பொது அறிவு
Published:Updated:

டூடுல் கதைகள்

டூடுல் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
டூடுல் கதைகள்

விஷ்ணுபுரம் சரவணன் - ஞா.சுதாகர் - ஓவியங்கள்: இரா.இராஜகவி

டூடுல் கதைகள்

மழை நல்லதுதானே ஃப்ரெண்ட்ஸ்?

ம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர் கலந்து, கால், கை, உடை என அனைத்தையும் அழுக்காக்கி, ரசித்து ரசித்து ஒரு காண்டாமிருகப் பொம்மையைச் செய்து, வெயிலில் காயவைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றிருந்தாள் மீனா. கொம்பு மட்டும் சரியாக வளராத அந்தப் பொம்மைக்கு பீம் என்று பெயரும் வைத்திருந்தாள்.  

டூடுல் கதைகள்

ஆனால், அவள் வீடு திரும்புவதற்குள் காண்டாமிருகத்தை மீண்டும் களிமண்ணாகவே மாற்றி வைத்திருந்தது மழை. பிறகு எப்படி மீனாவுக்கு மழை பிடிக்கும்? அதனால்தான் அந்தக் கோபம்.

அதனால் இரண்டு நாள்கள் கழித்துப் பள்ளியில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியில், இந்தச் சோகக் கதையைச் சொல்லி ‘மழை ரொம்ப கெட்டது மிஸ்’ என எழுதவிருப்பதாக, தன் அம்மாவிடம் கோபமாகச் சொன்னாள் மீனா. இரண்டு நாள்கள் சென்றன. அந்த இரண்டு நாள்களும் மீனாவிடம் மன்னிப்புக் கேட்பதற்காகவோ என்னவோ, இரவு முழுக்க தூறிக்கொண்டே இருந்தது மழை.

தினமும் காலையில் பள்ளி செல்வதற்கு முன் தோட்டத்துக்குச் செல்வது மீனாவின் வழக்கம். போட்டி நடக்கவிருக்கும் அன்றைய தினமும் அப்படித்தான் தோட்டத்துக்குச் சென்றாள். செம்பருத்தி, மல்லி, ரோஜா என அத்தனை செடிகளும் அவளைப் புன்னகையுடன் வரவேற்றன. எப்போதும் இல்லாத அளவுக்குத் தேனீக்கள் தோட்டத்துக்கு வந்திருந்தன. ஓரமாக இருந்து இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது செடிகளுக்கு நீர் தெளிக்கும் பூவாளி.

சில நாள்களுக்கு முன்னர் வீசியெறிந்த மாம்பழ விதையும் லேசாகத் துளிர்விட்டிருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மீனா, காண்டா மிருகத்துக்கு வைத்த பீம் என்ற பெயரை மரத்துக்கு வைத்து மகிழ்ந்தாள். பின்னர் பள்ளி சென்ற மீனா, தன் கதைக்கு இப்படித் தலைப்பு வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தாள்.

‘மழை ரொம்ப நல்லது ஃப்ரெண்ட்ஸ்...’

காதோரம் அமர்ந்துகொண்டு அந்தக் கட்டுரையை ரசித்து வாசித்துக்கொண்டிருந்தது, தோட்டத்தில் அன்று மலர்ந்திருந்த மீனாவின் ரோஜா.

எது புத்திசாலித்தனம்?

ண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும் தொலைந்ததில் இளவரசிக்கு மிகுந்த வருத்தம். இளவரசியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

டூடுல் கதைகள்

தொலையாத இன்னொரு செருப்பை ராஜா காவலர்களிடம் காட்டி, உடனே தொலைந்த அந்தச் செருப்பைக் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கு 1000 பொற்காசுகள் பரிசுத்தொகை அறிக்கப்படும் என்றும் அறிவித்தார். காவலர்களும் அரண்மனை முழுவதும் தேடத்தொடங்கினர். ஆனால் 10 நாள்களாகியும் அந்த ஒற்றைச் செருப்பு கிடைத்தபாடில்லை. இளவரசியோ இன்னும் அந்தச் செருப்பை மறக்கவில்லை. மன்னரும் காவலர்கள்மீது கோபத்தில் இருந்தார். அப்போதுதான் மந்திரி சோமன் ஒரு யோசனையைச் சொன்னார்.

