
வீரயுக நாயகன் வேள்பாரி - 33
குறுவழியில் உள்நுழைந்து புதுநிலப்பகுதியைப் பார்த்த கணத்தில் மெய்மறந்து நின்றான் முருகன். பெருவட்ட வடிவில் மலைகள் சூழ்ந்திருந்தன. உயர்ந்து நிற்கும் அடர்மரங்களைக்கொண்ட அந்த மலைவளையத்தின் நடுவே பரந்து விரிந்த நிலப்பரப்பு. அந்நிலப்பரப்பு முழுவதும் கழுத்தளவிற்கு விளைந்து நிற்கும் புல்வெளி. பார்க்கும்தோறும் அதன் அழகு பெருகிக்கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தான். சூழலில் மிதக்கும் மனம் மெல்லிய மயக்கத்தை ஏற்படுத்தியது.
“இந்த அழகைவிட்டுப் பார்வை பிரியாது” என்றாள் வள்ளி.
குரல் கேட்டுத் திரும்பாமலே முருகன் கேட்டான், “புலனறிய முடியாத மயக்கம் சூழ்கிறது. என்ன இருக்கிறது இவ்விடத்தில்?”

“நமது கண்களுக்கு முன்னால் விளைந்து நிற்பது நரந்தம் புல். இதன் நறுமணம் யாரையும் மயக்கிவிடும். மயிலம் மலர் போலத்தான் இதுவும் காயக்காய நறுமணம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். காய்ந்த சருகுகள் வெளிப்படுத்தும் வாசனைக்கு அளவேதுமில்லை. நீலக்கடலுக்குள் உப்பு தேங்கிக்கிடப்பதைப் போல, இந்நரந்தம் புல்வெளியில் நறுமணம் தேங்கிக் கிடக்கிறது.”
சொல்லியபடி முருகனின் கைப்பிடித்து புல்வெளிக்குள் நுழைந்தாள் வள்ளி. புற்களைக் கையால் விலக்கி, காலால் மிதித்து நடக்கையில் கிளர்ந்த நறுமணம் இருவரின் மனத்தையும் மயக்கிச் சுழற்றியது. ஏற்கெனவே உட்கொண்டிருந்த அன்னமகிழரிசி உள்ளுக்குள் மலர்த்தலைத் தொடங்கியது. உடலும் மனமும் காற்றாய் மிதக்க காதல் கனிவாய் உருகி மனமாய் பெருகியது.
அவர்களின் பார்வைக்குமுன் பறவைகளும் விலங்கினங்களும் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்தபடி இருந்தன. பார்வையில் கடக்கும் அவற்றின் மீது எண்ணங்கள் நிலைகொள்ளவில்லை. மயக்கத்தின் முழுநிலையில் இருந்தான் முருகன். ஆனால் காதலின் துடிப்பு உள்ளத்தில் விசையைக் கூட்டியபடி இருந்தது.
முருகனின் ஆழ்மனம் விழித்திருந்தது. ‘இது வெறும் மயக்கம் என்றால், நாம் எப்பொழுதோ நினைவைத் தவறவிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் நினைவிருக்கிறது. மயங்கிய மனம் காதலைத்தவிர, வேறெதிலும் நிலைகொள்ள மறுக்கிறது, என்ன நிகழ்கிறது இங்கு?’
வள்ளி கைப்பிடித்து முருகனை அழைத்துச்சென்றாள். மயக்கம் தெளியத் தெளிய ஆழ்மயக்கத்துக்குள் அவர்கள் நுழைந்தனர். புல்வெளியின் நடுவில் இருந்த சிறுமேட்டில் அமர்ந்தாள் வள்ளி. அமர்ந்த கணம் அவள் மடிதனில் சாய்ந்தான் முருகன்.
தனது மடியில் அவன் முகம் ஏந்தியபடி எதையோ சொல்ல வாயெடுத்தாள். சொல்லின்றி அமைதியானாள். அவள் முகம் பார்த்த முருகனுக்கு எல்லாம் புரிந்தது. ‘கணநேரம் ஏழிலைப்பாலையின் அணுக்கத்தில் நிறுத்தி மலரவைத்தேன். நீயோ காலம் முழுவதும் மலரவைக்க வழிசெய்கிறாய். நிலமகள் நீ. உனது ஆற்றல் எனைநோக்கிக் கடத்தும் ‘காதல்’ எதிர்கொள்ள முடியாததாக இருக்கிறது; உள்நுழைந்த நறுமணமாய் உனக்குள் மறைகிறேன் நான்.'
