மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!

கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

பி.சி.ஸ்ரீராம் போல பல திரைக்கலைஞர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுவதை என் படங்களில் இருந்தே சொல்ல முடியும். சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, ராதா, ரேகா போன்ற பல நடிகைகள் என் திரைக்கதைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். சிவாஜி, சிவகுமார், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நட்சத்திரக் கலைஞர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவ்வளவு பேரின் அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் சரிதா காட்டிய ஈடுபாட்டைச் சொல்ல வேண்டும். எங்களிடம் இருந்த ஒரே யூனிட் காரில் நடிகர்கள் சுதாகர், சரிதா ஆகியோரை ஏற்றி அனுப்பிவிட்டு மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பஸ்ஸில் பயணம் செய்த கதையை முன்னரே சொன்னேன். எங்கள் கஷ்டத்தைப் பார்த்து, ‘‘நான் வேண்டுமானால் பஸ்ஸில் உங்களுடன் வரட்டுமா?” என்று கேட்பார்... அப்படி ஒரு நடிகை!

படத்தில் ஒரு காட்சி. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பைச் சொல்வதற்காக அதை உருவாக்கியிருந்தேன். கதைப்படி சுதாகர், எண்ணெய் செக்கு வைத்திருப்பவர். எண்ணெய் செக்கு வைத்திருப்பவர், தன் தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ள வசதியில்லாத நிலையைக் காட்டியிருப்பேன். அவருடைய மனைவியாக சரிதா. தன் கணவனின் கால் விரல்களில் நகம் வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதை வெட்டிவிட நினைப்பார். தூங்கிக்கொண்டிருக்கும் கணவனின் காலை மடியில் வைத்து, நகங்களை மிருதுவாக்க அதை தண்ணீரில் நனைத்து, தன் பற்களால் கடித்து சீர்படுத்துவார். ஒரு அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியைப் பற்றி விளக்கி, ‘‘இப்படி நடிக்க சம்மதமா?’’ எனக் கேட்டேன். ‘‘கணவன் - மனைவியின் நெருக்கமான அன்பைக் காட்ட இதைவிடப் பொருத்தமான காட்சி இருக்க முடியுமா சார்... நான் நடிக்கிறேன்’’ என ஈடுபாட்டுடன் நடித்தார். ஒரு ஆணின் கால் நகங்களைப் பல்லால் கடித்து ஒழுங்குபடுத்துவது சாதாரணம் இல்லை. சரிதா மிகவும் இயல்பாக அந்தக் காட்சியில் நடித்தார்.

கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!

என் சினிமா வாழ்வில் எனக்குக் குரு என ஒருவரை வரிந்துகொள்ள முடியாது. பலருடைய சினிமாக்களைப் பார்த்து, நூல்களைப் படித்து உருவானவன் நான். ஆனாலும், ‘குரு’ என ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் பி.என்.மேனனைச் சொல்வேன். மலையாளத்தில் முதலில் தேசிய விருது பெற்ற அவருடைய ‘ஓளமும் தீரமும்’ படம், மலையாளத் திரையுலகின் கௌரவம். அகில இந்திய சாதனைகளை நிகழ்த்திய அவர் மிக எளிமையானவர். சென்னை டைரக்டர்ஸ் காலனி தெருவில் மிக எளிமையான வீட்டில் வாழ்ந்தவர். காலையில் அவரேதான் நடந்துவந்து பால் வாங்கிக்கொண்டு போவார். மலையாளப் பட உலகின் பிரபல இயக்குநர்கள் பரதன், கமல் ஆகியோர் அவருடைய உறவினர்கள்... அவருடைய படங்களில் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்.

‘க்ளவுட்’ என்று ஒரு குறும்படம். அந்தப் படத்தின் கேமராமேன், உலகின் பலப் பகுதிகளுக்கும் சென்று ஷூட் செய்தது, விதவிதமான மேகங்களை. போகிற இடங்களிலெல்லாம் அவருடைய கேமரா வானத்தையே வட்டமிடும். மேகங்களின் ஓட்டங்களைப் படம் பிடிப்பார். அப்படிப் படம் பிடித்த மேகங்களின் வடிவங்களையெல்லாம் வைத்து அவர் ஒரு கதையை உருவாக்கினார். இரண்டு வெவ்வேறு நாட்டு மக்கள் அணி திரண்டு போராடுவது போல மேகங்களின் போக்கை வைத்தே காட்சிகளை உருவாக்கினார். அந்தப் படத்தைப் பற்றிச் சொன்னவர் மேனன். மும்பையில் ஒருவன் இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ள  படும்  அவஸ்தைகளைச் சித்தரிக்கும் ‘ஃப்ரீடம்’ என்ற குறும்படமும் அவர் எனக்குச் சொன்னதுதான். உலகின் சிறந்த பல படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். சினிமாவைத் தவிர வேறு எதுவுமே பேசத் தெரியாது அவருக்கு. அதனால்தான் ‘குரு’ என அவரைச் சொன்னேன்.

