மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி
பிரீமியம் ஸ்டோரி
News
மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு வாசிப்பு மட்டுமே கைக்கூடியிருந்தது. ஒருநாள் வார இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெண்ணின் நிழற்படம் என் கண்களைக் கடந்துசென்றது. மீண்டும் புரட்டி அப்பக்கத்தை நோக்கினேன். நெருக்கமாய் எடுக்கப்பட்ட அதில் இருளும் ஒளியுமாய் அப்பெண்ணின் முகம். என்னைச் சட்டென்று வசீகரித்தவை அவரின் கண்கள். கம்பீரமும் கோபமும் கனிவும் கூடவே கொஞ்சம் திமிரும் ஆற்றாமையும். நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே ஒரு கணம் அந்தக் கண்கள் இலேசாகப் புன்னகையைத் ததும்பி மீண்டன. அவை ஓராயிரம் செய்திகளை எனக்கு உணர்த்தின. நான் என்னையும் நான் பயணிக்க வேண்டிய பாதையையும் அடையாளம் கண்டு கொண்டது அந்தக் கணத்தில்தான்.

ஒருவாறு கண்களை விலக்கிவிட்டு அவரின் சிறு நேர்காணலுக்குள் வந்தேன். வாசிக்க வாசிக்க பிரமிப்பு கூடிக்கொண்டே போனது. என்னவொரு துணிச்சல், என்னவொரு தெளிவு, என்னவொரு பயணம். படித்து முடித்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தேன். நான் யாராக இருக்க வேண்டும் என்ற புரிதலை எனக்குள் ஏற்படுத்திய அந்த எழுத்தாளுமை பாமா.

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

சுமார் பத்தாண்டுகள் கழித்து உத்திரமேரூரில் ஓர் இலக்கியக் கூட்டம். மறுப்பேதும் சொல்லாமல் அந்தக் கூட்டத்துக்கு வரச் சம்மதித்ததற்கு ஒரு காரணம் உண்டு. பாமாவும் அதில் கலந்து கொள்வதுதான். அவரின் முதல் நாவலான  ‘கருக்கு’ வாசித்து முடித்திருந்தேன். அந்த மனுஷியைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பே என் உறக்கத்தைக் கலைத்துவிட்டிருந்தது. நிகழ்ச்சி நாளன்று மூன்று மணி நேரம் பயணித்து உத்திரமேரூரை அடைந்தேன். நிகழ்ச்சி ஒரு தொடக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாமா எனக்கு முன்பே வந்திருந்தார். அவரிடம் பேச கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அமுதகீதன்தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். அப்போதுதான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அவ்வளவாக நான் அறியப்படாதிருந்தேன். பாமாவின் பக்கத்தில் அமர்ந்து சிறிது தயக்கத்துடனே சொல்ல ஆரம்பித்தேன். வார இதழில் வாசித்த நேர்காணல், படித்த  ‘கருக்கு’ இவற்றைப் பற்றி. சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை. பிறகு, வெள்ளைத்தாளில் எழுதிவைத்திருந்த என்னுடைய ‘பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்’ என்ற கவிதையை முதன்முறையாக அவருக்கு வாசித்துக் காட்டினேன். முடித்ததும் அவர் எதையும் சொல்லவில்லை. சிறிதுநேரம் கழித்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். வெதுவெதுப்பையும் அன்பையும் எனக்குள் கடத்தின அந்தக் கைகள். இப்படித்தான் எங்கள் ஸ்நேகம் தொடங்கியது. இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட அந்தக் கைகளின் வெதுவெதுப்பை உணர முடிகிறது.

அது ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ கவிதைநூல் விமர்சனக் கூட்டம் என நினைவு. கவிஞர் அ.வெண்ணிலாவும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் பாமாவுக்கு எதையாவது தர வேண்டும் என நினைத்தேன். ஓடிப்போய் ஒரு பழக்கடையில் கொஞ்சம் மாம்பழங்களை வாங்கிவந்து கொடுத்தேன். “ஏ... புள்ள... இதென்ன பழம் வாங்கிட்டு வந்து தர்றீங்க..? இவ்வளவு பழத்தையும் நான் ஒருத்தியே எப்படித் திங்கறது... குட்டிப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் கொடுக்கணும்...” என்றபடி வாங்கிக்கொண்டார். “எங்க ஊருக்கு வந்திருக்கீங்க... நாங்களும் ஏதாச்சும் தரணுமில்ல... இருங்க வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். திரும்பி வரும்போது உத்திரமேரூர் ஸ்பெஷல் வெள்ளைக் காராசேவு பொட்டலம் ஒன்று அவர் கையில் இருந்தது. என் கைகளில் திணித்தவர், “பத்திரமாக வீடு போய்ச் சேருங்கள்” என்றார்.

