
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
கபிலரின் மீது, வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்து மூன்று நாள் பூசினர். உடலின் எரிச்சல் சற்றே அதிகமாக இருந்தது. ``இப்படித் தொடர்ந்து பூசினால், கைகால்களில் உள்ள முடிகள் கருகிவிடப்போகின்றன” என்றார் கபிலர்.
உதிரனும் மற்ற இரு பெரியவர்களும் தேய்த்து விட்டுக்கொண்டு இருந்தனர். எதிரில் இருந்த கல்லில் உட்கார்ந்தபடி தேக்கன் சொன்னான், “உங்களின் கவலை அப்படி இருக்கிறது; எனது கவலையோ வேறு மாதிரி இருக்கிறது”
“என்ன அது?”
“இப்படித் தொடர்ந்து தேய்ப்பதன் மூலம் முடிகள் சடைபிடித்து வளர்ந்துவிட்டால் என்ன செய்வது?”
தேய்த்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிரிப்புத் தாங்கமுடியவில்லை. கபிலருக்கோ சற்றே அதிர்ச்சியாக இருந்தது. “ஏன்? இதற்கு முன்னால் தேய்த்து விடப்பட்டவர்களுக்கு அவ்வாறு வளர்ந்ததா?”
“அதுதானே தெரியவில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரை வெளியில் இருந்து வந்த யாரும் பறம்பில் காலவரையின்றித் தங்கவில்லை. எனவே, மற்றவர்களுக்கு இதனைத் தேய்த்துவிடும் பேச்சே எழவில்லை.”
“நான்தான் சோதனை உயிரியா?”

“உங்களை ஒருபோதும் நாங்கள் சோதிக்க மாட்டோம். உங்களுக்காக எல்லாச் சோதனை களையும் நாங்கள் ஏற்போம்” என்று சொல்லியபடி உதிரனின் தோளைத் தொட்டான் தேக்கன்.
கபிலர் அவனைப் பார்த்தார். உதிரன் இருவரையும் பார்த்தபடி நின்றான்.
தேக்கன் சொன்னான், “நான்கு முறை நான் காடறிய பிள்ளைகளை அழைத்துப்போய் வந்துவிட்டேன். காட்டின் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு மீளத்தான் அப்பயணத்தை மேற்கொள்கிறோம். ஆனால், அப்பொழுதுகூட வண்டுகடி மரத்தின் அடியில் யாரையும் அனுப்பியதில்லை. அதன் வாடை கணநேரத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. அடுத்தவனை அனுப்பி, அவனைத் தூக்கிவருவதற்குள் இவனும் மயங்கிவிடுவான். இப்படிப் போகிறவர்கள் எல்லாம் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதில் அதிகம். அது நம்மை எளிதில் ஏமாற்றி, உயிர்கொல்லும் மரம். அந்த மரத்தின் பட்டையை ஒருவன் துணிந்துபோய் உரித்தான் என்பதும், அதனைப் பாரி அனுமதித்தான் என்பதும் உங்களுக்காகத்தான். உங்களின்பொருட்டு நாங்கள் எச்சோதனையையும் எதிர்கொள்வோம்.” சொல்லும்போது, தேக்கனின் குரலில் இருந்த உறுதி கபிலரை உலுக்கியது.
தேய்த்த மருந்தோடு குறிப்பிட்ட நேரம் வரை அமர்ந்திருந்த கபிலர், பின்னர் குளித்துவிட்டு வந்தார். தேக்கனும் அவரும் பொழுதெல்லாம் பேசினர். தேக்கனைப்பற்றியும் காடறிதலைப் பற்றியும் கபிலருக்குத் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. எல்லாவற்றையும் பேசிக் கழித்தார்.
