மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ருளுக்குள் நடந்துகொண்டே கார்த்திகையின் கதையைச் சொல்லி முடித்தான் பாரி. கதை கேட்டபடி பின்னால் வந்துகொண்டிருந்தார் கபிலர். திசைவேழரின் காலக்கணிதம், பேரரசுகளின் வானியலறிவு ஆகியன பற்றி கபிலருக்கு இருந்த எண்ணங்கள், பாரி சொன்ன ஒற்றைக்கதையால் தள்ளாடத் தொடங்கின. `நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஒளிவாளினை இவ்வளவு துல்லியமாகக் கணித்துவைத்திருக்கும்போதே, மலைமக்களின் வானியலறிவைப் புரிந்துகொள்ள கூடுதலாக முயன்றிருக்க வேண்டும்’ எனத் தோன்றியது.

பேச்சற்று வந்துகொண்டிருந்த கபிலரைப் பார்த்து பாரி, “முருகன், கார்த்திகை விண்மீன் கூட்டத்துக்குப் பெயர் சூட்டிய கதையை மட்டும்தானே சொல்லியுள்ளேன். இன்னும் எவ்வளவோ இருக்கின்றனவே” என்றான்.

“இன்னும் எவ்வளவோ என்றால், முருகனைப் பற்றியா... விண்மீன்களைப் பற்றியா?”

“காலத்தைப் பற்றி”

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

‘என்ன சொல்லவருகிறான் பாரி?’ என்ற திகைப்பு வாயடைக்கச் செய்தது கபிலரை.

பாரி சொன்னான், “அந்த ஆறு விண்மீன்களின் அடிப்படையில்தான் காலமும் ஆறு கூறுகளாகப் பகுக்கப்பட்டன. கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஆறு பெரும்பொழுதுகளும், வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஆறு சிறுபொழுதுகளும் இதன் அடிப்படையில்தான் பகுக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.”

இருள் சூழ்ந்துள்ள ஒற்றையடிப்பாதையில் பின்னால் வருகிறவர் சிறு ஓசைகூட எழுப்பாமல் வரக் கூடாது என்பது கபிலருக்குத் தெரியும்.  ஆனால், தெரிந்தவை எல்லாம் தெரியாதவற்றின் பின்புலத்தில் போய் மறைகின்றன. பின்னணிக் கதைகள் காலத்தையே புரட்டுகின்றன. கபிலர் என்ன செய்வார்?

மனம் புரண்டு எழுந்து உண்மையைப்பற்ற நினைத்தபோது குறுக்கிட்ட கதை, ‘அது உண்மையா?’ என்ற கேள்வியை எழுப்பியது. திகைத்து நின்றவரிடம் புதிதாய் வினா ஒன்று மேலெழுந்தது.

“வேளிர்குலத் தலைவன் உருவாக்கியதால்தான் பொழுதை அறிய `வேளை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமா? காலை வேளை, மாலை வேளை என அழைப்பதன் காரணம் அதுதானா?”

கபிலரின் வினாவுக்கு, பாரியிடம் விடை இல்லை.

சற்றுநேர இடைவெளியில் மீண்டும் கபிலர் கேட்டார், ``காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளாக வகுத்ததற்கும், ஒரு நாளை அறுபது நாழிகைகளாகப் பிரித்ததற்கும் இந்த ஆறுதான் அடிப்படையா?”

பாரியிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. ஆனால், கபிலரின் உள்ளத்துக்குள் உருக்கொண்ட வினாக்கள் நின்றபாடில்லை.

“சற்றே நில்” என்றார் கபிலர்.

முன் நடந்துகொண்டிந்த பாரி நின்றான்.

“அன்று அங்கவை கேட்ட வினாவை உன்னிடம் சொன்னேனே நினைவிருக்கிறதா?”

எதுவென்று பாரி யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பொழுதுகூட கபிலரால் காத்திருக்க முடியவில்லை. “ `உயிரெழுத்துகள் ஏன் பன்னிரண்டு?’ என்று கேட்டாளே” என்றார்.

“ஆம்” என்றான் பாரி.

“உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு எல்லாம் ஆறின் மடங்குகளாகவே இருப்பது அதனால்தானா? ஆறு என்ற அச்சின் மீதுதான் எம்மொழி நிலை கொண்டுள்ளதா? ஆறு என்பது எண்ணாகவும், நதியாகவும், மொழியாகவும், காலமாகவும் விரிவுகொண்டதா?” என, கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் கபிலர்.

