மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!

கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா, பாதி வழியில் என்ன நினைத்தானோ... மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தான். அவன் கண்ணீர் நிற்கவில்லை. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து, சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவனுடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள். இங்கே படப்பிடிப்பு நடத்த அவன் மனம் கேட்கவில்லை. நான்தான் அவனைத் தேற்றினேன். ஒருவழியாக அந்த ஷெட்யூல் முடிந்ததும், நானும் அவனும் புட்டண்ணாவின் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தோம்.

‘முதல் மரியாதை’ படம் ரிலீஸ் ஆனது. மகத்தான வெற்றி. சிவாஜி சாரின் நடிப்பு, பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை... என என் கதைக்கு மகுடம் சூட்டப்பட்டது.

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு?” என விசாரித்தார்கள். அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறான்.

கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் கேட்டது, ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட். பாரதி இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த ரேட் சொன்னான். 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது. லாபம் கோடிகளில் கொட்டியது. இதை எல்லாம் கேள்விப்பட்டு இளையராஜா ரொம்பத்தான் நொந்துபோனான். ‘இந்தப் படம் ஓடாது, எனக்குச் சம்பளமே வேண்டாம்’ என்றவன் ஆச்சே?

கே.பி ஃபிலிம்ஸ் பாலு... ‘சின்னதம்பி’ படம் எடுத்தவர் என்றால் சட்டெனத் தெரியும். பார்க்கும்போதெல்லாம் பணம் கொடுத்து கௌரவித்த தயாரிப்பாளர். கதாசிரியர்களின் தரம் தெரிந்தவர். என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயாவது கொடுக்காமல் போகமாட்டார். ‘‘இப்ப எதுக்குப் பணம்?’’ என்றால், ‘‘கதை பண்ணும்போது கழிச்சுக்கலாம்’’ என்பார் பெருந்தன்மையாக.

அவருக்காக நான் எழுதிக்கொடுத்த கதை, ‘வாக்கப்பட்ட பூமி’. பாரதிராஜா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ‘வாக்கப்பட்ட பூமி’, ஓர் உண்மைக்கதை.

அலங்காநல்லூர் எப்படி ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்றதோ, அப்படி அலங்காநல்லூருக்கு அருகே இருக்கும் கோட்டைமேடு, ‘ராமானுஜம்’ என்பவரால் பெயர் பெற்றது. பெரிய விவசாயி அவர். அருமையான மனிதர். அவருடைய நிலத்தில் அந்த ஆண்டு அமோக விளைச்சல். பயிர்கள் எல்லாம் அறுவடைக்காகக் காத்திருந்தன. ஒரு வருட உழைப்பின் அறுவடைக்கான நேரம். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்த சில பொறாமைக்காரர்கள், பயிரை எரித்து நாசம் செய்ய களத்துக்கு வந்தனர். விஷயம் அறிந்து அவர்களுடன் போராடினார். பலரை வெட்டி வீழ்த்தினார். ஆங்கிலேய அரசு அவரை அந்தமான் சிறையில் அடைத்தது.

சுதந்திரப் போராட்டக் காலகட்டம் அது. அந்தச் சிறையில் நிறையக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இருந்தனர். சிறையில் அவருடைய சிந்தனை மாறியது. புடம்போட்ட கம்யூனிஸ்ட்டாக வெளியே வந்தார். வந்தவர், நேராக மதுரை மண்டைக்காரன் தெருவுக்குப் போனார். அங்கேதான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்தது. ஊருக்குத் திரும்பி வந்தவர், ‘ரஷ்யா மளிகைக்கடை’ என்ற பெயரில் ஒரு கடை தொடங்கினார். அரிசி, பருப்பு வகைகள் எல்லாம் கடையில் இருக்கும். கடையில் கல்லா பெட்டியில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொருட்களின் விலை அங்கே எழுதப்பட்டிருக்கும். எடைக்கு ஏற்ப பணத்தை மக்களே கல்லா பெட்டியில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி ஒரு கடை. அவர், தன்னால் வெட்டுப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். அந்தக் குடும்பங்களுக்கு என்னென்ன தேவைகள் இருந்தனவோ, அத்தனையையும் கேட்டறிந்து தீர்த்துவைத்தார். அவர் என் சித்தப்பா சங்கரய்யாவின் நண்பரும் ஆனதால், அவருடைய மூத்த மகன் டிமோ சங்கருக்கு என் சகோதரியை மணமுடித்து வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. (டிமோ என்பது ஒரு ரஷ்ய தளபதியின் பெயர். நாஜிப் படைகளை எதிர்த்து ஜெர்மனியில் நுழைந்த முதல் தளபதி அவர்தான். அந்தப் பெயரைத்தான் தன் மகனுக்கு ராமானுஜம் வைத்திருந்தார்.) அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவரைச் சுமந்து வந்தவர்கள், அந்தக் கிராமத்தின் ஏழை எளிய மக்கள்தான். இந்தப் பின்னணியில் ‘வாக்கப்பட்ட பூமி’ கதையைப் பின்னியிருந்தேன்.

கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!

முதலில் இந்தக் கதையை நானே தயாரிப்பதாகத்தான் இருந்தேன். விஜயகாந்திடம் கதையைச் சொன்னேன். அவரும் எப்போது கேட்டாலும் நடித்துக்கொடுக்கத் தயாராக இருந்தார். இந்த நேரத்தில் ராஜ் ஃபிலிம்ஸ் ராமநாதன் வந்தார். ‘‘உங்களிடம் பாரதிராஜா, விஜயகாந்த் தேதிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் இருவரின் கால்ஷீட்டை வைத்து நான் ஒரு படம் எடுக்கலாம் என நினைக்கிறேன்’’ என்றார். ஏற்கெனவே அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். கதாசிரியர்களுக்கு உதவுவதில் வள்ளல். உடனே, அந்த இருவரிடமும் பேசி, எனக்குக் கொடுத்த தேதிகளில் ராஜ் ஃபிலிம்ஸுக்கு படம் பண்ணும்படிக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் சம்மதித்துவிட்டார்கள். அப்படி வந்ததுதான் ‘தமிழ்ச்செல்வன்’.

‘வாக்கப்பட்ட பூமி’ தயாரிப்பு வேலை இப்படியே தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் என் தம்பி கண்ணன், ‘ராசய்யா’ படத்தை இயக்க ஆரம்பித்திருந்தான். அந்தப் படத்தின் கதை என்னுடையது. அதனால் அந்தப் படவேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். படத்தின் பாடல் பதிவுக்காக இளையராஜா மும்பைக்கு அழைத்தான். நான், கவிஞர் வாலி, ராஜா எல்லோரும் மும்பைக்குச் சென்றுவிட்டோம். ‘காதல் வானிலே... காதல் வானிலே’ பாடல் பிறந்தது மும்பையில்தான். ‘ராசய்யா’ பட வேலைகளில் மும்முரமாக இருந்த நேரத்தில் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு ‘வாக்கப்பட்ட பூமி’ கதையைக் கேட்டு வந்தார். அவருக்கு ஏற்கெனவே கடன்பட்டவன்... கடமைப்பட்டவன் நான். உடனே கதையை அவரிடம் கொடுத்தேன். நாயகனாக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. படத்துக்கான அறிவிப்புகள் வெளியாகின.அப்போது பலப் படங்களில் சரத் பிஸி. சரத்குமார் தேதி கொடுத்த நேரத்தில் பாரதிராஜா பிஸி. இப்படியே இழுபறியாகப் போய்... அந்தக் கதை அப்படியே தங்கிவிட்டது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

ஒரே பார்வை!

ரு முறை மும்பைக்குப் பறந்தபோது, விமானத்தில் என் பக்கத்து இருக்கையில் பயணித்த கண் மருத்துவர், என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். என் கண்களைப் பார்த்துவிட்டு, ‘‘உங்கள் வலது கண்ணில் இவ்வளவுப் புரை விழுந்திருக்கிறதே... நீங்கள் ஃப்ளைட்டை விட்டு இறங்கியவுடன் என் கிளினிக்குக்கு வாருங்கள்’’ என்றார். எனக்கோ ஏகப்பட்ட டிஸ்கஷன் வேலைகள். ‘‘சென்னையில் போய்ப் பார்த்துக்கொள்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டேன்.

சென்னை வந்ததும் கண் மருத்துவமனைக்குப் போனேன். ஒரு தமிழறிஞரின் மகன் நடத்தும் மருத்துவமனை அது. அவரும் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என உறுதிப்படுத்தினார். அங்கு வேறு ஒரு மருத்துவர் எனக்கு ஆபரேஷன் செய்தார். ஒரு கொடுமை நடந்தது. வலது கண்ணுக்குப் பதில் இடது கண்ணில் ஆபரேஷன் செய்துவிட்டார். அன்று முதல், ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. ‘கேஸ் போடுங்கள், நஷ்ட ஈடு கேளுங்கள்’ என எவ்வளவோ சொன்னார்கள்.

என் சிறுவயதில், ‘தினமும் 80 பக்கங்கள் படிக்க வேண்டும்’ என என் தந்தை எனக்கு அறிவுரை சொன்னார். அதை இன்றும் பின்பற்றுகிறேன். அதற்கு இந்த ஒரு கண்ணே போதும் என விட்டுவிட்டேன்.