பொது அறிவு
Published:Updated:

அறைக்குள் ஒரு குரல்!

அறைக்குள் ஒரு குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறைக்குள் ஒரு குரல்!

பாலு சத்யா - ஓவியங்கள்: அசோக்

தாத்தா ஊரிலிருந்து வந்து இருபது நாள்களுக்கு மேல் ஆகிறது. இதுபோல நடந்ததில்லை. இரவு 10 மணிக்குத்  தாத்தாவின் அறையில் அந்தச் சத்தம் கேட்டது. உரத்த குரலில் யாரோ பேசும் சத்தம். அம்மாவும் அப்பாவும் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். பாலாஜி ஹாலில் படுத்திருந்தான். எழுந்திருக்காமல், கண்களைத் திறந்து பார்த்தான். அப்பா, அறை வாசலில் நின்றுகொண்டு கதவைத் தட்டலாமா, வேண்டாமா என்கிற யோசனையோடு திரும்பி அம்மாவைப் பார்த்தார்.  

அறைக்குள் ஒரு குரல்!

``வெயில் உச்சிக்கு வர்றதுக்குள்ள வேலையை முடிக்கணும்னுதானே பேச்சு... நாங்கள்லாம் விடியறதுக்கு முன்னாடியே கெளம்பி வயக்காட்டுக்கு வந்துட்டோம். நீ மட்டும் எட்டு மணிக்கு வந்தா நல்லாவா இருக்கு..?’’ இது தாத்தாவின் குரல்... சட்டென்று அந்தக் குரல் மாறியது.

``என்னா பெரியப்பா தெரியாத மாதிரி கேக்குறீங்க... நேத்து சாயந்திரம் திண்டிவனம் சந்தைக்குப் போயிட்டேன்ல... திரும்பி வர்றதுக்கு 10 மணிக்கு மேல ஆயிடுச்சு... கொஞ்சம் அசந்துட்டேன்... ஒரு நாளுதானே... போனாப் போகட்டும்னு விடுங்களேன்...’’

மாறி மாறிக் குரல்கள் கேட்டதில் பாலாஜி பயந்துவிட்டான். எழுந்திருக்கலாமா, வேண்டாமா என்கிற யோசனையில் அப்படியே படுத்திருந்தான். அப்பா, தாத்தா இருந்த அறைக் கதவைத் தட்டினார். இப்போது குரல்கள் அடங்கியிருந்தன. அறையில் விளக்கு எரிந்தது. தாத்தா, கதவைத் திறந்தார். அப்பாவை என்ன என்பதுபோலப் பார்த்தார்.

``அப்பா யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்தீங்க?’’

``நானா... இல்லையே! நல்லா கண் அசந்துட்டேன். நீ கதவத் தட்டுற சத்தம் கேட்டுத்தான் எழுந்து வந்தேன்.’’

அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ``சரிங்கப்பா... நீங்க படுங்க!’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். தாத்தா, அறைக் கதவைச் சாத்தி, தாழிட்டுக்கொண்டார். அதற்குப் பிறகு வேறு எந்தச் சத்தமும் தாத்தாவின் அறையில் இருந்து கேட்கவில்லை. பாலாஜியும் உறங்கிப் போனான்.   
 
டுத்த நாள் காலை... ``இன்னிக்கி ஸ்கூல் ரீ ஓப்பனிங்... செவன்த் ஸ்டாண்டர்டு புக்ஸ், நோட்டெல்லாம் ஸ்கூல்லயே குடுத்துடுவாங்க, ஒரு ரஃப் நோட் மட்டும் எடுத்துக்கோ!’’ அம்மா, பாலாஜியின் டிபன் பாக்ஸில், பிசைந்த கீரை சாதத்தை வைத்தபடிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

``சரிம்மா...’’

அப்பாவும் பாலாஜியும் டிபன் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். அப்பா, உடை மாற்றத் தன் அறைக்குள் போனார்.