நறுமணம் சூல்கொண்டிருக்கும் கருப்பைதான் அம்மலைக்குடுவை. அதன் நடுவில் இருந்த சிறுமேட்டில் வானம் பார்த்துப் படுத்திருந்தனர் இருவரும். நிறையிருள்கொண்டு வானம் கருத்திருக்க எங்கும் விண்மீன்கள் ஒளிவீசின.
காதலில் தெளியும்பொழுதுதான் மயக்கத்தின் ஆழம் புரிகிறது. ஆழத்தை அறியும்பொழுதுதான் அது அறியமுடியாத இடமென்ற உண்மை உரைக்கிறது. அன்னமகிழரிசி உடலை மலர வைத்தது. நரந்தம் புல் மனதை மலரவைத்தது. வள்ளியின் அணுக்கம் மலர்தலில் வாழவைத்தது.
வள்ளி சொன்னாள், “இவ்விடத்தில் இணையோடு இருக்கும் உயிரினங்கள் மட்டுமே தங்க முடியும். நரந்தம் புல் கிளர்த்தும் மனவெழுச்சி தனித்த உயிரினத்தை விரட்டிவிடும். பறவைகளும் விலங்கினங்களும் நீங்காத மயக்கம்கொண்டு காதலில் திளைத்திருக்கின்றன.”
“பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன். புலிகளுக்குமுன் இணைமான்கள் மலர் உண்ணுகின்றன. மான் உண்ணாத மலரில் வண்டுகள் நிலைகொள்கின்றன. ஆண்மலரின் மகரமும் பெண்மலரின் சூலகமும் இதழின்றி மலர்கின்றன. இவ்வியப்பு வேறெங்கு நிகழும்?”
விண்மீன்களைப் பார்த்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு நகர்தலற்று நிலைகொண்டிருந்தது. முருகனின் கண்கள் வானத்தைப் பார்த்து, குறிப்பிட்ட விண்மீன் கூட்டத்தையே உற்றுநோக்கின.
“வளைந்தோடும் ஆறுபோல இருக்கும் அவ்விண்மீன் கூட்டத்தைப் பார்” என்றான் முருகன்.
“எங்கே?” என்று கேட்டபடி வள்ளியின் கண்கள் தேடின. விரல் நீட்டி அதன் வளைவுகளைச் சொல்லிக்கொடுத்தான். ஆறு புள்ளிகள் வளைவுகொண்டு மின்னின. நீண்டநேரம் அதனையே பார்த்தாள் வள்ளி.
முருகன் செங்கடம்பின் மாலை அணிந்தபடி படுத்திருந்தான். வள்ளியின் மேனியெல்லாம் அதன் மனம் வீசியபடி இருந்தது. மாலையில்லாத தனது உடலில் மணக்கும் செங்கடம்பின் வாசனையை நுகர்ந்தபடி இடப்புறம் திரும்பினாள். முருகனின் மேனியில் உதிராத இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி புன்னைகையோடு சொன்னாள். “மாலை மார்பன்.”
மனதுக்குள் பொங்கும் காதலோடு முருகன் சொன்னான் “மாமலர்க் கோதை.”
கூடிய வெட்கத்தோடு குழைந்து சொன்னாள், “அழகின் வடிவு நீ.”

இதழ் முத்தம்போல வாங்கியவற்றையே வழங்கினான், “வடிவின் அழகு நீ.”
சிதறிய சிரிப்போடு மீண்டும் தலைசாய்த்து விண்ணைப்பார்த்தாள். சொல் சுழல பொருளும் சுழன்றது. செங்கடம்ப மாலை இப்பொழுது வள்ளியின் மேல் படர்ந்திருந்தது. இமை சொருகினாள்.
