
ஓவியம் : பிரேம் டாவின்ஸி
சற்றே குள்ளமான உருவம். சிவந்த நிறம். வாசிப்பின் வீச்சினைக் காட்டும் அகலமான பரந்த நெற்றி, தடித்த மூக்குக் கண்ணாடி, முழுக்கைச் சட்டை, வேட்டியின் ஒரு நுனியை ஒரு கையில் பிடித்தவாறு பாளையங்கோட்டை தெற்குக் கடைத்தெருவில் நடந்து செல்லும் அவரை ‘வானமாமலை வாத்தியார்’ என்றுதான் ஊர் மக்களுக்குத் தெரியுமே தவிர, ‘தமிழ்நாட்டுக் கோசாம்பி’ என்று தெரியாது. அவர் மறைந்த பிறகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதும் தெரியாது.
அவர் எந்தக் கல்லூரியிலும் பணியாற்றியது இல்லை. ஆனாலும், இன்றையத் தமிழ் ஆய்வுலகத்துக்கு அவர் பேராசிரியர் நா.வானமாமலைதான். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஒரு பழுத்த வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். நாற்பதுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட தோழர்கள் ஆர்.நல்லகண்ணு, ஏ.நல்லசிவம், பாலவிநாயகம், பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞரான நாங்குநேரி என்.டி.வானமாமலை, பாளை என்.சண்முகம், ஆர்.எஸ்.ஜேக்கப் ஆகியோரோடும் கட்சிப்பணியாற்ற முன்வந்த தோழர். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் கட்சியின் நெருக்கடியான காலத்தில் பள்ளிப் பணியை உதறிவிட்டு வந்தவர். தான் பிறந்த நாங்குநேரி வட்டத்தில் ஜீயர் மடத்துக்கு எதிராகத் தோழர் நல்லகண்ணு விவசாயிகளைத் திரட்டிப் போராடியபோது அவருக்குப் பின்னிருந்து உதவியவர் அவர். பொதுவுடைமைக் கட்சிக்கான சிறு வெளியீடுகளைத் தமிழாக்கித் தந்தவர். ஒருமுறை பாளை நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. சிறை வாழ்க்கையும் அவருக்கு வாய்த்திருந்தது. 50-களின் கடைசிப் பகுதிகளின்போது கல்வியுலகமும், தமிழ் ஆராய்ச்சி உலகமுமே அவருக்கு ஆர்வமாக இருந்தன. பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பொதுவுடைமைக்காரரான சாத்தான்குளம் அ.ராகவன் நட்பும் அதற்கு ஒரு காரணமாகும்.

ஒரு காலத்தில் தமிழ் மரபுவழிப் புலமை, சித்தர் பாடல்களை ஏற்றுக்கொள்ளாதது போலவே எழுத்தறியா மக்களின் பாடல்களையும், கதைப்பாடல்களையும், பழமொழிகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. 1957-ல் பேராசிரியர் நா.வா. ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற பெயரில் ஒரு சிறிய தொகுப்பினை ஆய்வுக்காகக் குறிப்புகளுடன் வெளியிட்டார். அதுவரை அவற்றையெல்லாம் தமிழ் ஆய்வுலகம் அருங்காட்சியகப் பொருள்களாகவே ஒதுக்கிவைத்திருந்தது. ஆனால், பேரா. நா.வானமாமலை அவை உயிருள்ள புழங்கு பொருள்கள் என்பதனை மெய்ப்பித்தார். இன்றைக்கு வேரும் விழுதுமாகக் கிளைவிட்டு நிற்கின்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுப்புலங்களுக்கு அவரே வித்தூன்றியவர்.
60-களின் இறுதிப் பகுதியில் மதுரைப் பல்கலைக்கழகம் ‘கட்டபொம்மன் கதை’, ‘கான்சாகிபு சண்டை’, ‘காத்தவராயன் கதை’ ஆகிய கதைப்பாடல்களை அச்சிட்டு வெளியிட்டபோது தமிழ்ப் பண்டிதம் நெற்றி சுருக்கியது. ஆனால், ஆய்வுலகம் வரவேற்றது. அந்தக் கதைப் பாடல்களின் பதிப்பாசிரியர் பேரா.நா.வானமாமலை. அப்பணியை அவரிடம் ஒப்படைத்தவர் பேராசிரியர்.தெ.பொ.மீனாட்சிசுந்தரம்.