``ஏங்க... சீக்கிரம் வாங்க! எனக்கும் டைம் ஆகுது...’’ அம்மா குரல் கொடுத்தபடி, சமையலறை சிங்க்கில் பாத்திரங்களைப் போட்டுக்கொண்டிருந்தார். பாலாஜி திரும்பிப் பார்த்தான். தாத்தா, ஹாலின் ஓர் ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்து டி.வி-யை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பாலாஜி அவர் அருகில் போனான்.

``ஏன் தாத்தா... ராத்திரி உங்க ரூம்ல ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டுச்சாமே... அம்மா சொன்னாங்க. யாரோட தாத்தா பேசினீங்க?’’

``அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா கண்ணு!’’என்ற தாத்தா, அவன் மோவாயைப் பிடித்து அழுத்திக் கொஞ்சினார். ``இன்னிக்கித் தான் பள்ளிக்கூடம் தொறக்குறாங்களா... அப்போ நீயும் வீட்ல இருக்க மாட்டே...’’

``நாலு மணிக்கெல்லாம் வந்துடுவேன் தாத்தா. ரெண்டு பேரும் சேர்ந்து டோரிமான் பார்ப்போம்... சரியா?’’

அதற்குள் வாசலில் ஸ்கூல் வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்க, பேக்கைத் தூக்கிக்கொண்டு, ``வரேன் தாத்தா... அம்மா பைம்மா... அப்பா பை!’’ என்றபடி ஓடினான் பாலாஜி.

அடுத்த பத்தே நிமிடங்களில் பாலாஜியின் அம்மாவும் அப்பாவும் கிளம்பிவிட்டார்கள். அப்பா, திருவள்ளூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அம்மாவுக்கு சைதாப்பேட்டையில் ஒரு வங்கியில் வேலை.

``மாமா... கதவை மட்டும் சாத்தினா பத்தாது. கேட்டையும் பூட்டிடுங்க. யாராவது கூப்பிட்டா ஜன்னல் வழியா பார்த்துட்டு, யாருனு விசாரிச்சுட்டுக் கதவைத் திறங்க. டேபிள்ல டிபன் வச்சிருக்கேன். மதியச் சாப்பாட்டை ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டுத் தட்டை மட்டும் சிங்க்ல போட்டுடுங்க. எங்கேயாவது வெளியில போகணும்னா, நாங்க வந்த பிறகு போங்க. ஏதாவது அவசரம்னா எனக்கு இல்லைன்னா அவருக்கு போன் பண்ணுங்க. ஜாக்கிரதை...’’

பாலாஜியின் அப்பா, தாத்தாவின் கையைப் பிடித்து ஓர் அழுத்து அழுத்திவிட்டு வெளியே போனார். கதவையும் கேட்டையும் சாத்திவிட்டு, இருவரும் ஸ்கூட்டரில் போவதைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார் தாத்தா.

காலையில் சொன்னதுபோல நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டான் பாலாஜி. முகம் கழுவி, உடை மாற்றிக்கொண்டு வந்தவனுக்குத் தாத்தாவுடன் டி.வி பார்க்கக்கூட நேரம் இல்லை. ஹோம் வொர்க், பாடங்கள், மனப்பாடப் பகுதி... என முதல் நாளே படிக்கவும் எழுதவும் வேலைகள் நிறைய இருந்தன. இரவு ஏழு மணிக்கு அவன் வேலைகளை முடித்தபோதுதான் அம்மாவும் அப்பாவும் வந்து சேர்ந்தார்கள். அம்மாவுக்கு அதன் பிறகும் வேலைகள்... சமையலறை அப்படியே இழுத்துக்கொண்டுவிட்டது. தாத்தா, வாசல் கேட் அருகே நின்றுகொண்டு போகிற, வருகிற வாகனங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

எல்லோரும் உறங்குவதற்காகப் படுக்கைக்குச் சென்றபோது இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அன்று இரவு தாத்தாவின் அறையில் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அடுத்த நாள் காலையும் அதேபோல பரபரப்பாக அந்தக் குடும்பத்துக்கு விடிந்தது. மாலை வீடு திரும்பிய பிறகும் அதே கதை தொடர்ந்தது. அன்றைக்கு இரவு தாத்தாவின் அறையில் அதே பேச்சுச் சத்தம், கூச்சல்... அப்பா தடதடவென்று கதவைத் தட்டினார். பாலாஜியும் எழுந்துகொண்டான்.

