மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!

கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளிவந்த நேரம். எம்.ஜி.ஆர் அப்போதுதான் தி.மு.க-விலிருந்து வெளியேறி, தன் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் இருந்தார். தி.மு.க, அதி.மு.க தொண்டர்களுக்கு இடையே ஆங்காங்கே பிரச்னை வெடிக்கும். சில நேரங்களில் கட்சித் தலைவர்களின் வீட்டைச் சுற்றியும் டென்ஷன் இருக்கும். அதனால் போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

அந்த மாதிரி நேரத்தில் ஒருநாள்... ‘கலைஞர் பார்க்க வேண்டும்’ என்று சொன்னதாக என்னை அழைத்தார்கள். வீட்டின் முன்னால் தொண்டர்கள் திரண்டிருக்க, போலீஸ் அதிகமாக இருந்தது. வீட்டின் பின்புறமாக என்னை வரச் சொன்னார்கள். உள்ளே போய்க் காத்திருந்தேன்.

கலைஞர் வந்தார். ‘‘வணக்கம் அண்ணே...’’ என எழுந்து நின்றேன். எதற்கு அழைத்தார் என்பது தெரியவில்லை. நானாகப் பேச்சைத் தொடங்கினேன்.

கலைஞரின் வசனம் கேட்டு சினிமா ஆசை ஏற்பட்டு சென்னை வந்த கதையைச் சொன்னேன். சிரித்துக்கொண்டே கேட்டார். பிறகு, ‘‘சினிமா எடுக்க ஒரு கதை வேண்டும்’’ என்றார்.

கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!

வசன யுகத்தில் இருந்து சினிமா மாறிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், முன்னாள் காதலனே நாயகியின் கணவனுடைய உயிரைக் காப்பாற்றப் போகும் டாக்டராக வருவார். ‘‘என்னை மறந்துவிட்டாயே?’’ என்பார் டாக்டர், தன் முன்னாள் காதலியிடம். அவள் பதிலாகச் சொல்வாள்: ‘‘என் கணவர் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கார் டாக்டர்.’’ அவ்வளவுதான் வசனம். ‘‘எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது... என் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். நீங்கள் இன்னமும் என்னிடம் காதலை எதிர்பார்ப்பது தவறு. என்னை மறந்துவிடுங்கள். என் கணவரின் உயிரைக் காப்பாற்றுங்கள். அவர் உங்களை நம்பி வந்திருக்கிறார்’’ என்றெல்லாம் நீட்டி முழக்காமல் அந்த வசனம் அமைந்திருக்கும். அந்தக் காட்சியைச் சொன்னேன். கலைஞர் தலையசைத்து சிரித்தார். எவ்வளவு பெரிய அரசியல் தலைவர். சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் அதிலே தெரிந்தது.

அவர் என்னிடம் ஒரு கதை கேட்டார். நான் அதற்கு, ‘உன்னைவிட மாட்டேன்’ என ஒரு டைட்டில் சொன்னேன். அவருக்குப் பிடித்துவிட்டது. அந்தத் தலைப்பில் கலைஞர் வசனத்தில் ஒரு படம் வரப்போவதாக சில தினசரிகளில் செய்தியும்கூட பின்னர் வெளிவந்தது. ‘‘நான் இன்று பாண்டியன் ரயிலில் மதுரை போகிறேன். நீங்களும் வாங்களேன், பேசிக்கொண்டு போவோம்’’ என்றார்.

‘‘மன்னிக்கணும் அண்ணே, திடீரென்று அழைத்ததால் ஓடி வந்தேன். அப்பா ஆஸ்பத்திரியில் இருக்கிறார். நான் உடன் இருக்க வேண்டும்’’ என்றேன்.

‘‘அப்ப இன்னொரு நாள் பார்க்கலாம்’’ என்றார்.

பிறகு வெவ்வேறு அரசியல் சூழல்கள். மிசா வந்து, எல்லாம் மாறிப்போனது. கலைஞர் வசனத்தில் என்னுடைய படம் வெளிவராமலே போய்விட்டது. தமிழ்த் திரையுலகைத் தன் வசனங்களால் புரட்டிப் போட்ட பெரிய மனிதர் அவர். சினிமா வசனத்தில் ஏற்பட்டுவிட்ட மாறுதலைத் தைரியமாக நான் சொல்ல அனுமதித்ததும், அதைக் கேட்டுக்கொண்டு அவர் வாய்ப்பு தந்ததும் சாதாரண விஷயமில்லை.

