
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
அடை மழையில் ஹோட்ட லுக்குப் பின்னால் இருந்த கடற்கரை நோக்கி நடந்தேன். நான் ஹோட்டலில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தபோதே, கடற்கரையில் சில சிறுமிகள் உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். மூன்று நாட்களாக மழை பெய்துகொண்டிருந்ததால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் திரும்பவில்லை. அவர்களின் குழந்தைகளாக இருக்கலாம் என்ற வேதனை எனக்கு இருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு இந்த மீனைக் கொடுத்துவிடலாம் என நினைத்தேன்.
அந்தச் சிறுமிகளில் ஒருவர், ‘‘எங்கம்மாவுக்கு ஒண்ணு’’ என அந்த மீன் துண்டை வாங்கிக்கொண்டு ஓடியது மனதைப் பிசைந்தது. மணிரத்னம் நான் வரும் வரை அந்த ஹோட்டலை ஒட்டியே நின்றிருந்தார். கவனித்துக் கொண்டிருந்தார். அருகில் வந்ததும், ‘‘கிரேட்’’ என்றார், அவருடைய வசனம் போல.

தினமும் டிஸ்கஷன் முடித்து அவர் மாலையில் சீக்கிரமே கிளம்பிவிடுவார். அன்று டிஸ்கஷன் முடியவில்லை. குறித்த நேரத்தில் தான் வர இயலாது என்பதை வீட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். போனை எடுத்தார். ‘‘வர்ல’’ எனச் சொல்லி வைத்துவிட்டார். ‘‘என்ன சார், மூணே எழுத்துல ஒரு போன் பேசிட்டீங்களே’’ என்றேன். ‘‘நான் பரவாயில்லை. அந்தப் பக்கத்தில இருந்து ஓர் எழுத்துதான். ‘ம்’ மட்டும்தான் சொன்னாங்க.’’ என்றார். அளவான வார்த்தைகள், அளவான வாழ்க்கை அவருடையது.
அதன் பிறகு கொடைக்கானலில் ‘அலைபாயுதே’ கதை விவாதம் நடந்தது. நாங்கள் தங்கியிருந்தது ஒரு கிராமத்தில் இருந்த பங்களா டைப் வீடு. ஒருநாள் காலை லுங்கியோடு அந்த வீட்டை ஒட்டியுள்ள சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன். எளிய கிராமத்து மக்கள் வசிக்கும் ஒரு கிராமம். அங்கே சாலை ஓரத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் முன், ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர், ஒரு கண்ணாடி, முடிவெட்டுவதற்கான கத்தி, முடிவெட்டிக்கொள்ள வருபவர் உட்கார ஒரு மனை... இப்படி இருந்தது. அவர் முன்னால் போய் அமர்ந்தேன். ‘ரிசார்ட்டில் தங்கி இருக்கிற யாரோ நம்மிடம் முடிவெட்டிக்கொள்ள வந்திருக்கிறாரே’ என்ற தயக்கத்தோடு பார்த்தார். ‘‘முடி வெட்டுங்கய்யா’’ என்றேன்.
இந்த நேரத்தில், காலையில் இருந்து என்னைக் காணவில்லை என மணி சாரின் உதவியாளர்கள் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கார் எடுத்துக்கொண்டு அப்படியே அந்தச் சாலைக்கு வந்த அவர்கள், என்னைக் கண்டுபிடித்துக் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மணி சார் விஷயம் தெரிந்ததும், ‘‘உங்க தலையை எல்லா இடத்திலும் கொடுத்திடாதீங்க... காஸ்ட்லியான தலை சார் இது!’’ எனக் கிண்டல் அடித்தார். ஏழை மக்கள் மீது எனக்கு இருக்கும் பாசத்தைத் தொடர்ச்சியாக அவர் கவனித்து வந்தார். ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினியின் தந்தையை ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் காட்டி யிருந்தோம். அந்தக் கேரக்டருக்கு மணி சார் வைத்த பெயர் என்ன தெரியுமா? ஆர்.செல்வராஜ். எல்லாம் சுவையான நினைவுகள்.
அதற்குப் பிறகு, ‘டும் டும் டும்’ படத்துக்குப் பணியாற்றினேன். அந்த நேரத்தில் என் பையன் தினேஷ், மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு விண்ணப்பித்திருந்தான். ‘மணிரத்னம் சார் சொன்னால் அங்கே சீட் கிடைக்கும்’ என்றார்கள். எனக்கு எப்படிக் கேட்பது எனத் தயக்கம். மிகவும் யோசித்து, ‘‘என்ன சார்... முடியுமா?’’ என்றேன்.