கதவைத் திறந்த தாத்தாவிடம், ``என்னப்பா இது... சத்தமா நீங்களே பேசிக்கிறீங்க..?’’ என்று கேட்டார்.

``நானா... இல்லையே!’’

``அப்பா... நீங்க பேசுறது எங்க ரூம் வரைக்கும் கேட்குது. பதறிப் போய் ஓடி வர்றோம். இல்லைங்கிறீங்களேப்பா. பாலாஜி, உனக்குக் கேட்டுச்சா?’’

பாலாஜி ஆமாம் என்பதுபோலத் தலையை அசைத்தான். தாத்தா, பாலாஜியை ஒருமுறை கூர்ந்து பார்த்தார்... ``நான்தான் பேசலைனு சொல்றேன்ல?’’ என்று கொஞ்சம் அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு, கதவைச் சாத்தாமல் அறைக்குள் போய் கட்டிலில் உட்கார்ந்துகொண்டார். அப்பாவும் அம்மாவும் சற்று நேரம் அப்படியே நின்றார்கள். பிறகு தங்கள் அறைக்குள் போய்விட்டார்கள். பாலாஜி திரும்பப் படுத்துக்கொண்டான். அவன் காலையில் எழுந்தபோது, தாத்தாவின் அறைக்கதவு திறந்திருந்தது; தாத்தா கட்டிலில் முதல் நாள் உட்கார்ந்திருந்த நிலையிலேயே அமர்ந்திருந்தார்.

அன்றைக்கு அப்பா வேலைக்குப் போகவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு க்ளினிக்குக்குத்  தாத்தாவை அழைத்துப் போனார். டாக்டரோ, தாத்தாவுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சொல்லி வைட்டமின் மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார். தாத்தா அறையில் சத்தம் போடுவது தொடர்ந்துகொண்டே இருந்தது.

அப்பா, எழுந்துபோய், கதவைத் தட்ட ஆரம்பித்ததும் தாத்தா அமைதியாகிவிடுவார். வீட்டுக்கு வந்தால் பாலாஜிக்கு எங்கே தாத்தா இன்று இரவும் சத்தம் போட்டுப் பேசுவாரோ என்கிற பயமே அதிகம் இருந்தது.   

அறைக்குள் ஒரு குரல்!

டுத்த நாள், அது பி.டி பீரியட். வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்கெட் பால் விளையாடிக்கொண்டிருக்க, பாலாஜி மட்டும் விளையாட மனமில்லாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். பி.டி மாஸ்டர் மாணவர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். அவருக்கு பாலாஜியை ரொம்பப் பிடிக்கும். அருகே வந்தார். விசாரித்தார். அவன் தாத்தாவின் நிலையைப் புரிந்துகொண்டார். பாலாஜியின் அப்பாவின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார்.

அன்று மாலை, சீக்கிரமே அப்பா வீடு திரும்பிவிட்டார். தாத்தாவை அழைத்துக்கொண்டு எங்கேயோ வெளியே போனார். இருவரும் திரும்பி வரும்போது பேசியபடி வந்தார்கள். என்றைக்கும் இல்லாதபடி தாத்தா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. ``எங்க தாத்தா போயிருந்தீங்க?’’ என்று கேட்டான் பாலாஜி.

``பக்கத்துலதான்... கில் நகர் பார்க்காமே... அங்கே.’’

``என்னையும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம்ல?’’
 
``உனக்கு ஹோம் வொர்க் இருக்குனு சொன்னியே... அதனாலதான். வர்ற ஞாயித்துக்கிழமை தாத்தாவே அழைச்சுட்டுப் போறேன்...’’

