மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

லக வரலாற்றில் அழியாப் புகழுடன் ஒளிர்பவர், மாமேதை கார்ல் மார்க்ஸ். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான போராளி, தலைசிறந்த புரட்சியாளர் மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக உலகெங்கும் ஆய்வரங்குகள், கூட்டங்கள், மீள்வாசிப்புகள் நடந்து வருகின்றன.

கம்யூனிஸ இயக்கங்கள், மார்க்ஸ் குறித்து உருவாக்கியுள்ள சித்திரம் முழுமையானது இல்லை. அது, தோழர் மார்க்ஸின் உருவம் மட்டுமே. மார்க்ஸ் என்ற மாபெரும் சிந்தனையாளரின் பரந்த வாசிப்பு பிரமிப்பூட்டக்கூடியது. அவர் ஆழ்ந்த இலக்கிய அறிவும் நுட்பமான இசையறிவும் கொண்டவர். அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், பொருளாதாரம், மானுடவியல் என விரிந்த தேடுதல் கொண்ட மார்க்ஸ், இந்த நூற்றாண்டின் முகத்தை உருவாக்கிய பன்முக ஆளுமை.

இந்தியாவில் கார்ல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய பிம்பமாக்கப்பட்டதும் அந்தப் பிம்பம் வழிபாட்டுக்கு உரியதாக மட்டுமே மாறிப்போனதும் காலப்பிழை என்பேன். உண்மையில் மார்க்ஸ், மானுட சமூகம் முழுமைக்கும் உரியவர். மார்க்ஸின் சிந்தனைகள் தொடாத துறைகளே இல்லை. உலகப் பொருளாதாரம் பற்றி அதுவரையிலிருந்த கற்பிதங்களை மார்க்ஸ் உடைத்தெறிந்தார். பாட்டாளிவர்க்க உரிமைகள் பற்றி மார்க்ஸிற்கு முன்பாக இத்தனை வலிமையாக யாரும் பேசியதில்லை. உலக வரைபடத்தில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப் படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் உரிமைகளைப் பெற வழிகாட்டுவது மார்க்ஸின் சிந்தனைகளே.

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

மனிதகுல விடுதலை குறித்தும் சோசலிஸ சமூகம் குறித்தும் மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடுகள் அழிவற்றவை. நடைமுறைப்படுத்தப்பட்ட அளவில் சோசலிஸம் சந்தித்த தோல்விகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை. அதைச் சித்தாந்தத்தின் தோல்வியாக நாம் கருத முடியாது.
மார்க்ஸ், தேர்ந்த இலக்கிய வாசகர். மார்க்ஸின் விருப்பம் பெரும்பாலும் செவ்வியல் இலக்கியப் பிரதிகள். 18-ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைய ஆரம்பித்திருந்த நாவல் என்ற புதிய வடிவம் எல்லோரையும் வசீகரித்தது போலவே மார்க்ஸையும் வசீகரித்தது.

கல்லூரி நாட்களில், தன் பதினெட்டு வயதில் கவிஞராக உருவாகினார் மார்க்ஸ். பல்கலைக்கழக நண்பர்கள் சேர்ந்து ‘கவிஞர்கள் சபை’ ஒன்றை உருவாக்கி,  கவிதை வாசித்தார்கள். அதில் கார்ல் மார்க்ஸ் கவிதைகள் படித்தார். பின்னாட்களில் அவரது 60 கவிதைகள் கொண்ட தொகுப்பு தனிநூலாக வெளியாகியது. எல்லா இளைஞனையும் போலவே அவரும் காதலின் தவிப்பை கவிதைகள் எழுதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜென்னிக்கு மார்க்ஸ் எழுதிய காதல் கவிதைகள் இலக்கியத் தரமிக்கவை என்று சொல்ல முடியாது. ஆனால், உண்மையான காதலின் வெளிப்பாடுகள். தன் மனத்துயரை கவிதைகளின் வழியே வெளிப்படுத்தினார் மார்க்ஸ். அதுதான் அவரது காலத்தின் நடைமுறை.

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்மார்க்ஸின் தந்தை ஹெர்ஷல் மார்க்ஸ், வால்டர் மற்றும் ரூசோவின் சிந்தனைகளை ஆழ்ந்து கற்றிருந்தார். அவர் வழியாக இளம் மார்க்ஸிற்கு, வால்டர் மீதான ஆர்வம் உருவானது.

