மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

டது புறம் குதிரைத்தலையைப் போலிருக்கும் `ஆறு புரவி'(அசுவினி) விண்மீன் கூட்டம் முன்பைவிடத் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. அதையே நீண்டநேரம் பார்த்தபடி இருந்தான் அந்துவன். அவனை அறியாமலேயே மனம் மகிழ்வை உணர்ந்தது. அவனது கண்கள் வரையப்படும் விண்மீன் கூட்டத்தையும், பின்னர் கூண்டுக்குள் இருந்த தேவாங்குகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தன. விண்மீன் கூட்டங்களுக்கு இடையில் உலவித் திரியும் விலங்கினைப்போல அத்தேவாங்குகள் தோன்றின.

வாயும் மூக்கும் சிறிது நீண்டிருப்பதால் பறவைகளின் கைப்பிள்ளைபோல இருப்பதாக அந்துவன் எண்ணினான். மேற்கூரையின் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. விரைவில் பாண்டரங்கை விட்டு வெளிச்செல்ல காத்திருந்தான் அந்துவன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

அன்றைய நாளின் காலை நேரத்திலேயே கலந்துரையாடல் அரங்குக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் மனித மனம் எப்படி அதை எடுத்துக்கொள்கிறது என்பது தெரியவருகிறது. தங்களின் அந்தப்புரத்தில் இருப்பவரெல்லாம் யவன அழகிகள் அல்ல என்று முதுவன் சொன்னபோது பேரரசரின் மனம் பேரதிர்ச்சிக்கு உள்ளானது. நேற்றிரவு விருந்தில் மற்றவர்கள் கவனிக்காதபோது முதுவனிடம் பேரரசர் கேட்டார். “நீங்கள் கிளாசரினாவை பார்த்திருக்கிறீர்களா?”

இந்தக் கேள்விக்கு என்ன பொருள் என்பது முதுவனுக்குப் புரிந்தது.

“மணமுடி நிகழ்வில் பார்த்தேன் அரசே. அவள் யவன அழகியல்லவா? அதனால்தான் தனித்துவத்தோடு இருக்கிறாள். இமைகள் கவிழும்போதுகூட அவளின் கண்களைப் பார்க்கத் தோன்றுகிறது.”

பேரரசருக்கு எதிர்பார்த்த பதில் கிடைத்தது. ஆனாலும், சற்றே பதற்றமானார். ‘மணமுடிவாக்கு கொடுக்கும் நிகழ்வில் அரங்கின் இடதுபுற மூலையில் அவள் அமர்ந்திருந்தாள். முதுவன் உட்கார்ந்திருந்ததோ தனக்கருகில். எப்படி இவ்வளவு தொலைவில் கவிழும் இமைகளைக் கண்டறிந்தான்? சில பாதைகளில் பயணிக்கத் தொடங்கினால் பதற்றம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது’ என்று எண்ணங்கள் ஓடியபடி இருக்க ஆலோசனை மாடத்தை நோக்கி நடந்தார் பேரரசர்.

அங்கு இளவரசன் பொதியவெற்பனும், சூல்கடல் முதுவனும், திசைவேழரும் வீற்றிருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பே தலைமை அமைச்சர் முசுகுந்தரும் தளபதி கருங்கைவாணனும், வெள்ளிகொண்டாரும் வந்துவிட்டனர். இன்று நடைபெறப்போகும் உரையாடல், பாண்டிய நாட்டின் எதிர்காலத்தில் பெரும்மாற்றத்தை நிகழ்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. “நேற்று தற்செயலாக நிகழ்ந்த ஓர் உரையாடல் இவ்வளவு ஆக்கபூர்வமான இடத்துக்கு வருமென்று நான் நம்பவில்லை” என்று வெள்ளிகொண்டார் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இது தற்செயல் அன்று என்பது, சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தது  பேரரசர் வந்ததும் பேச்சுத் தொடங்கியது. தோல் வரைபடம் ஒன்றை மரப்பலகையில் விரித்தார் முதுவன். எல்லோரும் அதைச் சுற்றி நின்றனர். பார்த்தவுடன் புரிந்தது அது யவனர்களின் வரைபடம் என்று.