ஒரு வாரம் கழிந்தது. மூன்று குழுக்கள் சென்று, இருபது பேரெலிகளைப் பிடித்துவிட்டன. இன்னும் இரண்டு தேவையாக இருந்தது. தோழர்களோடு உதிரன் புறப்பட்டபோது கபிலரும் புறப்பட்டார். “இத்தனை நாள் நான் ஓய்வில்தானே இருந்தேன்” எனச் சொல்லிப் புறப்பட்டார். அவர் புறப்பட்டால் பாரியும் வந்துவிடுவான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கபிலர் வராமல் இருந்த நாட்களிலும் பாரி வேட்டைக்கு வந்தான். அதுதான் ஏன் என்று புரியாமல் வீரர்கள் திகைத்தனர். பறம்புமலையின் மேற்றிசைக் குன்றுகளிலே அவர்கள் அதிகம் அலைந்து திரிந்தனர்.
வழக்கம்போல் குழு புறப்பட்டது. வடகிழக்குத்திசை நோக்கிச் செல்லலாம் என்று அவர்கள் முடிவுசெய்தபோது, அதற்கு நேரெதிராக தென்மேற்குத்திசை நோக்கிப் போகுமாறு பாரி சொன்னான். உதிரனுக்கும் மற்ற வீரர்களுக்கும் அதற்கான காரணம் புரியவில்லை. அவர்களை அனுப்பிவைத்த தேக்கனால் உய்த்தறிய முடிந்தது.
அவர்கள் எவ்வியூரின் தென்மேற்குத் திசையில் போனார்கள். ‘இப்பகுதியில் புலிகள் மிக அதிகம். அவற்றிடம் தப்பித்தான் பேரெலிகள் உயிர்வாழவேண்டும். பிற பகுதியோடு ஒப்பிட்டால், மிகமிகக் குறைவாகத்தான் இப்பகுதியில் பேரெலிகள் இருக்க வாய்ப்புண்டு. பின் ஏன் பாரி இத்திசையில் போகச் சொன்னான்?’ என்று எண்ணியபடியே நடந்தான் உதிரன். பாறை இடுக்குகளைக் கிண்டிக் கிளறியபடி போய்க்கொண்டிருந்தான். பேரெலியின் எச்சங்கள் எவையும் தென்படவில்லை. நடுப்பகல் வரை அவர்களின் கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை.

இன்னொரு நாள் வரவேண்டியிருக்கும்போல என்று உதிரனுக்குத் தோன்றியது. நெடும்பொழுது கடந்தது. வீரர்கள் இருகூறாகப் பிரியலாம் என்று கருத்துச் சொன்னார்கள். ‘`சரி'’யென்றான் பாரி.
பிரிந்தவர்கள் நாலு எட்டு வைப்பதற்குள், மழை பொழியத் தொடங்கியது. சடசடவென இறங்கிய கணத்திலேயே அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. அனைவரும் அருகிலிருந்த மலைப்பொடவிற்குள் போய் ஒடுங்கினர்.
மேனியில் இருந்த நீர்த்துளிகளை உதறியபடி, “மழைத்துளிகள் ஒவ்வொன்றும் வேப்பமுத்து அளவு இருக்கிறது” என்றார் கபிலர்.
“கார்காலத்தின் முதுநாள் தொடங்கப் போகிறது. இனி, அதன் வேகம் இணையற்றதாகத்தான் இருக்கும்” என்றான் பாரி.
மழைக்கான பருவத்தில்தான் மழை பெய்கிறது. ஆனால், அதன் பொழிவு வெவ்வேறு தன்மைகளைக் கொண்டது. தொடக்க நாட்களில் பெய்யும் மழை என்பது மேகம் உதிர்க்கும் தூசி போன்றது. காற்றில் அலைஅலையாய் இறங்குவதும், நிலம் ஈரமாகுமுன் மறைவதும், காற்றுக்குள்ளே கரைந்துபோகும் கன அளவு கொண்டதுமாக இருக்கும்.
தூசிப் பருவம் முடிந்து, தும்மல் பருவம் தொடங்கும். எதிர்பாராத நேரத்தில் சட்டென அடித்துவிட்டுப் போய்விடும். போய்விட்டது என நினைக்கும்போது திரும்பி அடிக்கும். நம்மால் கணிக்க முடியாத ஒரு விளையாட்டை விளையாடும். அப்போது பெய்யும் மழையில் நீர்த்துளிகள் நீள்வடிவிலே இறங்கிவரும்.