50-களிலும் 60-களிலும் பொதுவுடைமைச் சித்தாந்தத்தை முறையாகப் பயின்ற தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் பேரா. நா.வானமாமலை எடுத்த வகுப்புகளுக்குக் கடன்பட்டவர்கள். 1971-ல் தமிழ் வழிக் கல்விக்கு எதிராகக் குரல்கள் எழுந்தபோது அதனை எதிர்த்துப் பொதுக்கூட்டங்கள் நடத்தினார் பேரா.நா.வா. ‘தமிழால் முடியும்’ என்ற மிக முக்கியமான நூலையும் எழுதினார்.
பேராசிரியர் நா.வா., கல்வியாளர் மட்டுமல்லர், எதிர்கால உணர்வுடன்கூடிய மிகச் சிறந்த ஆய்வாளரும் ஆவார். மணிமேகலை கூறும் ‘பரபக்க லோகாயதம்’ குறித்தும் அவரால் எழுதமுடியும். பரிபாடலின் ‘முருக-ஸ்கந்த’ இணைப்புப் பற்றியும் அவரால் பேச முடியும். 60- களின் கடைசிப் பகுதியில் அவர் ‘நெல்லை ஆய்வுக்குழு’ என்னும் அமைப்பினை நிறுவி, ‘ஆராய்ச்சி’ என்ற இதழினையும் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை 24 முறை ‘ஆராய்ச்சி’ காலாண்டு இதழாக வெளியானது. சோவியத் நாட்டு லித்தாலிக்கோ பூர்ணிக்கோவுடன் தமிழ்நாட்டின் அ.ராகவன், முகு.ஜெகநாதராஜா, ஈழத்துப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, ஆ.சிவசுப்பிரமணியன், க.சுப்பிரமணியன், மே.து.ராசுகுமார் எனத் தமிழ் ஆய்வுலகத்தின் எல்லைகளை விரித்துக் காட்டிய பெருமை ‘ஆராய்ச்சி’ இதழுக்கு மட்டுமே உண்டு. எளிய தமிழில் அறிவியல் கட்டுரைகள் பல எழுதிய பேராசிரியர், ரொமிலா தாப்பரின் நூலொன்றினை, ‘வரலாறும் வக்கிரங்களும்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். ‘தமிழ் உரைநடை வளர்ச்சி’ என்ற அவரது நூலும் காலத்தின் தேவையாகும்.

‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’, ‘விடுகதைகளும் பழமொழிகளும்’ ஆகிய அவரது நூல்கள் தமிழ் ஆய்வுலகத்துக்குப் புதிய பரிமாணங்களைத் தந்தன. கர்நாடகத்தின் தார்வார் பல்கலைக்கழகம் அவரைக் கௌரவப் பேராசிரியராக நியமித்தது. தமிழில் எழுந்த நாட்டார் படைப்புகளை ஆய்வு செய்ய வைத்தது. ‘ஆராய்ச்சி’ இதழில் ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எழுதிய முதற்குறிப்புகள், ஆய்வாளர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டின.
‘குகனொடு ஐவரானோம்’ என்பது போல அவரது ஆய்வு நட்புலகம், ரொமிலா தாப்பர் முதல் மயிலை சீனி வேங்கடசாமி வரை அகன்றது. எழுத்தாளர் கி.ராஜநாரயணன் முதல் சிட்டி வரை அதில் அடக்கம். ‘தம்மின் தம்மக்கள்’ என்ற திருக்குறள் அறிவுலக நாகரிகத்தின் அடையாளம் ஆகும். அந்த நயத்தக்க நாகரிகம் அவருக்கு வாய்த்திருந்தது என்பதற்கு அவர் உருவாக்கிய நெல்லை ஆய்வு வட்டத்திலிருந்து வெளிவந்த பேராசிரியர்களே சான்றாவர்.
தே.லூர்து, எஸ்.தோதாத்ரி, ஆ.சிவசுப்பிரமணியன், ந.முத்துமோகன், பொன்னீலன், சி.சொக்கலிங்கம், செந்தீ நடராசன், மே.து.ராசுகுமார், நா.இராமச்சந்திரன், வெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஆய்வாளர்களின் உருவாக்கத்தில் அவருக்குப் பங்குண்டு.
1980-ல் போபாலில் மகள் வீட்டிற்குச் சென்றிருந்த பேராசிரியர் அங்கே காலமானார். பேராசிரியரின் ஆய்வுத் தொண்டினைத் தமிழர்கள் மறந்துவிட்டதில் வியப்பேதும் இல்லை. ஒருவேளை மீண்டும் மறப்பதற்கு இந்த நூற்றாண்டு விழா நேரத்தில் நினைப்பார்களோ, என்னவோ!
பேராசிரியர் நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரி, அறிஞர்களின் கூடல் சங்கமமாகத் திகழ்ந்தது. அவரும் பணி செய்யும் இளைஞர்களை, பெற்ற பிள்ளைகளைப் போல பார்த்துக்கொண்டார். அவர்கள், அவரை ‘அப்பா’ என்றே அழைப்பார்கள். ஈட்டிய பொருளையெல்லாம் நண்பர்களுக்குச் செலவிட்டே காலியாக்கினார். ஆடம்பரமில்லாத வாழ்க்கை அவருடையது. அவர் நினைத்திருந்தால் இரண்டு ‘மகிழுந்துகள்’ வாங்கியிருக்க முடியும். தள்ளாத வயதிலும் அவர் நடந்து சென்றேதான் தன் பணிகளைக் கவனித்தார். இளைஞர்களைக் கைத்தூக்கி விடுவதில் அவருக்கு இருந்த ஆர்வம் அலாதியானது. மாணவர்களால் மறக்க முடியாத பேராசிரியர் அவர். தமிழ் உலகம் அவரை மறக்காதிருந்து தன்னை நியாயம் செய்துகொள்ளட்டும்!