மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

தேவாங்கைக் கொண்டுவருதலுக்கான பேச்சுகள் அனைத்தும் பறம்பின்மீது படையெடுப்பதைப் பற்றிய பேச்சாகவே முடிகின்றன. அதுவன்றி வேறுவழிகளைப்பற்றி அக்கறையோடு விவாதித்தனர் முசுகுந்தரும், சூல்கடல் முதுவனும். அதே கருத்துதான் திசைவேழருக்கும். ஆனால், இவர்களால் மாற்றுவழியைச் சொல்ல முடியவில்லை. எனவே, எல்லா உரையாடல்களும் இயல்பாகக் கருங்கைவாணனிடம் போய் முடிந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குரல் உயர்த்திப் பேசுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.

“பாரி இவ்விலங்கை வைத்து என்ன செய்யப்போகிறான்? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடையிலிருந்து பழம் பொறுக்கத்தான் பயன்படுத்துவான் என்றால், அது எவ்வளவு பெரிய அறியாமை. நாம் அவனிடம் எடுத்துச் சொல்லலாம். இவ்விலங்கின் வலிமை, கடலில்தான் இருக்கிறது. கடற்பயணத்தில் காற்றை வெல்லவும் கரையைச் சொல்லவும் ஆற்றல்கொண்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் பயன்படுத்துதலே முறை, இதனை உரியவர் மூலம் பாரியிடம் சொல்லவைப்போம்” என்று வாதிட்டார் முசுகுந்தர்.

“உரியவர் என்றால் யார்?”

“வழக்கம்போல அரசு அமைச்சர்களை அனுப்பாமல், பாரி பெரிதும் மதிக்கிற மனிதர்களை அனுப்பிவைப்போம்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”

“கபிலர் போன்ற பெரும்புலவர்களை அனுப்பிப் பேசச்சொல்லலாம் என்கிறேன்.”

“பெரும்புலவர் கபிலர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. திருமணத்துக்கே இன்னும் வந்து சேரவில்லையே. அவரை எங்கே போய்த்தேடுவது?”

“அது ஒன்றும் கடினமான செயல் அல்ல; நாம் நினைத்தால், அவரைக் கண்டடைந்துவிடலாம்.”

“ஆனால், அதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதுவரைப் பொறுத்திருக்க முடியுமா?”

பேச்சின் போக்கு பொதியவெற்பனுக்குப் பிடிக்கவில்லை.  உரையாடல்களைப் பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவுசெய்கின்றன. பொதியவெற்பன் உணர்வின் கொந்தளிப்பில் இருந்தான். பொதுவாகத் திருமணக் காலங்களில் போர்தொடுத்தல் விரும்பத்தக்கதல்ல. ஆனால், இப்பொழுது உள்ள சூழல் இத்திருமணமே போரின் வாசலை வேகமாக திறந்துவிடுவதாக இருக்கிறது.

பேரரசர் குலசேகரப்பாண்டியனின் ஆற்றலே, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும், அதன் உள்ளுண்மையை  மட்டுமே கண்டுணரும் அறிவுதான். அதனால், பொதியவெற்பன் எவ்வளவு குரல்கொடுத்தும் அவர் ஏற்றுக்கொள்வதற்கானச் செய்திகள் கிடைக்காமலே இருந்தன.

பொதியவெற்பன் சொன்னான், “படைகளைப் பெருக்குதல், பிறவேந்தர்களை திறைசெலுத்தச் செய்தல், பகைவரை அழித்தல், நிலப்பகுதியை மேன்மேலும் அதிகப்படுத்துதல், குடிகளை நன்கு காத்தல் இவைகளே அரச நியதி. இந்நியதியை நிலைநாட்டியே நமது முன்னோர்கள் இப்பேரரசைக் கட்டியெழுப்பினர். நாம் அவ்வழிச் செல்லுதலே முறை.”

பொதியவெற்பன் ஒருவகையில் பேரரசரை சீண்டும் வேலையைத் தொடங்குகிறான் எனத் தலைமை அமைச்சருக்குப் புரிந்தது. ஆனால், பேரரசர் எடுக்கவேண்டிய முடிவில் தெளிவாக இருப்பார் என்று யாவருக்கும் தெரியும்.