மூன்றாம் கட்டம், முகில்கள் கூடல்கொள்ளும் பருவம். இதுநாள்வரை நீரை உதிர்த்துக் கொண்டிருந்த மேகங்கள் இப்போது கூடலில் மயங்கி உருக ஆரம்பிக்கும். இணைமேகங்கள் சூழ வலம்வந்து வானில் இடைவிடாமல்கூட, காதல் கசிந்து காட்டாறாய் உருகி ஓடும். மழைத்துளிகள் வேப்பமுத்து அளவினைக் கொண்டிருக்கும்.
நான்காம் பருவத்தில் மோகம்கொண்ட முகில்கள் தரைவந்து தங்கும். நிலம் வானுக்குள் நுழையும். மரத்தின் உச்சிக்கிளை மேகத்தின் வெளிப்புறம் நீண்டிருக்க, வேரில் மழைநீர் பாய்ந்தோடிக்கொண்டிருக்கும். அது இயற்கையின் அதிசய காலம். வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் ஏணி விலகிக்கொள்ள, மேகக்கூட்டம் மரம், செடி, கொடிகளுக்கிடையே மீனைப்போல நீந்திப்போகும். ஒருவரை ஒருவர் பிடித்தும் விலகியும் கரைந்தும் உருகியும் காதல்கொள்ளும் காலம். இதுவே கார்காலத்தின் முதுநிலைப்பருவம்.
இப்போது அது தொடங்கியிருக்கிறது. இறங்கிய மழை, இரவு வரை நிற்கவில்லை. குகையைவிட்டு வெளிவரும் எண்ணமே பிறக்கவில்லை. முன்னிரவில் குறையத் தொடங்கிய மழை, நள்ளிரவில்தான் நின்றது. வீரர்கள் பின்னிரவானதும் இருவேறு குழுக்களாகப் பிரிந்து போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நாம் எந்தக் குழுவோடு போவது என்று கபிலர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பாரி அவரை அழைத்தபடி குகையைவிட்டு வெளியேறினான்.
“அவர்கள் பேரெலியைப் பிடித்து வந்து சேரட்டும். நாம் வேறொரு திசை வழியே போவோம்” என்றான்.
பாரியின் இந்த முடிவை எதிர்பார்க்காத கபிலர் சற்றே திகைத்தபடி பின்னால் நடக்கத் தொடங்கினார். மேகத்தைக் கொட்டித்தீர்த்த வானம் விண்மீன்களால் பூத்துக்கிடந்தது. தேய்நிலவு கொடிபோல் மெலிந்திருந்தது. மெல்லிய நீலநிற வெளிச்சம் தரையில் பரவிக்கிடக்க, கபிலரை அழைத்துக்கொண்டு பாரி மலைமுகட்டை நோக்கி நடந்தான். எங்கும் நீரோடும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. “வண்டுகடி மரப்பட்டையைத் தேய்த்ததால்தான் உங்களைத் துணிந்து அழைத்துச் செல்ல முடிகிறது’’ என்று சொல்லியபடி, பாறையின் மீதேறி நின்று பார்த்தான். ஒளிரும் எண்ணிலடங்கா விண்மீன்களைக்கொண்டு வானம் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு நேரெதிரில் வடிவுகொண்டு வளைந்திருந்தது கார்த்திகை விண்மீன் கூட்டம்.
விண்மீன் பார்த்துத் திசை அறிந்தபடி முன்நடந்தான் பாரி. தொடர்ந்து வந்த கபிலரிடம் கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்தைக் கவனித்தீர்களா?”
“எதைக் கேட்கிறாய்? கார்த்திகைக் கூட்டத்தையா?”
“ஆம்.”
“பார்த்தேனே” என்றார்.
பாரி வேறெதையும் கேட்காமல், அமைதியாக நடந்து சென்றான்.