“இவ்வணிகப் பயணம் மூன்று இடங்களில் ‘தங்கல்’களைக் கொண்டது. கொற்கையிலிருந்து புறப்பட்டால் முதல் `தங்கல்’ சிந்து ஆறு கடலிற்புகுமிடத்தில் இருக்கும் பாப்ரிகோனில். அங்கு ஓய்வெடுத்துக்கொண்டு தேவைப்பட்டால் அடிமைகளை மாற்றிக்கொண்டு கப்பல் புறப்படும். அங்கிருந்து செங்கடலின் முனையில் இருக்கும் பெர்னிகே துறைமுகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து பொருள்களைக் கழுதைகளின் மீதேற்றி நடத்தி மணற்பரப்பைக் கடந்து நீல ஆற்றங்கரை(நைல்நதி)யில் இருக்கும் கோபடஸ் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் கப்பல் மூலமாக யவனத்தை அடைய வேண்டும்.

யவனர்கள் தமிழ்நிலத்தில் இரு கோட்டை களைக் கட்டி வீரர்களையும் எண்ணற்ற அடிமைகளையும் வைத்துள்ளனர். தங்களின் நாவாய்களைப் பழுதுபார்க்கத் தேர்ந்த தச்சர்களையும் வைத்துள்ளனர். இதேபோன்று பாப்ரிகோன், பெர்னிகே, கோபடஸ் ஆகிய மூன்று இடங்களிலும் கோட்டைகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்துள்ளனர்.

இப்பெரும் பயணத்தில் மேலிமேடும் மங்களகிரியும் கடற்கொள்ளையர்கள் அதிகமுள்ள பகுதி. அதேபோலச் செங்கடலில் இருந்து பெர்னிகே செல்லும் வழியில் பாலை மணற்பரப்பில் கருங்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகம் நிகழும். அவற்றைச் சமாளிப்பதில் சிறு தவறு நடந்தால்கூட எல்லாம் அழியும்; அதனால்தான் தேர்ந்த படைவீரர்கள் கப்பலின் பாதுகாப்புக்கு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் மொத்தமாகப் போவதும் முக்கியமாகிறது.”

இவையெல்லாம் தெரிந்த செய்திகள்தான்.  இவற்றில் முதன்மையானது ஒவ்வொரு கோட்டையிலும் எத்தனை வீரர்கள், எத்தனை அடிமைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.

“பெர்னிகேவைத் தாண்டி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இங்கிருந்து பெர்னிகே வரையிலான பயணத்துக்கு நாம் சில தங்கல்களை ஏற்படுத்த முடியுமல்லவா?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நமது நாட்டில் யவனச்சேரியை அவர்கள் அமைத்துள்ளதைப்போல பாப்ரிகோனிலும் பெர்னிகேவிலும் ஒப்பந்தம் செய்துகொண்டு நாம் தங்கல்களுக்கான கோட்டைகளை அமைக்கலாம்” என்றார் வெள்ளிகொண்டார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

``யவனர்களால் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள், அடிமைகள் ஆகியோரின் எண்ணிக் கையைவிட இருமடங்கு எண்ணிக்கையில் நம்மால் தங்கவைக்க முடியும்.” என்றான் கருங்கைவாணன்.

பேரரசர் அவனது கூற்றை உற்றுநோக்கினார்.

“மேலிமேட்டிலும் மங்களகிரியிலும் கடற்கொள்ளையை நடத்திக் கொண்டிருப் பவர்கள் யாரென நமக்குத் தெரியும். அவர்களை எப்படி அடக்குவதெனவும் நமக்குத் தெரியும்” என்று சற்றே ஆணவத்தோடு சொன்னான் கருங்கைவாணன்.

இன்று மணச்சடங்கின் முதல் நிகழ்வான ‘சிலம்புக் கழிதல்’ நிகழ்வு. பெண்ணின் வாழ்வில் சிலம்பு அணிதலும் சிலம்பு கழற்றலும் முதன்மையான நிகழ்வுகளாகும். குழந்தைமை நீங்கி இளம்பருவத்துக்குள் நுழையும்போது பெண்ணுக்குச் சிலம்பை அணிவித்தல் பெருவிழாவாக நடத்தப்பெறுகிறது. அதன்பின், அவளுக்கு மணமாகும்போது சிலம்பு அவளின் கால்களில் இருந்து கழற்றப்பெறுகிறது.

