Published:Updated:

வெள்ளி நிலம் - 15

வெள்ளி நிலம் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 15

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - 15

முன்கதை: இமயமலைப் பகுதியில், ஒரு மடாலயத்தில் பழங்காலத்து மம்மி ஒன்று கிடைக்கிறது. அதை, அங்கிருந்து கடத்திச்செல்ல முயற்சி நடக்கிறது. அதன் பின்னணியில் சீன அரசாங்கம் இருப்பதாக ஒரு சந்தேகம் வருகிறது. அது பற்றி துப்பறிய, காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் அவருக்கு உதவியாக டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா அவனது செல்ல நாய் நாக்போ ஆகியோர் இணைகிறார்கள். இவர்களது பணியில் குறுக்கிடுகிறது ஒரு கும்பல். அவர்களை வளைக்க நால்வரும் பூட்டான் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ஹெலிகாப்டர் பழுதடைகிறது... அதிலிருந்து  பனிமலையில் குதிக்கிறார்கள். அங்கு ஒரு குகையைப் பார்த்து அதில் தங்குகிறார்கள். அந்தக் குகையில் ஏற்கெனவே யாரோ தங்கி விட்டுச் சென்றுள்ளது தெரியவருகிறது...   

வெள்ளி நிலம் - 15

பாலிபிராப்பிலீன் என்னும் கிழியாத நைலானால் ஆன பொதிகளை அவிழ்த்து, உள்ளிருந்து உடையாத பிளாஸ்டிக்கால் ஆன பெட்டிகளை எடுத்து வெளியே வைத்துக்கொண்டிருந்த பாண்டியன் திரும்பிப்பார்த்து வியப்புடன், “இது மனிதர்கள் வெட்டிய குகையா? எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“மனிதர்கள் வெட்டிய குகை அல்ல. இயற்கையாகவே உருவான குகைதான். ஆனால், இதன் தரையைப் படுப்பதற்காகச் சமமாக ஆக்கியிருக்கிறார்கள்” என்றார், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். தரையைச் சுட்டிக்காட்டி, “இது, உளியால் செதுக்கப்பட்டுக் கற்களால் மெருகேற்றப்பட்டுள்ளது” என்றார்.

அப்போதுதான் பாண்டியனும் தரையைக் கவனித்தான். அவனுக்கும் அது உண்மை என்று தோன்றியது. நோர்பா “உள்ளே எதையோ பார்த்துவிட்டு வந்து என்னை அழைத்தது” என்றான்.

“உள்ளே நல்ல இருட்டாக இருக்கும். நாம் எளிதாகச் சென்றுவிடமுடியாது. நாக்போ சென்றுவிட்டு வந்ததிலிருந்து, அங்கே ஆக்ஸிஜன் இருக்கிறது என்று தெரிகிறது. நாம் சென்று பார்ப்போம். அதற்கு முன்பு கொஞ்சம் உணவு உண்டு ஓய்வெடுப்போம்” என்றான் பாண்டியன்.

வெளியே சற்றுநேரம் இடைவெளி விட்டிருந்த பனிப்புயல், ஆவேசத்துடன் வீசத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் கூச்சலிட்டபடி ஓடிவந்து பாறைகளை எடுத்து எறிவதுபோல குகைக்கு வெளியே ஓசை கேட்டது. குகையின் வாசல் வழியாக, வெண்ணிறமான பனிப்பொருக்குகள் உள்ளே பீறிட்டுவந்து குவிந்தன. ‘‘உள்ளே ஈரமாகிவிடக்கூடாது” என்றான் நோர்பா.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “இல்லை, பாருங்கள் இந்தப் பனி உருகினால், நீர் வழிந்து வெளியேற ஓடை போல வெட்டப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். “இதற்குள் மனிதர்கள் தங்கியிருக்கிறார்கள்” என்றார்.

வெள்ளி நிலம் - 15“இங்கே, எப்போதுமே பனி இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இங்கே ஏன் வந்து தங்கினார்கள்?” என்றான் நோர்பா.