‘‘மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்லதான் சேர்க்கணுமா? மெட்ராஸ் டாக்கீஸ்ல சேர்த்தா போதாதா?’’ என சிம்பிளாகத் திருப்பிக் கேட்டார். அதைவிட பெரிய மகிழ்ச்சி இருக்க முடியுமா? தினேஷை, அவருடைய மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸுக்கு அனுப்பிவைத்தேன். மூன்று படங்களில் பணியாற்றினான்.
‘டும் டும் டும்’ திரைக்கதை வேலைகளை முடித்துவிட்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘பொட்டு அம்மன்’ கதை விவாதத்துக்காகக் கொல்லிமலையில் அழகான ஒரு சூழலில் தங்கியிருந்தேன். அப்போது மணி சாரிடம் இருந்து போன் வந்தது. ‘‘டும் டும் டும் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடக்கிறது. கதையில் கொஞ்சம் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. வர வாய்ப்பிருக்கிறதா?’’ என்றார்.
எனக்காக நல்ல இடத்தில் ரூம் போட்டு கதைக்காகக் காத்திருந்தார், செல்வமணி. அங்கே படப்பிடிப்பின் நடுவே கதையைச் சரிசெய்ய அழைக்கிறார் மணிரத்னம் சார். செல்வமணியிடம் சொன்னேன். செல்வமணி பெருந்தன்மையாக, ‘‘நம் சினிமா இன்னும் பேப்பரில்தான் இருக்கிறது. அவர்கள் ஷூட்டிங் கிளம்பிவிட்டார்கள். அதைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். தாராளமாகப் போய் வாருங்கள். இரண்டு நாள் இல்லை; நான்கு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை’’ எனச் சொல்லிவிட்டார். படம் எடுப்பதில் மட்டுமல்ல; பழகுவதிலும் பிரமாண்ட மனம் படைத்தவர் ஆர்.கே.செல்வமணி. சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்குப் பயணம். கதை ரிப்பேர் செய்கிற வேலை. என்னதான் ரூம் போட்டு, கதையை உருவாக்கினாலும், படப்பிடிப்பில் கதை அதுவாக திடீரென மாற்றங்களைக் கேட்கும்.

ஒரு நாள் மணிரத்னம் போன் செய்தார். ‘‘உங்க பையன் டிகிரி முடிச்சுட்டான்’’ என்றார். ‘நல்ல படம் ஒண்ணு செஞ்சு முடிச்சுட்டு வந்து பார்’ என என் பையனை அனுப்பிவைத்தார். மாதா மாதம் சம்பளம் கொடுத்தது போக, தனியாக ஒரு லட்சம் கொடுத்து உதவி இயக்குநர்களை அனுப்பிவைப்பது மணிரத்னம் சார் பழக்கம்.
தன்னுடைய உதவியாளர்கள் பணியில் இருந்து போனதும், அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவதை எல்லாம் மணி சார் விரும்ப மாட்டார். ஒரு படம் கமிட் ஆன பிறகு பார்த்தால் போதும். பூஜைக்கோ, பட விழாவுக்கோ வருவார். அதுதான் அவருடைய ஸ்டைல். அப்படித்தான் என் மகன் இயக்கிய ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லே’ படத்துக்கு அவர் வந்தார். மணியான மனிதர்!
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)
பாட்டி சுட்ட வடை!
கதை கேட்பதும், கதையில் லாஜிக்காக விளக்கம் கேட்பதும் இப்போது என் வேலையாகவே ஆகிவிட்டது. சின்னப் பையனாக இருந்தபோது, நிலாவில் ஒரு பாட்டி வடை சுடும் கதையை என் பாட்டி சொன்னார். ‘‘நிலாவில் நிறைய பேர் இருப்பார்களா?’’ எனக் கேட்டேன். ‘‘இல்லை. அந்த ஆயா மட்டும்தான்’’ என்றார் பாட்டி.
‘‘யாருமே இல்லாத இடத்தில் யாருக்காக அந்த ஆயா வடை சுடுகிறார்?’’ என்றேன். கதைக்கு, ஒரு காட்சிக்கு ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆதாரமான ஒரு கொள்கை. கதை உருவாக்கித் தருவதோடு என்னை நிறுத்திக்கொள்வேன். படப்பிடிப்புகளுக்குச் சென்றால் சில காரணங்களுக்காக ஏதாவது மாற்றங்கள் செய்வார்கள். சில வேளைகளில் கதை மேலும் மெருகேறும்... சில நேரங்களில் கதை சிதையும். அதைப் பார்க்க வருத்தமாக இருக்கும். ஆகவே, தேவைப்பட்டால் தவிர நான் படப்பிடிப்புகளுக்குச் செல்லவே மாட்டேன்.