Published:Updated:

வெள்ளி நிலம் - 14

வெள்ளி நிலம் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 14

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - 14

முன்கதை: இமயமலைப் பகுதியில், ஒரு மடாலயத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது, பழங்காலத்து மம்மி ஒன்று கிடைக்கிறது. அதை, அங்கிருந்து கடத்திச்செல்ல முயற்சி நடக்கிறது. அதன் பின்னணியில் இருப்பது யார் என்று துப்பறிய, பாண்டியன் என்கிற காவல்துறை அதிகாரியும் அவருடன் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா, நாய்க்குட்டி நாக்போ ஆகியோரும் களமிறங்குகிறார்கள். துப்பறியும் இவர்களைச் செயல்படவிடாமல் தடுக்கிறது ஒரு கும்பல். அவர்களைப் பற்றிய தகவலை அறிந்துகொள்ள ஹெலிகாப்டரில் பூட்டான் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ஹெலிகாப்டர், திடீரென மக்கர் செய்கிறது...   

வெள்ளி நிலம் - 14

விமான ஓட்டி நீரஜ், வெறிபிடித்ததுபோல கருவிகளை மாறிமாறி இயக்கினார். சிறிய விளக்குகள் மின்ன, வண்டுபோலவும் கிளி போலவும் ஒலித்தபடி கருவிகள் செயல்பட்டன. கூடவே, அவர் ஒலித்தொடர்புக் கருவியில் பேசினார். அபாயக் கட்டங்களில் விரிவாகப்பேசுவது இயலாது. ஆகவே, ராணுவத்தில் அதற்கான சுருக்கமான குறியீட்டுமொழியை உருவாக்கியிருப்பார்கள். ஓரிரு சொற்களிலேயே ஏராளமான செய்திகளைத் தெரியப்படுத்தமுடியும்.

நீரஜ், குறியீட்டுமொழியில் ஹெலிகாப்டர் எந்த இடத்தில் இருக்கிறது என்றும் என்ன நிகழ்கிறது என்றும் சொன்னார். மறுபக்கமிருந்து, தேனீக்கள் சுழன்று பறக்கும் ஒலியில் ஆணைகள் வந்தன. ஹெலிகாப்டர் பக்கவாட்டில் சரிந்து, சென்றுகொண்டேயிருந்தது. இருக்கைப் பட்டைகளை அணிந்திருந்தமையால், அவர்கள் சரிந்து ஒருபக்கமாக விழவில்லை. ஆனால், மேலே தூக்கிய பகுதியில் இருந்த நோர்பா, கிட்டத்தட்ட தொங்கிக்கிடப்பதுபோல இருக்கையில் ஒட்டியிருந்தான்.

நோர்பா பார்த்தபோது, வெளியே பனி மூடிய மலைச்சரிவுகள், வெள்ளை நுரையுடன் கடல்அலைகள் பெருகிச் செல்வதுபோல தெரிந்தன. ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி, அப்படியே ஒரு படமாக நின்றதுபோல நோர்பாவின் மனதில்  எண்ணங்கள் அனைத்தும் அசைவில்லாமல் நின்றுவிட்டன. ‘மலை’ என்ற ஒற்றைச்சொல் மட்டும் இருந்தது. நாக்போ “எனக்குப் பிடிக்கவில்லை… நான் குதிப்பேன்” என்று முனகியது.

நீரஜ் திரும்பி பாண்டியனிடம், “குதிக்கவேண்டியதுதான்” என்றார்.

“பாராச்சூட் விரிவதற்கான உயரம் இல்லையே” என்றான் பாண்டியன்.

‘‘பாரச்சூட்டில் குதிக்கமுடியாது. நேரடியாகவே பனியில் குதியுங்கள்” என்றார் நீரஜ்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அதிர்ச்சியுடன், “ஆயிரம் அடி உயரமாவது இருக்குமே… இங்கிருந்து குதிப்பதா... என்ன சொல்கிறீர்கள்?” என்று கூவினார்.

“இல்லை, இருநூறு அடிகளாக உயரத்தைக் குறைக்கிறேன். இங்கே, மென்மையான பனிதான்... குதித்தால் உயிர் தப்ப வாய்ப்புள்ளது. இந்த ஹெலிகாப்டர் இன்னும் ஐந்து நிமிடங்களில் மலையில் மோதிவிடும்” என்றார் நீரஜ்.

‘‘குதிப்போம்…வேறு வழியில்லை” என்று பாண்டியன் சொன்னான்.