அமைதியாய் நின்ற பாரி சொன்னான், “ இந்த வினாக்களுக்கு விடைகூற வேண்டியவர் நீங்கள்தானே, என்னிடம் கேட்கிறீர்கள்?”

``விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வதுதான் முக்கியம். பறம்பின் மீது ஏறத் தொடங்கியதிலிருந்து நான் முக்கியமாகக் கண்டடைந்தது விடையை அல்ல, வினாவைத்தான்.”
பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான்  வெளிவருகின்றன. கபிலர், கேள்விகளுக்குள் தலை நுழைத்துக் கொண்டிருந்தார்.

“காலத்தைப் பற்றி வேறென்ன சொல்ல வந்தாய்?”

“முருகன் அளவுக்கு இயற்கையின் ஒவ்வோர் அசைவையும் நுட்பத்தையும் புரிந்துகொண்ட இன்னொரு தலைவன் இல்லை. முருகனோடு இரண்டு பறவைகளைப் பற்றிய கதைகளை இணைத்தே மக்கள் சொல்வர். கேட்டிருக்கிறீர்களா?”

“நான் கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் இங்கு தலைகீழாக மாறிவிடுகிறதே! நீ எந்தப் பறவைகளைச் சொல்கிறாய்?”

``சேவலையும் மயிலையும்தான்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

இந்தப் பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவைப் பற்றி கபிலர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது பாரி சொன்னான், ``சேவல், கதிரவன் விரும்பி; செந்நிற ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்கத் தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு ஏதுமில்லை. அதேபோலத்தான் மயிலும். அது, மழைவிரும்பி; கார்மேகங்கள் கூடத் தொடங்கியதும் குதூகலிக்கத் தொடங்கும்; இறகு விரித்து தனது மகிழ்வைக் கொண்டாடும். நெருப்பும் நீரும்போலத்தான் கார்த்திகையின் இன்னொரு குறியீடு இவை இரண்டும்.”

சேவலின் கொக்கரிப்பையும் மயிலின் தோகை விரிப்பையும் கார்த்திகையோடு இணைத்து பாரி சொன்ன கணத்தில், உடல் சிலிர்த்து அடங்கியது. `காலத்தின் எதிரெதிர் முனைகளை வைத்துதான் முருகனைப் பற்றிய எல்லாக் கதைகளும் பின்னப்பட்டுள்ளன’ எனத் தோன்றியபோதே அறுபதாங்கோழியின் நினைவுவந்தது. “முருகனுக்கு மிகவும் பிடித்தது அறுபதாங்கோழி என்றுதானே பறம்பு மக்கள் சொன்னார்கள்?”
இளஞ்சிரிப்பு மாறாமல் பாரி சொன்னான்,“சேவலும் மயிலும் காலத்தின் குறியீடு என்றால், அறுபதாங்கோழி காதலின் குறியீடு. அது முழுநிலா நாளில் வானம் பார்த்து தனது மெல்லிய குரல்கொண்டு ஒலியெழுப்பும். சேவல்போல தனது அலகு திறந்து கூவாது. மூடிய வாயின் முணுமுணுப்பாய் வெளிவரும் இசை. வண்டுகளின் ரீங்காரம்போல மெல்லொலி எழுப்பும்.  வள்ளியும் முருகனும் நரந்தம்புல்லின் நடுமேட்டில் இருந்த காலமெல்லாம் காற்றில் மிதந்த ஓசை அதனுடையதுதான். அந்த ஓசை, காதலர்கள் உயிர் சுருண்டு ஓருடல்கொள்ள வழிசெய்யும்.

கார்காலமும் வேனிற்காலமும் இணைந்ததன் அடையாளமாகக் கார்த்திகை இருப்பதைப்போல, ஆணும் பெண்ணும் இணைந்த காதல் அடையாளம்தான் அறுபதாங்கோழி. ஒருவகையில் எரியும் நீரும் குளிரும் நெருப்புதான் அதுவும்.”

``காலத்தையும் காதலையும் வைத்து வள்ளியுடன் நடத்திய விளையாட்டு வள்ளிமுருகனைப் பற்றிய எல்லாக் கதைகளிலும் நிகழும்போலும்” என்றார் கபிலர்.