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி


எத்தனை எளிமையான மனுஷி இவர்? இத்தனைக்கும் முன்பே 1992-ல் அவரது முதல் நாவல்  ‘கருக்கு’ வெளிவந்துவிட்டிருந்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சர்வதேசக் கவனம் பெற்றது. ‘கருக்கு’ நாவலுக்காக ‘கிராஸ் வேர்டு’ விருதும் கிடைத்தது. பிறகு ‘சங்கதி’, ‘வன்மம்’ ஆகிய நாவல்களையும்,  ‘கிசும்புக்காரன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியிருந்தார்.

‘கருக்கு’ நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி தனித்துவமானது. அவருக்கு அவர் மொழி இயல்பென்றாலும் வாசகர்களுக்குப் புதிய வரவாக, மண்ணோடும் எளிய மக்களோடும் புரண்டெழும் வாழ்க்கையின் வெளிப்பாடாக அமைந்தது. இதற்கு எதிர்மாறாக, இதெல்லாம் ஒரு மொழியா என்ற விமர்சனமும் எழுந்தது. மொழி என்பது ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சொற்களை, அவற்றின் பொருள்களை மட்டும் கடத்தும் கருவி மட்டுமன்று. மாறாக, சொற்களோடு பின்னிப்பிணைத்து அவற்றைப் பேசும் மக்களின் எளிய அறத்தை, வாழ்வியல் முறைமைகளை, வலியை, கண்ணீரை, போலித்தனமற்ற அசலான வரலாற்றை, அனைத்துக் கட்டுகளிலிருந்தும் விட்டு விடுதலையாக நினைக்கும் ஒரு மனோநிலையை உலகுக்கு எடுத்துக்காட்டவும் மொழி செயல்படுகிறது.

அந்த வகையில் பாமாவின் மொழி மிகவும் இயல்பானது. எவ்வித அலங்காரப் பூச்சுகளுமின்றி மிளிரக்கூடியது. இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எவ்விதத் திட்டமுமின்றி தன்னியல்புப்படி எழுதப்பட்டது. அதில் ஒளிவுமறைவற்ற நிஜத்தன்மை இருந்தது. கன்னியாஸ்திரி மடத்திலிருந்து அவர் வெளியேறிய சமயம் அது. ஊரிலும் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. நிழலை நிஜமென நம்பி ஏமாந்துபோன விரக்தி, திடீரென்று எதிர்கால வாழ்க்கை இருண்டுபோன அச்ச உணர்வு போன்றவை மனச்சுமைகளாக அவரை அழுத்தின. அந்த நேரத்து துக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும், கடந்தகாலத் தழும்புகளை நிகழ்கால இறகால் வருடிக்கொடுக்கவும் தினம் தினம் எழுதினார். மனம் அசைபோட்டதைக் கை வார்த்தைகளாய் எழுதியது. இது அவருக்கான எழுத்தென்பதால், மிகச் சுதந்திரமாக எழுதினார்.

எழுத எழுத அவர் மனம் இலகுவானது. ஆசுவாசம் கிடைத்தது. மடத்திலிருந்து வெளியேறியதும் ஊரே எதிர்த்தபோது, அவரை வாரிக் கட்டியணைத்துக்கொண்ட அம்மாவின் அன்பும் அவர்கூடவே பயணித்தது. எழுத எழுத அழிக்கப்பட்ட வாழ்க்கையின் எளிமையும், எப்படியாவது வாழ வேண்டும் என்ற வேகமும் உத்வேகமும், இழந்த மண்வாசனையின் புதிய முனைப்பும் கூடிக்கொண்டே போயின. இப்படித் தனக்குத்தானே எழுதிக்கொண்டு, தன் எழுத்துகளால் தனக்குத்தானே காயங்களைக் குணமாக்கிக் கொண்டு, தனக்கு வலுவூட்டிக் கொண்டவர் பாமாவைத் தவிர வேறு யார் இருக்கக்கூடும்? அவரைப் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி, பரவசப்படுத்திய  ‘கருக்கு’ இலக்கிய உலகில் புதுவகைமை இலக்கியத்தைத் தொடங்கிவைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நாவில் புரண்ட மொழிநடையும், மக்களிடையே அன்றாடம் புழங்கிய சொல்லாடல்களும், தவிர்த்தாலும் கூடவே பயணித்த செய்நேர்த்தியும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் பின்னர் அவையே புதிய வடிவமாகவும் புதிய முயற்சியாகவும் பார்க்கப்பட்டு, பல தளங்களில் பேசப்பட்டது; விவாதிக்கப்பட்டது; பாடநூலாக்கப்பட்டது; பாராட்டுகளைப் பெற்றது. அதுவரை சிறகொடிந்த பறவையாக இருந்தவர், உச்சி வானில் பறக்கும் ஒரு ராஜாளிப் பறவையாகத் தன்னை உணர்ந்த தருணம் அது.

