மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா!

கடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

ஒரு நாள் கே.பி. ஃபிலிம்ஸ் பாலுவும் சத்யராஜும் வீட்டுக்கு வந்தார்கள். சத்யராஜை வைத்து ஒரு படம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார் பாலு. அவருக்குக் கடமைப்பட்டவனாச்சே? அவருக்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

மிகப் பெரிய தென்னந்தோப்பு உரிமையாளர். அவரிடம் வேலை செய்யும் கூலி விவசாயிகள். கூலி விவசாயிகள் கடன் கேட்டால், ஏதாவது அடமானப் பொருளைத் தந்தால்தான் கடன் தருவது என்பது அந்த உரிமையாளரின் பழக்கம். நிலமோ, நகையோ அடமானம் வைக்காமல் பணம் தரமாட்டார். தன் கணவருக்கு வைத்தியம் பார்க்கக் கடன் கேட்டு வருகிறார் சுஜாதா. அடமானம் வைக்க என்ன இருக்கிறது என்கிறார் எஜமான். அந்த ஏழைப் பெண்ணிடம் எதுவுமே இல்லை. ஆனால், தன் கணவனின் உயிரை எப்படியாவதுக் காப்பாற்றியாக வேண்டும். ‘குழந்தையை அடமானம் வைக்கிறேன்’ என்கிறாள். ஆனால், குழந்தையும் அவளிடம் இல்லை. ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை அடமானமா வெச்சுக்கிட்டு பணம் கொடுங்க’ என்கிறாள். ‘என்னம்மா இப்படி கேட்கிறே?’ என அந்த முதலாளியும் இரக்கப்பட்டுப் பணம் கொடுக்கிறார்.

கடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா!

ஆனால், கணவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஊரில் பிழைக்கவும் வழியில்லை. பெற்ற பிள்ளையை ஓர் அதிகாலையில் எஜமானரின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறாள். அந்தக் குழந்தைதான் சத்யராஜ். இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கதை.சுந்தர்.சி இயக்கத்தில், ‘அழகர்சாமி’ என்ற பெயரில் படம் வெளியானது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அந்தப் படம் உருவாகவில்லை. உருக்கமான காட்சிகள் எதிர்பார்த்தபடி இடம்பெறவில்லை.

டி.ராமா நாயுடு, பிரமாண்டப் படங்கள் எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட். அவருக்கு நான் ஒரு படம் இயக்கிக் கொடுத்தேன். வெறும் ஏழு லட்ச ரூபாய் பட்ஜெட். படம், ‘சிவப்பு நிறத்தில் சின்னப்பூ’.

ரேகா கதாநாயகி. கண்டசாலாவின் மகன் ரத்னகுமார் ஹீரோ. வில்லனாக நடித்தவர், நடிகர் விக்ரமின் தந்தை வினோத். கணவனைக் கொன்றதாகப் பழி சுமத்தி ரேகாவைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். ரேகாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த பையனுக்குப் பத்து வயது. அவன் தங்கைக்கு ஆறு வயது. அம்மா அடைபட்டிருக்கும் சிறையின் சுவர் அருகே அந்தப் பிஞ்சுக்குழந்தைகள் வந்து, ‘அம்மா... அம்மா...’ என அழும். சிறையில் இருக்கும் அம்மா, அங்கிருந்து குழந்தைகளின் பெயர் சொல்லி அழுவார். அந்த இடத்தில் ஒரு பாடல் ஒலிக்கும். ஜெய்சேகர் இசையில் முத்துலிங்கம் எழுதிய பாடல் அது.

‘‘கண்ணின் மணிகள் ரெண்டும் வாட...
கங்கை நதியும் கண்ணில் ஓட...’’

அம்மாவைப் பார்க்க, அந்த இரண்டு பிஞ்சுகளும் வாரத்துக்கு ஒரு முறை சிறைச்சாலைக்கு வருவார்கள். ஒருநாள் அந்தச் சிறுவன் மட்டும் வருகிறான். ‘‘தங்கை எங்கே?’’ என்கிறார் தாய். பையில் இருந்து தங்கையின் அஸ்தியை எடுத்துக் கொடுக்கிறான். தங்கை எப்படி இறந்தாள் என்ற ஃப்ளாஷ்பேக் ஓடும். சிலரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ‘பட்ட காலிலே படும்’ என்பதுபோல.

அப்போது புழல் சிறைக் கட்டுமானப் பணி முடியும் நிலையில் இருந்தது. அந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் அங்குதான் நடந்தது. காலை ஐந்து மணிக்கெல்லாம் அங்கே போய்விடுவோம். மாலை திரும்புவோம். 25 நாள்கள் ஷூட்டிங். ரேகா மிக அருமையாக நடித்திருந்தார். எல்லோருமே அதைக் கலைப் படம் என்பதை உணர்ந்து, குறைந்த சம்பளத்தில் நிறைவாக நடித்துக்கொடுத்தனர்.

