மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!

கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

மிழ் சினிமாவின் நடிப்புச் சிகரம் சிவாஜியோடு நான் பணியாற்றிய படங்கள் பல உண்டு. ஆனால், என் பெயர்போட்டுத் திரையில் வெளியான படம், ‘முதல் மரியாதை’. அதைப்பற்றிச் சொல்ல நிறைய தகவல்கள் உள்ளன. அந்தக் கதைக்காக இரண்டாண்டுகள் உழைத்தேன். திருத்தித்திருத்தி நிறைய காட்சிகள் அமைத்தேன். படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நேரத்தில்கூட ஒவ்வொரு இரவும், மறுநாள் எடுக்கப்போகும் காட்சியை விவாதிப்போம்.

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக்கிராமத்தில் படப்பிடிப்பு. காவிரிக்கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம். சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம். சிவாஜி, ராதா, அவர்களின் உதவியாளர்களுக்கு மலைக்கு மேலே அரண்மனை போன்ற கெஸ்ட் ஹவுஸில் அறை ஒதுக்கியிருந்தோம். நான், பாரதிராஜா எல்லாம் வேறோர் இடத்தில்.

தினமும் இரவில், மறுநாள் எடுக்க இருக்கும் காட்சியை மெருகேற்றுவோம். ‘இந்த வசனத்தை இப்படி வைப்போம்... அப்படி வைப்போம்’ என்றெல்லாம் பேசுவோம். பாரதிராஜா காலையில் ஷூட்டிங் போக வேண்டும் என்பதால் தூங்கிவிடுவான். அதன்பிறகு இரவெல்லாம் காட்சிகள், வசனங்களைத் திருத்தி எழுதுவேன். காலையில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன். அவன் கிளம்பும்போது அந்த வசனப் பக்கங்களைப் படித்துப் பார்த்துப் பூரித்துப் போவான். பாராட்டாக, தூங்கிக்கொண்டிருக்கும் என் தலையைச் சிலுப்பிவிட்டுப் போவான். அது படம் அல்ல; தவம்.

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி, ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார். அப்போதுதான் கவனித்தோம். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை. தவறு நடந்துவிட்டது. கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது.

கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றான் பாரதி. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.

‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் கேரக்டர் சிவாஜிக்கு. ‘‘ஷூட்டிங்கில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னோம். சிவாஜி ஒரு கணம் எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார்.

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்தேன். அசந்து போனேன். அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது. கூடுவிட்டுக் கூடுபாயும் கலைஞன் அவர். அவரைப் பொறுத்தவரை, தவறியும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது. எந்தக் கேரக்டரில் நடிக்கிறாரோ... அதுவாகவே தன்னை பாவித்துக்கொள்கிறவர். அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம் எங்களுக்கிருந்தது. அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார். ‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தோம்.

‘‘அட யாருப்பா நீங்க... பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல. காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார்.

அவர் எப்படியும் நடிக்கக் கூடியவர். சாப்பாட்டு ராமனாக நடிக்கச் சொன்னாலும், கோடீஸ்வரனாக நடிக்கச் சொன்னாலும், எதுவுமே அவருக்கு இயல்பாக இருக்கும். எப்படிக் கேட்கிறோமோ, அப்படி நடிப்பார். பாரதிராஜா அவரை மிக இயல்பாக இருந்தால் போதும் என்றே சொல்லி நடிக்கச் சொன்னான். ‘‘என்னப்பா இது? ‘இப்படி வா’ங்கறே... ‘அப்படி நில்லு’ங்கிறே... ‘அங்க பாரு’ங்கிறே... நான் நடிக்கிறனா இல்லையான்னு சந்தேகமா இருக்கு’’ என சிவாஜி சிரிப்பார்.

அந்தப் படப்பிடிப்புக்கான மொத்தப் பணத்தையும் நாங்கள் எடுத்துச் சென்றிருந்தோம். பணக்கட்டுகள் அனைத்தும் என்னுடைய அறையில்தான் இருந்தன. அது எனக்கும் பாரதிராஜாவுக்கும்தான் தெரியும். என்னுடைய படுக்கைக்குக் கீழே கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்திருந்தேன். பாரதி வருவான். ‘‘செல்வா, ரெண்டு லட்சம் எடு’’ என்பான். ஏதோ செலவுக்குப் பிரித்துக்கொடுப்பான். ‘‘ஒரு லட்சம் எடு’’ என்பான். புரொடக்‌ஷன் மேனேஜரிடம் கொடுத்தனுப்புவான். பெரும்பாலும் நான் அறையிலேயே இருப்பதால், நான்தான் பணத்துக்குக் காவல். வேடிக்கையாக இருக்கும்.

இந்தக் கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை. ‘இந்தப் படம் ஓடாது. பாரதி ரிஸ்க் எடுக்கிறான்’ என ஆரம்பத்திலிருந்தே தயக்கத்தோடே இருந்தான் ராஜா. ‘வெற்றி பெற வாய்ப்பில்லாத படத்துக்குச் சம்பளம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதால் அந்தப் படத்தில் ராஜாவின் இசையை இந்த உலகில் யாராவது ஒரு குறை சொல்ல முடியுமா? அதுதான் ராஜா. பணத்துக்காக இசையை விற்பவன் அல்ல அவன். அந்தப் படத்தின் இசை, ஒரு காவியப் படத்துக்கு, ஓர் இசை மேதை தந்த பரிசு.

கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!

படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா... எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா எவ்வளவோ கேட்டுப்பார்த்தான். பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு... உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டான். நினைத்துப்பார்த்தால் எல்லாம் வேடிக்கையான நினைவுகளாக மனதில் நிற்கின்றன.

சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ரஞ்சனி, தீபன், வீராசாமி, அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள். படத்தின் உச்சபட்சக் காட்சி. அன்று படப்படிப்பில் 92 பேர். காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில், பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி. பதறிப்போய்விட்டான் பாரதி. ‘‘நான் உடனே அவருடைய மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறான். ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்கவைப்பது சரியில்லை. நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய்வருவோம்’’ எனச் சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய்விட்டான்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

‘‘உன்னை விட மாட்டேன்!’’

நான் எழுத்தாளன் மட்டும்தான். எழுத்தை மட்டும் அல்ல, நாட்டையும் ஆள்கிறவர் கலைஞர். 1975 வாக்கில் நான் அவருக்கு எழுதித் தருவதாகச் சொன்ன ‘உன்னை விட மாட்டேன்’ கதையை அதன் பிறகு அவரும் கேட்கவில்லை, நானாகவும் போய்ச் சொல்லவில்லை. 1996-ல் எனக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கினார் கலைஞர். தங்கப்பதக்கத்தைக் கழுத்தில் அணிவித்தவாறு காதோரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்: ‘‘அந்த ‘உன்னை விட மாட்டேன்’ கதையை எனக்குச் சொல்லவே இல்லையே?’’

என்ன ஒரு நினைவாற்றல்! ‘‘அண்ணே, அது தயாரா இருக்குண்ணே... நீங்க எப்பக் கூப்பிட்டாலும் வந்து சொல்கிறேன்’’ என்றேன். ‘‘உன்னை விட மாட்டேன்’’ எனச் சிரித்தார். தலைப்பைச் சொன்னாரா... என்னைச் சொன்னாரா?