நான், மலையாளப் படங்களுக்குப் பணியாற்றியதில்லை எனச் சொன்னேன். மலையாளத்தில் சாதனை படைத்த அவர், அந்த நேரத்தில் தமிழில் இயக்கிய படத்துக்குத் திரைக்கதை அமைத்துக்கொடுத்தேன். ‘தேவதை’ என அந்தப் படத்துக்குத் தலைப்பு. அதே தலைப்பில் பின்னர் நாசர் ஒரு படம் எடுத்தார். நாங்கள் உருவாக்கிய படம், காஞ்சிபுரம் நெசவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை சம்பவத்தால் பின்னப்பட்டது.

‘கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது... நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது...’ என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றது அந்தப் படத்தில்தான். ஷியாம் இசையமைத்திருந்தார். தறி நெய்தபடி அந்தத் தாளச் சத்தத்தோடு ஜெயந்தி பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. அருமையான பாடல்... அருமையான இசை. ஜெயந்தி - ஜெயகணேஷ் ஜோடி. ஜெயந்தியின் தம்பியாக நண்பர் சிவகுமார் நடித்தார். கதையில் ஊர் மக்கள் ஜெயந்தியின் மீது வீண்பழி சுமத்தி, ஒழுக்கத்தைக் குறை சொல்லி, ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பார்கள். அக்காவின் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டதை அறிந்து, சிவகுமார் கோபமாகக் கேட்பார்... ‘‘என் அக்கா சுத்தமில்லாதவள்னா இந்த ஊரில் வேறு யாரு உத்தமி?’’ - படத்தில் சிவகுமாருக்குப் பெயர் வாங்கித்தந்த ‘நச்’ வசனமாக இது இருந்தது.

நண்பர் சிவகுமார் என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சிவகுமாரின் மகன் சூர்யா நடிக்க ஒரு கதையைக் கேட்டிருந்தார்,

ஆர்.வி.உதயகுமார். காலையில் நான், சிவகுமார் வீட்டுக்குப் போய்விட்டேன். ஆர்.வி.உதயகுமார், சூர்யா, சிவகுமார் அனைவருமே உட்கார்ந்து கதை கேட்டனர். அந்தப் படத்துக்கு நான் வைத்த தலைப்பு..? அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

ஒரு காதல் கதை!

கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!

‘லவ் ஸ்டோரி’ என ஒரு ஆங்கிலப்படம். கடந்த 1970-ம் ஆண்டு வெளியானது. ஒரு பணக்கார வீட்டுப் பையன், ஓர் ஏழைவிட்டுப் பெண்ணைக் காதலிக்கிறான். ‘அவளைத் திருமணம் செய்தால், இந்த வீட்டில் இருக்க முடியாது’ என்கிறார் அப்பா. வீட்டை விட்டு வெளியேறி, காதலியைத் திருமணம் செய்துகொள்கிறான். பணம் இல்லையென்றாலும், சந்தோஷமாக வாழ்கிறான். இந்த நேரத்தில் காதலியைப் புற்றுநோய் தாக்குகிறது. எங்கெங்கோ பணத்துக்காகப் போராடுகிறான். பணக்காரத் தந்தை தன் செல்வாக்கால் அதைத் தடுத்துவிடுகிறார். கடைசியில் தந்தையிடமே போய் நிற்கிறான். ‘‘அந்தப் பெண்ணைவிட்டுப் பிரிந்து வருவதாக இருந்தால் பணம் தருகிறேன்’’ என்கிறார் அப்பா. இறுகிய மனத்தோடு காதலன், ‘‘நான் அந்தப் பெண்ணைவிட்டுப் பிரிகிறேன்’’ என்பான். பணம் கிடைக்கும். ஆனால், அந்தப் பெண்ணைப் பிரிகிறேன் எனச் சொன்ன நேரத்திலேயே அவள் இறந்துபோவாள். ‘மிகச் சிறந்த ரொமான்டிக் படங்களில் ஒன்று’ என அமெரிக்க ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் காதல் கதை இது!