கபிலரும் பாரியைத் தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பாரியின் கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. ‘இதை ஏன் கேட்டான் பாரி? கார்த்திகைக் கூட்டம் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும் எனப் பேசிப்பார்க்க நினைத்தானோ?’ என்று தோன்றியது. பெருங்கணியர் திசைவேழரிடம் உட்கார்ந்து நாள்கணக்கில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றிப் பேசியது நினைவுக்குள்ளிருந்து அலைஅலையாய் மேலெழுந்து வந்தது. கபிலர் பாரியை நோக்கிக் கேட்டார், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி எதையோ கேட்கவந்து நிறுத்திக்கொண்டாயே, ஏன்?”
கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி பாரி கேட்கும் விளக்கத்துக்கு விடை சொல்லும் ஆர்வத்திலிருந்துதான் கபிலரின் கேள்வி பிறந்தது. இவ்வழகிய விண்மீன் கூட்டம் கபிலரை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் அதன் நகர்வைப் பற்றி மிக நுட்பமாகத் தெரிந்துவைத்திருந்தார். அதனையெல்லாம் பாரியிடம் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமே அவரை உந்தித்தள்ளியது.
முன்னால் நடந்தபடி இருந்த பாரி கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்திற்குக் கார்த்திகை என்று பெயர் சூட்டியது யார் தெரியுமா?”
கேள்வி கபிலரை திடுக்கிடச் செய்தது. நடுங்கி நின்றார் கபிலர். தாக்குதலைக்கடந்து வார்த்தை மேலெழவில்லை. நேரங்கழித்தே சொல் வெளிவந்தது... “என்ன கேட்டாய்?”
“அவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டியது யாரெனக் கேட்டேன்?”

‘பதில் இருக்கட்டும்; இப்படியொரு கேள்வியே ஒருபோதும் எனக்குத் தோன்றவில்லையே? திசைவேழருக்குக்கூட இக்கேள்வி தோன்றியிருக்காது என்றே நினைக்கிறேன். விண்மீன்கள் பற்றி எண்ணற்ற கேள்விகள் கேட்டுள்ளேன். உன் ஐயங்கள் தீரவே தீராதா என்று திசைவேழர் பலமுறை சலித்துக்கொண்டுள்ளார். ஆனாலும், இப்படியொரு கேள்வி ஏன் இதுவரை எனக்குத் தோன்றவில்லை? திசைவேழருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தால் என்னிடம் அவர் அதைப் பகிர்ந்துகொண்டிருப்பார். அவருக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பேச வார்த்தையின்றித் தடுமாறினார் கபிலர்.
“எதுவும் பேசாமல் வருகிறீர்களே... ஏன்?”
“உனது கேள்வி ஆதிகாலத்தைப் பற்றியதாக இருக்கிறது. மனிதன் பொருளின்மீது மொழியைப் பொருத்தத் தொடங்கிய காலத்தைப் பற்றி நீ கேள்வி கேட்கிறாய். நாங்கள் தற்காலத்துக்காரர்கள். மனிதர்களை ஆசானாக ஏற்று, கற்று வளர்ந்தவர்கள். இயற்கையை இரண்டாம் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டோம். எங்களது கற்றல்முறை ஆழமற்றதெனத் தெரிகிறது.” பதிலுக்காகச் சொற்களைத் தேடினார் கபிலர்.
கேட்டபடி நடந்துகொண்டிருந்த பாரி, “பெரும்புலவர் விடைசொல்லாமல், விளக்கம் சொல்வது ஏன்?”
“விடை சொல்லாவிட்டால் விட்டுவிடும் கேள்வியை நீ கேட்கவில்லை. நான் விடை

சொல்லமுடியாததற்கான சரியான காரணத்தை முன்வைக்க முடியவில்லை என்றால், உனது கேள்வி எனது அறிதலின் அச்சையே நொறுக்கிவிடக்கூடியது. அதனால்தான் எனக்குள் இப்பதற்றம் உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.”
மழை நின்ற நள்ளிரவில், நீரோடைகளின் சலசலப்பில், மயக்கும் இளநீல ஒளியில் நிலம் பூத்துக்கிடக்க, மின்னிச்சிரிக்கும் விண்மீன் கூட்டத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைக் கண்டறிந்து பெயர் சூட்டியவன் முருகன்.”