“அதை, நாம் குகையின் உட்பக்கம் சென்று தேடினால் கண்டடையலாம் என நினைக்கிறேன்” என்றார், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியன், பெட்டிக்குள் இருந்து மெல்லிய டியூராலுமின் பாத்திரத்தையும் நான்கு குவளைகளையும் எடுத்தான். ஒரு சிறிய எரிவாயு அடுப்பும் அதற்குள் இருந்தது. விமானத்தின் உடல் பகுதிகளை டியூராலுமின் கொண்டுதான் தயாரிப்பார்கள். அலுமினியமும் செம்பும் மாங்கனீசும் கலந்து உருவாக்கப்படும் உலோகக்கலவை அது. மிகமெல்லியது, எடையற்றது. ஆனால், மிக உறுதியானது. நோர்பா அதைக் கையில் வாங்கிப்பார்த்தான். காகிதத்தில் செய்ததுபோல இருந்தது.

பாண்டியன், உள்ளிருந்து எரிபொருள் நிரப்பப்பட்ட நான்கு உருளைகளை எடுத்தான். அவை, தீயணைக்கும் வாயு வைக்கப்பட்டிருக்கும் உருளைகள் போலிருந்தன. அவற்றில் ஒன்றை, அவன் அடுப்புடன் இணைத்துப் பற்றவைத்தான். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், உள்ளே வந்துகிடந்த பனிப்பொருக்குகளை அந்தப் பாத்திரத்தில் அள்ளிக்கொண்டுவந்தார். அதை அடுப்பில் வைத்து, அதன்மேல் மூடியைப் பொருத்தினார்.    

“நீரைச் சுடவைக்க எதற்கு பிரஷர்குக்கர்?” என்றான் நோர்பா.

“இங்கே, காற்றின் அழுத்தம் மிகக்குறைவு. நீர் சூடாவது மிகவும் தாமதமாகும். எதையும் அழுத்தப் பாத்திரத்தில் வைத்துதான் சூடுபண்ண வேண்டும்” என்றான் பாண்டியன்.

பொதியில் டீத்தூளும் சீனியும் இருந்தன. நீர் கொதித்து விசில் வந்ததும், அதைத் திறந்து டீ தயாரித்துக் கோப்பைகளில் விட்டு, அளித்தான் பாண்டியன். கூடவே பிஸ்கட்டுகளையும் எடுத்துக் கொடுத்தான். பாதாம்கொட்டையின் மாவு, கொழுப்பு, சீனி, உலர்ந்த பழங்கள் ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட அந்த பிஸ்கட், கேக் மாதிரி கனமாக இருந்தது. உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக அளிப்பது அது.     

வெள்ளி நிலம் - 15

அந்தக் குளிருக்கு, பிஸ்கட்டும் டீயும் அற்புதமான சுவைகொண்டிருந்தன. ‘அப்படி ஒரு சுவைக்காகவே அதைப்போன்ற ஆபத்துக்களில் மாட்டிக்கொள்ளலாம்’ என்று தோன்றியது. நோர்பா அதைத் துளித்துளியாகச் சுவைத்தான்.

பெட்டிக்குள் குளிரில் தூங்குவதற்குரிய படுக்கைப்பைகள் இருந்தன. உள்ளே, கனமான கம்பளி வைத்துத் தைக்கப்பட்ட உயர்தர நைலான் பைகள் அவை. உள்ளே உடலைச் செலுத்தி, ஜிப்பை இழுத்துப் பூட்டிக்கொண்டால், வெளிக்காற்று உள்ளே போகாது. தரையில் அதை விரித்து, உள்ளே உடலை நுழைத்துப் படுத்துக்கொண்டார்கள்.

முதலில், நீருக்குள் விழுந்ததுபோல குளிர்ந்தது. ஆனால், உடலின் வெப்பம் கம்பளியில் பரவியதும், இதமான தூக்கம் வந்தது. கண்ணிமைகள் தானாகவே மூடின.

நாக்டோ, குகைவாயிலில் குந்தி அமர்ந்து காவல் காத்தது. வெளியே, இடி போல பனிப்பாறைகள் பிளந்து விழும் ஓசை கேட்டது. காற்று, மலையிடுக்குகள் வழியாகச் செல்வது... நரிகள் ஊளையிடுவதுபோல ஒலித்தது.

நோர்பா ஒரு கனவு கண்டான். அவன், ஒரு தொன்மையான கோயிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். அருகே, அவன் அம்மாவும் படுத்திருந்தாள். கோயிலுக்குள் இருட்டாக இருந்தது. உள்ளிருந்து யாரோ வருவது தெரிந்தது. அவன் திடுக்கிட்டுப் பார்த்தபோது, அது ஒரு ‘தெய்வம்’ என்று கண்டான். பத்தடி உயரம் இருக்கும். மனிதத் தோற்றம்தான். ஆனால், ஒரு சிலை எழுந்து வருவதுபோல தோன்றியது.