``காலத்துடனும் காதலுடன் விளையாடிப் பார்க்க விருப்பமில்லா மனிதன் யார்? மனிதனின் அடிப்படையான விருப்பம் இவை இரண்டும் தானே.  அதனால்தான் எல்லோருக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. அதை விளையாடித் தீர்த்த வள்ளிமுருகனையும் பிடித்திருக்கிறது.” 

வள்ளிமுருகனின் கதையை அசைபோடுதல், காலத்தையும் காதலையும் மறுபடி நிகழ்த்திப்பார்த்தல்போலத்தான். அந்த நிகழ்வு மனதுக்குள் நிகழும்போது வெளிப்பேச்சுக்கு வேலையென்ன? பாரியும் கபிலரும் இருவேறு உலகுக்குள் நீந்தியபடி  நடந்து சென்றனர்.

இருளின் அடர்த்தி குறையத் தொடங்கியது. மழை நின்ற இரவு, கிழக்கே மேலெழும் புத்தொளிக்காகக் காத்திருந்தது. பறவைகளின் குரலொலி கேட்டபடி இருவரும் நடந்தனர். நீண்டநேரம் கழித்து கபிலர் கேட்டார், “முருகன் கண்டறிந்தவை வேறு என்னென்ன?’’

“நிறைய இருக்கின்றன. ஆனால், சொல்ல முடியாதவைகளாக இருக்கின்றன.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 34“என்னிடம் சொல்ல முடியாதவையா?”

“ஆம், தம் குலம் அல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவை, குலங்களில் நிறைய உண்டல்லவா?”

நீண்டநேரம் கழித்து கதைகளிலிருந்து மீண்டு தன்நிலைக்கு வந்தார் கபிலர். எவ்வளவு ஒன்றினாலும் விலகவேண்டிய இடம் உண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது.

“ஆனாலும் அவை குறித்து நீங்கள் ஏற்கெனவே கேள்வி எழுப்பிவிட்டீர்கள். உங்களது கேள்வியால் திகைத்துப்போய் நின்றது அன்றுதான்” என்றான் பாரி.

`எதைச் சொல்கிறான் பாரி?’ என யோசித்துக் கொண்டிருந்தார் கபிலர். பாரி சொன்னான், ``ஒளிவாளினைப் பார்க்க குன்றுக்கு மேல் உங்களை நான் அழைத்துச் சென்றபோது நீங்கள் கேள்வி ஒன்று கேட்டீர்கள்.”
கபிலர் சிந்தித்தபடியே சொன்னார், “பாழி நகர் பற்றிக் கேட்டேன். `அங்கு வேளிர்களின் செல்வங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா?’ என்று கேட்டேன்.’’

பாரி சொன்னான் ``குமரிக்கடல் முதல் வட திசையின் எல்லை வரை இருக்கும் இந்தப் பச்சைமலைத்தொடரில் இருப்பவர்கள் ஈரேழு பதினான்கு வேளிர்கள். இந்த வேளிர் கூட்டம், தங்களுக்குக் கிடைக்கும் பெரும்செல்வம் எதுவானாலும் அதைப் பாழி நகரில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னோர்கள் விதிசெய்தனர். அந்தப் பாழி நகரை உருவாக்கியவன் முருகன்.”

தான் அன்று கேட்ட வினாவுக்கு, இன்று பாரியிடமிருந்து விடை வந்தது.

“அந்நகரை வேளிர் மட்டுமே அறிவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.”

“ஆம்” என்றான் பாரி.

``பிறரால் அறிய முடியாத நகரம் மண்ணில் எப்படி இருக்க முடியும்?”

“மண்ணின் மேல் இருக்க முடியாது. மண்ணுக்குள் இருக்க முடியுமல்லவா?”

கபிலர் மிரண்டு நின்றார். பாரி சொன்னான், “அது மண்ணுக்குள் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளைக்கொண்டது. அங்குதான் ஆதிகாலந்தொட்டு வேளிர்களின் செல்வங்கள். அதாவது பச்சைமலையின் வியக்கத்தகு செல்வங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அந்தப் பாழி நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எவ்வியிடம் ஒப்படைத்தான் முருகன். அன்றிலிருந்து பறம்பின் மக்கள் அதைப் பாதுகாத்துவருகிறார்கள்.”