“அவ்விண்மீன்களின் வளைவை என்மீது சுற்றுவதுபோல் இருக்கிறது உனது விரல்களின் தொடுதல்.”
முருகனின் மூச்சுக்காற்று மட்டுமே மறுமொழியாய் இருந்தது.
காற்றிலே வந்த மறுமொழி கண்டு வள்ளி சொன்னாள், “அனலெரியும் காதல் ஒளியுருக்கி ஊற்றுகிறது. அச்சம்கொள்ளவைக்கும் அணைப்பு.”
அணைப்பு நீங்கி முருகன் மொழிந்தான், “மலைமகள் அச்சம் காணாள்.”
மூடிய இமை திறக்காமலே சொன்னாள், “வேலன் மிச்சம் காணான்.”
சொல்கிளர்த்தும் மகிழ்வோடு சொன்னான், “காதலில் நான் வேலன் அல்ல.”
“வேட்டையில் மறைந்து கொள்வது உனக்கு புதிதல்ல.”
வள்ளியின் சொல்லுக்கு மறுசொல் வரவில்லை.
சிலகணம் கழித்து முருகன் சொன்னான், “நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன். எனை நீ கண்டறியாதே.”
“சரி, ஆனால் என்னைக் கண்டறிய உன்னைப் பின்தொடர்வேன். மறைப்புகள் விலக்கி உன்னுள் புதைந்தெழுவேன்.”
பதிலின்றி இருந்தான் முருகன். அதுவே பதிலாய் அமைந்தது. மறைதலும் தேடலும் கார்காலம் முழுவதும் தொடர்ந்தன. புதைந்தவள் மீண்டாள்; மீண்டவன் புதைந்தான். மேகத்தில் தூசி மாறி தும்மல்கொண்டது. பின்னர் கூடும் முகில்களின் கொட்டம் தொடங்கியது. வேப்ப முத்து அளவினைக்கொண்ட மழைத்துளிகள் கொட்டித்தீர்ந்தன. ஒவ்வொரு துளி நீருக்குள்ளும் நரந்தம் புல்லின் மணம் மேலேறியது. மணமேறிய நீரின் துளிகள் வள்ளிமுருகனின் வாசனையைக் கொண்டிருந்தன.
புல்வெளியின் பெரும்பரப்பைச் சுற்றியிருந்த மலைமுகடுகளில் எண்ணிலடங்காத பூக்கள் பூத்துக் குலுங்கின. கொடிமலர்களும் கொத்து மலர்களும் வண்ணம்வீசி வளைய வந்தன. வேங்கை மரத்தின் கொத்துப்பூக்கள் கரும்பாறையெங்கும் கொட்டிக்கிடந்தன. உதிரவேங்கையும் மணிமுத்து வேங்கையும் பூத்தவேங்கையும் பாயாவேங்கையும் கொட்டும் மழைத்துளிக்கு இணையாக பூக்களைச் சொரிந்தன.
நெருப்பையொத்த எறுழம்பூக்களும் சிறுவட்ட இதழ்கொண்ட எருவைப்பூக்களும் வெண்ணிறக் கூதாளிமலரும் பருத்து பேரழகோடு மலரும் புழுகுப்பூக்களும் சூல்வட்ட மலையை வண்ணக்குவளையாக மாற்றின.
கொட்டும் மழையில் பாறைக்குகைகளில் இருந்த முருகனும் வள்ளியும் மழை நின்ற பொழுதுகளில் நரந்தம் மேட்டில் வந்தமர்வர். மழை நின்ற இரவுகளில் வெளிர்வானில் மின்னும் விண்மீன்களின் அழகு சொல்லிமாளாது. முருகனின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன.
வளைந்து கிடக்கும் ஆறு புள்ளிகொண்ட அந்த விண்மீன் கூட்டத்துக்குள் நிலவு சிக்கியிருந்தது. விண்ணில் தெரியும் வியத்தகு ஒளி இணையாய் அது இருந்தது. அவ்விணை கூடியதும் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து நிலம் நோக்கிச் சரிந்தன. கொட்டும் மழை பொழிய விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளியின்றி இருந்ததால், ஊற்று கசிவதைப்போல மேகத்திலிருந்து உருகி மண்ணில் ஓடியது மேகநதி.