எதிர்பாராத பதிலாக இருந்தது. நடையை நிறுத்தினார் கபிலர். “முருகன்தான் இவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டினான் என்று எப்படிச் சொல்கிறாய்?”
சற்றே சிந்தித்த பாரி, “நீங்கள் பச்சை மலைத்தொடரில் ஏறத்தொடங்கிய முதல்நாளில் நாக்கறுத்தான் புற்களைக் கடக்கும்போது நீலன் உங்களுக்கு முருகனின் கதையைச் சொன்னான் அல்லவா?”
“ஆம்.”
“அவன் கதையை எத்துடன் முடித்தான்?”
“அது எனக்குத் தெரியாது. சந்தனவேங்கையின்மீது பரண் அமைத்து, முருகனையும் வள்ளியையும் அதில் தங்கவைத்த எவ்வி, அதன்பின் குடில் திரும்பி பூண்டுப்பானத்தைக் கலக்கிக் கொடுத்து யாரையும் அப்பக்கம் போகவிடாமல் செய்தான் என்பது வரை எனக்கு நினைவிருந்தது. தனை மயக்கி மூலிகையைக் கொடுத்ததால், அதன் பிறகு அவன் சொன்ன கதைகள் எவையும் எனக்கு நினைவில்லை.”
நேரெதிரே கார்த்திகை விண்மீன் ஒளிவீசிக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த பாரி, மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான்.
பச்சை மலையில், யானைப் பள்ளத்தின் தென்திசை முகட்டில் தனித்திருந்த வேங்கை மரத்தின்மீது சந்தனக்கட்டை கொண்டு சிலாக்கொடியால் பிணைத்துக் கட்டிய பரண்விட்டு, மறுபகல் இறங்கினர் முருகனும் வள்ளியும்.

ஆணும் பெண்ணும் தங்களை அறியத்தொடங்கிய தலைநாள் இரவது. இவ்விரவின் குணம் பல பருவங்களுக்கும் நீடிக்கும். இயற்கையின் எல்லா மாற்றங்களின் வழியேயும் தங்கள் இணையின் மீதான காதலை நெய்யத்துடிக்கும் உயிராற்றல் பெருகியபடி இருக்கும். காதல் அறியும்பொழுதுதான் அடுத்த இடத்துக்கு அழைத்துச்செல்லும்; அறியாதவன் அதுவே காதல் என்று நின்றுவிடுவான்.
காதலின் அழைப்பை ஏற்று இருவரும் செல்லத் தொடங்கினர். கார்காலத்தின் தூசிப்பருவம் தொடங்கியது. காற்றில் மெல்லிய சாரல் மிதந்துவந்து வள்ளியின் முகத்தில் நீர்பூசிச் சென்றது. அவள் கைகொண்டு அதனைத் துடைக்காமல் நடந்தாள். முருகன் முன்னால் சென்றுகொண்டிருந்தான்.
மேகத்தின் தூசி இருவர் மீதும் விடாமல் படர்ந்தது. இக்கானகத்தில் எம்மலர்களுடனும் ஒப்பிட முடியாத பேரழகுகொண்டு மிளிர்ந்தது வள்ளியின் முகம். பார்வையை விலக்கி நடக்க முடியாது என்று முருகனுக்குத் தோன்றியது. தனது விரல்கொண்டு அவளது முகத்தைத் துடைக்க எண்ணினான். அப்போது வள்ளியின் கைகள் முருகனின் முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்தன.
முருகனின் முகத்தில் கைதொட்ட கணத்தில் வள்ளியின் முகத்தில் இருந்த நீர்த்துளிகள் மறைந்தன. முருகனின் கை அவளது கன்னம் தொடும்போது நீர்த்துளி அற்று இருந்தது வள்ளியின் முகம்.
“எனது விரல் தொடுவதற்குள் நீர்த்துளிகள் எப்படி மறைந்தன?” எனக் கேட்டான் முருகன்.
“என் விரல்கள் உனது முகம் தொட்டதனால்.”
முருகன் திகைத்து நின்றான்.