இந்திப் பட உலகில் என் திரைக்கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அனில் கபூர், ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, அனுபம் கெர், கிமி கட்கர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம், ‘சோனே பெ சுஹாகா’. படத்தின் ஆரம்பக் காட்சி. ஓர் ஏழைத் தம்பதி ரயிலில் பயணம் செய்கிறது. இரட்டைக் குழந்தைகள் வேறு. குழந்தை பாலுக்கு அழுகிறது. ரயிலில் உட்கார இடமில்லை. இந்த நேரத்தில்தான் தெரிகிறது, அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்துபோனது. ரயிலில் இன்னமும் அந்தக் குழந்தையை வைத்திருப்பது நல்லதல்ல. போய்ச் சேர வேண்டிய இடமும் அருகில் இல்லை. அந்தக் குழந்தையை ரயிலில் இருந்து வீசிவிடுவது என முடிவு எடுக்கிறார்கள். கண்ணீரும் தவிப்புமாக அந்தப் பெண்மணி குழந்தையை ரயிலில் இருந்து வீசி எறிகிறாள். கையில் இருக்கும் குழந்தையை வாரி நெஞ்சோடு அணைக்கிறாள். அதிர்ச்சி. அவள் வீசி எறிந்தது, உயிரோடு இருந்த குழந்தையை. ரயிலைவிட்டு இறங்கி, இறந்த குழந்தையைப் புதைக்கையில் போலீஸ் வந்துவிடும். ஆளுக்கொரு திசையில் ஓடுவார்கள். இந்தக் காட்சி படத்தில் இடம் பெறும்போது, ‘கதை, திரைக்கதை ஆர்.செல்வராஜ்’ எனத் திரையில் போடுவார்கள். ஒரு கதாசிரியருக்கு... அதுவும் தமிழ்க் கதாசிரியருக்கு இந்தி மொழிப் படத்தில் இப்படி ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு.

அப்துல் ஹாஃபிஸ் நாடியத்வாலா தயாரித்த படம். பாப்பையா இயக்கினார். பிரமாண்ட வெற்றி. எப்படி எனக்குக் கன்னட மொழியில் சிறந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கிடைத்தார்களோ... அப்படியே இந்தியிலும் நல்ல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமைந்தார்கள். அதனால்தான் ஒரு காலகட்டத்தில் பெங்களூரு, மும்பை, சென்னை என விமானத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தேன்.

கன்னடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு தயாரிப்பாளர், ராஜேந்திரசிங் பாபு. அவருடைய பல படங்களுக்குப் பணியாற்றி இருக்கிறேன். மைசூரில் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகில் அவருடைய வீடு. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பெயர் அந்த வீட்டின் சுவரில் பொறிக்கப்பட்டு இருந்தது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!

சிவப்புக் கம்பளம்!

முதன்முதலில் கன்னடத்தில் எனக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்த படம், ‘நன்ன தேவரு.’ ஒரு வங்கி ஊழியன், சினிமா கதாநாயகனாக வேண்டும் என்ற கனவில் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கிறான். இந்த நேரத்தில் ஒரு பிரபலமான டாக்டரின் மகள், கதாநாயகனுக்கு அறிமுகமாகிறாள். அந்த டாக்டருக்குப் பெரிய பெரிய சினிமா பிரமுகர்கள் எல்லாம் பரிச்சயம். அவரை வைத்து சினிமா சான்ஸ் பிடித்துவிட வேண்டும் என்பது ஹீரோவின் மனக்கணக்கு. அதற்காக அவனும் அவனுடைய அலுவலக ப்யூனும் ஏகப்பட்ட திட்டங்கள் போடுவார்கள். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, டாக்டரின் மகளைக் கதாநாயகன் காதலித்துக் கரம் பிடிப்பான்.

அதன்பிறகு, ‘சினிமாவுக்குப் போனால் தன் கணவன் திசை மாறிப் போய்விடுவான்’ என்ற அச்சம் நாயகிக்கு. ‘எங்கே தன் கணவன் சினிமாவில் பிரபலமாகிவிடுவானோ’ என மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். தன் கணவனும் சினிமா நடிகையும் இருக்கும் போஸ்டரைப் பார்த்து, உயரமான கட்டடத்தில் ஏறி அதைக் கிழித்தெறியும் மனநிலைமைக்குப் போய்விடுவாள். காமெடியும் சென்டிமென்ட்டும் பின்னி விளையாடியது. சுஜாதா - அனந்த் நாக் ஜோடியாக நடித்த அந்தப் படம், எனக்குக் கன்னடத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தது என்றே சொல்ல வேண்டும்.