மாடத்தில் அரசகுலப்பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோரும் பொற்சுவைக்காக காத்திருந்தனர். அவள் தனது அறையிலிருந்து புறப்பட விருப்பமின்றி இருந்தாள். `எல்லோரும் அரங்குக்கு வந்துவிட்டார்கள்' எனச் சொல்லி சுகமதிதான் அவளை வேகப்படுத்தினாள். அவளோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

சிலம்பு அணிவிக்கப்பெற்ற முதல்நாள் நினைவுகளுக்குள் அவள் மனம் மூழ்கிக்கிடந்தது.  தன் கால்களிலிருந்து எழும் ஓசையைக் கேட்க அவ்வளவு ஆசைப்பட்ட காலமது. ஓசைக்காகவே ஓடிப்பார்த்தது எத்தனை முறை. எத்தனை விதத்தில் கால்களை தரைத்தட்டி பழக்கினோம்! தூங்கும்போதும் ஆடிய கால்கள். தூரியில் தொங்கிக்கொண்டே ஆடிய கால்கள். ஓசை எழுப்பும் கால்கள் வாய்த்தன என எண்ணி மகிழ்ந்த நாள்கள்தான் எத்தனை, எத்தனை! பறவைகள் சிறகுக்குள் தலைநுழைத்து கோதிக்கொண்டே இருப்பதைப்போல, குனிந்து இருகைகளாலும் சிலம்பைத் தொட்டு அசைத்துக் கொண்டே இருந்தது ஒரு காலம்.

சிலம்பு அணிதலுக்குத் தந்தை நாள்குறித்தபோது, அண்ணன்தான் கேட்டான். “என்ன பரல் கொண்டு சிலம்பு செய்யப்போகிறீர்கள்?”

“நீயே சொல். உன் தங்கையின் காற்சிலம்புக்கு என்ன பரல் வேண்டுமென்று?”

“நாளை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

மறுநாள் இல்லத்தின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது உள்ளே வந்தவன் தந்தையைப் பார்த்துக் கேட்டான், “தந்தையே, என்றென்றும் வெல்ல வேண்டும் என்பதற்காகத் தங்களின் மணிமுடியில் அரசர்கள் பதிக்க விரும்புவது எந்த வகை மணிக்கற்களை?”

“இளஞ்சிவப்பு நிற மாணிக்கக் கற்களைத் தங்களின் மணிமுடியில் பதித்தால் எப்போரிலும் வெல்லலாம் என்று சொல்வார்கள்.”

``அப்படியென்றால் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல்லைக் கொண்டு என் தங்கையின் கால்களுக்குச் சிலம்பு செய்யுங்கள்.”

“அவள் எந்தப் போரை வெல்லப் போகிறாள் மகனே?”

“அவள் ஒரு பேரழகி. நாளை அவளுக்காகவே போர் நடக்கலாம் அல்லது அவளே ஒரு போரை நடத்தலாம். யார் அறிவார்?”

தந்தை அதிர்ந்துபோனார். தயக்கம் நீங்க நேரமானது. ‘நாம் வணிகர்குலம் என்பதை இவன் அடிக்கடி மறந்துவிடுகிறான், அதுவும் தங்கை என்று வந்துவிட்டால், இவனது எண்ணம் கட்டுக்குள்ளே இருப்பதில்லை’ என்று எண்ணியபடி, “எங்கிருந்து கிடைக்கும் அவ்வளவு கற்கள்? எனக் கேட்டார்.

“பெருவணிகர் நீங்கள். எங்கு கிடைக்குமென உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தந்தை பெரும்குழப்பத்துக்கு உள்ளானார்.

வணிகர்கள் உருவாக்கிய கதைக்குள் இப்போது பெருவணிகர் ஒருவரே மாட்டிக்கொண்டார். அந்தக் குறிப்பிட்ட தீவு எதுவெனத் தந்தை அறிவார். அவரே புறப்பட்டுப் போனார்.