வள்ளி சொன்னாள், “தொடுதலில் கடந்துவரும் ஆற்றல் என்னையே உருக்குகிறது. சின்ன நீர்த்துளிகள் என்ன ஆகும்?”
‘தொடுதலின் மூலம்தான் ஆணின் ஆற்றல் கடக்கிறது. ஆனால், தொடாமலே பெண் கடத்தும் ஆற்றலுக்கு இணை சொல்ல என்ன இருக்கிறது’ என்று எண்ணியபடி, முருகன் முன்னே நடந்துகொண்டிருந்தான்.
அவள் பேச்சேதுமின்றிப் பின்தொடர்ந்தாள். தூசிக்காற்று எதிர்வீசியபடி இருந்தது.
வள்ளி கேட்டாள், “வேங்கை மரத்தின் சந்தனப்பரண்விட்டு ஏன் அகல்கிறோம்?
“அது எவ்வி உருவாக்கியது. நமக்கான இடத்தை நம் கனவால் உருவாக்க வேண்டும்.”
வள்ளிக்கும் ‘சரி’தான் என்று தோன்றியது.
“சென்ற முறை ஏழிலைப்பாலை நோக்கி நான் அழைத்துச் சென்றேன். இம்முறை நீ அழைத்துச் செல்” என்றான் முருகன்.
அவனது சொல்சுமந்து முன்நடந்தாள் வள்ளி. இணையற்ற இடம்நோக்கி அழைத்துச் செல்கிறாள் என்பதை, பூரிக்கும் அவளுடைய முகம் சொன்னது.
பின்நடந்து வந்த முருகனின் மயக்கம் மேலும் அதிகமானது.
“மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு” என்றான் முருகன்.
“நானும் அப்படித்தான் நம்பினேன்... உன்னைக் காணும் வரை” என்றாள் வள்ளி.
இருவரும் வெட்கம் கலைந்து சிரித்தனர். தூசிக்காற்று நின்று பொழிந்தது.
முன்சென்ற வள்ளியின் கண்களுக்குச் சற்றுத் தொலைவில், விளைந்த பயிர் தெரிந்தது. அதனருகே போனாள். யானை படுத்துறங்கும் அளவு நிலத்தில் அப்பயிர்கள் விளைந்திருந்தன. அந்தக் கதிரை கைகளால் உருவியபடியே வள்ளி சொன்னாள், “இது அரிதான நெற்பயிர். அன்னமழகியரிசி என்று இதனைச் சொல்வோம். மற்ற பயிர்களெல்லாம் பசியைப் போக்கும். ஆனால், இதுமட்டுந்தான் பசி நீக்குவதோடு, உடலை மலரவைத்துச் சுகம் தரும். மனம்தான் பெரும்பாலும் மகிழ்வை உணர்கிறது. உடல் தேவையை மட்டுமே உணர்கிறது. ஆனால் இப்பயிர்தான் உடலை மகிழவும் வைக்கும்.” சொல்லிக்கொண்டே, கைப்பிடி அளவு கதிர் பறித்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதனை முருகனுக்குக் கொடுத்தாள்.
முருகன் அதனை வாங்கி உட்கொண்டான். ‘ஏற்கெனவே என் உடலும் மனமும் மகிழ்வால் திணறிக்கிடக்கின்றன. இதில் இதுவும் சேர்ந்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமோ?’ என்று அவனுக்குத் தோன்றியது.
வள்ளியும் வாயில் போட்டு மென்றபடி நடந்துவந்தாள். சிறிது தொலைவு சென்றபின், வள்ளிக்கு விக்கல் வந்தது. அருகில் நீரோடை எதுவும் இல்லை. கார்காலம் இப்போதுதான் தொடங்குகிறது, நீர் புரண்டோட இன்னும் நாளாகும். குட்டை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான் முருகன். எதுவும் தென்படவில்லை.
வள்ளிக்கு உடனடியாகக் குடிக்க நீர் தேவைப்பட்டது. ஆனால், அவ்விடம் கிடைக்காது எனத் தெரிந்தது. அருகிருந்த சிறு பாறையின் மீதேறி, நாற்புறமும் பார்த்த முருகன், ஒரு திசை நோக்கி ஓடினான்.
