
படங்கள் : வி.சதிஷ்குமார்
மதுரை புறநகரில் இருக்கிறது, கவிஞர் லிபி ஆரண்யாவின் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால், ஹால் துவங்கி எங்கேயும் ஒரு புத்தகமும் இல்லை. சில தினசரிகள் மட்டுமே காபி மேஜையில் கிடந்தன. ஆச்சர்யமாக இருந்தது. நல விசாரிப்புகளுக்குப் பின் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது அவரது நூலகம். மாடியில் சின்ன அறை; அதன் வாசலில் கொஞ்சம் இடம்; அதையொட்டிய இரண்டு அலமாரிகள்; நேர்த்தியாய் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். “இவை அடிக்கடி ரெஃபரென்ஸுக்காக எடுக்கிற புத்தகங்கள். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸின் வாசஸ்தலங்கள். மற்ற புத்தகங்கள் அறையின் உள்ளே இருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்ட மாட்டேன். உள்ளே அலங்கோலமாகக் கிடக்கிறது. கண்டிப்பாகப் புகைப்பட அனுமதி இல்லை” என்று சிரிக்கிறார் லிபி.
“நிலக்கோட்டையில் உள்ள நாடார் நடுநிலைப் பள்ளியில்தான் படித்தேன். ஆறாவது படிக்கும்போதுதான் பாடநூல்களைக் கடந்த வேறு புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். பள்ளியை ஒட்டிய கடைகளில், பள்ளி இடைவேளை நேரங்களில் தின்பண்டம் வாங்கப்போகும்போதுதான் ஒரு காட்சியைக் கண்டேன். துணிகளைக்காயப்போடுவது போல புத்தகங்களை வரிசையாக அந்தக் கடையில் மாட்டித் தொங்கவிட்டிருந்தனர். 15 காசுகள் அல்லது 25 காசுகள்தான் விலை. அன்றைக்கு அது பெரிய தொகை. இன்று டாஸ்மாக் வாசலில் கையில் இருப்பதைப் போட்டு குவாட்டர் வாங்கி கட்டிங் பிரித்துக்கொள்கிறார்களே, அதுபோல் ஆளுக்கு 10 காசு போட்டு அந்தப் பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினோம். பின்னர் ஒவ்வொரு மாதமும் நண்பர்களின் வீடுகளுக்குப் புத்தகம் வரும் தேதி அன்று, ‘யதார்த்தமாக’ போகத் தொடங்கினோம். கண்ணன் என்கிற நண்பர் தற்போது சென்னையில் இருக்கிறார். அவரின் வீட்டுக்குச் சரியான தேதியில் `அம்புலிமாமா’, `பாலமித்ரா’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வந்துவிடும். இப்படி காமிக்ஸ் கேரக்டர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்த நாள்களை மடைமாற்றிவிட்டவர்கள் மூன்று ஆசிரியர்கள்.

சுப்பிரமணி போஸ், மல்லிகா மற்றும் தமிழாசிரியை கோமதி. இவர்கள் மூவரும் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர்கள். ஒருவர் மாற்றி ஒருவர் நிலக்கோட்டை நூலகத்துக்கு என்னை அனுப்புவார்கள். ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஒவ்வோர் எழுத்தாளரைப் பிடிக்கும். கோமதி ஆசிரியைக்கு லஷ்மி எழுதிய புத்தகங்கள் பிடிக்கும். மல்லிகா ஆசிரியைக்கு அகிலனின் நாவல்கள் பிடிக்கும். எனக்கு, வகுப்பறையைவிட்டு எங்கு போகச் சொன்னாலும் பிடிக்கும்.
முதல் ஆளாக, புத்தகத்தை வாங்கிக்கொண்டு நூலகத்துக்கு ஓடுவேன். அப்போதெல்லாம் அந்தக் கிளைநூலகத்தில் நீங்கள் போய் தன்னிச்சையாகப் புத்தகங்களை எடுக்க முடியாது. என்ன புத்தகம் வேண்டும் எனச் சொன்னால், அந்த நூலகர் போய் எடுத்துவந்து கொடுப்பார். காத்திருக்கும் நேரத்தில் அங்கு இருக்கும் மேஜைகளில் பல்வேறுபட்ட புத்தகங்கள் கிடக்கும். படம் பார்ப்பதற்காக ஒவ்வொன்றாகப் புரட்டத் தொடங்கிய நாள்களில் ஒருமுறை ‘உண்மை’ என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்நாளில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த புத்தகம் அது. தொடர்ந்து அதுபோன்ற புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியான புத்தகங்களை அடையாளம் காட்டியது யார் என்றால், நூலகத்துக்குத் தொடர்ந்து படிக்கவரும் நபர்கள்தான்.