“மற்ற வேளிர்கள் அந்த இடத்துக்கு வந்து செல்கின்றனரா?”

“ஆம், பாதுகாப்பது மட்டும்தான் எங்களின் பணி. மற்ற அனைத்து வேளிர்களுக்கும் அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற உண்மை தெரியும்.”

“ எவ்வியூரிலிருந்து மலைப்பாதையின் வழியே போனால், பாழி நகர் போய்விடலாம் என்று நீ சொன்னாயே!”

கபிலர் முடிப்பதற்குள் பாரி சொன்னான், ``அது வெளித்தோற்றத்துக்காக நாங்கள் அமைத்துள்ள சிறுபாழிக்கான பாதை. பெரும்பாழி இருக்கும் இடம் வேறொன்று.”

முடிச்சோடு நின்றது பாரியின் மறுமொழி. `இதை நேரடியாகக் கேட்க முடியாது. ஆனால், கேட்காமல் இருக்கவும் முடியாது. என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தபடியே கபிலர் கேட்டார், ``மலைப்பகுதியில் மண்ணுள் இருக்கும் ஓர் இடத்தை எல்லாக் காலங்களிலும் பாதுகாத்துவிட முடியுமா? கால ஓட்டத்தில் எளிதில் அழிந்துவிடாதா?”

எவ்வளவு நிதானத்துடனும் கூர்மையுடனும் கபிலர் பாழி நகரை நெருங்குகிறார் என்பதை, பாரி கவனித்தபடியே சொன்னான், “அந்த நகரை இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் மண்ணுள் எவ்வளவு ஆழம் புதைந்தாலும் வேளிர் குலத்தவரால் கண்டுபிடித்துவிட முடியும்.”

“ `எப்படிக் கேட்பது, பாரிக்கு இக்கட்டான நிலையை உருவாக்கிவிடும்’ என்று கபிலருக்குத் தோன்றியது. `ஆனால், கேட்காமல் இருப்பது, உருவாகும் எண்ணத்தை மறைக்கும் செயல். மறைக்க முயல்வது தோழமையன்று’ என்று எண்ணியபடியே கபிலர் சொன்னார், “எப்படி என்பதை நீ வெளிப்படுத்தத் தேவையில்லை.”

கபிலரின் சொல்லாற்றல் கண்டு வியந்து நின்றான் பாரி. எவ்வளவு திறனோடு என்னை முன்னகர்த்தி அவர் பின்வருகிறார் என்று எண்ணியபடியே பாரி சொன்னான், ``அந்த நகருக்கான அடையாளங்களை உருவாக்கியவன் முருகன். அந்த அடையாளங்கள் மண்ணில் இருந்தால், அவை கால ஓட்டத்தில் மறைந்துபோகலாம். விண்ணில் இருந்தால்?”

பாரியின் வினா, கபிலரை இழுத்து நிறுத்தியது. பாரி தொடர்ந்தான், “இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும், விண்மீன்களின் இருப்பிடங்கள் மாறவா போகின்றன?”

“இல்லை.”

“பாழி நகருக்கான குறிப்புகள் விண்மீன்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு காலம் கழிந்த பின்னும், மாதங்களின் நாள் வரிசையும் விண்மீன்களின் இட வரிசையையும் தெரிந்தவன் அந்த நகரை எளிதில் கண்டறிந்துவிடுவான்.”

திகைப்பின் அடுத்தகட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. ‘மலைமக்கள், அறிவின் சிறந்த தொடக்கத்தை உருவாக்கியவர்கள். சமவெளியில் உருவான அரசுகள் அதை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுத்துள்ளன’ என்றுதான் இதுநாள் வரை கபிலர் நினைத்திருந்தார். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் தொலைந்து போனவையே அபார ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. விண்மீன்களை வைத்து திசை அடையாளங்களையும் நேர அடையாளங் களையும்தான் கணியர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இங்கோ, விண்மீன்களை வைத்து நிலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அறிவு வளர்ச்சியின் ஆதிவிதைகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

கபிலரின் எண்ண ஓட்டங்களை இடைமறித்து பாரி சொன்னான், “முதுவேனிற்காலத்தில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இருப்பதை விண்மீன்களின் சுழல்வட்டக் கணக்கின் அடிப்படையில் முருகன் கண்டறிந்தான் எனச் சொன்னேன் அல்லவா?”