அவர் உரையாடலின் தன்மையைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். திருமணவிழாக் கொண்டாட்டம்  பெருகியபடி இருந்தது. ‘மணவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மலரணிதல் சடங்கு இன்னும் சில  நாழிகைகளில் நடக்க இருக்கிறது. நமது மனநிலையை வேறு ஒன்று ஆட்சி செய்கிறது. இதுவோர் அரிய வாய்ப்பு. கடல் வணிகத்தில் பிற பேரரசுகளை வெல்லுவது மட்டுமல்ல, யவனர்களையே நம்மைக்கண்டு மிரளச்செய்யலாம். கிழக்குக் கடலையும் மேற்குக்கடலையும் நமது கப்பல்கள் ஆளும். அது நமது அரசியல் வலிமையை மேலும் பலமடங்கு அதிகப்படுத்தும். இதனைப் பிறர் அறியாமல் செய்யும்முறையே சிறந்தது. போர்தொடுத்தல் இக்காரணத்தை வெளிப் படுத்தும். அதன் இறுதி அழிவில் அவ்விலங்கினங்களேகூட அழிந்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

வெங்கல் நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்கிழார் வரும்வரை முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டார்.

றுநாட்களுக்குப் பின் மையூர்கிழார் வந்து சேர்ந்தார். மறுநாள் காலைச்  சிற்றரங்கிற்கு அவர் அழைத்துவரப்பட்டார். கையில் காராளி செய்த காமன் விளக்கோடு வந்தார். பேரரசரைப் பார்த்ததும் அதனை அவரிடம் கொடுத்து அதன் சிறப்பைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார்.

மலரணியும் நிகழ்வுக்குப் புறப்படத் தயாராயிருந்த பேரரசருக்கு மையூர்கிழார் வந்துள்ள செய்தி சொல்லப்பட்டது. உடனே சந்திக்க ஏற்பாடானது. அவர் அளித்த காமன்விளக்கைப் பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பை விளக்கிச்சொல்வதற்கான சூழல் வாய்க்கவில்லை. பாண்டரங்கத்தில் வைக்கவே தனிக்கவனம் செலுத்திச் செய்தது என்று மட்டுமே சொல்லமுடிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

கருங்கைவாணன் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான். பறம்பின் மீது போர் தொடுப்பது பற்றிய வினாக்கள் அவரின் முன் வைக்கப்பட்டன.

முற்றிலும் எதிர்பாராத கேள்வியை எதிர் கொண்டு திகைத்துப்போனார். மணவிழாவுக்குத் தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டுள்ளோம் என நினைத்துப் பெருமகிழ்வோடு வந்த அவருக்கு இக்கேள்வி பெருங்கலக்கத்தை உருவாக்கியது. பாண்டிய நாட்டின் கடைசி எல்லை வெங்கல் நாடு. அதனை அடுத்து பச்சைமலைத்தொடர் தொடங்குகிறது. எனவே இப்போரில் வெங்கல்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு அவசரமாக திருமணக்காலத்தில் போர்புரிதல் பற்றிப் பேசவேண்டிய தேவை என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

அவர் அதிர்ச்சியடைவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, மற்றவர்கள் அவரின் அதிர்ச்சியைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பேரரசரின் முன் நடக்கும் கலந்துரையாடல்களில் வினா எழுப்புவதற்கான இடமில்லை. தன்னை நோக்கி எழுப்பப்படும் வினாவிற்கான விடையைப் பணிவோடு முன்வைக்க மட்டுமே அனுமதியுண்டு.

மையூர்கிழாருக்குச் சூழல் பிடிபடவே நேரமானது. போரின் தேவை பற்றித் தெரிந்துகொள்வது நமது வேலையல்ல, போரின் தன்மை பற்றி தனது அறிவுக்குப்பட்டதைச் சொல்லிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.
தளபதி கருங்கைவாணன் கேட்டான், “பறம்பு நாட்டில் மொத்தம் எத்தனை ஊர்கள் உள்ளன?”

“நானூறுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

``மலையில் அமைந்துள்ள ஊரின் பரப்பும் மக்களின் எண்ணிக்கையும் மிகக்குறுகிய அளவுதானே இருக்கும்.’’

“ஆம்” என்றார் மையூர்கிழார்.