நீர்நிலையைக் கண்டறிந்துவிட்டானோ என்ற எண்ணத்துடன் பின்தொடர்ந்து ஓடினாள் வள்ளி. அங்கு கானவெள்ளெருக்கொன்று செழித்திருந்தது.
“இங்கு ஏன் ஓடி வந்தீர்கள்?” எனக் கேட்டாள் வள்ளி.
“நீர் எடுக்கத்தான்” எனச் சொல்லியபடி, வெள்ளெருக்கின் அடிவாரமிருந்த சிறுசிறு கற்களை நகர்த்தி, குழியை உருவாக்கினான்.
“இவ்விடத்தில் நீர் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
``கானவெள்ளெருக்கின் விதையைக் காற்று எங்கும் தூவிவிட்டிருக்கும். ஆனால், இங்கு மட்டுந்தான் அது முளைத்துள்ளது, அது நீர் உறிஞ்சும் செடியல்ல; நீர் குடிக்கும் செடி. அதிக நீர் இருப்பதால்தான் இவ்விடத்தில் வளர்ந்திருக்கிறது'' சொல்லிக்கொண்டே கற்களை விலக்கி, குழியை ஆழப்படுத்தினான்.
“வெள்ளெருக்கின் வேர் இரு முழத்தைத் தாண்டாது. எனவே அந்த அளவுக்குள்தான் நீர் இருக்க வேண்டும்” என்று முருகன் சொல்லும்போதே பாறையின் இடுக்கில் கசிந்தோடியது நீர்.
இரு கைகளையும் அதன் அடியில் நுழைத்து, நீர் அள்ளிப் பருகினாள் வள்ளி. நீரின் குளிர்ச்சி உடலெங்கும் பரவியது.
முருகன் சொன்னான், “மண்ணுக்குள் நீர் இருப்பதும் மனதிற்குள் நீ இருப்பதும் முகம் பார்த்தால் தெரியாதா என்ன?''
குளிர்ச்சி நீரின்றியும் பரவியது.

முருகன் மீண்டும் சொன்னான், “காதல் சற்றே தலைகீழானது. நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்.” சொல்லிக்கொண்டே, சிறு கற்களை குழிநோக்கி நகர்த்தி மூடினான் முருகன்.
வள்ளி மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவள் அழைத்துச் செல்லும் இடம் காண முருகனுக்குள் பேரார்வம் மேலெழுந்தபடி இருந்தது. அவர்களின் கண்படும் தொலைவில் பன்றிக்கூட்டம் ஒன்று எதிர்சென்றது. இருவரின் கண்களும் அதனைப் பார்த்தன.
‘நான் விரட்டிச்சென்று அம்பெய்திய பன்றிக்கூட்டம் இதுதானா?’ எனக் கேள்வி எழுந்தது முருகனுக்கு.
‘இவற்றை விரட்டி வந்ததால்தான் நான் வள்ளியைக் கண்டேன். எனக்குக் காதலைத் தந்த இவற்றுக்கு நான் அம்பெய்திக் காயத்தை அல்லவா தந்துள்ளேன்?’ எனத் தோன்றியது. சட்டென பின்திரும்பி ஓடினான் முருகன். வெள்ளெறுக்கஞ்செடியின் அடிவாரத்தில் மூடிய கற்களை மீண்டும் கிளறி அகற்றி, பன்றிகள் நீர் அருந்த வழிசெய்துவிட்டு ஒதுங்கினான்.
பன்றிக்கூட்டம் நீர் நோக்கி நகர்ந்தது. அதன் குவிவாய் நீர்தொட்டு உறிஞ்சின. பார்த்துக் கொண்டே வள்ளியின் அருகில் வந்தான் முருகன். அவள் கேட்டாள், “இவற்றின் முதுகில் செந்தாது படிந்திருப்பதைப் பார்த்தீர்களா?”
