
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி
இப்படியும் `சேவை’ செய்கிறார்கள்... உஷார்!

கடந்த சில நாள்களுக்குமுன் என் வீட்டுக்கு இரண்டு பெண்கள் வந்துபோனார்கள். ``நாங்கள் திருவண்ணாமலையில் உள்ள அநாதைக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வருகிறோம். நிதி உதவி கொடுங்கள்’’ என்றார்கள். உடல் ஊனமுற்ற குழந்தைகளின் போட்டோக்களையும் காட்டினார்கள். ``அந்தக் காப்பக உரிமையாளரின் போன் நம்பரைக் கொடுங்கள்'' என்று நான் கேட்டதும், அவர்கள் சட்டென்று சென்றுவிட்டார்கள்.
நல்ல காரியம் என்று வருபவர்கள் அனைவரையுமே நம்பிவிடக் கூடாது; முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்துகொண்டேன்.
- ஆர்.டி.தேவிஸ்ரீ, வேலூர் - 2
பயணிகள் கவனத்துக்கு..!

சமீபத்தில் நான் பயணம் செய்த பஸ்ஸில் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பைகள், பெட்டிகள், காய்கறிக் கூடைகள் என எல்லாவற்றையும் அடுக்கி வைத்திருந்தார்கள். டிரைவர் திடீரென பிரேக் போட... மேலிருந்த பெட்டி சரிந்து எனக்கு முன்பிருந்த ஒருவர் மேல் விழுந்து, நல்ல தூக்கத்தில் இருந்த அவர் அலறியடித்தபடி எழுந்தார்.
பயணிகளே... குழந்தைகள், முதியவர்கள் எனப் பலரும் பேருந்தில் பயணிக்கிறார்கள். அதனால் லக்கேஜை வைக்கும்போது போதுமான இடம் இருக்கிறதா என்பதைப் பார்த்து, கீழே விழாதபடி ஒழுங்காக வையுங்கள். அல்லது, உங்கள் காலுக்குக் கீழேயே வைத்துக்கொள்ளலாம்.
- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம் - 1
உன்னதமான அறிமுகம்!

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் குழந்தைகளுக்குத் தன்னுடைய திருமண ஆல்பத்தில் உள்ள போட்டோக்களைக் காட்டி, ``இது உன் அப்பாவின் தாய்மாமா மகன். திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரை நீங்க `மாமா'னு கூப்பிடணும். இது உன் அப்பாவின் ஒண்ணுவிட்ட சித்தப்பா மகன். மதுரையில் வசிக்கிறார். நீங்க `சித்தப்பா'னு கூப்பிடணும். இவர் எனக்கு அத்தை; உங்களுக்குப் பாட்டி முறை'' என ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்துக்கொண்டிருந்தாள்.
``ஏன் இப்படி விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறாய்?’’ என்று தோழியிடம் கேட்டேன். ``என் பிள்ளைகள் எங்கள் உறவினர்களை ஏதாவது வீட்டு விசேஷங்களில் மட்டும்தான் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு உறவினர்களின் முகங்கள் மனதில் இருப்பதில்லை. திடீரென அவர்களைப் பார்க்கும் போது யார் என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றால் அது நமக்குச் சங்கடமாக இருக்கும். முன்கூட்டியே அவர்கள் தெரிந்துவைத்திருந்தால் பார்த்ததும் உறவுமுறையைச் சொல்லி அழைத்துவிடுவார்கள். இது நமக்குப் பெருமைதானே!’’ என்றார்.
உறவுகளை அறிவது உன்னதம்தானே தோழிகளே..!
- பே.ராமலட்சுமி, ராஜபாளையம்
பலன் தரும் `ஸ்பாட் விசிட்’!

என் தோழி ஒருவர் ப்ளஸ் டூ முடித்த தன் மகளுடன் கோவை, திருச்சி என ட்ரிப் அடித்துவிட்டு வந்தார். அதைப்பற்றிக் கேட்டபோது ``என் மகள் எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் சேருவது என்று குழம்பியிருந்தாள். அதனால் பல இடங்களில் உள்ள கல்லூரிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டினால், அவள் முடிவெடுக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி’’ என்று கூறினார்.
விளம்பரங்களைப் பார்த்துக் கல்லூரியில் சேர்க்காமல், இப்படி நேரில் சென்று பார்ப்பது நல்லதுதானே!
என்.விஜயலட்சுமி, மதுரை - 9