“ஆம்’’ எனத் தலையசைத்தார் கபிலர்.

“அவ்வாறின்றி, வேறொரு முறையில்தான் அதை முருகன் கண்டறிந்தான் எனச் சொல்பவர்களும் உண்டு.”

“அது என்ன முறை?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

பாரி சற்றே அமைதிகொண்டு நடந்தான். `சொல்லலாமா?’ என்ற வினாவை எழுப்பி மனதை விடை சொல்ல ஆயத்தம் செய்கிறான் என்பது கபிலருக்குப் புரிந்தது.

பாரி சொன்னான், “இம்மலைத்தொடரில் உள்ள பத்து பேரதிசயங்களில் ஒன்று கருநெல்லி.”

கபிலர், பாரி உச்சரிக்கும் வார்த்தையை மிகக் கவனமாகக் கேட்டார்.

பாரி சொன்னான், “ `அதிசயக்கனியான கருநெல்லியை உண்டால், பகலிலும் விண்மீன் கூட்டத்தைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. முருகனுக்கு நெல்லிக்கனி மிகவும் பிடித்தது. அவன் கருநெல்லி உண்டுதான் பகலில் விண்மீன் நகர்வைப் பார்த்தறிந்தான்’ என்று குலநாகினிகள் கதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.’’

கபிலர், திகைப்பிலிருந்து மீள வழியில்லாமல் இருந்தார். எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் ஓடின. மேலேறிய கதிரவனின் ஒளி, காடெங்கும் நிலைகொண்டிருந்த இருளை மஞ்சள் நிற ஆடைகொண்டு போத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்றுகொண்டிருந்த பாரி, பாறை இடுக்கின் வழியே உள்நுழைந்து மறைந்தான்.

‘அதற்குள் உள்ளே மறைந்துவிட்டானே. அவ்வளவு அடர்ந்த இடுக்குப்பாதையா இது!’ என்று நினைத்தபடியே கவனமாகக் கால் தூக்கிவைத்து உள்நுழைந்தார். இருள் சூழந்த பாதை நீண்டிருந்தது.

சற்று தொலைவு நடந்தான். பெரும்பாறை ஒன்று பாதையில் குறுக்கே நிற்பது தெரிந்தது. அதன் பின்புறமிருந்து காலைக் கதிரவனின் ஒளி, தெறித்துச் சிதறிக்கொண்டிருந்தது. `எத்தனை முறை பார்த்தாலும் இருளுக்குள் பாய்ந்து நுழையும் ஒளிக்கதிருக்கு இணை சொல்ல எதுவுமில்லை’ என நினைத்தபடியே பாறையின் அருகில் வந்து முன்புறம் திரும்பினார் கபிலர்.

திருப்பத்தில்தான் எல்லாம் இருந்தன. `இணை சொல்ல முடியாதவை’ என்ற சொல்லின் முழுமையை இயற்கை அவருக்குக் காண்பித்தது. வட்டவடிவ பசுங்குடுவையைப்போல் கண்ணுக்கெதிரே பரந்து விரிந்த புல்வெளி. இரு கைகொண்டு அணைத்துப் பிடித்தபடி சுற்றிக்கிடக்கும் மலைக்குன்றுகள். கதிரவனின் ஒளி பொழியத் தொடங்கும்போது கலையத் தொடங்கிய இணைப் பறவைகளின் ஓசை. காற்றெங்கும் மிதந்த நரந்தம்புல்லின் மணம்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

உறைந்து நின்றார் கபிலர். சற்றே விலகி நின்று அவர் முகம் பார்த்து மகிழ்ந்தான் பாரி.

கார்காலத்தின் முதுமழை கொட்டத் தொடங்கியது. இன்னும் சில நாள்களில் அடைமழை தொடங்கும். மழைநீரின் கனம் தாங்காமல் இலையும், இரவின் குளிர் தாங்காமல் மலையும் நடுங்கியபடி இருக்கப்போகின்றன. கபிலருக்கு எலிமயிர்ப் போர்வை நெய்யும் பணி முடியப்போகிறது.