“இவற்றின் உடலில் காயம் இருக்கிறதா என்பதைத்தான் எனது கண்கள் தேடின. வேறெதையும் நான் கவனிக்கவில்லை.”
“கார்காலத்தில் முதலில் மலரும் செங்கடம்பு மலரத் தொடங்கிவிட்டது. அம்மர அடிவாரத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள்பாவிய செந்நிறப் பூக்களின் மீதுதான் இவை படுத்தெழுந்து வருகின்றன. அதனால்தான் இவற்றின் மேலெல்லாம் செந்தாது ஒட்டியிருக்கிறது.”
அவள் சொன்ன பிறகுதான் அதனைக் கவனித்தான். உடலில் இருக்கும் மயிர்க்கால்களில் செந்தாது பூசியிருந்தது. ஒன்றினை ஒன்று உரசியபடி நீர் அருந்த, குழிநோக்கி முண்டின.
பார்த்துக்கொண்டே வள்ளி சொன்னாள், “மரத்திலே மாலைபோலத் தொங்கும் செங்கடம்ப மலரெடுத்து உனது மார்பில் சூடும்படி அவை எனக்குச் சொல்கின்றன”
“அது கொத்துப்பூ. அதை எனது மார்பில் சூடுவதைவிட, உனது கூந்தலில் சூடுவதுதான் அழகு!”
“அக்கொத்துப்பூவின் இதழ்கள் எவ்வளவு அசைத்தாலும் உதிராதது. அசையா மணம்கொண்டது. அதனால்தான் உனது மார்பிற்சூட ஆசைப்படுகிறேன்.”
`உதிராத பூக்களை எனது மார்பிற்சூட ஏன் ஆசைப்படுகிறாள்?' என முருகன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, வள்ளி சொன்னாள், “அசைத்தால் உதிராதது, அணைத்தாலும் உதிராதல்லவா?”
முருகன் திகைத்தான். செங்கடம்பின் அடிவாரத்தில் மனம் புரண்டு எழுந்தது. நீள்வாய் கொண்டு நீருறிஞ்சும் ஓசை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தது. மனம் அதனை நோக்கித் தாவியது.
``நான் கூந்தலில் சூடுவது ஒருவருக்கானதாகிறது. நீ மார்பில் அணிவது இருவருக்குமானதாகிறது.” சொல்ல நினைக்கும் சொற்களைச் சொல்லாமலே நடந்தாள் வள்ளி.
சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் காதல் வளர்கிறது. வெள்ளெருக்கின் வேர்போல மனதின் ஆழத்தில் இருந்து நீர்குடித்துப் பழகியது காதல். அதற்குச் சொல் சொல்ல மலர்வாய் தேவையில்லை. அதனினும் ஆழ்ந்த அன்பைக் குடித்து வளரவே வாய்முகப்பின் ஈரிதழ்களும்.

சுரந்துகொண்டிருக்கும்போதே அருந்திக் கொண்டிருக்கும் அதிசயத்தை இதழ்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தன. முருகனின் மனதில் மலர்ந்தது சொல், “நான் அகழ்ந்து கண்டறிந்ததை, நீ அணைத்துக் கண்டறிந்தாய். நான் கண்டறிந்தது ஒருவருக்கானது; நீ கண்டறிந்தது இருவருக்குமானது.” சொல்லாத சொல்லேந்தி இப்பொழுது முருகன் நடந்துகொண்டிருந்தான்.
முன் நடந்த வள்ளி, பாறை இடுக்குகளின் வழியே உள்நுழைந்தாள். இருட்பிளவின் வழியே எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்று சிந்தித்தபடியே பின்தொடர்ந்தான் முருகன்.
ஒரு பெரும்பாறையின் முனை திரும்பினாள் அவள். பின்னால் வந்தவன் அதேபோலப் பாறை கடந்ததும் முனை திரும்பினான். திரும்பிய கணத்தில் அவன் கண்கள் பார்த்த காட்சி, அவனை அசையவிடாமல் அப்படியே நிறுத்தியது. இமைகொட்டாமல் பார்த்தான் முருகன், தான் வாழ்வில் இதுவரை பார்க்காத ஒன்றை.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...