மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

வெளியூர் கிளம்பறீங்களா... ஒன் மினிட்!  

அனுபவங்கள் பேசுகின்றன!

டூர் கிளம்பிக்கொண்டிருந்த தோழியைப் பார்க்கச் சென்றேன். உள்பாவாடை, சுடிதார் பாட்டம் போன்றவற்றில் உள்ள நாடாக்களை உருவிக்கொண்டிருந்தாள். திரும்ப மாட்டுவதற்குப் புதிய நாடாக்களும் இருந்தன. ஓரளவு நல்ல நிலையில் இருந்த நாடாக்களையும் எடுத்துவிட்டுப் புதிதாக மாற்றினாள். `ஏன் இப்படிச் செய்கிறாய்?’ எனக் கேட்டபோது, ``ஒருமுறை ட்ரெயினில் போகும்போது பாவாடை நாடாவைத் தளர்த்துவதற்காக இழுத்தேன். இற்றுப்போய் இருந்ததால், துண்டாகிக் கையோடு வந்து விட்டது. மாற்றுவழியாக ஒரு சேஃப்டி பின் தேடிப்பிடித்துப் போட்டாலும் புடவை சரியாகாமல் தவித்துப்போனேன். எனவே, வெளியூர் பயணத்துக்குத் தயாராகும்போது பாவாடை, சுடிதார் நாடாக்களைச் சரிபார்த்து, சற்றுப் பழசாகி இருப்பவற்றை மாற்றிவிடுவது பழக்கமாகிவிட்டது’’ என்றாள்.

இது, நடுவழியில் திண்டாடாமல் இருக்க நல்ல வழி தானே... நாமும் கடைப்பிடிக்கலாமே!

- சீனு சந்திரா, சென்னை - 4

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!   

அனுபவங்கள் பேசுகின்றன!

ங்கள் தெருவில் புதிதாக வாடகைக்குக் குடி வந்திருக்கும் பெண்மணி சமீபத்தில் என் வீட்டுக்கு வந்தார். ``நான் தபால் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். வீடுகளுக்குக்கான மின்சாரக் கட்டணத்தைத் தற்போது தபால் அலுவலகங்களிலும் கட்டலாம். கூடுதலாக ஐந்து ரூபாய் மட்டுமே தபால் அலுவலகத்துக்கு, சர்வீஸ் சார்ஜாக தர வேண்டும்’’ என்று கூறினார். நானும், அக்கம்பக்கத்தில் உள்ள என் போன்ற பெண்மணிகளும் `மின்சார அலுவலகத்துக்குச் சென்று வரும் வேலை மிச்சமாயிற்று. கூடுதலாக ஐந்து ரூபாய்தானே’ என்று மின்சாரக் கட்டணம், அதற்குரிய கார்டு ஆகியவற்றைத் தந்தோம். அப்பெண்மணியும் மின்சாரக் கட்டணத்தை, தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே கட்டிவிட்டு, அதற்குண்டான ரசீதைக் கொடுத்து கார்டையும் திருப்பித்தந்தார்.

தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கும் அதேவேளையில் பிறருக்கு உதவும் மனப்பான்மையும்கொண்ட இவரை, மற்ற துறைகளில் வேலைபார்க்கும் பெண்மணிகளும் பின்பற்றலாமே!

- எம்.முருகலட்சுமி, பாளையங்கோட்டை

முதலீடு இல்லாத வியாபாரம்... சுயமரியாதை ஏராளம்!   

அனுபவங்கள் பேசுகின்றன!

ங்கள் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தினமும் காலையில் தூதுவளை, பிரண்டை, முடக்கத்தான், ஆவாரம்பூ என மருத்துவக் குணம்மிக்க தழை, தண்டு, பூ வகைகளைப் பெரிய கூடையில் வைத்துத் தலையில் சுமந்தபடி விற்பனை செய்து வருவார். அவை ஒவ்வொன்றும் உடலுக்குத் தரும் நன்மைகளையும் சரியாகச் சொல்வார்; எப்படிச் சமைத்தால் சுவையாக இருக்கும் என்பதையும் தெரியாதவர்களுக்கு விளக்குவார்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று ``விசேஷ நாள் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி ஐம்பது ரூபாய் கொடுத்தேன். அதை வாங்க மறுத்த பெண்மணி சொன்னார்... ``நான் வியாபாரத்துக்கு எடுத்துக்கிட்டு வர்றது எல்லாம் கரும்புத் தோட்டங்கள்லேயும் கழினி காடுகள்லேயும் தானா விளைஞ்சு கிடக்கிறதுதான். அதையெல்லாம் சேகரிச்சுக்கிட்டு வர்றதுதான் வேலை. முதலே இல்லாம நல்ல வருமானம் கிடைக்குது. இதுக்கு மேல எனக்கு அன்பளிப்பு எதுக்கும்மா... உன் அன்பு போதும்!’’ என்று சொல்லிவிட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

வயதான காலத்திலும் வித்தியாசமாக வருவாய் ஈட்டி, சுயமரியாதையோடு வாழும் இவரை எப்போது நினைத்தாலும் மனம் வியந்து போற்றுகிறது.

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்