கப்பல் நீர்கிழித்துப் போனது. நில்லாது அசையும் அலைபோல, அதன் பின், ஓசை நில்லாது ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல் கொண்ட சிலம்பு பொற்சுவையின் காற்சிலம்பானது.

பிற மூன்று இடங்களிலும் யவனர்கள் உருவாக்கியுள்ள கோட்டைகளில் எத்தனை வகையான பொறிகள் இருக்கின்றன என்று வரிசைப்படுத்தினார் சூல்கடல் முதுவன். அதுவரை அவ்விடங்களில் உள்ளவை மிகப் பாதுகாப்பான கோட்டைகள்; அவற்றினுள் வீரர்கள் உள்ளனர் என்று மட்டு்ம்தான் தெரியும்.  ஆனால், யவனர்களின் வலிமை கோட்டையிலும் வீரர்களிடமும் மட்டுமில்லை; எண்ணற்ற பொறிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அவைதான் அவர்களின் வலிமைக்கு அடிப்படை” என்று கூறியபடி பொறிகளைப் பட்டியலிட்டார்.

“பெரும் தோல்கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டு, கவட்டைபோல் இரும்புக் கம்பிகள் நீண்டபடி கோட்டைமதிலில் நிறுத்தப்பட்டுள்ள ‘எந்திர வில்’. அதை இயக்க ஒருசிலர் போதும். அதிலிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வெளிவரும். இரண்டு எந்திர வில்கள் இருந்தால் கோட்டையை எதிரிகள் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

நூற்றுக்கணக்கான கற்களை உமிழும்  ‘கவண்பொறி.’ இரும்பால் செய்யப்பட்ட  சிற்றூசி உருளைகளை வீசி எறியும் ‘கூடைப்பொறி.’ கோட்டைமதிலை நெருங்கும் பகைவரின் உடலைக் கொத்தித்தூக்கும் ‘தூண்டிற் பொறி.’ அதையும் மீறி மேலேறுபவரை அகழியை நோக்கித் தள்ளும் ‘கவைப் பொறி’” என்று வரிசையாகத் தாக்கவும் தடுக்கவும் யவனர்கள் பயன்படுத்தும் பொறிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே வந்தார். கடைசியாக மூன்று பொறிகளைப் பற்றிச் சொல்லியபோது எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

சிறிதுநேரம் எந்தப் பேச்சும் இல்லை.

பொற்சுவையின் வருகைக்காக எல்லோரும் அரங்கில் நெடுநேரமாக உட்கார்ந்திருந்தனர். அவளோ நினைவுகளில் மூழ்கியவளாக அறையைவிட்டு அகலாமல் இருந்தாள். அரச குடும்பத்தின் மூத்தபெண்மணிகள் காரணம் அறியாமல் திகைத்தனர். “இன்னும் சிறிதுநேரத்தில்  பேரரசியார் வந்துவிடுவார். அதற்குள் அழைத்து வாருங்கள்” என்று ஆள் மாற்றி ஆள் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
`ஒப்பனை இன்னும் முடியவில்லை' என்று இடைவிடாமல்  மறுமொழி சொல்லிக்கொண்டே இருந்தாள் சுகமதி. பொழுதாகிக்கொண்டே இருந்தது. நிலைமையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த சுகமதிக்கு ஓர் எண்ணம் பிறந்தது.

பொற்சுவையை அழைத்துவர அனுப்பப்பட்ட பணிப்பெண்களிடம் பெரும் கூடையைக் கொடுத்துவிட்டாள். அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அரங்குக்கு வந்தனர். அரங்கில் இருந்த மற்றவர்கள் என்னவென்று புரியாமல் திகைத்தபோது, பணிப்பெண்கள் சொன்னார்கள்.  “சிலம்பு கழற்றும் விழாவுக்காகச் சாவகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்” என்று சொல்லியபடி, பெட்டியில் இருந்த பனை விசிறியை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர்.