``ஏம்ப்பா... நம்ம ஊர் தெக்குத் தெருவுல உங்க ஃப்ரெண்டு நாராயணன் இருந்தாரே... எப்பிடிப்பா இருக்காரு?’’ என்று அப்பா கேட்க, ``போஸ்ட்மேன் வேலை பார்த்தானே அந்த நாராயணனைத்தானே கேட்கிறே..?’’ என்றபடி தாத்தா நீளமாகப் பேச ஆரம்பித்தார். அப்பா, காது கொடுத்து அப்பா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அன்று இரவு தூங்கப்போகும் வரை பேச்சு நீண்டது. அன்று இரவு தாத்தா அறையில் இருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

அதற்குப் பிறகு வீட்டில் நடந்ததெல்லாம் பாலாஜி எதிர்பாராத மாற்றங்கள். அம்மாவும் அப்பாவும் எதற்கெடுத்தாலும் தாத்தாவை யோசனை கேட்டார்கள்... `இன்றைக்கு என்ன சமைக்கலாம்?’ என்பது தொடங்கி, திருநெல்வேலி மாமா பெண் கல்யாணத்துக்கு யார் போவது என்பது வரை. தாத்தா, உற்சாகமாகப் பதில் சொன்னார். அம்மா பட்டியலை எடுத்து நீட்ட கடைகளுக்குப் போய் பொருள்கள் வாங்கி வந்தார்; எலெக்ட்ரிக் பில் கட்டுவது, வீட்டு உரிமையாளருக்கு வாடகைப் பணம் கொடுப்பது என எல்லாவற்றையும் அவரே செய்யத் தொடங்கினார்.

இப்போது தாத்தாவுக்கு நிறைய வேலைகள், நிறைய பேச்சு! பாலாஜியுடன் வார இறுதியில் பார்க்குக்குப் போவது... அங்கேயும் தாத்தாவுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைத்துவிட்டார்கள். தாத்தா வீட்டுக்குப் பின்னால் இருந்த சின்ன இடத்தில் காய்கறிச் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்திருந்தார். அப்பாதான் அதற்குத் தேவையான விதைகள், தோட்டச் சாமான்களையெல்லாம் வாங்கி வந்திருந்தார். எல்லோரும் குடும்பத்தோடு சேர்ந்து ஒருநாள் மெரீனா பீச்சுக்கெல்லாம் போனார்கள். அன்றைக்குத் தாத்தா இல்லாத நேரத்தில் பாலாஜி, அப்பாவிடம் கேட்டான்... ``எப்பிடிப்பா தாத்தா இப்பிடி மாறினார்?’’

``இதுக்குக் காரணமே உங்க பி.டி மாஸ்டர்தான்டா. அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். பாட்டி இறந்ததுக்கு அப்புறம் தாத்தா தனியா இருப்பாரேனு இங்கே கூட்டிட்டு வந்தோம். இங்கேயும் அவரைத் தனியாகவே விட்டுட்டோம். ஊர்ல எப்போ பார்த்தாலும், நாலு பேரோட பேச்சு, பேச்சுனு வாழ்ந்திருந்தவர். இங்கே பேச்சுத்துணைக்கே ஆள் இல்லையா? சோர்ந்து போயிட்டார். இதுகூட ஒருவிதத்துல மன வியாதி மாதிரிதான். அப்பிடியே கவனிக்காம விட்டிருந்தோம்னா அவரோட மனசு ரொம்பப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். இப்போ அவரோட பேச, அவருக்காக நாம எல்லாருமே நேரம் ஒதுக்கறோம்; அவருக்கும் சில வேலைகள் வந்துடுச்சு; கொஞ்சம் கொஞ்சமா இயல்பாகிட்டார்.’’

இவ்வளவு நடந்திருக்கிறது... பி.டி மாஸ்டர் இது குறித்து ஒன்றுமே பாலாஜியிடம் சொல்லியிருக்கவில்லை. `நாளைக்கு மாஸ்டருக்கு ஒரு பென் ப்ரசன்ட் பண்ணிட்டு, தேங்க்ஸ் சொல்லணும்’ என நினைத்துக்கொண்டான் பாலாஜி.