நோர்பா, “கீழே பனிக்குள் பெரிய பாறைகள் இருக்கக்கூடும்” என்றான்.

“ஆம், அவற்றில் மோதினால் உடனே இறப்புதான்…” என்றார் நீரஜ்.

‘‘பார்த்துக் குதிக்க வேண்டும்” என்றான் நோர்பா.

“அதெல்லாம் முடியாது. பனி மேல் விழுவது உங்களுக்கு நல்ல வாய்ப்பு... வேறொன்றும் சொல்வதற்கில்லை… குதியுங்கள்” என்றார் நீரஜ்.

பாண்டியன், இருக்கைப்பட்டையை அவிழ்த்துவிட்டு எழுந்தான். நீரஜ் கைப்பிடி ஒன்றைச் சுழற்ற, கதவு திறந்தது. வெளியே இருந்து கடும் குளிர்க்காற்று வந்து அவர்கள் மேல் அருவிபோல அறைந்தது. பாண்டியன், ‘ஹூப்’ என்ற ஒலியுடன் குதித்தான். அவனுடைய செம்மஞ்சள் நிறமான கோட் அணிந்த உடல், பறந்து சென்றது. அவன், பனியில் விழுந்து உருண்டு உருண்டு சென்று புதைந்தான்.

வெள்ளி நிலம் - 14



“தப்பிவிட்டார்… அடுத்தவர்” என்றார் நீரஜ்.

நோர்பா எழுந்து கதவைப் பிடித்தபடி நின்றான். காற்றில் ஹெலிகாப்டர் அலைபாய்ந்தது. அருகே, மலைகள் மிகவேகமாகப் பறந்துகொண்டிருப்பதாகவும் ஹெலிகாப்டர் நின்றுகொண்டே இருப்பதாகவும் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு அவன் எம்பிக் குதித்தான். அவன் உடல், ஒரு சில கணங்கள் எடையே இல்லாமல் இருந்தது. மேலே செல்கிறோமா அல்லது கீழே விழுகிறோமா என்றுகூடத் தெரியவில்லை.

பனி மெத்தையில் அவன் உடல் மோதி, ஆழமாகப் புதைந்தது. அவன் உடல்பட்டு, அந்தப் பனிப்பாளம் அப்படியே பெயர்ந்து சரிந்தது. அவனை அள்ளியபடி ஒர் அருவிபோல இறங்கி ஒரு பள்ளத்தில் விழுந்தது. அவன் பனியில் புதைந்துகிடந்தான். எழ முயன்றபோது மேலும் புதைந்தான்.

தொலைவிலிருந்து பாண்டியன் நடந்து வந்தான். பனியில் கால் புதைய, தள்ளாடியபடி அருகே நடந்து வந்து, அவனைத் தூக்கி எழுப்பினான். அப்போது, தொலைவில் நாக்போ விழுவதை நோர்பா கண்டான். விழுந்த வேகத்திலேயே துள்ளி எழுந்து, உடலை உதறிக்கொண்டது. பவ்... பவ்... எனக் குரைத்து, வானை நோக்கி வாலைச் சுழற்றியபடித் துள்ளியது. பின்னர், நோர்பாவின் மணத்தைக் கண்டுகொண்டது. அவனை நோக்கிப் பந்து போலத் தாவித்தாவி ஓடிவந்தது.

ஒரு பெரிய வண்டுபோல ரீங்கரித்தபடி, ஹெலிகாப்டர் மீண்டும் சுழன்று வந்தது. “டாக்டர் தயங்குகிறார்… வேறுவழியில்லை, அவர் உடனே குதித்தாக வேண்டும்” என்றான் பாண்டியன்.
 
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், மேலிருந்து கீழே விழுந்து பனியில் புதைந்தார். “தப்பிவிட்டார்… வா” என்று சொன்னபடி பாண்டியன் முன்னால் ஓடினான்.

ஹெலிகாப்டர் மீண்டும் சுழன்றது. “நீரஜ் ஏன் குதிக்கவில்லை?” என்று நோர்பா கூவினான்.

“அவர் குதித்தால், ஹெலிகாப்டர் நொறுங்கிவிடும். அவர், அதில் இருக்கும் உணவையும் நீரையும் கீழே போட வேண்டும்” என்றான் பாண்டியன்.

ஹெலிகாப்டரின் சிறகு விந்தையாகச் சுழன்றது. அது, காற்றில் சரிந்து பறந்தது. அதிலிருந்து பொட்டலங்கள் உதிர்ந்தன. “அவர் குதிக்கமுடியுமா?” என்று கேட்டான் நோர்பா.