‘பனைவிசிறியா!’ என்று சற்றே முகம் சுழித்தபடி வாங்கியவர்கள் அதை விரிக்கத் தொடங்கினர். விரியும் பனையோலை முழுவதும் அழகு நிரம்பிய ஓவியங்கள். அத்துணையும் இணையற்ற எழில்கொண்டவை. அனைவரின் கண்களும் ஓவியங்களை உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, பனைவிசிறியின் மேல்முனையில் முத்துகள் பதிக்கப்பட்டிருந்தது. வாங்கியவர்கள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பறவையின் சிறகுபோல விசிறியை விரிக்கும்போது ஓவியங்களின் அழகும் முத்துகளின் ஒளியும் மெய்ம்மறக்கச் செய்தன.

ஒருவர்கூட விசிறியை விசிறாமல் கண்ணாடியைப்போல் முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒருத்தி மட்டும் சொன்னாள், “விசிறிக்கே இவ்வளவு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோது, இளவரசிக்கு ஒப்பனை செய்ய பொழுதாகாமல் என்ன செய்யும்?”

நமது கலங்களைவிட யவனர்களின் நாவாய்கள் சிறப்புமிக்கவையா? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

இளவரசனின் வினாவுக்கு சூல்கடல் முதுவன் சொல்லப்போகும் விடை கப்பலின் இயங்கு பொறிகளைப் பற்றியதாக இருக்குமென நினைத்தனர். ஆனால், அவர் வேறு ஒரு விடையைச் சொன்னார்.

“கடற்பயணத்தின் வலிமை என்பது கப்பலோடு  தொடர்புடையதல்ல; கணிதத்தோடு  தொடர்புடையது. வானியலும் நிலவியலும் பற்றிய கணித அறிவே கடற்பயணத்தின் வெற்றி தோல்வியை முடிவுசெய்கிறது.”
``இவ்விரண்டிலும் நமது அறிவு வலிமைமிக்கதுதானே.”

முசுகுந்தரின் கூற்றுக்கு, முதுவன் மறுமொழி சொன்னார், ``நமது வலிமையை யவனர்களோடு ஒப்பிட்டால் யார் வலியவர், யார் வலிமை குற்றியவர் என்பதைப் பற்றிப் பேச முடியும். ஆனால், கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிடவேண்டியது பிற கடலாடிகளோடு அல்ல; எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும்தான். அவற்றோடு ஒப்பிட என்ன இருக்கிறது நம்மிடம்?”
இந்த மறுமொழியின் தொடர்ச்சியை அனைவரும் திசைவேழரிடம் எதிர்பார்த்தனர். அவரோ அமைதியாக உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

“கடலையும் காலத்தையும் புரிந்துகொள்வதில் நமக்கும் யவனர்களுக்குமே வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப்பற்றி பேசத்தான் நேற்றைக்கு முன்தினம் திசைவேழரைப் போய்ப் பார்த்தேன். நாம், ஆண்டை 12 மாதங்களாகப் பிரிக்கிறோம்; யவனர்களோ 10 மாதங்களாகப் பிரிக்கின்றனர். ஆனால், நாள்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை.

அவர்கள் ஒரு நாளை 24 மணிகளாகப் பிரிக்கின்றனர். நாமோ 60 நாழிகைகளாகப் பிரிக்கிறோம். நேரத்தை அவர்களைவிட மிகத்துல்லியமாக நம்மால் கணிக்க முடிகிறது. ஆனால், நிலவியலைப் பொருத்தவரை அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் நிலப்பரப்பை ‘டிகிரி’ கணக்கில் 360 பாகங்களாகப் பிரிக்கின்றனர். அது நமது முறையைவிடத் துல்லியமான குறிப்புகளை அவர்களுக்குத் தருகிறது. இருவரும் இருவேறு விதத்தில் காலத்தையும் திசையையும் அறிகிறோம். ஆனாலும், கடலெனும் பேரியக்கத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி ஓரத்தில் பதுங்கிக்கடக்கும் சிற்றெலிகள்தான் நமது கப்பல்களும் யவன நாவாய்களும்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 31இவ்வணிகத்தில் நாம் கோலோச்ச வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை `தங்கல்’ முகாம்களில் கோட்டைகள் அமைப்பதும் அங்கு வீரர்களை இறக்குவதுமல்ல, காலத்தையும் இடத்தையும் பற்றிய அறிவில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைவதால் மட்டுமே நிகழும்.