தப்பிச்செல்ல முடியா பேரெலியின் மயிர்தோல்கொண்டு தொல்புலவன்  போத்தப்பட இருக்கிறான். அந்த நாளுக்காகக் காத்திருந்தனர் எல்லோரும். கபிலரின் மனமோ, நரந்தம்புல் மேட்டிலும் கார்த்திகையின் கணக்குகளிலும் மொழியின் புதிர்களிலும் போய் மாட்டி நின்றது. அவற்றின் ஆழம் வசப்படவில்லை. எனவே, அதிலிருந்து மீள முடியவில்லை. நீலன், தனைமயக்கி மூலிகை கொடுத்து கதையை மறக்கவைத்தான். பாரியோ, கதையைச் சொல்லி மீதமுள்ள எல்லாவற்றையும் மறக்கவைத்தான். மறதிக்கும் நினைவுக்கும் நடுவில் பெரும்வேட்டையைத் தன்னந்தனியாக நடத்திக்கொண்டிருந்தார் கபிலர்.

மீளமுடியா அந்த மனநிலையோடுதான் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தினார். அங்கவையின் வினாக்கள் வழக்கம்போல் அறிதலின் வழியேதான் இருந்தன. மற்றவர்களும் ஆர்வமுடன் பாடம் பயின்றனர். மயிலா புறப்படவேண்டிய நாள் வந்துவிட்டது. அவள் நீலனைப் பார்க்காமல் நீண்டநாள் விலகியிருந்தது இப்போதுதான். ஆனாலும் தனது பெயரையும் நீலனின் பெயரையும் அவள் எழுதக் கற்றிருந்தாள். அது அளவற்ற மகிழ்வை உருவாக்கியிருந்தது. அவனின் ரகசியம் ஒன்று தனக்குள் அடங்கிவிட்டதாக அவள் நினைத்தாள். தனது விரல்களின் வழியே நீளும் கோடுகளுக்குள் அடங்கிய அவனை நினைத்து மகிழ்ந்தாள்.

வேட்டூர் பழையனோடு சேர்ந்து அவள் புறப்படுவதாகத்தான் முடிவுசெய்திருந்தனர். ஆனால், தேக்கன் இன்னும் சில நாள்கள் பழையனை இருக்கச் சொல்லிவிட்டார். அதனால் வீரர்கள் சிலருடன் மயிலா மட்டும் எவ்வியூர்விட்டுப் புறப்பட்டாள். அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் வழியே கபிலர், நீலனைப் பார்த்துக்கொண்டிருந்தார். குன்றுகளுக்கு இடையில் ஆடும் ஊஞ்சல் அவரின் பார்வைக்குத் தெரிந்தது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ அரும்புவிடத் தொடங்கியிருந்தது. தேக்கன் புதிய மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால்தான் சில செய்திகளைப் பேசுவதற்கு வேட்டூர் பழையனை இருக்கச் சொல்லியிருந்தார் தேக்கன்.

தென்திசை தளபதி கூழையன் அனுப்பும் தகவல்கள், பறம்புக்கான ஆபத்து நெருங்குவதைச் சொல்லிக்கொண்டே இருந்தன. கோளூர் சாத்தனின் கைகளை முடியன் வெட்டியதால் சேரகுடிகள் ஒன்றுசேர நாம் வழிவகுத்துவிட்டோம். பாண்டியனையும் சோழனையும்போல தொலைவில் இருப்பவர்கள் அல்ல சேரர்கள். மலைத்தொடரின் அடுத்த குன்றில் அவர்களது காலடி கிடக்கிறது. சேரர்குடி இருவரும் இணைந்து பறம்பு நோக்கி படைகள் வருவதற்கு ஒரு சில குன்றுகளில் பாதை அமைத்துவருகின்றனர். நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டிய நேரம். 

இந்தச் செய்திகள் வந்தபிறகுதான், பேரெலி வேட்டைக்குப் பாரி ஏன் தொடர்ந்து வந்தான் என்பது தெரியவந்தது. பேரெலி அதிகம் இருக்கும் இடங்களை விட்டுவிட்டு மலைகளின் பல திசைவழியாக ஏன் பயணப்பட வைத்தான் என்றும் இப்போதுதான் புரிந்தது. `சேரர்கள் எந்தெந்தக் குன்றுகளின் வழியே நுழைந்து பாதை உருவாக்க முயல்கின்றனர்?’ என்று பாரி சொன்னதாகத் தேக்கன் சொன்னபோது உதிரன் உறைந்துபோனான்.