“பொதிகளைப் போட்டுவிட்டு குதிக்க வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை” என்றான் பாண்டியன்.  

வெள்ளி நிலம் - 14

நோர்பா, மேலே பார்த்துத் திகைத்து நின்றான். நாக்போ முன்னால் ஓடி, டாக்டர் நரேந்திர பிஸ்வாஸை அணுகி, அவர் கால்களைக் கவ்வி இழுத்தது. அவர், விழுந்த அதிர்ச்சியில் மயங்கிக்கிடந்தார். பாண்டியன் அருகே சென்று, அவரைப் பற்றி இழுத்துப் பனியிலிருந்து வெளியே எடுத்தான்.

மேலே ஹெலிகாப்டர் சுழன்று சென்று, சற்று தொலைவிலிருந்த பெரிய மலைப்பாறைமேல் மோதியது. செந்நிறத்தில் பெரிய பட்டாசு போல வெடித்தது. ஆனால் ஓசை கேட்கவில்லை. ஒரு கணம் கழித்து, வேறெங்கோ ஓசை கேட்டது. அந்த ஓசை, பல மலையுச்சிகளில் பட்டு எதிரொலித்தது. ஏராளமான முரசுகள் வரிசையாக ஒலித்து ஓய்வதுபோல தோன்றியது.

“நீரஜ்!” என்று நோர்பா கூவினான். ஹெலிகாப்டர் நெருப்பாக எரிந்தபடி விழுந்து, மலைமடிப்பில் மறைந்தது. அங்கே, அது மீண்டும் ஒருமுறை வெடித்தது. அந்த ஒளி பொழிந்துகொண்டிருந்த வெண்பனியில் பட்டபோது, பனித்திரையில் சிவந்த சாயம் படிந்ததுபோல தோன்றியது. பின்னர், கரிய புகை எழுந்து குடைபோல நின்றது.

“வா… நாம் டாக்டரைக் காப்பாற்றுவோம்’’ என்றான் பாண்டியன். நோர்பா அவரை நோக்கி ஓடினான். இருவரும் நரேந்திர பிஸ்வாஸ்ஸை இழுத்து அமரச்செய்தனர். பாண்டியன் அவரை உலுக்கினான். அவர் கண்விழித்து, “ஆ” என அலறினார்.
“ஒன்றும் ஆகவில்லை. நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்” என்றான் பாண்டியன்.

“ஹெலிகாப்டர்?” என்று கூவியபடி நரேந்திர பிஸ்வாஸ் திரும்பிப்பார்த்தார். அங்கே, அந்தப் புகை ஒரு வெண்ணிறக்குடையாக மாறியிருந்தது.

“அதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை. நாம் இங்கே உயிர்வாழ வேண்டும். அருகே, எங்காவது பனி விழாத குகை ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டும். நம் உணவையும் மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு அங்கே சென்று சேர வேண்டும். இன்னும் சற்று நேரத்தில், பொதிகளை எடுக்காவிட்டால், அவை பனியில் புதைந்துபோய்விடும்... கண்டுபிடிக்கமுடியாது” என்றான் பாண்டியன்.

டாக்டர் எழுந்து நின்றார். அவர் கால்கள் தள்ளாடின. கீழே விழுந்துவிட்டார். நோர்பா, “நாம் குகையை முதலில் கண்டுபிடிப்போம். பனி ஒர் அடி உயரத்துக்கு விழுந்தாலும் பொதிகளை நாக்போ கண்டுபிடித்துவிடும்” என்றான்.
 
அவர்கள் பனியில் முழங்கால் வரை புதைந்தபடித் தள்ளாடி நடந்தனர். பனிப்பரப்புக்கு அடியில், மென்மையான பொருக்குப்பனி விழுந்த பள்ளங்கள் இருந்தன. அதில், கால் புதையத் தடுமாறி விழுந்தனர்.    

வெள்ளி நிலம் - 14

“இந்த மலைப்பாறைகளில் நிச்சயமாக சிறிய குகைகள் இருக்கும். பனியில் குளிர்ந்த பாறைகளில் வெடிப்பு விழும். அதன் வழியாக பனி உருகி நீர் ஓடிச்செல்லும்போது, பாறைகளில் உள்ள மென்மையான உப்புகள் கரைந்துவிடும். அந்த இடம் குகைபோல ஆகியிருக்கும்” என்றான் பாண்டியன்.

