மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!

கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

அது ஒரு வங்காள மொழிப் படம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதை. அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பாதுரி, ஆரம்பக் காலத்தில் நடித்தது. சின்னஞ்சிறு பெண்ணாகச் சுட்டித்தனமாக நடித்திருப்பார். மரங்களில் ஏறி மாங்காய் திருடும் வால்தனமான கேரக்டர். அப்படி அவர் ஒரு மா மரத்தில் ஏறி மாங்காய் கடித்துக்கொண்டிருக்கும்போது, ஆற்றோரத்தில் ஒரு குடும்பம் படகில் இருந்து இறங்குகிறது. சுட்டிப்பெண்ணாயிற்றே? கடித்துக்கொண்டிருந்த மாங்காயை எடுத்து அவர்கள் மீது வீசுவாள். அந்த மாங்காய் ஒரு இளைஞன் மீது விழும். திரும்பிப் பார்த்து, சிரித்தபடிப் போய்விடுவான்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவளைத் தேடி வருவார்கள். வீட்டுக்கு அழைத்துப்போய் அவசர அவசரமாக அலங்கரித்து உட்கார வைக்கிறார்கள். எந்தக் குடும்பத்தை நோக்கி மாங்காயை வீசினாளோ, அந்தக் குடும்பம்தான் இவளைப் பெண் பார்க்க வருகிறது. யார் மீது மாங்காய் விழுந்ததோ, அவன்தான் மாப்பிள்ளை. விவரம் தெரியாத விளையாட்டுப் பெண் என்பது கணவனுக்குத் தெரிகிறது. திருமணம் ஆன பின்பும் அவளுடைய விளையாட்டுகளை ரசிக்கிறான். ஒரு தோழிபோல பாவிக்கிறான். ‘கைகொடுத்த தெய்வம்’ சாவித்திரி கேரக்டர் மாதிரி.

கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!

ஒருநாள் வேலை விஷயமாக கணவன் வெளியூர் போகப் போவதாகச் சொல்கிறான். ‘‘சரி... சரி... போயிட்டு வாங்க’’ என்கிறாள். ‘விளையாட நேரம் கிடைக்குமே’ என்ற எண்ணம் அவளுக்கு. கணவன் படகில் ஏறி சற்று தூரம் போனதும் அவளுக்கு ஒரு ஏக்கம் பிறக்கிறது. கணவனின் பிரிவை நிஜமாகவே அப்போதுதான் உணர்வாள். அவள் கண்களில் மெல்லிய நீர்த் திரை அரும்பும். இப்படி ஒரு கதை.

அந்தப் பெண்ணைப் போலத் தமிழில் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என நினைத்தேன். ‘கோயில் காளை’ கதையில் கனகாவின் கதாபாத்திரம் அப்படி அமைக்கப்பட்டதுதான். விஜயகாந்த் ஓர் ஊருக்குப் பெண் பார்க்க வருவார். ஊருக்குள் நுழையும்போது, ஒரு தென்னந்தோப்பைக் கடக்கிறார்கள்; இளநீர் குடிக்க நினைக்கிறார்கள். தென்னை மரத்தில் ஏறி ஒரு பெண் இளநீர் பறித்துப் போடுகிறாள். வழியில் இளநீர் பறித்துப் போட்ட அதே பெண்ணைத்தான், அவர் பெண் பார்க்கப் போகிறார் எனக் கதையை உருவாக்கியிருந்தேன். அந்தப் பெண்ணாக கனகா நடித்தார். முழுக்க முழுக்க அந்த ஜெயா பாதுரி பாதிப்பில் உருவாக்கியதுதான் இது.

அடுத்த கட்டமாக இன்னொரு காட்சியையும் சேர்த்தேன். விஜயகாந்தோடு திருமணம் ஆகி ஒரு டென்ட் கொட்டகையில் படம் பார்க்கப் போவார் கனகா. நியூஸ் ரீல் ஓடும். ‘பீகாரில் வெள்ளம்...’ போல சில நிகழ்வுகள் ஓடும். அடுத்து, ‘ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கிய பெண்’ எனக் காட்டுவார்கள். வேறு யார்? சாட்சாத் கனகா. வால்தனமான ஒரு பெண் எப்படி மனைவியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லியிருந்தோம். கங்கை அமரன் இயக்கித் தயாரித்த படம். இளையராஜா இசை வார்த்தார். வங்காளப் படம், தாகூரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்றேனே... அதுதான் அந்தப் படத்தின் ஜீவன்.