அவன், திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். நாக்போ அவனை நோக்கி ‘’என்ன?’’ என்றது. அவன் “ஒன்றுமில்லை” என்றான்.

நாக்போ, “சின்னப் பையன்” என்று நினைத்துக்கொண்டு, திரும்பி நாக்கால் மூக்கை நக்கிக்கொண்டது.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் பாண்டியனும் எழுந்தார்கள். பாண்டியன் புத்துணர்ச்சியுடன் இருந்தான். “ஒன்பது மணிநேரம் தூங்கியிருக்கிறோம். அத்தனை களைத்திருந்திருக்கிறோம். முதலில், நாம் இங்கே இருப்பதை நம்மைத் தேடிவருபவர்கள் அறிவதற்கு ஒரு கொடியை நாட்டிவிட்டு வருவோம்” என்றான்.

பாண்டியன், பெட்டிக்குள் இருந்து இளமஞ்சள் நிறமான நைலான்கொடியையும் அதை நாட்டுவதற்கான அலுமினியக்குழாயையும் எடுத்துக்கொண்டான். அவனுடன் நோர்பாவும் நாக்டோவும் வெளியே சென்றனர்.

வெளியே, அவர்கள் முன்பு கண்ட பனிநிலத்தின் அமைப்பே மாறியிருந்தது. முற்றிலும் புதிய இடம்போல தெரிந்தது. நேர் முன்னால், ஒரு புதிய பனிக்குன்று உருவாகியிருந்தது. உயிருள்ள ஒரு வெண்ணிற விலங்கு வந்து நிற்பதைப்போல அது தோன்றியது.

“பனி மூடாத இடத்தில்தான் இதை நடவேண்டும்” என்றான் பாண்டியன்.

“அதை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றான் நோர்பா.

“இன்று, மிகப்பெரிய பனிப்பொழிவு. இதுவரை எந்த இடம் பனி மூடாமல் இருக்கிறதோ, அங்கே இனியும் பனி மூடாது” என்றான் பாண்டியன்.

ஒரு கரிய பாறைமுகடை அவன் சுட்டிக்காட்டினான். “அங்கே நடுவோம்” என்றான்.

நாக்போவைக் கீழே நிறுத்திவிட்டு, அவர்கள் இருவரும் மேலேறிச் சென்றனர். பாண்டியன், மலைப்பாறையின் விரிசல்களில் கால்வைத்து, பாறைகளின் பொருக்குகளைப் பிடித்துக்கொண்டு பல்லிபோல தொற்றி மேலேறினான். அவனிடம் மிகமெல்லிய கம்பிச்சுருள் இருந்தது. அது, அதிகமாகக் கார்பன் சேர்க்கப்பட்ட உருக்கால் ஆனது. நன்றாக வளையும். ஆனால், எளிதில் உடையாது. பாறைப்பிளவுக்குள் அந்தக் கம்பியின் அலுமினியக் கொக்கியைச் செலுத்தி இறுக்கி, அதைத் தொங்கவிட்டான். அதைப் பிடித்தபடி நோர்பா மேலே ஏறிச்சென்றான்.

பாறை உச்சியை அடைந்தபோது, அவர்கள் மூச்சுத்திணறினார்கள். அங்கே ஏன் பனி நிற்கவில்லை என்பது அங்கு சென்றபின்னர்தான் தெரிந்தது. மிகவேகமாக அங்கே காற்று வீசிக்கொண்டிருந்தது. பறந்துசெல்லும் விமானத்தின் மூக்கு நுனியில் நிற்பதுபோலத் தோன்றியது.

“இது, இந்த மலையின் நுனி. காற்று இதில் பட்டு, இரண்டாகக் கிழிபட்டு ஓடுகிறது” என்றான் பாண்டியன்.

அங்கே, மலைப்பாறை பனிக்குளிரால் பிளவுபட்டிருந்தது. அலுமினியக்குழாயை ஒன்றுக்குள் ஒன்றாக இழுத்து நீட்டி, ஒரு கம்பமாக ஆக்கினான் பாண்டியன். அதை, அந்தக் குழிக்குள் நட்டு, ஒரு பாறையை எடுத்து அறைந்து இறுக்கினான். அதில் இணைக்கப்பட்டிருந்த மெல்லிய கம்பிகளை நான்கு பக்கமும் இழுத்து, வெவ்வேறு பாறை இடுக்குகளில் அவற்றின் கொக்கியை அறைந்து செலுத்தி இறுக்கிக் கட்டினான்.