பனியில் அரை கிலோமீட்டர் நடப்பதற்குள், அவர்களின் இதயங்கள் ஓசையிட்டன. உடம்பெங்கும் ரத்தக்குழாய்கள் துடித்தன. மூச்சு விடமுடியாதபடி நுரையீரல் இறுகி வலியெடுத்தது.
 
“பத்து கிலோமீட்டர்  நிற்காமல் ஓடியதுபோல இருக்கிறது.” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“பனியில் நம் உடல்கள் புதைவதால் தசைகளின் ஆற்றல் வீணாகிவிடுகிறது. மேலும், இங்கே காற்றழுத்தம் குறைவு. ஆகவே, மூச்சுக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜனும் இல்லை” என்றான் பாண்டியன்.

அவர்கள், மலைச்சரிவாக அமைந்த பெரிய பாறையைச் சென்றடைந்தனர். அது, களிமண்ணில் செய்யப்பட்டு மாபெரும் கை ஒன்றால் வழித்து விடப்பட்டதுபோல இருந்தது. அந்தக் கோடுகளில் எல்லாம் வெண்பனி வழிந்திருந்தது. கீழே, ஆழமான வெட்டுகள்போல குகைகள் தெரிந்தன. சில குகைகளுக்குள் பனி கொட்டி, வெண்ணிறக்  கூம்பு போல தெரிந்தது. அதைப் பார்க்கும்போது, இருண்ட கோயில் கருவறைக்குள் வெண்ணிறமான சிவலிங்கம் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “என்னால் நடக்க முடியாது. நான் இங்கேயே அமர்ந்துகொள்கிறேன். நீங்கள் இடத்தைக் கண்டுபிடித்த பிறகு கூப்பிடுங்கள்” என்றார்.

அவர்கள், குகைகளைப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். சில குகைகள், ஓர் ஆள் புக முடியாத அளவுக்குச் சிறியவை. ஒரு குகைக்குள் நாக்போ பாய்ந்து உள்ளே சென்று, அங்கே நின்று எம்பி எம்பிக் குரைத்தது. ‘’என்ன?” என்றான் நோர்பா
“எனக்கு இந்த இடம் போதும்… நீங்கள் வேறு இடம் பாருங்கள்” என்றது நாக்போ.

பாண்டியன் அப்பால் இருந்து, “இங்கே” என்று கூவினான். அவர்கள் அங்கே சென்றபோது, பாண்டியன் ஓர் இருட்டான குகைக்குள் நின்றிருந்தான். குகையின் வாயில் சற்று குனிந்து உள்ளே செல்லும் அளவுக்கே இருந்தது. நாக்போ உள்ளே சென்று குரைத்தபோது, உள்ளே பல இடங்களில் எதிரொலி கேட்டது.

“பெரிய குகை… சென்றுகொண்டே இருக்கிறது.” என்றான் பாண்டியன்.

நோர்பா உள்ளே சென்று நிமிர்ந்து மேலே பார்த்தான். மூன்று ஆள் உயரத்தில், குகையின் கூரை குடையின் உட்பக்கம்போல தெரிந்தது. அந்த இடம் கிட்டத்தட்ட வட்டமாக இருந்தது. அதிலிருந்து இன்னொரு குகை பிரிந்துசென்றது. அதன் வாய் இருட்டாகத் திறந்திருந்தது. நாக்போ, அதன் உள்ளே பாய்ந்து ஓடியது. அந்தக் குரைப்பொலி, உள்ளே பல இடங்களில் எதிரொலித்தது. குகையே குரைப்பதுபோல தெரிந்தது.

“உள்ளே நிறைய இடமிருக்கிறது போல தோன்றுகிறது. உள்ளிருந்து பெரிய ஆறு போல தண்ணீர் வந்திருக்க வேண்டும். அதனால்தான், இத்தனை பெரிய குகை உருவாகியிருக்கிறது” என்றான் பாண்டியன்.

நாக்போவின் குரல் மிகத் தொலைவில் மெள்ள ஒலித்தது. “நல்ல இடம். தரையும் சீராக உள்ளது. நம்மை மீட்க ஹெலிகாப்டர் வரும் வரை நாம் இங்கே தங்க முடியும்… உள்ளே குளிரும் குறைவு. பொதிகளில் எரிபொருள் இருந்தால், நாம் நம்மைக் கொஞ்சம் சூடு படுத்திக்கொள்ள முடியும்” என்றான் பாண்டியன்.

“தரை மிகவும் சமமாக இருக்கிறது” என்றான் நோர்பா.

“நீர் ஓடி ஓடி மென்மையாக ஆகியிருக்கலாம்” என்றான் பாண்டியன்.