நூல்களைப் படிப்பதும் நூலாசிரியர்களைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த விஷயங்கள்... அப்படி எனக்குப் பழக்கமான ஒரு தமிழ்ச் சான்றோர் யார் தெரியுமா? சாலை இளந்திரையன் அய்யா.

மதுரையில் பள்ளி மாணவனாக இருந்தபோதே இளங்குமரனார், அப்பாதுரை போன்றவர்களிடம் தமிழ் பயின்ற வாய்ப்பை முன்பே சொல்லியிருக்கிறேன். தமிழறிஞர்களைத் தேடிப் போய்ப் பழகிக்கொள்வது எனக்குப் பிடிக்கும். அப்படி சென்னையில் எனக்குப் பழக்கமானவர்கள் சான்றோர்களான சாலை இளந்திரையனும் அவருடைய மனைவி சாலினி இளந்திரையனும் ஆவர். சென்னைக்கு வரும்போது எனக்குத் தொலைபேசியில் சொல்வார்கள். ‘‘நாங்கள் சென்னை வருகிறோம். சந்திப்பதற்கு வாய்ப்பு அமைந்தால் மகிழ்வோம்’’ என்பதாக மிகவும் நாகரிகமாக அந்த அழைப்பு இருக்கும். சென்னைக்கு அவர்கள் வந்தால் பிராட்வேயில் இருக்கும் பாரி நிலையத்துக்கு இன்ன நேரம் வருவோம் எனச் சொல்வார்கள். நான் அந்த நேரத்தில் அங்கு போவேன்.

பக்கத்திலே ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போவார். இரண்டு பேர் மட்டும் பேசுவதற்கான டேபிளில் அமர்ந்துகொள்வோம். சாலினியாரும் வந்தால் மூன்று நாற்காலி மட்டும். ஒரு நாற்காலியை எடுத்துவிடச் சொல்வோம். வேறு யாராவது அங்கு அமர்ந்து, பேசுவதற்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக. என்னைச் சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரும் ஏதாவது சாப்பிடுவார். அது நன்றாகவே தெரியும். தமிழிலக்கியப் பெருமையைப் பற்றி மிக அழகாக எடுத்துச் சொல்வார். ஒரு சமயம் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘‘கோ என்றால் அரசன். இளம் கோ என்றால் சிற்றரசன். சேரன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோ என்பது புரிகிறது. அப்படியானால் இளங்கோவுக்கு என்ன பெயர்?’’ எனக் கேட்டேன். இந்தக் கேள்விக்காக அவர் மகிழ்ந்தார். ‘‘ஆய்வுக்குரிய கேள்வி’’ என்றும் சொன்னார்.

இப்படி நான் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டு ஒரு முறை ஆர்.டி.பாஸ்கர், ‘‘நானும் உனக்கு ஒரு அறிஞரை அறிமுகப் படுத்துகிறேன்’’ என்றார்.

‘‘அவர் எங்கே இருக்கிறார்?’’ என்றேன்.

‘‘திருச்சி.’’

‘‘சரி. பஞ்சு வீட்டு விசேஷம் ஒண்ணு இருக்கு. காரைக்குடி போகணும். அப்பப் பார்க்கலாம்’’ எனத் திட்டமிட்டோம். அவரைச் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!

வீரப்பன் காட்டுக்குள்..!

யாரிப்பாளர் ராஜேந்திர சிங் பாபுவுக்காக ஒரு கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தோம். கதை ஒரு கட்டத்துக்குப் பிறகு நகரவே இல்லை. தினமும் இப்படியே போய்க்கொண்டிருக்க, ராஜேந்திர சிங் ஒரு நாள் காலை ஹோட்டல் அறைக்கு வந்தார். மதிய உணவுக்காக பிஸிபேலா பாத், தயிர் சாதம் என பார்சல்களை வாங்கிக்கொண்டார். ‘‘எங்கே போகிறோம்’’ என்றேன். ‘‘ஏதாவது ஒரு ஷாக் கொடுத்தால்தான் கதை நகரும். அதுக்காகத்தான் ஓர் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்’’ என்றார். அவர் அழைத்துச் சென்றது சத்தியமங்கலம் காடு. அப்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திவைத்திருந்தார். காட்டில் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘‘உங்களுக்குப் பயமாக இல்லையா?’’ என்றார் சிங். ‘‘வீரப்பன் என்னுடைய ஒரு கதையாவது பார்த்திருப்பார். அதைச் சொல்லி நான் தப்பித்துக்கொள்வேன்’’ என்றேன். வீரப்பன் எங்களை நகர்த்திக்கொண்டு போகவில்லை; ஆனால், கதை நகரத் தொடங்கிவிட்டது.