இன்றைக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களைவிட மேம்பட்ட உரையாடல்கள் அன்றைக்கு சலூன் மற்றும் தேநீர்க் கடைகளில் நிகழும். அப்படியான உரையாடல்களின்போது ஓரளவேனும் வாசிப்பு இருந்தால்தான் வேடிக்கையே பார்க்க முடியும். அவ்வப்போது ஏதாவது இரண்டு கருத்துகளை இறக்கிவிட்டால், நம் மீதான மதிப்பு கூடுவதைக் கவனித்தேன். மேலும், `உண்மை’ போன்ற பகுத்தறிவுப் புத்தகங்களில் படிக்கும் கருத்துகளைச் சோதிக்கவும் தொடங்கினேன்.
கிறிஸ்துவ நண்பன் ஜெபக்குமாரிடம் மதம் சார்ந்த பல பகுத்தறிவுக் கேள்விகளைக் கேட்பேன். அவன் சர்ச்சுக்குப் போய், வார இறுதியில் நடக்கும் பூஜையின்போது பாதிரியாரிடம் கேட்டுவந்து பதில் சொல்வான். இப்படித் தொடர்ந்து கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒருநாள் வந்து என்னிடம், `நீ சாத்தானின் குழந்தை. உன்னோடு சேரக் கூடாது எனப் பாதிரியார் சொல்லிவிட்டார்’ என்று கூறிச் சென்றான். இன்று, அந்த நண்பர் மதுரையில் பாதிரியாராக இருக்கிறார். நான் இன்னும் சாத்தானின் குழந்தையாகவே புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
பதின்ம வயதில் இடதுசாரி இயக்கத் தோழர்களுடன் அறிமுகம் கிடைத்தது. `வால்காவிலிருந்து கங்கை வரை’, `தாய்’ எனத் தொடங்கி, கண்ணீர் மல்க படித்த `நினைவுகள் அழிவதில்லை’ போன்ற புத்தகங்கள் வரை அவர்கள் மூலம்தான் வாசிக்கக் கிடைத்தன. இன்னொரு பக்கம் ஒரு சிக்கலும் வந்தது. இடதுசாரி மாநாடுகள், கூட்டங்களுக்குச் செல்லும்போது, உடன் வரும் தோழர்கள் பரிந்துரைக்கிறார்களே எனச் சிந்தாந்தப் புத்தகங்களை வாங்கி வந்து அவற்றோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பேன். `இவற்றை முழுக்கப் படித்துப் புரிந்துதான் புரட்சி வரும் என்றால், அது ஏழாவது ஜென்மத்தில்தான் நடக்கும். காரணம், இந்த மொழியில் படித்துப் புரிவதற்கு ஆறு ஜென்மங்கள் ஆகிவிடும்’ என்று விளையாட்டாகக்கூட நான் சொல்லியது உண்டு. ஆனால், ஓர் அகராதியைப்போல, என்சைக்ளோ பீடியாவைப்போல தேவைக்கு ரெஃபரென்ஸ் செய்யவேண்டிய புத்தகங்கள் அவை என பின்னால்தான் உணர்ந்துகொண்டேன். நல்லவேளையாக அவை அனைத்தும் என்னிடம் சேகரிப்பில் உள்ளன.
இப்படி இருந்தபோது `கணையாழி’ போன்ற சிற்றிதழ்கள், ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ போன்ற புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. அவை என்னை வேறு ஓர் உலகத்துக்கு இட்டுச் சென்றன. அந்த உலகம் எப்படியாக இருந்தது என்றால், அன்டன் செக்காவின் ‘ஆறாவது வார்டு’ கதையில் வரும் பைத்திய விடுதிபோல், ஒவ்வொருவரும் ஒவ்வோர் எழுத்துக் குணத்தோடு இருந்தார்கள். அங்கு ஒருவருமே இயல்பாக இல்லை எனத் தெரிந்தது. ஆனால், அந்த வசீகரம் பிடித்துப்போனது. இப்போது நானுமே அந்த ஆறாவது வார்டின் உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.