‘‘நமது கொடி எடையற்றது. ஆகவே, எந்தக் காற்றிலும் இந்தக் கம்பம் சரியாது” என்றான். அவன் கொடியைக் கட்டி கையை விட்டதும் அது தீயின் தழல்போல துடித்துப் பறக்க ஆரம்பித்தது. குச்சியின் முனையில், ஒரு சிறிய மின்னணு குறிப்பானைப் பொருத்தினான். அது ஒரு பட்டாணிக்கடலை அளவே இருந்தது. ஆனால், மேலே செல்லும் ஹெலிகாப்டரில் இருக்கும் ராடார் கருவியில், அது வீசும் கதிர்கள் சிவந்த புள்ளியாகத் தெரியும்.

மீண்டும் அவர்கள் கீழே வந்தபோது, நாக்போ ஆர்வத்துடன் எம்பிஎம்பிக் குதித்து, அவர்களைச் சுற்றிவந்தது. குகைக்குள் திரும்பியபோது, அவர்கள் களைப்படைந்திருந்தார்கள்.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் டீ போட்டார். அவர்கள் அதைக் குடித்து, பிஸ்கட்டுகளைத் தின்றனர். மீண்டும் சற்று ஓய்வெடுத்தனர்.

“உள்ளே செல்வோமா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“சரி” என்று ஆர்வத்துடன் நாக்போ எழுந்துகொண்டது.

பாண்டியன், பையிலிருந்து நெடுந்தொலைவுக்கு ஒளிவீசும் எல்இடி விளக்கை எடுத்துக்கொண்டான். மிகக் குறைந்த மின்சாரத்தில், மிக அதிக வெளிச்சத்தை எழுப்புவது அது. அதன் முன்னால், ஒரு முப்பட்டைக் கண்ணாடி உண்டு. அது, வெளிச்சத்தைக் குவித்துக் கதிர்போல ஆக்கி வீசும். ஒரு நீண்ட குச்சியைச் சுழற்றுவதுபோல அவன் அந்த வெளிச்சத்தை ஆட்டினான்.

குகையின் இருண்ட உள்வழிக்குள் நுழைந்தார்கள். அவர்களின் காலடிகள் எதிரொலி எழுப்பின. உள்ளே சென்றதுமே டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “இந்த அறை செதுக்கிச் சீராக்கப்பட்டது” என்றார். “பாருங்கள், மேலே உளியின் வடுக்கள் தெரிகின்றன”.

“இங்கே மக்கள் வாழ்ந்தார்களா?” என்றான் நோர்பா.

“இங்கே, சாதாரணமாக வாழ முடியாது. இங்கே, வேட்டைக்குக்கூட விலங்குகள் இல்லை. இது ஒரு கோயில் என நினைக்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

அவர்கள், மேலும் உள்ளே சென்றனர். நாக்போ உள்ளே சென்று அங்கே நின்று குரைத்தது.

மேலும் உள்ளே சென்று நின்றனர். அங்கே, ஆக்ஸிஜன் குறைவாக இருந்தது. குகையின் பாறைச்சுவர்களில் படிந்திருந்த ஒருவகைப் பாசியின் அழுகிய முட்டைபோன்ற நாற்றம் நிறைந்திருந்தது.

“அழுகும் நாற்றம்” என்றான் நோர்பா.

“அந்தப் பாசி, கார்பன்டை ஆக்ஸைடை இழுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஆகவேதான், நாம் இங்கே நிற்கமுடிகிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

பாண்டியனின் விளக்கொளி பட்டதும் அங்கே குகையின் சுவரில் புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்த ஓரு சிலையை அவர்கள் கண்டனர்.

“டாக்டர், இந்தச் சிலை... நாம் கண்ட அந்த மம்மியைப்போல அமர்ந்திருக்கிறது” என்றான் பாண்டியன்.