எத்தனை பகலிரவு இப்படிக் கடந்ததெனத் தெரியாது. மேகம் விலகிய நள்ளிரவுகளில் முருகனின் கண்கள் ஆறு விண்மீன் கூட்டத்தைக் கடந்து பயணிக்கும் நிலவின் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தன.
ஓர் அதிகாலை மழைநின்றவுடன் குகைவிட்டு வெளிவந்த வள்ளியின் கண்களில் முதலிற்பட்டன பூத்து நின்ற செங்காந்தள் மலர்கள். செவ்வொளி வீசும் ஆறு இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி முருகனை அழைத்துக் காண்பித்தாள்.
“அவ்விண்மீன் கூட்டத்தின் சுடர்போல் இம்மலர் ஆறு இதழ்களைக் கொண்டுள்ளது” என்றாள்.
செவ்விதழ்களை உற்றுப்பார்த்தான் முருகன். இதழின் அடியில் இளம்பசுமை நிறமிருந்தது. நடுவில் மஞ்சள் மேவி பின்னர் வெண்மையில் கரைந்தது. மேற்பகுதி இளஞ்சிவப்புப் பூண்டுமுனை அடர்சிவப்பாய் மிளிறியது. இதே நிறவாகு அவ்விண்மீன் கூட்டத்தில் உள்ளதை முருகனின் கண்கள் பல இரவுகளில் பார்த்துள்ளன.
“ஆறுவிண்மீனின் அதே குணம் இம்மலரின் ஆறு இதழ்களிலும் இருக்கின்றன” என்றான் முருகன். “அப்படியா!” என்று அவள் கேட்பதற்குள் சொன்னான், “இந்நிறங்கள் அனைத்தையும் காதலில் திளைக்கும் வேளையில் உன்னிடமும் கண்டுள்ளேன்.”
வியப்புற்று வள்ளி கேட்டாள், “நீ விண்ணைக் காணும்பொழுதும் என்னைத்தான் கண்டாயா?”
“நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?”
சொல்லியபடி செங்காந்தள் மலர்பறித்து வள்ளியின் கூந்தலிற் சூட்டினான். அடர்வானம்கொண்டு கொட்டித் தீர்த்த கார்காலத்து அடைமழை விலகத் தொடங்கியது. விரிவானம் மேகமற்று மிதக்க, அவ்விண்மீன் கூட்டம்விட்டு நிலவு நகர்ந்தது.
நரந்தம் புல் பரப்பில் இருந்து விலகத்தொடங்கினான் முருகன். செங்காந்தள் சூடியபடி அவனுடன் நடந்தாள் வள்ளி. புது இடம் நோக்கி அவளை அழைத்துச்சென்றான் முருகன்.
மலையுச்சியிலிருந்து அடிவாரக் காட்டுக்கு கீழிறங்கி வந்தனர். அடைமழையின் கூதிர்ப்பருவம் முடிந்து முன்பனி தொடங்கியது. நடுக்கம் அதிகமாகும் முன்பனிப்பொழுதில் தங்குவதற்குக் கொன்றை மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடுக்கினைப் பயன்படுத்தினான். குளிர் சற்றே குறையும் பின்னரவில் படுத்துறங்க கருங்கொன்றையின் உச்சியில் பரண் அமைத்தான்.
பனி நடுக்கம் தாளாமல் முயல்கள் கொன்றை மரயிடுக்கில் பதுங்கின. அவ்விடுக்கின் உள்ளே கால்களை இறுகணைத்து அமர்ந்திருந்தாள் வள்ளி. வள்ளியின் கணப்பில் அண்டின முயல்கள்.
இரைதேடி வேட்டைக்குப் போன முருகன் திரும்பி வந்தபோது வள்ளியின் கணப்பில் முயல்கள் அண்டியிருப்பதைப் பார்த்தான். நீள்காது அசைய அவை வள்ளியை நோக்கித் திரும்பின. வள்ளியின் முகத்தில் புன்முறுவல் இருந்தது.
முருகன் முயல்களைப் பார்த்து சொன்னான், “அவ்விடம் அணையாதீர்கள். பின்னர் ஒருபோதும் விலகமாட்டீர்கள்.”