“மன்னா... செருப்பு நம் அரண்மனையில் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லா இடங்களிலும் தேடிவிட்டோம். எனவே அந்த இன்னொரு செருப்பைக் கொடுத்தால், அரண்மனைக்கு வெளியே எங்காவது இதுபோல இருக்கிறதா எனத் தேடிப்பார்ப்பேன்” என்றார். மன்னரும் ‘சரி’ எனச் சொல்லி, அந்த ஒற்றைச் செருப்பைக் கொடுத்தனுப்பினார்.

அன்று மாலையே மற்றொரு ஜோடி செருப்புடன் அரண்மனையில் ஆஜரானார் சோமன். மன்னருக்கும் இளவரசிக்கும் ஒரே மகிழ்ச்சி. உடனே 1000 பொற்காசுகளை பரிசாகக் கொடுத்தனுப்பிவிட்டார் மன்னர். ஆனால் அடுத்த நாளே, சோமன் உண்மையான செருப்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், செருப்பு வியாபாரி ஒருவரிடம் 100 பொற்காசுகள் கொடுத்துப் போலிச் செருப்பைத் தயாரித்து வந்து கொடுத்துள்ளார் என்று தெரியவந்துவிட்டது.

உடனே மந்திரியை  அழைத்தார் மன்னர். விஷயத்தைச் சொல்லிக் கோப வார்த்தைகளை வீச, கொஞ்சமும் பதற்றமின்றி பதில் சொல்லத்தொடங்கினார் சோமன்.

“மன்னா... அந்தச் செருப்பை, வியாபாரி மூலம் தயாரித்தது உண்மைதான். அதற்கு எனக்கு 100 பொற்காசுகள்தான் செலவானது. ஒருநாள்கூட ஆகவில்லை. இதனை நீங்கள் அல்லவா முதலில் செய்திருக்க வேண்டும்? அதைவிடுத்து 10 நாள்கள் அரண்மனைக் காவலர்களுக்கு இந்த வேலையைக் கொடுத்தது எந்த வகையில் நியாயம்?” எனக் கேட்க, “நீ செய்தது ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்தாயா இல்லையா?” எனக் கொதித்தார் மன்னர்.

“மன்னா... இந்த நொடிவரை அந்தச் செருப்பு போலியானது என்பது இளவரசிக்குத் தெரியாது. ஒருவேளை, நான் தயாரித்த செருப்பு சில நாள்களில் பிய்ந்து போகலாம். ஆனால், நீங்கள் நினைத்திருந்தால் இன்னும் தரமான செருப்பையே தயாரித்திருக்கலாமே? ஆனால், தொலைந்த இன்னொரு செருப்பை அல்லவா தேடி அலையச் சொன்னீர்? பிரச்னையைப் பெரிதாக்குவதைவிட, அதனைத் தீர்ப்பதுதான் புத்திசாலித்தனம் மன்னா” என்றார் சோமன்.

ஆனாலும் சமாதானம் அடையாத மன்னர், “எனக்கே புத்தி சொல்கிறீர்களா?” எனக் கோபத்துடன் கேட்க, “அதுதானே மன்னா, மந்திரியின் வேலை?” என நச்சென பதில் சொன்னார் சோமன். தன் தவறைப் புரிந்துகொண்ட மன்னர் மந்திரியின் சாமர்த்தியத்தில் மயங்கி அவருக்கு மேலும் 1000 பொற்காசுகளைப் பரிசளித்தார்.

யானைக்கு என்னாச்சு?

ந்த ஊரில் உள்ள பெரிய கோயில் அது. அதன் வாசலில் அழகான யானையையும் பாகனையும் எப்போதும் பார்க்கலாம். யானைக்கு வாழைப்பழத்தைக் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு, நம் தலையில் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் வழங்கும். யானையின் பின்னங்கால்களில் ஒன்றில் சங்கிலி இருக்கும். அதன் மறுமுனை கோயில் தூணில் கட்டப்பட்டிருக்கும். விடியற்காலையிலேயே யானையை ஆற்றுக்கு அழைத்துச்செல்லும் பாகன், குளிப்பாட்டிவிடுவார்.   

