மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!

சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

கூவத்தூர் கும்மாளத்துக்கான ஒத்திகை, 28 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைந்தபோதே அரங்கேறிவிட்டது. அப்போது கற்றுக்கொண்ட யுக்திகளையும் வித்தைகளையும் ஜெயலலிதா இறந்தபோது கச்சிதமாக நடத்தியது சசிகலா குடும்பம்.

எம்.ஜி.ஆர். மறைந்த உடனேயே சீனியர் அமைச்சரான நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக்கப் பட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் ‘முதல்வர் யார்?’ என்கிற போட்டியில் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது.

எம்.ஜி.ஆர்  இறந்த ஐந்தாவது நாள், முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதாக நெடுஞ்செழியன் அதிரடியாக அறிவித்ததுமே பிரச்னை வெடித்தது. அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் அந்த ஆசை இருந்தது. பிறகு ஜானகி அம்மாளை முன்நிறுத்தி பின்னால் இருந்து இயங்க ஆரம்பித்தார். கவர்னர் குரானாவைச் சந்தித்த ஆர்.எம்.வீரப்பன், ‘ஜானகி அம்மாளுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. முதல்வர் தேர்தலில் அவர் போட்டியிடுவார்’ எனச் சொல்லிவிட்டு வந்தார். 1987 டிசம்பர்  31-ம் தேதி ஜானகி வெளியிட்ட அறிக்கையில் ‘கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியை ஏற்க சம்மதிக்கிறேன். நெடுஞ்செழியன் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். 

சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!

எம்.ஜி.ஆர் இருக்கும்போதே துணை முதல்வராகிவிட ராஜீவ் காந்தி வரையில் தூபம் போட்டவர் ஜெயலலிதா. அவரும் எம்.ஜி.ஆர் இறந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முதல்வராகிவிட துடித்தார். அதற்காகவே ராஜாஜி ஹாலில்
எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் போய் நின்றார். பக்கவாட்டில் ஜானகி நின்றுகொண்டிருந்தார். அதனால் கேமரா பிரேமில் ஜானகிகூட வராமல் போனார். ஆனால், தலைமாட்டில் நின்ற ஜெயலலிதாவை கேமரா தவிர்க்கவே முடியாது. ஜெயலலிதா நின்ற பொசிஷனை பார்த்தால் அவர் ஏதோ ஒரு உறுதியோடுதான் நின்றதுபோலத் தெரியும். கேமராவின் ஒளிவெள்ளத்தில் ஜெயலலிதா ஒதுங்கி விடக்கூடாது என்கிற கவலை நடராசனுக்கு இருந்தது.

ஜானகியை, ஆர்.எம்.வீரப்பன் முன்னிலைப்படுத்தியதால் ஜெயலலிதாவின் ஆசையில் முட்டுக்கட்டை விழுந்தது. வேறு வழியில்லாமல் நெடுஞ்செழியனை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமசந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். அதற்கான பிளாட்பார்மை நடராசன் போட்டிருந்தார். இவர்கள் ஜெயலலிதாவைச் சந்திப்பதாக இருந்தால் நடராசன் மூலம்தான் சந்தித்தார்கள். ஜெயலலிதா சொல்லும் தகவல்கள் அனைத்தும் சசிகலா மற்றும் நடராசன் வழியாகத்தான் இவர்களுக்குப் போய்க்கொண்டிருந்தன. அதனால் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடராசனுக்கு ‘படா தோஸ்த்’ ஆனார்கள். அந்த வகையில்தான் ஜெயலலிதாவைப் பொதுச் செயலாளராக அவர்கள் முன்னிலைப்படுத்தினார்கள். ‘கட்சிக்கு ஜெயலலிதா. ஆட்சிக்கு நெடுஞ்செழியன்’ என்பதை ஜானகி ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.

சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!

1984 சட்டமன்றத் தேர்தலின்போது எம்.ஜி.ஆர்  அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அதனால் காங்கிரஸுடன் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என அனைத்துமே ஆர்.எம்.வீரப்பன் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பிய பிறகு, ஜெயித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களெல்லாம் அவரைப் போய்ப் பார்த்தார்கள். அப்போது வளர்மதியும் அவர்களோடு போயிருந்தார். ‘‘ஏய்... நீ என்ன இந்தப் பக்கம் வந்திருக்க?’’ என எம்.ஜி.ஆர். அவரைப் பாத்துக் கேட்க... ‘‘அண்ணே நான் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-ண்ணே’’ எனச் சொல்ல, அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளர் பட்டியலில் தனக்கு வேண்டப்பட்டவர்களைச் சேர்த்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். வளர்மதி... ஆர்எம்.வீரப்பனின் சிஷ்யை. அப்படிதான் வளர்மதியும் எம்.எல்.ஏ ஆனார். அதனால் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அவர்கள் ஆர்.எம்.வீரப்பனுக்காக ஜானகியை ஆதரித்தார்கள்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வுக்கு என்ட்ரி ஆனது முதலே அவரை ஆர்.எம்.வீரப்பனுக்குப் பிடிக்க வில்லை. அவரைத்  தூக்கிப்பிடிக்கும் நடராசனையும் வெறுத்தார். ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்த செய்தித் துறையில்தான் நடராசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  நடராசனின் புரோமோஷனுக்காக வலம்புரி ஜான், ஆர்.எம். வீரப்பனிடம் சிபாரிசுக்குப் போனபோது ‘‘நடராசனுக்கு உதவி செய்வதும் நாகப்பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றுதான்’’ எனச் சொன்னார். அப்போதே நடராசனின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துவிட்டு ‘நடராசனின் வளர்ச்சியை வீக்கம்’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். நடராசன் - ஆர்.எம்.வீரப்பன் பனிப்போர், நேரு சிலை திறப்பு விழா வரைக்கும் தொடர்ந்தது. ஜெயலலிதாவை அந்த விழாவில் பங்கேற்க வைப்பதற்காக ராஜீவ் காந்தி வரையில் போராடியது, நேரு சிலை திறப்பு விழாவில் தனியாக ஜெயலலிதா பெயரைப் போட்டு இரண்டாவது அழைப்பிதழ் அச்சடித்து என நடராசனின் நாடகத்தை அறிந்தவர் என்பதால் கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதில் ஆர்.எம்.வீரப்பன் கறாராக இருந்தார்.

ஜானகிக்கு ஆதரவாக, கவர்னர் குரானா முன்பு எம்.எல்.ஏ-க்களை நிறுத்தினார் ஆர்.எம்.வீரப்பன். அப்படி நிறுத்தப்பட்டவர்களை குரானா எண்ணிப்பார்த்தபோது 97 பேர் இருந்தார்கள். அதன்பின் என்ன நடந்தது?

(தொடரும்)