சொல்லுக்குள் பொறாமை வெளித் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் பார்வையே அதனைச் சொல்லியது. அதன்பிறகுதான் சில முயற்குட்டிகள் வள்ளியின் மேலேறிப் பதுங்கின.
நீண்ட கொன்றைக்காயின் விதைகளை ஒருபக்கம் துளையிட்டு எடுத்துவிட்டு இசைபாடும் குழலாய் மாற்றினான். பொழியும் பனியின் ஊடே பரணில் படுத்தபடி நகரும் ஆறு விண்மீன்களைப் பார்க்க அவன் தவறுவதில்லை.

குருவிக்குஞ்சுபோல் வெண்மை திரண்டு பூக்கும் முன்பனியின் புதுமலரான ஈங்கை மலர் பறித்து வள்ளியின் கூந்தலில் சூட்டிய நாளன்று அவன் காடுவிட்டு வெளியேறப் போகிறான் என அவளுக்குப் புரிந்தது.
கீழுதடு நடுங்கும்படி பின்பனி கொட்டும் அந்த நாட்களில் அவனோடு வயல்வெளியின் ஊடே நடந்து வந்தாள் வள்ளி. தவளைச் சத்தம் விடாது கேட்க, மூக்கெங்கும் ஈரப்பதம் ஏறியிருந்தது. தாமரை படர்ந்துகிடக்கும் குளக்கரையில் மருதமரத்தின் மீது பரண் அமைத்தான்.
“எங்கு போனாலும் பரண் மீதே தங்குவதேன்?” எனக் கேட்டாள் வள்ளி.
“இது காதல் வாழ்க்கை. தரையில் தங்கினால் இறுகிய நிலத்தில் கூடலின் வளம் முழுமை கொள்ளாது. வானில் மிதந்தால் கூடலின் இறுக்கம் வலிமை கொள்ளாது. இரண்டும் கலந்த பரணில்தான் நிலம் அசைய, வான் நகர, நடுவில் நாம் மூன்றிலும் கலப்போம்.”
அதன்பின் மறுமொழி சொல்ல ஒன்றுமில்லை வள்ளிக்கு.
பகலும் இரவும் பரண்மேல் மலரும் காதல் கண்டு பறக்கும் நாரைகள் இறகுதிர்த்துப் போயின. காற்றில் மிதந்துவரும் வெண்சாம்பல் இறகுகளைச் சேகரித்து, கொடிகொண்டு முடிச்சிட்டு வள்ளியின் தலையில் மகுடமெனச் சூட்டினான் முருகன்.
“காலநேரமின்றி மிதந்து கொண்டிருக்கிறேன். இதில் நாரைகளின் இறகுகளை தலையில் அணிவித்தால், பறத்தல் நிறுத்தி ஒருபோதும் தரையிறங்காமல் போவேன்” என்றாள் வள்ளி.
“உனது அணைப்பில் மீளமுடியா மயக்கத்தில் கிடந்த எனக்கு, அன்னமழகியரிசி கொடுத்து உடலையும், நரந்தம்புல் கொண்டு மனதையும் தெளிவடைய முடியாத திகைப்பில் வீழ்த்தினாயே, அதைவிடவா?”
முருகனின் வினாவிற்கு விடையேதும் சொல்லவில்லை வள்ளி. இக்கைமாறில்தான் காதல் கனல் நீங்கா வெக்கை கொள்கிறது. அணுக்கள்தோறும் துடிப்படங்கா தவிப்பு கொள்கிறது.
தவிப்பு நீங்கா அதிகாலையில் பின்பனிப் பருவத்துப் புதுமலரான கமுகின் சிறு பூ எடுத்து வள்ளிக்குச் சூட்டினான். வயல் தாண்டி கடல் நோக்கி புறப்பட்டனர் இருவரும்.

கடற்காற்று மேலேறி வந்து தாழை மரங்களுக்கு இடையில் கட்டிய ஊஞ்சல் பரணை ஆட்டிவிட்டுச் சென்றது.