டூடுல் கதைகள்

எப்போதும் தன் காதுகளை ஆட்டியவாறு மெல்ல அசைந்துகொண்டிருக்கும் யானை, அன்று காலையிருந்து எழுந்து நிற்கவே இல்லை. கோயில் கிணறு இருந்த திசையைப் பார்த்தவாறு படுத்தே கிடந்தது. யானைப் பாகன் என்னென்னவோ செய்துவிட்டார். ம்ஹூம்... ஒரு பயனும் இல்லை.

கோயிலின் எதிரே பூக்கடை வைத்திருப்பார், தினமும் ஒரு மாலை எடுத்துவந்து யானையிடம் கொடுப்பார். அதை வாங்கும் யானை, பாகனிடம் கொடுக்கும். அவர் மாலையை யானையின் தோளில் சிறிது நேரம் அணிவிப்பார். அதன்பிறகுதான் பூக்கடைக்காரர் வியாபாரத்தை ஆரம்பிப்பார். இன்று யானை இப்படிச் சுணக்கமாகக் கிடப்பதைப் பார்த்த பூக்கடைக்காரர், தான் கட்டிய மாலைகளிலிருந்து பெரிய மாலையாக எடுத்துவந்து யானையிடம் கொடுத்தார். யானை அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

கோயில் பூசாரி கொடுக்கும் சர்க்கரைப் பொங்கல் என்றால், யானைக்கு அவ்வளவு பிடிக்கும். அவரும் வாளி முழுக்க சர்க்கரைப் பொங்கலை எடுத்துவந்து கொடுத்துப் பார்த்தார். அப்போதும் யானை எழுந்திருக்கவில்லை. ஆனால், தன் சங்கிலியை மட்டும் அடிக்கடி பார்த்துக்கொண்டேயிருந்தது.

பலாப்பழம் விற்கும் ராமு வழக்கமாக பலாப்பழத் தோல்களையே கொடுப்பார். ஆனால், ‘யானை இப்படிக் கிடக்கிறதே’ என பலாச் சுளைகளையே ஒரு தட்டு நிறைய எடுத்துவந்து கொடுத்தார். யானை தலையைத் திருப்பி அந்தப் பழச் சுளைகளைப் பார்த்தது. ஆனாலும், எழுந்திருக்கவில்லை.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பூரணி, கோயிலுக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடமிருந்து தேங்காய் மூடியை வாங்கிவந்து, யானைக்குத் தருவாள். யானையும் அதை விரும்பிச் சாப்பிடும். இன்று பூரணி தன் வீட்டிலிருந்து நான்கைந்து தேங்காய் மூடிகளை எடுத்துவந்து தந்தபோதும், யானை தன் உடலைக் கொஞ்சமும் அசைக்கவில்லை.    

டூடுல் கதைகள்

யானைக்குக் கரும்பு என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், பாகன் ஓடிச்சென்று எங்கிருந்தோ இரண்டு கரும்புகளைத் கொண்டுவந்தார். அவற்றை யானையின் முன்னால் நீட்டினார். ம்ஹூம்... ஒரு பயனும் இல்லை.

அந்த ஊரின் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருப்பவர் கணேசன். அவர் தினமும் காலையில் வந்து யானையின் நெற்றியில் அழகாக வரைவார். அவர் வரைந்து முடிக்கும்வரை ஆடாமல் அசையாமல் ஒத்துழைக்கும் யானை, இன்று அவரைப் பார்த்தும் தலைகுனிந்தே இருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் இப்படியே தொடரவே, யானைக்கு உடம்புக்கு என்னவோ ஆகிவிட்டது என அனைவரும் வருத்தப்பட்டனர். அப்போது, யானையின் அருகில் வந்த ஆகாஷ் மட்டும் ஒன்றைக் கவனித்துவிட்டான். யானையைக் கட்டியிருந்த சங்கிலியின்மீது ஒரு நத்தை மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. அது சென்ற தூரத்தைச் சொல்லும் வகையில், சங்கிலியில் எச்சில்போல ஒரு திரவம் கோடாக இருந்தது. சங்கிலி புரண்டால், நத்தைக் கீழே விழுந்து நசுங்கிச் செத்துவிடுமே என ஆகாஷ் கவலைப்பட்டான்.