கழுகின் மூக்கைப்போன்றது பாரியின் கவனிப்பு. கழுகு, வானுச்சியில் பறந்தாலும் நிலத்தில் கிடக்கும் பறவையின் வாடையை எளிதில் நுகர்ந்துவிடும். அதுபோலத்தான் பாரியும். எவ்வியூரில் இருந்தாலும் பறம்பு மலையின் எண்திசையிலும் நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்துவந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 34கூழையன் அனுப்பிய செய்தியும் பாரியின் அவதானிப்பும் ஒன்றுபோல இருந்தன. சேரன் ஏறிவர எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“இச்சூழலில் எவ்வியூரின் ஆசான் தேக்கன், பயிற்சிக்காகப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியச் செல்ல வேண்டுமா? புதிய ஆசானை அனுப்பினால் என்ன?” என்று சிலர் கேட்டார்கள்.

``அதை முடிவுசெய்யவேண்டியது தேக்கன் தான்’’ என்றான் பாரி.

தேக்கனோ, “அம்முடிவை சாமப்பூவின் அரும்பு துளிர்க்கும் முன் எடுத்திருக்க வேண்டும். எனக்கான வாசனையை அது வழங்கிவிட்டது. நான் அதன் அனுமதியை நுகர்ந்துவிட்டேன். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியும் எனது பயணத்தை இனி நிறுத்த முடியாது” என்றார்.

பழையனிடம் பகிர்ந்துகொள்ள நிறைய இருந்தன. பறம்பு நாட்டின் மிக மூத்த வீரனென்றால், அது வேட்டூர் பழையன்தான். பறம்பில் உள்ள ஊர்களின் நிலையும் தன்மையும் வீரர்களின் திறனையும் முழுமையும் அறிந்துள்ளவன் பழையன்தான். எனவே, அவனை இருக்கச் சொல்லி நாள்கணக்கில் பேசினான் தேக்கன்.

பழையனின் மனநிலை முற்றிலும் வேறானது. ``திட்டமிடல், முன்தயாரிப்பு இவற்றைக்கொண்டு நிகழ்த்தப்படும் போர்கள் அரச முறையைச் சார்ந்தவை. நாம் ஏன் அதுபோல் சிந்திக்க வேண்டும்? நமது போர்முறை முற்றிலும் வேறானது. அது போர் தொடங்குவதற்கு ஏற்ப வடிவம்கொள்ளக்கூடியது.

போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்” என்றார் பழையன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

``பேரரசுகளால் சூழப்பட்டுள்ளோம். நமது பாரம்பர்ய முறைப்படி நாம் போரிடுவோம். ஆனால், அவர்களின் போர் உத்திகளைக் கணித்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக வேண்டிய தேவையிருக்கிறது” என்று வாதிட்டார் தேக்கன்.

முன்தயாரிப்பின் வழியே போரை அணுகும் முறைக்கு பழையனால் பொருந்த முடியவில்லை. “இப்பணியைக் கூழையனிடம் ஒப்படைத்துவிடு. போர் தொடங்கிய பிறகு எனது பணியை முடிவுசெய்துகொள்ளலாம்” என்றான் பழையன்.

``நீ சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் இடையில் அதிக நாள் இல்லை” என்றான் தேக்கன்.

“இரண்டுக்கும் இடையில் ஒருநாள் இருந்தாலும், நான் ஏன் முன்கூட்டியே ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஆற்றலை வீணாக்க வேண்டும்?”

பழையனோடு பேச்சில் மட்டுமன்று, எதிலும் வெல்ல முடியாது எனத் தேக்கனுக்குத் தெரியும். உண்மையில் தேக்கன் நடத்தும் போராட்டம் இந்த விடாப்பிடியான மனநிலையோடுதான். நன்கு திட்டமிட்ட போர்முறையை, எதுவுமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இயற்கையின் பல அமைப்புகள், திட்டமிட்ட ஒருங்கிணைப்பைக் கொண்டு தாக்குதல் தொடுக்கின்றன. இந்த எடுத்துக்காட்டை நாம் சொன்னால், இதற்கு மாற்றான ஓராயிரம் எடுத்துக்காட்டுகளை பழையன் சொல்வான். எனவே, மறுமொழியின்றி அமைதியானான் தேக்கன்.

ஆனால், சூழலில் இந்த அமைதி இல்லை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...