ஜெர்மனியின் புகழ்பெற்ற கவிஞரான கதேயின் தீவிர வாசகராக இருந்தார் மார்க்ஸ். கதேயின் வரிகளைப் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். கதேயின் புகழ்பெற்ற நாடகம் ‘பாஸ்ட்’. உலகின் சகல இன்பங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறான் பாஸ்ட் . மெபிஸ்டபிலிஸ் என்ற சாத்தானின் தூதுவனிடம் இதற்காக ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறான். ஒரே ஒரு நிபந்தனை, சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தர வேண்டும் என்பதே. இதே நாடகத்தை மார்லோவும் எழுதியிருக்கிறார். கதேயின் ‘பாஸ்ட்’ காவியச் சிறப்பு வாய்ந்தது.

The Sorrows of Young Werther என்ற கதேயின் நாவல் முக்கியமானது. (காதலின் துயரம் எனத் தமிழில் எம்.கோபால கிருஷ்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.) இந்த நாவல் கதேயின் கவித்துவமான வரிகளால் ஒளிரக்கூடியது. தனது 24-ம் வயதில் இந்த நாவலை ஆறே வாரங்களில் கதே எழுதி முடித்தார். இன்றும் அது சிறந்த காதல் கதையாகக் கொண்டாடப்படுகிறது.காதலின் கொந்தளிப்பை வெர்தர் வெளிப்படுத்தும் விதம் அபாரமானது. கடிதங்களாகவே கதை நீள்கிறது. கதேயின் கவிதைகளையும் நாடகங்களையும் வாசித்துக் கிறங்கியிருந்தவர் இளம் மார்க்ஸ். ஆகவே, அவரும் வெர்தரைப் போலவே காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார். மார்க்ஸின் எழுத்தில் எப்போதும் பல்வேறு இலக்கிய மேற்கோள்கள் இருப்பதைக் காண முடிகிறது.

மார்க்ஸ், ஜென்னி இருவரின் காதல் அவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் மூலதனம் என்ற மகத்தான பொருளாதார நூலை எழுதிய சூழல் பற்றி மேரி கேப்ரியல், Love and Capital என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். மார்க்ஸைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் முக்கியமான ஒரு புத்தகம் இது. மார்க்ஸின் குடும்ப வாழ்க்கையை வாசிக்கும்போது ஏற்படும் துயரம் மனதைக் கனக்கவைக்கிறது. காதலின் பொருட்டு ஜென்னி அடைந்த வலியையும் வேதனைகளையும் வாசிக்க வாசிக்க,  கண்ணீர் கசிகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜென்னி, மார்க்ஸின் பொருட்டு பசிக்கு உணவில்லாத அளவு கஷ்டப்படுகிறாள். இறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியில்லை. ஆனால், ஜென்னி மனம் தளர்ந்துவிடவில்லை. அவர் மார்க்ஸின் மாறாத்துணையாக உடனிருக்கிறார்.

மார்க்ஸின் இலக்கிய ஆர்வம் ஜென்னியின் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஜென்னியின் சகோதரன் எட்கர், மார்க்ஸின் நண்பன். ஆகவே, எட்கரைச் சந்திக்க அடிக்கடி அவனது வீட்டிற்குச் செல்வார் மார்க்ஸ். ஜென்னி, மார்க்ஸைவிட நான்கு வயது மூத்தவள். அவளது அழகும் அன்பும் மார்க்ஸை மிகவும் கவர்ந்தன. அவர்களுக்குள் காதல் உருவானது. ஜென்னியின் அப்பா லுத்விக் வான் வெஸ்ட்ப்ளான், மார்க்ஸின் பக்கத்து வீட்டுக்காரர். இவர் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர். ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் கரைத்துக் குடித்தவர். வீட்டில் ஓய்வு நேரங்களில் ஷேக்ஸ்பியரின் வரிகளை ஒப்புவித்து விளையாடுவார்கள். ஷேக்ஸ்பியர் குவிஸ் எனப் போட்டி நடத்துவார்கள். யார் ஷேக்ஸ்பியரிலிருந்து அதிக வரிகளை ஒப்புவிக்கிறார்களோ,  அவர்களுக்குப் பரிசு கிடைக்கும். இந்த விளையாட்டு, சில நாட்கள் பகலிரவாக நடக்கும்.