யானையில் கால் பக்கத்திலிருந்து சங்கிலி வழியே பயணப்பட்ட நத்தை, இப்போது கோயில் தூணை நெருங்கிவிட்டிருந்தது. மெள்ள மெள்ள நகர்ந்த நத்தை, தூணிலும் ஏறிவிட்டது. அடுத்த நொடி, யானை சட்டென்று எழுந்து நின்றது. வழக்கம்போல உற்சாகமாகக் காதுகளை ஆட்டியது. எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கத் தொடங்கியது. எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி உண்டானது. அதேநேரம், இவ்வளவு நேரம் ஏன் அப்படி இருந்தது என்ற குழப்பம் ஒரு கோடாக அவர்களிடம் இருந்தது.

ஆகாஷுக்கு மட்டும் யானை ஏன் ஆடாமல் அசையாமல் படுத்துக்கிடந்தது எனப் புரிந்தது.

மான் தப்பியது எப்படி?

ந்த மான் இப்படி ஓர் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம் என்று அதுவரை  நினைத்துப் பார்த்ததேயில்லை.      

டூடுல் கதைகள்

காட்டின் நடுவே இருக்கிறது மிகப்பெரிய அருவி. அதன் ஓரத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த மானுக்கு, புலியின் உறுமல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், பாய்ந்தால் பிடித்துவிடும் அருகில் புலி. சிறிய பாறை, பெரிய புதர் எல்லாவற்றையும் கண் இமைக்கும் நேரத்தில் தாவிச்சென்ற மான், தாழ்ந்துகிடந்த கொய்யா மரக்கிளைகளுக்கு இடையில் புகுந்து ஓடியது. அப்போது, ஒரு கிளையில் மானின் கொம்புகள் சிக்கிக்கொள்ள, அதை மீட்க முடியாமல் தவித்தது.

காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்தது மான். அந்தப் பகுதியில் எந்த விலங்கும் தென்படவில்லை. புலி ஓடிவரும் அதிர்வை உணர்ந்தது மான். இன்னும் சில நிமிடத்தில் புலி வந்துவிடும். எவ்வளவு வலுவாக இழுத்தாலும் மாட்டிக்கொண்ட கொம்புகள் விடுபடவில்லை. இன்னும் வேகமாக இழுத்தால், கொம்புகள் உடைந்துதான் போகும். இப்போது, மானின் கண்களில் தென்படும் தூரத்தில் புலி வந்துவிட்டது.

அந்த நேரத்தில் காற்று வேகமாக வீசத் தொடங்கியது. காற்றில் பறந்த மணல்துகள்கள், புலியின் கண்களில்பட்டது. அதன் வேகம் குறைந்து, குறைந்து நின்றேவிட்டது. கொய்யா கிளை காற்றில் மேலும் கீழும் ஆடினாலும், மானால் விடுபட முடியவில்லை. ஓரிரு நிமிடத்தில் காற்றின் வேகம் குறைந்தது. புலி மீண்டும் மானை நோக்கி ஓடிவரத் தொடங்கியது. மான், தன் வலிமை முழுவதையும் திரட்டி, கிளையை ஆட்டியது. அப்போது, மரத்தின் கிளை ஏதோ நகர்வதுபோல இருந்ததைப் பார்த்தது. ஒரு மலைப்பாம்பு, இரையைத் தின்றுவிட்டு மரத்தின் கிளையில் படுத்திருந்தது. அதன்மீது, மான் ஆட்டிய கிளை உரசி உரசி வலியை ஏற்படுத்தியுள்ளதுபோலும்!மலைப்பாம்பு கோபத்துடன் தலையை உயர்த்த, இப்போது இரண்டு ஆபத்துகளிடம் சிக்கிக்கொண்டது மான். கோபத்துடன் மானைத் தாக்குவதற்காகத் தன் உடலை மரத்திலிருந்து இழுத்தது மலைப்பாம்பு. அந்த வேகத்தில் மானின் கொம்பைப் பிடித்திருந்தக் கிளை விடுபட்டு மேலே சென்றுவிட்டது. அவ்வளவுதான்... மான் ஓட்டம் பிடித்தது.

பாய்ந்த புலியும் சீறிய பாம்பும் ஏமாந்து பார்த்தன.