கடைசியில் அந்தச் சிறுவன், தன் தந்தையைக் கொன்றவரைப் பழி தீர்த்துவிட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போய்விடுகிறான். அப்போது ‘நிரபராதி’ என ரேகா ரிலீஸாகி வருகிறார். தன் மகன் இருக்கும் சீர்திருத்தப்பள்ளியின் சுவர் அருகே வந்து, மகன் பெயரைச் சொல்லி அழுகிறார். மகன் இப்போது உள்ளே இருந்து ‘அம்மா... அம்மா...’ எனக் கதறுகிறான். மீண்டும் அந்தப் பாடல் ஒலிக்கும்.

படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டனர். தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குநர்கள் தாசரி நாராயண ராவும் ராகவேந்திர ராவும் முதலில் படத்தைப் பார்த்தனர். தாசரி சொன்னார்: ‘‘படம் பிரமாதமா வந்திருக்கு. ஆனா, ராகவேந்திர ராவ் இப்ப ஒரு படம் எடுத்திருக்காரு. குடங்களை வெச்சு ஒரு பாட்டு சீன். அதுக்கே ஏழு லட்ச ரூபா சரியா போச்சு. நீங்க இப்படி ஏழு லட்ச ரூபாய்ல படம் பண்ணினா எங்க கதி என்னாகிறது?’’

நந்தனத்தில் ஆண்டாள் தியேட்டரில் ப்ரிவியூ. படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர். பாரதிராஜா படம் முடிந்து வெளியே வந்து, பதற்றத்தில் சிகரெட்டில் ஃபில்டர் வைத்த பகுதியில் பற்ற வைத்துப் புகைத்தது நினைவுக்கு வருகிறது. மக்கள் படம் பார்த்துவிட்டு, ‘அந்தச் சிறுவனை எப்படியாவது வெளியே கொண்டு வாருங்கள்’ என வழக்கு நடத்துவதற்குப் பணம் அனுப்பியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

படத்தைப் பார்த்து என்னை என்.எஃப்.டி.சி தேர்வுக்குழுத் தலைவராக  நியமித்தார்கள். சேதுமாதவன் போன்றவர்கள் வாழ்த்தினார்கள். அந்தப் படம் என்னை வேறு ஒரு ரேஞ்சுக்குக் கொண்டு சென்றது என்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்கிறேன்.

படம் முடிந்த நேரத்தில் வெறும் ஏழு லட்ச ரூபாயில் ஒரு படத்தை முடித்ததை ராமா நாயுடு, பெருமையாகச் சொன்னார். அவருடைய மேனேஜரைக் கூப்பிட்டு, ‘‘ஏழு லட்சம் கொடுத்தோம். மேலே ஏதாவது செலவாகியிருந்தால் அதை செட்டில் செய்துவிடுங்கள்’’ என்றார்.

‘‘நீங்கள் எனக்கு 800 ரூபாய் தர வேண்டும். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள்தான் எனக்குப் பாக்கி தரவேண்டும் என்று பிறகொரு நாள் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்’’ என்றேன். அவர் சிரித்துவிட்டுப் போய்விட்டார். இதோ... இந்த அத்தியாயத்தில் சொல்லிவிட்டேன், அந்தப் பெருமைக்குரிய மனிதரைப் பெருமைப்படுத்தும்விதமாக.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

சுடச்சுட ஐஸ்க்ரீம்!

நா
ன் பெங்களூரு சென்றால், என்னை அழைத்துச் செல்ல கார் எடுத்து வருபவர்களில் பிரபா ராஜ் முக்கியமானவர். என்னுடைய தீவிர ரசிகை. பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஒன்றரை மணி நேரத்தில் கூட்டிப் போய்ச் சேர்த்துவிடுவார். அவ்வளவு ஸ்பீடு. இப்போது அவருக்கு 90 வயது. நான் சொல்வது 30 வருஷங்களுக்கு முன்பு. மிகப் பெரிய தயாரிப்பாளர். அவருடைய கணவரை நாங்கள் எல்லோரும் ‘டாடி’ என்றுதான் அழைப்போம். ஏர்போர்ட்டில் இருந்து பிரபா ராஜ் என்னை மைசூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஏர்லைன்ஸ் என்று ஒரு ஹோட்டல் உண்டு. அங்கே சுடச்சுட ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். ‘சுடச்சுட’ என்றால் உண்மையிலேயே சூடு. கையில் பிடிக்க முடியாது. ஆனால், ஐஸ்க்ரீமின் அதே சுவை. என் கதைகளின் மீது அப்படி ஒரு பிரியம் பிரபாவுக்கு. பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டே வருவார். மேன்மையான மனுஷி. எல்லோரையும் நாம் பணத்தை வைத்து எடை போடப் பழகிவிட்டோம். அது தப்பு. மனதை வைத்து எடைபோடும் நல்ல பண்பு வேண்டும் என்பதை உணர்த்திய நல்ல பண்பாளர் அவர்.