ஷேக்ஸ்பியர், மற்றும் ஹோமரை ஜென்னியின் குடும்பம் கொண்டாடியது. அந்த விளையாட்டில் மார்க்ஸ் ஆர்வமாகக் கலந்துகொண்டார். அவரும் ஷேக்ஸ்பியரை ஆழ்ந்து வாசித்தார். மார்க்ஸின் கட்டுரைகளில் ஷேக்ஸ்பியரின் பொருத்தமான வரிகள் கச்சிதமாக இடம்பெறுவதற்கு இந்தப் பயிற்சியே முதல் காரணம். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை லுத்விக் அவரது வீட்டிலே தன் மகள்களைக் கொண்டு நடித்துக்காட்டுவாராம். ஷேக்ஸ்பியரின் மேதமையைத் தொடர்ந்து எடுத்துக்கூறி, அவரது நாடகங்களின் மீது மார்க்ஸின் கவனத்தைக் குவியச்செய்தார் லுத்விக்.

குறிப்பாக ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’,  ‘கிங் லியர்’, ‘மிட்சம்மர்ஸ் நைட் ட்ரீம்’,  ‘மெர்சன்ட் ஆப் வெனிஸ்’ போன்றவை மார்க்ஸிற்கு விருப்பமான நாடகங்கள். ‘மெர்சன்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தில் வரும்  ‘ஷைலாக்’ பற்றி மார்க்ஸ் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் உருவாக்கிய கதாபாத்திரங்களில் ஷைலாக் மறக்க முடியாதவன். வட்டிக்கடைக்கார ஷைலாக், பேராசைப் பிடித்து பணம் பணம் என்று அலைபவன். மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக வட்டி வசூல் செய்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஷைலாக் குறிப்பிடப்படுகிறான். இவனைத் தனது எழுத்தில் ஒரு குறியீடாக அடையாளப் படுத்துகிறார் மார்க்ஸ். பணம் படைத்தவன் ஷைலாக் போலத்தான் நடந்துகொள்வான். ஷைலாக், கடன் வாங்கியவனின் ஒரு துண்டு சதையை ஈடாகக் கேட்கவே செய்வான், அது முதலாளித்துவத்தின் குணம் என்கிறார் மார்க்ஸ். ‘மூலதன’த்தில் குழந்தைத் தொழிலாளர்களை ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கும் ஆங்கில முதலாளிகளை ஷைலாக்கோடு ஒப்பிடுகிறார் மார்க்ஸ்.

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஷேக்ஸ்பியரை இலக்கியவாதிகள் கொண்டாடுவதுபோல மார்க்ஸ் அணுகவில்லை. மாறாகத் தன் காலகட்டத்தின் அதிகாரப் போட்டியை, சமூகக் கட்டுமானத்தை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை ஷேக்ஸ்பியர் எப்படிச் சித்தரித்திருக்கிறார் என்பதையே முதன்மைப்படுத்தி வாசித்திருக்கிறார். குறிப்பாக, ஷேக்ஸ்பியர் பயன்படுத்தும் உவமைகள் மீது மார்க்ஸிற்கு மிகுந்த விருப்பம். ‘கிங் லியர்’ நாடகத்தைத் தன் மகள்களுடன் சேர்ந்து வாசித்து மகிழ்ந்திருக்கிறார் மார்க்ஸ். ஜென்னி இறந்த பிறகு தனிமையின் துயரில் தவிக்கும் மார்க்ஸ் பற்றி வாசிக்கும்போது, லியர் அரசனின் முதுமையே நினைவிற்கு வருகிறது. லியரின் மகள்களைப் போலன்றி மார்க்ஸின் மூன்று மகள்களும் தந்தையை மாறாத அன்போடு நேசித்தார்கள். தன் பிள்ளைகளுக்காக மார்க்ஸ் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிள்ளைகளுடன் ஓய்வாக நாளைக் கழிப்பது அவரது வழக்கம். அவர்கள் நீண்டதூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். அப்போது மார்க்ஸ் தான் படித்த, கேட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்வார். பிள்ளைகள், சிறுவர்களாக இருந்தபோது அவர்களுக்காகக் காகிதக் கப்பல் செய்து தருவதுடன் அந்தக் கப்பல் தீப்பிடித்து எரிந்துபோகிறது என, தானே நெருப்பைக் கொளுத்தி வேடிக்கை காட்டுவதும் உண்டு. மார்க்ஸின் மகள் லாராவிற்காகப் புதிய நாடகம் ஒன்றை எழுதித் தருவதாக மார்க்ஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை எழுதித்தரவே இல்லை.