பரண்மீது ஆடிக்கொண்டே வள்ளி சொன்னாள், “கரையில் இருந்தும் அலையில் மிதக்கிறோம்.”
“மலையிலும் காட்டிலும் வயலிலும் நாம் மிதக்கத்தானே செய்தோம்.”
“ஆனால் இப்பொழுதுதான் உப்பேறிய காற்று உடல் தழுவிச்செல்கிறது. இளவேனில் ஒளிக்கதிர்களால் உடல் சுடுகிறது. இவை அனைத்தும் இவ்வளவு நாளும் உள்ளுக்குள் மட்டுமே நிகழ்ந்தன” சொல்லி மகிழ்ந்தாள் வள்ளி.
இருவரும் ஆடும்பரணில் படுத்தபடி கடல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
நீண்ட நேரத்துக்குப் பின் வள்ளி கேட்டாள், ``கடல் ஏன் கரையோடு நிற்கிறது?”
“கரை மீது கொண்டுள்ள காதலால்.”
மறுமொழி அவளை ஏதோ செய்தது. சட்டென அவனை நோக்கித் திரும்பியபடி கேட்டாள். “அப்படியென்றால், இவ்வளவு தழுவல்கொண்ட காதலர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?” கேள்வி கேட்ட கணத்திலே மனம் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் திணறியது.
முகக்குறிப்பறிந்து முருகன் கேட்டான், “என்ன ஆனது?”
சொல்லமுடியாமல் திணறிய வள்ளியை முருகனின் கைகள் சூழ்ந்தபோது கடலும் கரையும் பரணில் இருந்தன.
இரவு நெடுக அலைகளின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததது. அவ்வப்பொழுது தெறித்த நீர்த்துளிகள் காற்றில் வந்தன. விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த அவர்களது நாவிலிருந்து சுடுமீனின் வாசனை விலகவேயில்லை.
இளவேனிற்காலத்துச் சுடுவெயில் உச்சத்தில் இருந்த பொழுது, கடற்கரை மணல்வெளியில் முள்ளி மாமலர் பூக்கத் தொடங்கியது. அந்நீலநிறப் பூவைப்பறித்து பரண் நோக்கி முருகன் வந்தான். அவள் பாலை நிலம் நோக்கிப் புறப்பட ஆயத்தமாக இருந்தாள்.

கொடும்பாலையில் அளவில்லாத தொலைவு நடந்தனர் இருவரும். வற்றிய சுனையில் ஒளி மேவிக்கிடந்தது. பறந்து கடக்கும் கழுகுகளின் நிழல்கள் மட்டுமே மண்ணில் ஊர்ந்தன. வள்ளியின் பாதங்களில் கொப்பளங்கள் பூத்தன. ஆனாலும் விடாது நடந்தாள். பாலை நிலத்தின் பின்கோடை வெயில் எண்ணிலடங்காத தாவரங்களை மலரச்செய்கிறது. சுட்டெரிக்கும் மண் மீது ஏதோ ஒரு மூலையில் சிறுமலரொன்று இதழ் விரித்திருப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் வள்ளியின் முகம் மலர்ந்தது.
அழிச்சியும் அலரியும் சுள்ளியும் எருக்கும் இங்குமங்குமாகப் பூத்திருந்தன. இரும்பைப்பூவின் இனிப்பு பறவைக்கூட்டங்களை ஈர்த்தது. வேப்பம் பழத்தைத் தின்ற கைப்புச்சுவை மாற வெளவால்கள் இலும்பை மரத்தைவிட்டு நீங்காமற் கிடந்தன. பொன்நிற தனிப்பூவை கோங்கு உதிர்த்தபொழுது அணிலின் முதுகின் மேல் இருக்கும் வரிகளைப் போன்ற ஊகம்பூவும் இணைந்தே கிடந்தது.
எப்பொழுதோ வீசும் காற்றில் பறக்கும் மலர்கள் மீண்டும் மண் தொடும்போது சருகின் ஓசையுடனேயே சரிந்தன. மண்ணும் மரமும் காற்றும் சுடுவெயில் ஏந்தி நின்றன. ஏந்திய வெயிலின் இறங்காத சூடு மண்ணெங்கும் நிலைகொண்டது. வலிமையிழந்த புலிகள் பதுங்கிய இடத்தைவிட்டு எழ முடியவில்லை. நீரின்றி அலைந்த செந்நாய்களின் கால்தடங்கள் மட்டுமே மிஞ்சின. எப்புறமும் சுடுவெயில் சூழ்ந்த பாலையின் நடுநிலம் நோக்கி நகர்ந்தனர் வள்ளியும் முருகனும்.
