில்லை. எனக்கு அப்போது 16, 17 வயசுக்குள்தான் இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டேன்.
போலீஸ்காரர் ஒருவர் வந்து விசாரித்தார். அந்த அம்மா என்ன நினைத்தாரோ, ‘‘என்னை யாரும் சித்ரவதை செய்யவில்லையே’’ என்று சொல்லிவிட்டார். போலீஸ்காரருக்கு வெறுப்பு. போகும்போது, ‘‘இந்தத் தெரு பையன் ஒருத்தன்தான் கம்ப்ளைன்ட் கொடுத்தான்’’ என்று கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த ஒரு க்ளூ போதாதா? என்னை அடிப்பதற்காகத் தேட ஆரம்பித்தார்கள். அந்த ஆள் வசதியானவர்.
எனக்கு ஏற்கெனவே சென்னைக்கு வந்து சினிமா எடுக்கிற ஆசை வேறு இருந்ததா? இரவோடு இரவாக லாரியில் ஏறினேன். மேலூர் வந்ததும் அந்த லாரியில் பன்றிகளை ஏற்றினர். ஒரு பக்கம் நான், இன்னொரு பக்கம் ஒரு பெரிய பன்றி தன் குட்டிகளுடன் என்னை முறைத்தபடி படுத்திருந்தது. திருச்சியில் அந்தப் பன்றிகளை இறக்கினர். அதன் பிறகுதான் எனக்குத் தூக்கமே வந்தது.