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

அந்தப் புகழின் தடம் எதுவுமில்லாத அன்பும், புன்னகையுமே உறைந்து நிற்கும் பாமா, என் கைகளில் காராச்சேவைத் திணித்துவிட்டு “பத்திரம்!” என்றபோது கண்களில் நீர்துளிர்க்க உறைந்து நின்றேன். எழுதுவது மக்களுக்காக என்றால், அம்மக்களோடு மக்களாகச் சேர்ந்து நிற்பதுதான், மக்களுக்குள்ளாக வாழ்வதுதான் நியாயமானது; சரியானது என்பதை அவரிடம் கற்றுக்கொண்ட நாள் அது. இன்றுவரை எளிய மக்களோடு ஒருத்தியாகவே நான் இருந்தும் வாழ்ந்தும் கொண்டிருக்கிறேன் என்றால், அது பாமாவால்தான். எழுத்து சிறுமாற்றத்தையேனும் செய்துவிட வேண்டும். பாமாவின் எழுத்து, அவரை மட்டுமல்ல... ஒடுக்கப்பட்டவர்களையும் ஆதிக்கவாதிகளையும் மாற்றிக் கொண்டிருக்கிற ஆயுதம். பத்து வருடங்களுக்கு முன்பு, விருத்தாசலத்தில் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நானும் பாமாவும் சென்றிருந்தோம். தொடர்வண்டியில் முன்பதிவு செய்யவில்லை. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் ஏறினோம். கூட்டம் கடுமையாக இருந்தது. நிற்பதற்குக்கூட இடமில்லை. கழிவறை பக்கத்தில் சிறிது இடம் கிடைத்தது. நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. கிடைத்த இடத்தில் செய்தித்தாள் ஒன்றை விரித்து, ஒடுங்கி அமர்ந்துகொண்டே விருத்தாசலம் வரைக்கும் பயணித்தோம். திரும்பி வரும்போதும் முன்பதிவு செய்யவில்லை. இம்முறையும் ரயில்பெட்டியில் கூட்டம். நின்றுகொண்டுதான் பயணம். எங்களோடு திருநங்கை ஒருவர் பயணித்தார். நாங்கள் இருவரும் அவருடன் பேசிக்கொண்டு வந்தோம். சிரிப்பும் கண்ணீருமாய் அவர் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார். மொத்தக் கூட்டமும் எங்கள் மூவரையும் காட்சிப்பொருளாக வேடிக்கை பார்த்தது. நான் இயல்பாக அந்தத் திருநங்கையின் தோள்மீது கைபோட்டபடி பேசிக்கொண்டிருந்தேன். கூட்டம் எங்களைச் சுற்றி ஓரடி விட்டு விலகி நின்றது. நானும் பாமாவும் சிரித்துக்கொண்டோம்.

திருநங்கைகளின் உலகம் என்பது தனியான ஒன்று கிடையாது. நம்மோடும் நம் உலகத்தோடும் வாழவே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் உளவியல் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அவற்றை நாம்  புரிந்துகொள்ளக்கூட முயற்சி செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கூடையிலிருந்து சில கொய்யாப் பழங்களை எங்கள் கைகளில் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார் அவர். “எல்லோருமே உயிருங்கதானே... எல்லா உயிரும் வாழ்வதற்குத்தானே பிறக்கிறாங்க...ஒடுக்கப்பட்ட மக்களையும் விளிம்புநிலை மக்களையும் ஏன் இப்படி பாரபட்சமாக நடத்துறாங்க... எப்பதான் இந்த நிலைமை மாறும் சுகிர்தா..?” என அப்போது பாமா கேட்ட கேள்வி இன்னும் மனதை அறுக்கிறது.

ஒருவழியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். அப்போது இரவு 7 மணி. அங்கிருந்து உத்திரமேரூக்குப் பேருந்து பிடிக்க வேண்டும்.  தண்டவாளத்தைக் கடக்க நடைபாதை மேலேறியவர்கள் படிக்கட்டிலேயே அமர்ந்துவிட்டோம். ரயில் நிலையம் ஒட்டியே ஏரி. ஏரி நிறைய தண்ணீர். தூரத்து விளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம் பட்டு நீர் பொன்னிறம்போல மின்னிக்கொண்டிருந்தது. காற்றும் வீசிக்கொண்டிருந்தது. எழுத்துக்கு அப்பால் அவருக்குள் ஒரு குட்டி உலகம் இருந்தது. அதற்குள் அவர் பயணிக்கும்போது அவர் முகத்தில் தவழும் புன்னகையும் அமைதியும் மகிழ்ச்சியும் இன்னொரு பாமாவை அடையாளப்படுத்துகிறது. இளம் பருவத்தில் அரை வயிறோ, கால் வயிறோ கஞ்சி குடித்துவிட்டு தெருப்பிள்ளைகளுடன் ஆடித்திரிந்தது; வீட்டில் சகோதர சகோதரிகளுடன் சண்டைபோட்டது; ஈஸ்டர் நாளுக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் அப்போது செய்யும் பலகாரங்களுக்குக் காத்துக்கிடப்பது; காட்டுப்பக்கம் சென்று விறகு பொறுக்கிவருவது எனப் பசுமையான நினைவுகள் அவரது குட்டி உலகத்துக்குள் நிறைய இருக்கின்றன. அவைதான் பௌதீகமான இந்தப் பெரிய உலகத்துக்குள் அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. நீரை, காற்றை, இயற்கை வளங்களை நேசிக்கிற ஒரு பெண்ணாக அவர் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறார்.

‘தவுட்டுக் குருவி’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘இழப்பு’ என்றொரு கதை. அதில் ஒரு வரி வரும். “நான் நானாக இருக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்த வீடு” என்று. பெண்கள் நிலமற்றவர்களாக, ஊரற்றவர்களாக, வீடற்றவர்களாக மொழியற்றவர்களாக

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பெண்கள் வாழ்வது, பேசுவது எல்லாம் அப்பாவின் ஊரில், வீட்டில், மொழியில் அல்லது கணவனின் ஊரில், வீட்டில், மொழியில். இந்தக் கதையில் வரும் பெண் பதிமூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு பார்த்துப் பார்த்து அவ்வீட்டைக் கட்டுவார். தெருவின் கடைசியில் உள்ள வீடு, மூன்று புறமும் பச்சைப்பசேல் வயல்கள்; உயர்ந்தோங்கிய மரங்கள்; சிலுசிலுவெனக் காற்று; தன் இஷ்டப்படி ஆடவும் சத்தம்போட்டுப் பாடவும் இடங்கொடுத்த வீட்டைச்சுற்றி, திடீரென்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் முளைத்தன. வீட்டுக்குள் வெளிச்சமில்லை; காற்றில்லை; சன்னலில் முழுநிலவு எட்டிப்பார்க்கவில்லை. குருவிச்சத்தம், மழைக்காலத்தில் எவையும் கேட்கவில்லை. தொலைதூரத் தேவாலயத்தின் சிவப்புநிற சிலுவை விளக்கும் தெரியவில்லை. இலட்சங்களுக்காக இயற்கையை மிச்சம் மீதியின்றி கொன்றழிக்கும் குரூரத்தை நொந்தபடி, இழந்தது இயற்கையை மட்டுமல்ல, என்னையும்தான் என அக்கதை முடிகிறது. இயற்கை வீழ்ந்தால் வாழ்க்கையும் வீழ்ந்துபோகும்; அதை இழந்துவிட்டு வெற்றுக்கூடாக வாழ்வது வாழ்வாகுமா என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