வள்ளியின் உதடுகள் வெப்பக்காற்றில் வெடித்துக்கிடந்தன. முதுவேனிலின் சுடுபழத்தைச் சுவைத்து உண்டதன் அடையாளங்கள் அவை. எங்கும் பட்டமரங்களே நின்றிருந்தன. சிறுபாறையோரம் தனித்திருந்த வாகை மரத்தின் மீது பரண் அமைத்தான் முருகன்.
பகல் மங்கியபொழுது பரணேறிச் சாய்ந்தனர் இருவரும். இரவானதும் வானமும் சுடுமோ என்று அஞ்சவைத்தது பகலின் நினைவு. முருகனின் கண்கள் விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. வளைவுகொண்ட அந்த ஆறு விண்மீன்களும் வானில் தெரியவில்லை.

“அவை வான்விட்டு எங்கு போயின?” எனக்கேட்டாள் வள்ளி.
“எந்த ஒரு வளைவிலும் மறைவுகள் இருக்குமல்லவா? அதேபோல அந்த ஒளி வளைவின் மறைவிடத்தில் நாம் இருக்கிறோம். அதனால் பார்வையில் இருந்து தப்பியுள்ளது” என்றான் முருகன். அதன் பிறகு அது பற்றி அவள் கேட்கவில்லை.
அவை தவிர்த்து எண்ணிலடங்காத விண்மீன்கள் வான்வெளியைப் பூக்காடாய் மாற்றியிருந்தன. எங்கும் சிதறிக்கிடக்கும் வான்பூக்களைப் பார்த்தபடி வள்ளி கேட்டாள், “மழை கொட்டித்தீர்த்த கார்காலத்தில் நிலமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன் பிறகு இம்முதுகோடையில்தான் எண்ணிலடங்காத பூக்கள் பூக்கின்றன. மற்ற பருவங்களில் இவ்வளவு பூக்கள் பூக்கவில்லையே ஏன்?”
முருகனின் முகத்தில் மெல்லிய சிரிப்பொன்று ஓடி மறைந்தது. அவன் சொல்லப் போகும் மறுமொழிக்காக காத்திருந்தாள். மறுமொழியேதும் வராமல் நேரம் கடந்தது.
முருகனின் சிந்தனை வேறெங்கோ இருக்கிறது என நினைத்த வள்ளி தனது கேள்வியில் இருந்து எண்ணத்தை விலக்கினாள்.
சற்று பொழுது கடந்து முருகன் சொன்னான், “எல்லாவற்றிற்கும் காரணம் ஆறு விண்மீன் கூட்டம்தான்.”
முருகனின் விடை எதிர்பாராததாக இருந்தது. திகைப்புற்ற வள்ளி கேட்டாள், “எப்படி?”
“அந்த ஆறுவிண்மீன் கூட்டத்தோடு நிலவு இணைந்திருந்த காலத்தில்தான் கார்மேகங்கள் வானம் எங்கும் நிறைந்திருந்தன. பெருமழை விடாது கொட்டித்தீர்த்தது. அதேபோல அந்த ஆறு விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இணைந்திருக்கும் இக்காலத்தில் சுடுவெயில் தீயென விடாது பொழிகிறது. நீரும் ஒளியும்தான் மலரென வடிவம் கொள்கின்றன. அதனால்தான் பிறகாலங்களைவிட இவ்விரு காலங்களிலும் மலர்கள் அதிகமாக மலர்கின்றன. இம்மலர்தலுக்கு காரணம் வளைவுகொண்ட அந்த ஆறுவிண்மீன்கள்தான்.”