ஆரம்பத்தில் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர, அவற்றைச் சேகரிக்க வேண்டும் என்று தோன்றியது இல்லை. பிறகுதான் புத்தகச் சேகரிப்பின் அருமை தெரிந்தது. இப்போது இடதுசாரிச் சித்தாந்தப் புத்தகங்களின் முழுச் சேகரிப்பு என்னிடம் இருக்கிறது. அதைத் தவிர, புத்தகங்களை வாங்கிவிட்ட பின் அதைப் படிக்காமல் வைக்கப் பிடிக்காது. வாசிப்பு ஆர்வம் மிக்க நண்பர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு, நன்றாக இருந்தால் நிச்சயம் வேறு நண்பர்களுக்குப் படிக்கக் கொடுத்துவிடுவேன். ஆனால், கவிதைப் புத்தகங்கள் அப்படி அல்ல. தமிழ்க் கவிதைகளை முடிந்த அளவுக்கு வாசித்துவிட வேண்டும் என்கிற பெருவிருப்பு உண்டு எனக்கு. அதனால், பெரும்பாலான நல்ல கவிதைப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. சிறுகதை என்றால், தேர்ந்தெடுத்துத்தான் வாங்குவேன். பேசப்படும், அதிக உழைப்பைக் கொடுத்திருக்கும் சிறுகதைத் தொகுப்புகளை நிச்சயம் வாங்கிவிடுவேன். நான்-ஃபிக்ஷன் வாசிக்கும் பழக்கமும் உண்டு. பெரியார், அம்பேத்கர் போன்றோரின் முக்கியத் தொகுப்புகளை வைத்துள்ளேன்.

பாலாஜி என்ற பால்ய நண்பர், ஆங்கில நாவல்களில் சிறந்தவற்றைப் பரிந்துரைப்பார். வரதன் என்கிற நண்பர்தான் என்னைத் தொடர்ந்து காமிக்ஸ் வாசிக்கச் சொன்னவர். கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன், சாம்ராஜ் போன்றோர் பரிந்துரை செய்தார்கள் என்றால், நிச்சயமாக அது நல்ல புத்தகமாகத்தான் இருக்கும். செல்மா பிரியதர்ஷனுக்கும் எனக்கும் ஓர் உடன்பாடு உண்டு. இருவர் வீட்டிலும் ஒருவர் வந்து எடுக்கும் புத்தகங்களைத் திரும்பத் தரத் தேவையில்லை என்பதுதான் அது.
என்னுடைய மனைவி மு.சத்யாவும் கவிஞர்தான். அவர் மிக விரைவாக வாசிக்கக்கூடியவர். நான் மெதுவாக வாசிக்கக்கூடியவன். அவருமே சமயங்களில் பரிந்துரைப்பார். நேற்று ஒரு தோழர் போனில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார்.
‘ ‘ பரிணாமம்’ என்கிற ஒரு புத்தகம் படித்தேன். அது 40 ஆண்டுகளுக்கு முன், அறிவியல் கல்லூரி மாணவர்கள் தமிழ்வழிக் கல்வியில் படிப்பதற்காக அச்சிடப் பட்டுள்ளது. அதன் காப்பிகள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் இருக்குமா?’ என்று கேட்டார். நான் சொன்னேன் ‘நிச்சயமாக இருக்காது. காரணம், நான் அங்கு சில காலம் பணியாற்றியுள்ளேன். வேண்டுமானால், 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கல்லூரிகளில் கேட்டுப்பாருங்கள்’ என்றேன்.அப்போதுதான் அவர் சொன்னார் ‘இது கல்லூரி மாணவர்களுக்காக எழுதப்பட்ட 910-வது புத்தகம்’ என்று. அப்படியானால், கல்லூரி மாணவர்கள் தமிழ்வழிக் கல்வியில் படிப்பற்காக சுமார் ஆயிரம் புத்தகங்கள் நம்மிடையே உள்ளன. இன்றைய தமிழ்வழிக் கல்விக்கான மிகப் பெரிய சவாலாக இருப்பது புத்தகங்களை உருவாக்குவதுதான். நாம் கையில் இருந்ததை இழந்துள்ளோம். என் போன்ற தனிமனிதர்களின் புத்தகச் சேமிப்பு என்பது சுயவிருப்பம் சார்ந்தது. ஆனால், அரசே இப்படியான புத்தகங்களைச் சேமிக்காமல், நாட்டின் அறிவுச்செல்வத்தை இழந்துள்ளது” என்றார் வருத்தமாக.
‘‘வாசிப்பைப் பிள்ளைகளுக்குக் கடத்துவோம். இது நாம் பிள்ளைகளுக்குச் சேர்க்கும் எந்தச் செல்வத்தைவிடவும் பெரிதினும் பெரிது.’’ குரலில் நம்பிக்கை தொனித்தது.