பதினெட்டு வயதில் மார்க்ஸ் Scorpian and Felix என்றொரு நாவலை எழுதினார். அது முடிக்கப்படவில்லை என்கிறார்கள். இணையத்தில் இதன் சில பகுதிகள் வாசிக்கக் கிடைக்கின்றன. அவை மார்க்ஸால் எழுதப்பட்டதுதானா என்ற விவாதம் தொடரவே செய்கிறது. ஜென்னியின் தந்தை லுத்விக் வழியாக ஹோமரை வாசிக்கத் தொடங்கிய மார்க்ஸுக்கு, கிரேக்க நாடகங்களின் மீது மிகுந்த ஈடுபாடு. குறிப்பாக ஈஸ்கிலஸ், சோபாக்ளிஸ் நாடகங்களை விரும்பி வாசித்தார். ஈஸ்கிலஸின் கட்டுண்ட பிரமீதியஸ் நாடகம் மார்க்ஸை மிகவும் கவர்ந்தது.

ப்ரமீதியஸ், மனிதர்களுக்கு உதவும் விதமாக நெருப்பை வான்உலகிலிருந்து திருடிக்கொண்டு வந்தவன். சியூஸ் கடவுள் வானில் நெருப்பை ஒளித்துவைத்திருந்தார். ப்ரமீதியஸ் அதை ரகசியமாகத் திருடி பூமியில் வாழும் மனிதர்களிடம் ஒப்படைத்தான். இந்தக் குற்றத்திற்காக ப்ரமீதியஸைப் பாறையில் கட்டிவைத்துச் சித்ரவதை செய்தார்கள். ப்ரமீதியஸின் ஈரலைக் கொத்தித் தின்பதற்காக ஒரு கழுகை அனுப்பிவைத்தான் சியூஸ். தண்டனையை நிறைவேற்ற ப்ரமீதியஸை இழுத்துக்கொண்டு போவதையே நாடகம் விவரிக்கிறது.

மனிதகுல நன்மைக்காகப் போராடுகிறவனாகவே ப்ரமீதியஸ் சித்தரிக்கப்படுகிறான். அவன் ஒரு நவீன மனிதன். ப்ரமீதியஸ் வழியாக மார்க்ஸ் கடவுளுக்கு எதிராக மனிதன் மேற்கொள்ளும் செயலின் முக்கியத்துவத்தை அடையாளம் காணுகிறார். கிரேக்கத் தத்துவங்களையும், நாடகங்களையும், சிந்தனைகளையும் மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் விரும்பிப் படித்திருக்கிறார். அதன் பாதிப்பை அவரது ஆய்வேடுகளில் காண முடிகிறது. ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வாசிக்கக்கூடியவர் மார்க்ஸ். தனது ஐம்பதாவது வயதில் அவர் ரஷ்ய மொழி கற்றுக்கொண்டு, அதில் திறம்படப் பேசவும் எழுதவும் செய்தார்.

இளம் மார்க்ஸ், ஜெர்மனியின் முக்கியக் கவிஞரான ஹெய்னேயுடன் நட்பு கொண்டிருந்தார். ஹெய்னேயின் கவிதைகளை விரும்பிப் படித்தார். சமூகத்தை மாற்றும் சக்தி தன் கவிதைகளுக்கு உண்டு என முழங்கியவர் ஹெய்னே. ஜெர்மனியின் உயர்தட்டு பிரபுக்களின் போலித்தனத்தைக் கவிதைகளால் நையாண்டி செய்து எழுதினார் ஹெய்னே. அதன் காரணமாக அவர் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிஸில் வாழ்ந்துவந்தார். ஹிட்லரின் நாஜிப்படை எரித்த புத்தகங்களில் முதன்மையானவை ஹெய்னேயின் கவிதைப் புத்தகங்கள். எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே முடிவில் மனிதர்களையும் எரிப்பார்கள் என ஆருடம் போலத் தனது கவிதையில் கூறியவர் ஹெய்னே.

