மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

அல்லி உதயன்

“எதிர்காலம் குறித்த நம்பிக்கையில்தான், எழுத்தாளனின் நிகழ்கால இருப்பு உள்ளது. முப்பதாண்டு காலம் நம்பிக்கையை ஊன்றிக்கொண்டே இலக்கிய வீதிகளில் நெடுந்தூரம் பயணித்திருக்கிறேன். இலக்கியத்தின் உயிர் என்பது, அதில் அடர்ந்திருக்கும் மனிதம். எழுத்தைத் தாண்டி எதுவும் எனக்கு உயர்வைத் தந்ததில்லை. அதனால், அதை மட்டுமே சூடிக்கொண்டிருக்கிறேன். சமூகப் பொதுவெளியில் நானோர் அப்பாவி; வாழ்வின் உள்ளர்த்தம் புரியாத வழிப்போக்கன்; பிழைக்கத் தெரியாதவன். ஆனால், நான் என் பயணத்தின் நெடுகில் விதைத்து வந்திருக்கும் விதைகள், எதிர்காலத்தில் வானுயர் விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்.”  

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர். மசாலா மற்றும் மாவுப்பொருள்கள் தயாரித்து, இருசக்கர வாகனத்தில் தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விற்பனைசெய்து வருகிறார். ‘கறைபடிந்த வைகறைகள்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘பிழிவு’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வியாபாரப் பெருநகரான தேனியின் நவதானிய வணிகத்தைக் களமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிவருகிறார். இவரின் இயற்பெயர் வீ.உதயகுமார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

லிவிங் ஸ்மைல் வித்யா

“நானும் என் எழுத்தும் வேறல்ல. என் எழுத்தில் அடங்கியிருப்பது நான்தான். என் வலியும், அவை சுமந்துவரும் சோகம், சுகம், பெருமிதம், துயரம், நெகிழ்வு, சிரிப்பு, புறக்கணிப்பு, அவமானம், கொண்டாட்டம் என அனைத்தின் ருசியுமே நான். காலத்தின் போக்கில் நாளை நான் தொலைந்து போவேன். ஆனால், என் எழுத்துகளுக்கு அது நேராது. என் அடையாளமாக என் ஆன்மாவைச் சுமந்துகொண்டு அவை பறந்து திரியும். இருண்ட வெளிகளில் அவை மின்மினி அளவேனும் ஒளி எழுப்பும்.”

திருச்சியைச் சேர்ந்தவர். ‘மரணம் மட்டுமா மரணம்’ இவரது கவிதைத் தொகுப்பு. திருநங்கையர் குறித்த சிறுகதைகளை ‘மெல்ல விலகும் பனித்திரை’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்துள்ளார். ‘நான் வித்யா’  என்ற பெயரில் இவர் எழுதிய சுயவரலாற்று நூல், மலையாளம், கன்னடம், மராத்தி, அசாமி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னட மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளது. அரங்கியல் கலைஞரான வித்யா, பகுதிநேரமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை மகிழ்விக்கும்  ‘ஹாஸ்பிடல் கிளவுன்’ ஆகப் பணிபுரிகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இரா.முருகவேள்

``எழுத்தென்பது உரையாடலின் இன்னொரு வடிவம். எவரிடத்திலும் என் கருத்தைப் புகுத்தாது சிந்தனைகளையும், அதன்பால் உருவாகும் கருத்துகளையும் எழுத்தின் வழி பகிர்ந்துகொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது. என் எழுத்தின் வடிவம் என்பது எவ்வித வரையறைக்கும் உட்பட்டதல்ல. இருண்மையும் பூடகமும் இல்லாத வெளிப்படையான ஓர் எளிய மனிதனின் பகிர்வாகவே என் எழுத்துகள் உருவாகின்றன. சக மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும், அதிகார மையங்களின் செயல்பாடுகளிலிருந்தும்தான் என் உரையாடல் உயிர்கொள்கிறது. எல்லோருக்குமான இந்த வெளிகளில் எவரும் வந்து உரையாடலாம்.”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்



‘மிளிர்கல்’, ‘முகிலினி’ ஆகிய நாவல்களையும், ‘கார்ப்பரேட் என்ஜிஓக்களும் புலிகள் காப்பகங்களும்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள இரா.முருகவேள், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். மொழிபெயர்ப்புத்தளத்தில் தீவிரமாகச் செயல்படும் முருகவேள், ‘எரியும் பனிக்காடு’, ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’,  ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ஆகிய  நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கொலையின் மீது காவல் துறை, உயர் சமூக மக்கள், தலித் மக்களின் பார்வைகளை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதி வருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

சோ.தர்மன்

“தர்மன் எழுத்தாளனாக இருந்திராவிட்டால் இறந்துபோயிருப்பான். அவனுக்கு இந்த உலகத்தில் வேறு எந்த அடையாளமும் இல்லை. எழுத்து மட்டும்தான் அவனை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது. ராமாயணக் கும்மியில் ராமர் வேஷம் கட்டும் அப்பாவிடமிருந்து அந்தச் சின்ன வயதிலேயே காட்சியையும் கானத்தையும் கற்றுக்கொண்டவன். கரிசல்காட்டு மண்ணின் இயல்பான ஈரத்தையும் கோபத்தையும் தன் வாழ்க்கையின் மிச்சமாக வைத்திருக்கும் அவன், அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலாக எழுத்தைச் சுமக்கிறான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இருக்கும் வரைக்கும் எழுதுவான். எழுதத்தான் இருக்கிறான் தர்மன்.”

25 ஆண்டு காலங்கள் பஞ்சாலைத் தொழிலாளியாகப் பணிபுரிந்தவர் சோ.தர்மன். விருப்ப ஓய்வில் வெளியே வந்து, இப்போது விவசாயம் பார்க்கிறார்.  ‘தூர்வை’, ‘கூகை’, ‘சூழ்’ ஆகிய நாவல்களையும் ‘ஈரம்’, ‘சோகவனம்’, ‘வனகுமரன்’ ஆகிய சிறுகதை நூல்களையும் எழுதியுள்ளார். வில்லிசை குறித்த ஆய்வுநூல் ஒன்றும் வெளிவந்திருக்கிறது. 1780-களில் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ மிஷினரிகள், கிறிஸ்தவத் துறவிகளின் வாழ்க்கையை உள்ளடக்கி `13-வது மையவாடி’ என்ற நாவலை தற்போது எழுதி வருகிறார்.