சுகமதி எவ்வளவு சொல்லியும் பொற்சுவை புறப்படுவதாக இல்லை. உண்மையில் பொற்சுவையும் தனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், மனம் கேட்க மறுத்துக்கொண்டே இருந்தது. மனம் உண்மையைப் பற்றி நிற்கும் விலங்கு. அதைச் சூழலுக்குப் பழக்குதல் எளிதல்ல.

சிலம்பிலிருந்து தெறிக்கும் மாணிக்கப் பரல்களின் ஓசையைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொற்சுவை, முதன்முறையாகக் காதலனால்  பாதம் தொடப்பட்ட கணத்தில்தான் அமைதி அடைந்த சிலம்பின் பரல்களை ரசித்துப் பார்த்தாள்.

அந்தப்பார்வையில் இருந்து விலக முடியாமல் சிலம்பைத் தொட்டுப் பார்த்தபடி அவன் கேட்டான், “பெண்பிள்ளைகளுக்கு ஏன் சிலம்பு அணிவிக்கிறார்கள் தெரியுமா?”

அவனின் சிறுதொடுதல்கள் சிலம்பின்  மாயவோசையை உள்ளுக்குள் கடத்திக் கொண்டிருந்தன. அவள் விடையின்றி நின்றாள்.

அவன் சொன்னான், “பெண் தன் காதலனின் அழைப்பை ஏற்று ஊர் உறங்கும் வேளையில் ஓசையின்றி அவனோடு சென்றுவிடக்கூடாது. அதற்காகத்தான் அவள் எங்கு சென்றாலும் ஓசையோடு செல்லும் ஏற்பாட்டைச் செய்தார்கள்.”

அவனால் ஏற்பட்ட மயக்கத்தை அவனின் மறுமொழியே தெளிவடையச் செய்தது.

அவன் மேலும் சொன்னான்,  “அதனால்தான் இளம்பருவத்தில் சிலம்பு அணிதலும் திருமணத்துக்கு முன்சடங்காக சிலம்பைக் கழற்றலும் நடக்கிறது. சிலம்பின் வேலை கால்களுக்கு அழகூட்டுவதோ, மனதை மகிழ்விப்பதோ அல்ல; காதுகளுக்கு ஓசையைக் கடத்துவது மட்டுமே. ஓசை தேவையில்லாதபோது அதைக் கழற்றிவிடுகிறார்கள்.”

அவன் சொன்னதைக் கேட்டபோது, `அன்றே அதைக் கழற்றிவிட வேண்டும்' என்று தோன்றியது. ஆனால், அண்ணனின் மேல் இருந்த வாஞ்சையால் அது இவ்வளவு காலம் காலிலே இருந்தது. `இப்போதுதான் அண்ணனும் இல்லை; என்னவனோடு நானும் இல்லை. இச்சிலம்பு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?'

எண்ணம் தோன்றிய கணத்தில் சிலம்பைக் கழற்ற அரங்கு நோக்கி விரைந்தாள் பொற்சுவை.

சூல்கடல் முதுவன் வரைபடத்தை வைத்துச் சொன்னான். குமரிமுனை திரும்பியப்பின் பாப்ரிகோன் போவது வரை எந்த இடையூறும் இல்லை. நேரடியான வடக்கு நோக்கிய பயணம் அது. கரையின் பார்வையிலிருந்து விலகாமல் இரவு பகலாகப் பயணத்தைத் தொடரலாம். சற்றே திசைமாறி ஆழ்கடலுக்குள் கப்பல்கள் போய்விட்டாலும் மறுநாள் காலை கதிரவனைப் பார்த்துக் கலத்தைச் செலுத்தினால் கரையோரம் வந்துவிடலாம்.