பிரெட்ரிக் சில்லர் ஜெர்மனியின் புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாய்வாளர். இவரும் மார்க்ஸிற்குப் பிடித்தமான எழுத்தாளரே. விக்டர் ஹியூகோ எழுத்தாளராக மட்டுமின்றி அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டதால், அவர் மீதும் மார்க்ஸின் கவனம் இருந்தது. டேனியல் டீபோ, கார்லைல், கிங்கல், ப்ரிலிகிராத் இப்சன் ஆகியோரின் படைப்புகளை மார்க்ஸ் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறார்.  மிகெல் டி செர்வாண்டிஸ், ஸ்பானிய இலக்கியத்தின் பிதாமகர். இவரது ‘டான் குயிக்ஸாட்’, ஐரோப்பாவின் முதல் நவீன நாவல் எனப்படுகிறது. இந்த நாவலை மார்க்ஸ் விரும்பி வாசித்திருக்கிறார். செர்வாண்டிஸ் 1547-ம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிடில் பிறந்தவர். லாமாஞ்சா என்னும் ஸ்பானியக் கிராமத்திலிருந்து டான் குயிக்ஸாட் சாகசப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறான். இவனது வேடிக்கையான நிகழ்வுகளே நாவலாக விரிகிறது. யதார்த்த வாழ்வுக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளே நாவலின் மையம். காற்றாலையை எதிரி என நினைத்து வாளேந்திச் சண்டையிடுகிறான் டான் குயிக்ஸாட். தோற்றுப்போன கலைஞனாகவே அவனை அடையாளம் காணுகிறார்கள்.

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்


மார்க்ஸ் தனது வாழ்வின் இறுதிநாட்களில் தானொரு தோற்றுப்போன குயிக்ஸாட் போல இருப்பதாக மனம் நொந்து கூறியிருக்கிறார். மார்க்ஸின் இரண்டாவது மகளான லாராவைத் திருமணம் செய்துகொண்ட பால் லெபார்க், சிலகாலம் மார்க்ஸின் உதவியாளராக அவரது எழுத்துப் பணிக்கு உதவிகள் செய்திருக்கிறார். அவர் மார்க்ஸ் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், ‘நாவல்கள் படிப்பது மார்க்ஸிற்கு விருப்பமானது. தனது சோபாவில் படுத்துக்கொண்டு அவர் நாவல்களை விரும்பி வாசிப்பார். குறிப்பாக ஹென்றி ஃபீல்டிங், வால்டர் ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக் நாவல்களை அதிகம் வாசித்திருக்கிறார். வால்டர் ஸ்காட்டின் நாவல்களை மார்க்ஸின் குடும்பமே கூடிப் படிப்பதும் விவாதிப்பதும் உண்டு’ என்கிறார். ஹென்றி ஃபீல்டிங் எழுதிய ‘தி ஹிஸ்டரி ஆஃப் டாம் ஜோன்ஸ்’ மற்றும் ‘வால்டர் ஸ்காட்’ நாவல்கள் மார்க்ஸ் காலத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தன. மார்க்ஸ் இலக்கியத்தை வரையறை செய்யும்போது தத்துவத்தை உள்ளடக்கியே குறிப்பிடுகிறார். இலக்கியம் என்ற சொல் இன்று பயன்படும் பொருளில் மார்க்ஸ் அதைப் பயன்படுத்தவில்லை.

பால்சாக்கின் நாவல்களை ஏங்கெல்ஸ் விரும்பிப் படித்ததோடு ஐரோப்பாவின் மிக முக்கியப் படைப்பாளி என மார்க்ஸிற்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் மதச் சடங்குகளாலும் மதக் குருமார்களின் அளவுகடந்த அதிகாரத்தாலும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். அவற்றைப் பகடிசெய்து தனது கூர்மையான விமர்சனத்தால் மோலியர் நாடகங்கள் எழுதினார். இவரது நாடகங்கள் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதிலேயே முதன்மையாக இருந்தன. மதத்தின் அதிகாரம் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து வந்த மார்க்ஸிற்கு மோலியரின் நாடகங்கள் பிடித்ததற்கு, சீர்திருத்த எண்ணங்களே முதல் காரணம். மார்க்ஸ் ஒரே நேரத்தில் மூன்று நான்கு நாவல்களை எடுத்துக்கொண்டு படிப்பதும் உண்டு. அவரது படிப்பறையில் வரிசையாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்காது. குவியலாகக் கிடக்கும். எந்த நூல் எங்கேயிருக்கிறது என மார்க்ஸிற்குத் துல்லியமாகத் தெரியும். வாசிக்கும்போது பென்சிலைப் பயன்படுத்தி அடிக்குறிப்பு போடுவார். படித்த விஷயங்களைத் தனியாகக் குறிப்பேடு ஒன்றில் பதிவுசெய்து வைத்துக்கொள்வார். ஒருபோதும் புத்தகங்களில் குறிப்புகள் எழுதியது இல்லை.