முருகனின் விடை முற்றிலும் புதிதாய்த் தோன்றியது. அதனை உள்வாங்கி மறுவினா தொடுக்க சற்று நேரமானது. அவள் கேட்டாள், “அவ்விண்மீன் கூட்டத்தோடு நிலவு இருந்ததை நாம் பார்த்தோம். இப்பொழுது கதிரவன் அக்கூட்டத்தோடு இருக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
“விண்மீனின் நகர்வுகளைக் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். வானின் ஒவ்வொரு பகுதியிலும் அது நகர்ந்து செல்லும் வழித்தடம் எனது மனக்கண்ணில் இருக்கிறது. இப்பொழுது அவற்றோடு இணைந்தே கதிரவன் பயணிக்க வேண்டும். பகல் பயணம் அது. அதனால்தான் இரவில் அவ்விண்மீன் கூட்டம் நம் கண்களுக்குத் தெரியவில்லை. காலச்சுழற்சியின் பாதை அதுவே.”
பதிலுரையால் உறைந்து நின்றாள் வள்ளி. அடுத்த சொல் சொல்ல நா எழாமல் இருந்தது. அதனைக் கவனித்தபடி முருகன் சொன்னான், “உனது முதுகுப்புறத்தை நீ பார்க்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் உன்னால் உணரமுடியும் அல்லவா? அதுபோல்தான் இதுவும்.”
இவ்வுவமைக்குப்பின் சொல்ல எதுவும் இல்லை என்று தோன்றியது. ஆனால் இவ்வுவமையே பல சொற்களைச் சொல்லவும் தூண்டியது. வேண்டாம் என்று கட்டுப்படுத்தினாள் வள்ளி. ஆனாலும் உருக்கொண்ட வார்த்தைகள், தனக்குத்தானே ஒருமுறையாவது சொல்லிக்கொண்டால் மட்டுமே அமைதிகொள்ளும்.
“எல்லா அணைப்புகளிலும் சூழ்ந்த உனது கைகள் எனது முதுகினையே பற்றியது. காதல் அதனால்தான் இவ்வளவு வெக்கை கொண்டுள்ளதா? சுட்டெறிக்கும் அனல், காதலைவிட்டு எப்பொழுதும் நீங்காமல் இருப்பது அதனால்தானா?” சொற்கள் வேள்விகளாய் உருத்திரண்டபடி இருக்க, அனைத்தையும் விழுங்கிவிட்டு ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டாள், “எல்லா இரவுகளிலும் வான்நோக்கி பரண் அமைத்தது காதலில் மூழ்கத்தான் என நினைத்தேன். ஆனால் காலத்துள் மூழ்கத்தான் அதனைச் செய்தாயா?”

அழகிய சிரிப்போடு முருகன் சொன்னான், “நான் காலத்துள் மூழ்கும்போதெல்லாம் காதலுக்குள்தான் மூழ்கினேன். காதல்தானே காலச்சுழற்சியின் அடையாளம். நிலவும் கதிரும் இயற்கைக்குப் பாலூட்டும் இருமார்புகள். கருணையும் காமமும் சமமாய்ச் சுரக்கும் அவ்வழகிய தனங்களைவிட்டு நான் எக்காலமும் அகலாமல்தானே இருந்தேன். அணைப்பு நீங்காமல் அதனை அறிந்தவள் நீதானே.”
சொல்கிளர்த்தும் காதல் உடலெங்கும் பொங்க, செய்வதறியாமல் நின்றாள் வள்ளி. அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தியபடி முருகன் சொன்னான், “கார்மேகம் மழையைக் கொட்டித் தீர்ப்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் அவ்விண்மீன் கூட்டமே காரணம். எனவே அதனைக் கார்த் தீ என அழைக்கலாமா?”
“உனது கைகள் எனது முகமேந்திய கணத்தில் உடலெங்கும் கார்காலக் குளுமை பரவியது. ஆனால் அணைக்காமல் விலகி நிற்கும் இவ்விடைவெளியில் பாலைத் தீ பற்றி எரிகிறது” வள்ளி வார்த்தையை முடிக்கும் முன்னே இறுக அணைத்தான் முருகன். கார்காலக் குளுமையின் மீது பற்றியெறிந்தது தீ. கார்த் தீ!
- பறம்பின் குரல் ஒலிக்கும்...