“பொதிகளை எடுத்து வருவோம்” என்றபடி பாண்டியன் வெளியே சென்றான்.

“நாக்போ” என நோர்பா அழைத்தான். நாக்போ உள்ளே குரைத்துக்கொண்டே ஓடிவருவது தெரிந்தது. அது, வெளியே வந்து நோர்பாவை அணுகிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது.

“என்ன?” என்றான் நோர்பா

“வா… உள்ளே காட்டுகிறேன்” என்றது நாக்போ.
 
“முதலில் பொதிகளை எடுத்து வருவோம். வந்து இடத்தைக்  காட்டு” என்றான் நோர்பா.

அவர்கள் வெளியே சென்றபோது பனிப்பொழிவு வலுத்திருந்தது. பாண்டியன், “டாக்டர் நீங்கள் அந்தக் குகைக்குள் சென்று அமர்ந்திருங்கள்… ஓய்வெடுங்கள்” என்றான்.

டாக்டர் அவனைப் பார்த்துவிட்டார். “சரி... எனக்கு மூச்சுத்திணறுகிறது” என்று கூவினார்.

நாக்போ, வாலைச்  சுழற்றியபடி முன்னால் ஓடி, பனிப்பரப்பை முகர்ந்து காலால் பிறாண்டியது. அந்த இடத்தைக் கைகளால் தோண்டி, புதைந்துகிடந்த பொதிகளை பாண்டியனும் நோர்பாவும் வெளியே எடுத்தார்கள். இளமஞ்சள் நிறமான நைலான் பைகள் அவை. அவற்றுக்குள் உடையாத பிளாஸ்டிக் பெட்டிகளுக்குள் அவர்களுக்கான உணவு மருந்து, படுக்கைகள் ஆகியவை இருந்தன.

மொத்தம் எட்டுப் பொதிகள். இரண்டை எடுத்தபடி அவர்கள் மீண்டும் குகைக்கு வந்தனர். நெஞ்சு உடைந்துவிடும் அளவுக்கு வலித்தது. மூச்சு உறைந்து, பனிக்கட்டியாக நுரையீரலில் நிறைந்திருப்பதுபோல தோன்றியது.

டாக்டர் குகைக்குள் இருந்தார். “இந்த இடம் சற்று வெதுவெதுப்பாக இருக்கிறது நல்லவேளை.” என்றார்.

“பொதிகளைத் திறக்கவேண்டாம். தேவையான அளவுக்கு மட்டுமே திறக்க வேண்டும். திறந்தே வைத்தால் கெட்டுப்போய்விடும்” என்றான் பாண்டியன்.

அவர்கள் எட்டுப் பெட்டிகளையும் கொண்டுவந்து சேர்த்தார்கள். நோர்பா அப்படியே களைத்துக் கீழே விழுந்து கை கால்களைப் பரப்பிக்கொண்டான்.

நாக்போ, “நான் உங்கள் உயிர்களைக் காப்பாற்றினேன். எனக்கு தின்பதற்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டது. பாண்டியன், பொதிகளைத்  திறக்க ஆரம்பித்தான்.
 
“இந்தக் குகையை யாரோ செப்பனிட்டிருக்கிறார்கள். தரையைச் செதுக்கி, சமமாக்கியிருக்கிறார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

(தொடரும்...)

அமர்நாத் பனிலிங்கம்       

வெள்ளி நிலம் - 14

ம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கம், இந்துக்களின் முக்கியமான புனிதத் தலம். கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் உள்ளது. பனிமலைகள் சூழ்ந்த இந்த இடத்துக்குக் கோடையில் மட்டுமே சென்றுவர முடியும். இங்கே, 130 அடி உயரமான குகை ஒன்று உள்ளது. அதற்குள் ஒரு சிறிய துளை வழியாகப் பனி கொட்டி, இயற்கையாகவே ஒரு சிவலிங்கம் உருவாகிறது.

இந்தக் குகையைப் பற்றி காஷ்மீரின் தொன்மையான வரலாற்று நூல்களான ‘ராஜதரங்கிணி’ முதலியவை குறிப்பிடுகின்றன. நெடுங்காலம் மறக்கப்பட்டுக்கிடந்த இந்தக்  குகையை, 15 ஆம் நூற்றாண்டில் ஆடு மேய்ப்பவர் ஒருவர் மீண்டும் கண்டுபிடித்தார். இப்போது, ஆண்டுக்குச் சராசரியாக 5 லட்சம் பேர் இந்தக் குகைக்குச் சென்று வழிபடுகிறார்கள்.