இப்பயணத்தின் பெரும் சவால் நிறைந்த பகுதியே பாப்ரிகோனிலிருந்து பெர்னிகே வரையிலான பகுதிதான். மேற்கு நோக்கி வளைந்து செல்லும் நெடும்பயணம். கரையின் பார்வையைத் தவறவிட்டோம் என்றால், நாம் பெரும்சிக்கலில் மாட்டிக்கொள்வோம். இரவில் விண்மீன்கள் எல்லா காலங்களிலும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. எல்லா விண்மீன்களும் ஆண்டு முழுவதும் தெரிவதும் இல்லை. அவற்றை நம்பமுடியாது. எனவே, பகலில் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் தெளிவான வானியல் காலம்தான் பயணத்துக்குப் பாதுகாப்பானது. சற்றே திசைமாறினாலும், நாம் எந்தத் திசைவழி மீள வேண்டும் என்பது பற்றி யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. யவனக் நாவாய்கள் பலவும் நம்முடைய கப்பல்கள் பலவும் மறைந்து கொண்டேதான் இருக்கின்றன.

பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பகுதிக்குத் துல்லியமான திசை அறிதலுக்கான வடிவம் ஒன்றை நாம் கண்டடைந்தால் கடற்பயணத்தின் பெரும்சாதனையாக அது அமையும்” வரைபடத்தைக் காட்டி நிலைமையை முழுமையாக விளக்கினார் சூல்கடல் முதுவன்.

அதன்பின், எல்லோரும் திசைவேழரைப் பார்த்தனர். பார்வைக்கான பொருள் அவருக்குப் புரிந்தது. ஆனால், அவர் எதுவும் பேசாமலே வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

``பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பயணத்தில் கடைசியாகக் கப்பல்கள் எப்போது மறைந்தன?”

மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்று நாவாய் களும் இரு கப்பல்களும் மறைந்துவிட்டன.

சற்றே சிந்தித்தபடி இருந்தவர் சொன்னார்.  “மூன்று மாதங்களுக்கு முன்பு மேலைக்காற்று உச்சங்கொண்டிருந்த காலம். அப்போது தவறிய கப்பல்கள் நடுகடல் நோக்கிப் போகமுடியாது. அதற்கு எதிர்த்திசையில்தான் காற்று தள்ளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியிருப்பார்கள்.”

“அப்படி எதுவும் நிகழ்வில்லையே!”

“அப்படி என்றால், நீ வைத்துள்ள வரைபடம் தவறு. இதில் உள்ள திசை தவறு.”

சூல்கடல் முதுவன் மறுமொழியின்றி நின்றார்.

“தவறான ஒன்றை வைத்துக்கொண்டு சரியானதற்கான வழியைக் கண்டறிய முடியாது.”

“அப்படியென்றால் சரியானதென்று எதைச் சொல்கிறீர்கள்?”

“வரைந்த கோடுகளை அடிப்படையாக் கொண்டு திசையறிய முடியாது. நாள்மீன்களையும் கோள்மீன்களையும் கொண்டு திசையறியலாம். அதையும் அறியமுடியாமல் செய்யும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. எனவே, இவற்றைக் கடந்த வழிமுறைகள் உண்டா என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.”

“அது எப்படிச் சாத்தியமாகும்?”

“ஏன் ஆகாது. கதிரவனின் நிழலை மட்டுமா நம்பி பொழுதளக்கிறோம். நீர் வட்டிகளைக் கொண்டும் மணற்குடுவைகளைக் கொண்டும் பொழுதளக்கிறோம் அல்லவா? சின்னஞ்சிறு கருவியைக்கொண்டு கதிரவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொழுதை நம்மால் அளக்க முடிகிறது. பகலையும் இரவையும் நமது கணக்குகளுக்குள் அடக்க முடிகிறது. அதேபோலக் கதிரவனையும் விண்மீன்களையும் பார்க்க முடியாவிட்டாலும் திசையைக் கண்டறியும் வழிமுறை ஒன்றை நாம் கண்டறிய வேண்டும். அதுதான் இதற்கான தீர்வைத் தரும்.”

“அப்படி ஒன்றை நம்மால் உருவாக்க முடியுமா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

“நம்மால் உருவாக்க முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். இயற்கை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும். நாம் அவற்றைக் கண்டறிய வேண்டும்.”

“எப்படி?”

“அதுதான் அதன் ரகசியம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...