“ஆம், இது ஷென்ரோப் மிவோச்சே என்னும் ‘பான்’ மத தெய்வத்தின் சிலை. உலகை அழிக்கும் தெய்வம் இது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஆம், வலது கையில் மின்னலை ஆயுதமாக வைத்திருக்கிறது. இடது கையில் தீயை வைத்திருக்கிறது” என்றான் நோர்பா.

“மிகத்தொன்மையான சிலை. இவ்வாறு பாறையில் கொஞ்சம் மட்டும் புடைத்துத் தெரிவதுபோல செதுக்குவதை ஆங்கிலத்தில் Bas relief என்றும் சம்ஸ்கிருதத்தில் அர்த்த சித்திரச்சிற்பம் என்றும் சொல்வார்கள். கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தனித்து நின்றிருக்கும் சிற்பங்கள் வந்தன. அவற்றைப் பூர்ணசித்திரச் சிற்பங்கள் என்பார்கள்” என்றார் டாக்டர்.

அந்தச் சிலை, எட்டடி உயரம் இருந்தது. அதன் பீடத்தில் சித்திர எழுத்துக்கள் இருந்தன. விளக்கை அடித்து அதைப் பார்த்தார், டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்    

வெள்ளி நிலம் - 15


“அந்த டாங்கா திரைச்சீலைகளில் இருந்த அதே எழுத்து… மம்மியின் கைகளில் இருந்ததும் இதுதான்” என்றான் பாண்டியன்.    

“இந்தக் குகைக்கோயில் இங்கே இருப்பது, இதுவரை எவருக்கும் தெரியவில்லை. இங்கே, எவரும் சமீபத்தில் வந்துசென்றதுபோல தெரியவில்லை” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

அவர்கள், அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். “கொடூரமான தெய்வமாகத் தோன்றுகிறது. இங்கே நின்றிருப்பதே அச்சமளிக்கிறது” என்றான் நோர்பா.

“திபெத்தில், பௌத்தமதம் வருவதற்கு முன்னரே இந்தக் கோயிலை அமைத்திருக்கிறார்கள். இங்கே பௌத்தமதத்தின் சாயல்கள் எதுவும் இல்லை” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

நாக்போ சிலைக்குப் பின்னால் சென்று குரைத்துக்கொண்டே இருந்தது. நோர்பா பின்னால் போனான். அங்கே வட்டமான ஒரு பாறை இருந்தது.

“இதைப் பார்த்தால், பலிபீடம்போல தெரிகிறது. ஷென்ரோப் மிவோச்சேவுக்கு இங்கே பலிகளைக் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்.

அவன் தன் கைவிளக்கை இருட்டுக்குள் சுழற்றினான். ஒளி சுழன்று வந்தபோது நோர்பா, “ஆ” என அலறினான்.

அந்தக் குகையின் இருட்டுக்குள் ஏராளமான வெண்ணிறமான மண்டை ஓடுகள் தெரிந்தன.

“மண்டை ஓடுகளா?” என்றான் பாண்டியன்.

“ஆம், பலிகொடுக்கப்பட்டவர்களாக இருக்கலாம் அல்லது இங்கே வந்து உயிரைத் தியாகம் செய்திருக்கலாம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்” என்றான் பாண்டியன்.

“ஆயிரக்கணக்கில்… பாருங்கள் அடியில் மேலும் மேலும் எலும்புகள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“எனக்கு மூச்சுத்திணறுகிறது…செல்வோம்” என்றான் நோர்பா.

அப்போது, வெளியே பெரிய சைரன் ஒலி கேட்டது. “வந்துவிட்டார்கள்” என்று பாண்டியன் சொன்னான். “நல்ல காலம்…. ஒரே நாளில் நம்மைக் கண்டுபிடித்துவிட்டார்கள்… வாருங்கள்…”

அவர்கள் திரும்பி, குகையின் வெளிப்பக்கம் நோக்கி ஓடினார்கள். நாக்போ உள்ளே எதையோ நோக்கிக் குரைத்துக்கொண்டே இருந்தது. “நாக்போ, வா” என்றான் நோர்பா.

“மனிதர்கள் பயந்தாங்குளிகள்” என்றபடி நாக்போ ஓடிவந்தது. ‘என் வாழ்க்கை முழுக்கக் கடிப்பதற்கான எலும்புகள் அங்கே இருந்தன. இந்த முட்டாள்கள் திரும்பிச்செல்கிறார்கள் என்ன செய்வது’ என்று நாக்போ எண்ணிக்கொண்டது.

(தொடரும்...)