பா
மா அப்போது தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். பள்ளியிலிருந்த தென்னை மரத்தில் தேங்காய் திருடியதாக மாணவர்கள் பாமாவின் மீது பழிபோட்டுவிட, அசெம்ப்ளியில் இவரைப் பெயர்சொல்லி அழைத்து, ‘சாதிப்புத்திய காட்டிட்டியே... உன்னை ஸ்கூல்ல சேர்க்க முடியாது’ எனக்கூற, மாணவர்கள் மத்தியில் கேவலமும் அவமானமும் அடைந்து அழுதிருக்கிறார். பிறகு, தன் அண்ணன் ராஜ் கௌதமன் சொன்னதாகக் கூறுவார்: “நாம இந்தச் சாதியில பொறந்திட்டோம். அதை மாத்திக்க முடியாது... ஆனா, நல்லா படிச்சா மதிப்பும் கௌரவமும் கெடைக்கும்.” அறிவும் கூர்மையும் பிறப்பால் வருவது அன்று. மாறாகக் குடும்பமும் சமூகமும் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பார்த்துப் பார்த்து உள்ளுக்குள் ஊறுவனவாகவே அவை இருக்கக்கூடும். அப்படித் தனக்குள் ஊறிய அறிவையும், மாண்பையும் களங்கமில்லாத, மாசற்ற, சமூகத்தின் குழந்தைகளுக்கு அளிப்பதற்காக, ஆசிரியப் பணியை அவர் தேர்ந்தெடுத்ததில் ஓர் ஆச்சரியமும் இல்லை.

மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி

ஒருநாள் அவரிடம் கேட்டேன். “மடத்திலிருந்து ஏன் வெளியேறி விட்டீர்கள்?” “ஏழைப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து சேவை செய்தால், நம்மைப்போல் படித்து முன்னேறுவார்கள் எனப் பார்த்தால், வெளியே இருப்பதைவிட மடத்தில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. ஏழை, பணக்காரன், தாழ்ந்தவர், உயர்ந்தவர், சாதிய வேறுபாடு, பாரபட்சமாக நடந்துகொள்ளுதல், பணத்தாசை இவை எல்லாமே அங்கும் இருந்தன. கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். நான் எந்த நோக்கத்துக்காகச் சென்றேனோ, அதுவே அங்கு போலியானதாக இருந்தபோது, மடத்தைவிட்டு வெளியேறுவதுதான் சரியெனத் தோன்றியது, வெளியேறி விட்டேன்” என்றார்.

அதற்கு, அசாத்தியத் துணிச்சலும் தைரியமும் வேண்டும். அவை பாமாவிடம் இருந்தன. மடத்திலிருந்து வெளியேறி சராசரி வாழ்க்கை வாழும் பெண்ணை இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் விதமும், எழுப்பும் ஒழுக்க மதிப்பீடுகளும் ஏராளம். வாழ்க்கையே நிர்கதியாக, வெறுமையாக, எதிர்காலம் கேள்விக் குறியாக நின்றவருக்கு எழுத்துதான் ஆறுதல் அளித்தது; துணையாக வந்தது; அணைத்துக் கொண்டது. எல்லாமே அவருக்கு எழுத்துதான். இவரை அடியொற்றி வருபவர்களுக்கு இவரும் இவர்தம் எழுத்துகளுமே ஆகப் பெரிய இளைப்பாறுதல்.