மார்க்ஸின் நினைவாற்றல் வியப்பளிக்கக்கூடியது. எந்தத் துறை சார்ந்த விஷயம் என்றாலும் உடனே மனதிலிருந்து கொட்டத் தொடங்கிவிடுவார். தனது கட்டுரைகளை எழுதி முடித்தவுடன் அதில் மேற்கோள் காட்டியுள்ள வரிகளை மூலத்துடன் சரிபார்த்த பிறகே வெளியிடுவார். எந்த ஒன்றையும் ஆராயாமல் எழுத மாட்டார். கற்றுக்கொள்வதில் மார்க்ஸிற்கு இருந்த ஆர்வம் நிகரற்றது. ஜென்னி உடல்நலமற்று சிகிச்சை பெற்றுவந்த நாட்களில் மனத்துயர் கொண்டிருந்த மார்க்ஸ், கணிதத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்த கடைசி 15 ஆண்டுகளில் அவரது ஆங்கிலம் வெகுஅற்புதமாக மாறியது. அவரது தாய்மொழியான ஜெர்மனைவிட அவரது ஆங்கில வெளிப்பாடு மேம்பட்டு இருந்ததாக, லபார்க் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

‘மூலதனம்’, பொருளாதாரம் பற்றிய நூலாக இருந்தபோதும் அதற்குள் தாந்தே, மில்டன், ஷேக்ஸ்பியர், பைபிள், விர்ஜில், மோலியர் என நூற்றுக்கணக்கான இலக்கிய மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. இது மார்க்ஸின் தீவிர இலக்கிய வெளிப்பாட்டின் சான்று.

மார்க்ஸின் குடும்பமே இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுகொண்டிருந்தது. குறிப்பாக, மார்க்ஸைவிடவும் ஜென்னி மிகுந்த ஈடுபாட்டுடன் இலக்கிய நூல்களை வாசித்தார். மார்க்ஸின் மகள் எலினார்,  ‘மேடம்பவாரி’ நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மார்க்ஸின் பிள்ளைகள் அவரை மூர் என்றே செல்லமாக அழைத்தார்கள். வீட்டிலிருந்த நாட்களில் காலை எட்டு மணிக்கு மார்க்ஸ் எழுந்துகொள்வார். பிளாக் காபி அவருக்குப் பிடித்தமானது. பத்து மணி அளவில் தனது படிப்பறைக்குள் செல்லும் அவர், இரவு இரண்டு மணி வரை எழுதுவதும் படிப்பதுமாக இருப்பார். உணவு நேரத்தின்போதுகூட அவரது கவனம் உணவில் இருக்காது. சில நாட்கள் சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடுவதும் உண்டு. மாலையில் சில நாட்கள் நடைப்பயிற்சிக்குச் செல்வார். நீண்டதூரம் நடப்பதும் மலையேறுவதும் அவருக்கு விருப்பமானது. அயராத உழைப்பே அவரது வாழ்க்கை. படிப்பு, ஆய்வு, எழுத்து என அவர் வாழ்நாளின் கடைசிவரை  உழைத்துக்கொண்டேயிருந்தார். ஆனால், பொருளாதாரரீதியாக மிக மோசமான நிலையில் அவரது குடும்பம் தத்தளித்தது. ஜென்னி, குடும்பத்தின் சுமையைத் தாங்கிக்கொண்டதுடன் மார்க்ஸின் அறிவார்ந்த துணையாகவும் விளங்கினார்.