மடத்திலிருந்து வெளியேறிய பிறகு, ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கணிதவியலில் இளங்கலைப் பட்டமும், இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றவர். திடீரென்று மாறுதல் வாங்கிக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஓங்கூர் தொடக்கப் பள்ளி ஒன்றுக்கு வந்து சேர்ந்தார். உரையாடலினூடே ஒருநாள் கேட்டேன்: “சம்பந்தமே இல்லாமல் இந்த ஊருக்கு எதற்கு வந்தீர்கள்?” “இந்த இரண்டு பள்ளிகளும் ஒரே சபையைச் சேர்ந்தவை. இந்த ஊரில் வேலை பார்க்கும் ஆசிரியைக்கு சொந்த ஊர் மதுரை; அவரது குடும்பமும் குழந்தைகளும் அங்கிருக்கின்றன. ‘நீங்கள் தனியாகத்தானே இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வந்துவிடுங்களேன். நான் அங்கு சென்றுவிட்டால், என் குடும்பத்தோடு இருப்பேன்’ என அந்த ஆசிரியை கேட்டபோது, மறுப்பேதும் சொல்ல முடியவில்லை” என்றார் சிறு புன்னகையுடன். பெண்ணுக்காக, அவரது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக, முன்பின் தெரியாத குக்கிராமமான ஓங்கூருக்குக் கிளம்பிவிட்டவர்தான் பாமா. இங்கு வந்த மூன்று மாதங்களாகத் தலித் என்பதால் வீடு கிடைக்காமல், உறங்க இடம் கிடைக்காமல், சாப்பாடு இல்லாமல், உடை மாற்றக்கூட இடம் இல்லாமல் சிரமப்பட்டிருக்கிறார். சில மாதங்கள் கழித்து மாமண்டூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவன அலுவலகத்தில் மட்டுமே தங்குவதற்கு ஓர் அறை கிடைத்தது. துளிர்த்த என் கண்ணீரை அடக்கிக்கொண்டு கேட்டேன்: “நீங்கள் செய்தது தவறு. அந்த ஆசிரியைக்கு ஏன் விட்டுக்கொடுத்தீர்கள்? நல்லது செய்ததற்கு சமூகம் தரும் பரிசு இதுதானா?” அவர் சொன்னார்: “என் செயலால் அந்த ஆசிரியைக்கு மகிழ்ச்சி கிடைத்தால், கிடைத்துவிட்டுப் போகட்டுமே... மற்றவர்களைப் போலவே நாமும் ஏன் இருக்க வேண்டும்? எனக்கு நல்லதுதான் நடந்திருக்கிறது. நான் பணிபுரிய வேண்டியது இந்த மக்களிடையேயும், குழந்தைகளிடமும்தான். சமத்துவத்தையும், மானுட மாண்பையும் எங்கு தேவையோ அங்கு கற்பிப்பதுதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். பெரியவர்களைவிட குழந்தைகளுக்குப் புரியவைப்பதும் சமூகத்தைப் பற்றிச் சொல்வதும் எளிது. எதை யாருக்குக் கற்பிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.” அவர் பேசப் பேச வாழ்க்கையின் ஒவ்வொரு கதவும் சடார் சடாரென்று என்னுள் திறந்துகொண்டே இருந்தன.

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவர் பணிபுரிந்த பள்ளியில் அவருக்குப் பணிநிறைவு பாராட்டுவிழா நடந்தது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் கட்டியணைத்துக்கொண்டார். அதிசயமாகத் தலையில் பூச்சூடி இருந்தார். பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. பிள்ளைகளின் முகத்தில் ஒரே உற்சாகம். நம் ஆசிரியர் இனி பள்ளிக்கு வர மாட்டார் என்ற விவரம் அவர்களுக்குத் தெரியவில்லை. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களின் வாழ்த்துரை, நண்பர்களின் நெகிழ்ச்சியுரைக்குப் பின் பாமா பேச ஆரம்பித்தார். பேச்சு என்பதைவிட தன் ஐம்பத்தெட்டு ஆண்டுகால தலித் வாழ்க்கையை, வலியை, அனுபவங்களை, கண்ணீரை கண்ணிலாடும் ஒளிப்படமாக நிகழ்த்திக் காட்டினார். மரத்தில் அமர்ந்திருந்த காக்கைகளின் கரைதலைத் தவிர வேறு சத்தம் எதுவும் அங்கில்லை. எல்லாருடைய முகத்திலும் குற்றஉணர்வும் கண்ணீரும்...

“சாதியின் பிடியில் சிக்கிச் சீரழிந்தவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தங்கள் பாதையில் மறுபயணம் செய்யவும், உளச்சிக்கலை விலக்கி தன்மானத்துடன் சுதந்திரமாக வாழவும், தன்னுடைய இருப்பும் வெளியும், வாழ்வும் மறுக்கப்படும்போது போராடி மானுட உரிமைகளைத் தனதாக்கிக்கொள்ளவும் வேண்டும்... அதைத்தான் நானும் என் எழுத்தும் செய்துகொண்டிருக்கிறோம்” என அவர் முடித்தபோது பலத்த கைத்தட்டல்களுக்கிடையே பெருமரமாய் உயர்ந்து நின்றார். ‘போலித்தனமா சிரிச்சுக்கிட்டு வாழுறதவிட, நெசத்துக்கு அழுதுகிட்டே வாழுறது பரவாயில்லைனு மனசத் தேத்திக்கிட்டு இருக்கேன்’ என்னும் கருக்கு நாவலின் கடைசி வரிகள் மனதில் மின்னி மறைய, ஓடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதேன். உடன் அவரும்.