ஜென்னி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். 1881-ம் ஆண்டு டிசம்பர் 2 அன்று தனது 67 -வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் புதைக்கப்பட்டது. 38 ஆண்டுகள் மார்க்ஸோடு ஜென்னி வாழ்ந்திருக்கிறார். ஜென்னியின் மறைவுக்குப் பின் மார்க்ஸ் 15 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். சொல்ல முடியாத துன்பங்களும் வேதனையும் பீடித்த தனது வாழ்க்கையைப் பற்றி மார்க்ஸ் ஒருபோதும் புகார் சொன்னதே இல்லை. வாழ்வின் அவலத்தை ஏற்றுக்கொண்டு, இடையறாது சமூகப் பணிகள் செய்ததற்கு அவர் வாசித்த இலக்கியங்களே மனவுறுதியைத் தந்திருக்கின்றன.

மனிதகுலத்துக்காக நெருப்பைக் கொண்டுவந்த ப்ரமீதியஸை மார்க்ஸ் வியந்து போற்றுகிறார். ப்ரமீதியஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். ஆனால், மார்க்ஸ் உண்மையான மனிதர். ப்ரமீதியஸ் போலவே இவரும் ஒரு நெருப்பை மனிதர்களிடம் பரப்பினார். அது வர்க்கபேதம் குறித்த நெருப்பு. பாட்டாளி மக்களின் விடுதலை குறித்த நெருப்பு. ப்ரமீதியஸை நடத்தியதைப் போலத்தான் சமூகம் மார்க்ஸையும் தண்டித்தது.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தொகுப்பு நூலில் அவர்கள் வாசித்த இலக்கிய நூல்கள் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மார்க்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை. ஆனால், இலக்கியம் யாருக்கானது, எப்படி உருவாகிறது, யாரால் எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறது, இலக்கியத்தின் வழியே பண்பா டு எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைத் துல்லியமாக அறிந்தவர். வரலாற்றின் முக்கியத்துவத்தை எப்போதும் வலியுறுத்துவதுபோலவே இலக்கியத்தின் அவசியத்தையும் மார்க்ஸ் முன்வைக்கிறார். இவ்வளவு இலக்கிய மேற்கோள்கள், குறிப்புகளை அவர் மூலதனத்தில் பயன்படுத்தியிருப்பது, அவரது மேதைமையைக் காட்டுவதற்காகவா என ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன மார்க்ஸ், “அப்படி இல்லை. நான் சொல்ல விரும்பும் விஷயங்கள் ஏற்கெனவே பலராலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியை நான் முன்னெடுக்கிறேன் என்பதற்காகவே நான் அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.

மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த எந்தத் தத்துவவாதியும் இவரளவு இலக்கியத்தை நேசிக்கவில்லை. பெரும்பான்மை தத்துவவாதிகள் இலக்கியத்தை ஏளனம்செய்து புறம் ஒதுக்கியிருக்கிறார்கள். சிலர் தத்துவத்தின் காரணமாகவே இலக்கியம் வாழ்ந்துகொண்டிருக்கிறது எனச் சுயபெருமை பேசினார்கள். ஆனால், மார்க்ஸ் ஒரு சமூகத்தில் இலக்கியத்தின் இடமும் தேவையும் என்னவென்று சரியாக உணர்ந்திருந்தார். இலக்கியத்திலிருந்து கற்றுணர்ந்த நெறிகளைத் தனது வாழ்க்கையில் பின்பற்றினார். இலக்கியத்தின் வழியாக மனித மனதைப் புரிந்துகொண்டார்.

மார்க்ஸ் பிறப்பின் 200 ஆண்டுகள் தொடங்குவதை இன்று கொண்டாடாத நாடுகளே இல்லை. ஆனால், அவர் இறந்தபோது அதை ஒரு செய்தியாகக்கூட அமெரிக்க ஐரோப்பியப் பத்திரிகைகள் வெளியிடவில்லை.

இன்று காந்தியைக் கொண்டாடும் பலரும் காந்தியக் கோட்பாடுகளை மறந்துவிடுகிறார்கள். அதுபோலின்றி மார்க்ஸைக் கொண்டாடுவது என்பது அவரது சித்தாந்தத்தை முன்னிறுத்துவதும் அதன் வழியே சமத்துவச் சமுதாயம் உருவாகப் பாடுபடுவதுமேயாகும். இது கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமில்லை... மார்க்ஸை நேசிக்கும் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.

நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை என்கிறார் கவிஞர் கதே. பேரன்பும் பேரறிவும் கொண்ட மகத்தான மனிதனாக வாழ்ந்தார் என்பதாலேயே மார்க்ஸ் இன்றும் கொண்டாடப்படுகிறார்.