“ஆண், பெண், குழந்தைகள் என எல்லாம் சேர்த்து பறம்புநாட்டில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

‘இவ்வினாவிற்கு எப்படி விடை சொல்லமுடியும். பறம்பு நாட்டின் ஓர் ஊரைக்கூட நான் கண்களால் பார்த்ததில்லை. ஒருசில மனிதர்களை மட்டுமே பார்த்துள்ளேன். பின் எப்படி இதற்கு விடை சொல்வது?’ என்று தயங்கிக்கொண்டிருக்கையில் கருங்கைவாணன் சொன்னான். “பாண்டியப் பேரரசின் நிலைப்படையின் எண்ணிக்கையில் பாதிகூட பறம்புநாட்டு மக்களின் எண்ணிக்கை இருக்காது.”

தளபதி சொல்லும் கணக்கு சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், பாண்டிய நாட்டு நிலைப்படையின் வலிமை அப்படி. இந்தக் கணக்குச் சொல்லப்படுவதற்கான காரணம் எல்லாரும் அறிந்ததே. ஆனால், போர் என்பது எண்ணிக்கையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதைப் பேரரசர் அறிவார். எனவேதான் தளபதியின் சொல்லைவிட மையூர்கிழாரின் சொல்லை அவர் மிகக்கூர்மையாகக் கவனித்து வந்தார்.
மிக உறுதியாக முன்வைக்கப்படும் தளபதியின் வார்த்தையை எதிர்கொள்ளமுடியாமல் அமைதிகாத்தது அவை. தலைமை அமைச்சர் முசுகுந்தர் என்ன சொல்லப்போகிறார் என்று மற்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்குமேல் போர் அற்ற ஒரு பேச்சுக்கான இடம் அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததனால் அமைதி நீடிக்கவே செய்தது.

தளபதியிடமிருந்த உறுதியும் நம்பிக்கையும் பொதியவெற்பனின் முகத்தில் மகிழ்வாய் எதிரொலித்தது. மற்றவர்களும் அதனைக் கவனித்தபடி இருந்தனர். இந்நிலையில் “நீ சொல்ல வருவதென்ன?” என்று மையூர்கிழாரைப் பார்த்து பேரரசர் கேட்டார்.

மையூர்கிழாரின் முகக்குறிப்பறிந்து பேரரசர் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தலைதாழ்த்தி நின்றிருந்த மையூர்கிழாருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆனால், தான் எதையோ சொல்லவேண்டுமென்று பேரரசர் விரும்புகிறார் என்பது மட்டும் புரிந்தது.

சின்னச் செருமலோடு பேசத்தொடங்கினார் மையூர்கிழார். ``நான் நேற்று வந்ததில் இருந்து பலவற்றையும் தெரிந்துகொண்டேன். என் மகன் இளமருதன் சற்றே பதற்றத்தில் இருந்தான். அழைத்துவந்த செவியனிடமும் விசாரித்தேன். ஆளுக்கு ஒன்றாய்ச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதற்கும் உள்ளே நடக்கும் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதலில் தோன்றியது. இப்பொழுதோ தொடர்பு இருக்குமெனத் தோன்றுகிறது.”

மையூர்கிழார் சொல்வது சற்றே குழப்பமாய் இருந்தது.

“நீ எதைச்சொல்ல வருகிறாய்?” எனக்கேட்டார் முசுகுந்தர்.

“மதங்கொண்ட யானையை நீங்கள் கையாண்ட முறையை” என்றார் மையூர்கிழார்.

அதிர்ந்துபோனார் முசுகுந்தர். `பேரரசருக்குத் தெரியாமல் நடந்த ஒன்றை இப்படி அவையில் போட்டு உடைத்துவிட்டானே?’

“எந்த மதயானை? என்ன நடந்தது?” வியப்புற்ற குரலில் இருந்தது பேரரசரின் கேள்வி.

முசுகுந்தர் நடந்ததை விளக்கிச் சொன்னார். “திருமணக்காலத்தில் இப்படியொரு தீய நிகழ்வு தங்களுக்குத் தெரியவேண்டாம் என்பதால், இதனை சற்று மறைவாக விசாரித்து முடித்தோம்” என்றார்.

“எனக்குத் தெரியாது என்று எப்படி நீ நம்பினாய்?” எனக் கேட்டார் பேரரசர்.

“பேரரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இது ஒற்றர்களின் மூலம் மெல்லிய குரலில் உங்கள் காதுகளில் பட்டும்படாமலும் விழவேண்டிய செய்தி என்று நான் நினைத்தேன். அதனால்தான் நான் உங்களிடம் தெரிவிக்கவில்லை.”

முசுகுந்தரின் விடை பேரரசருக்கும் அவருக்குமிருந்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது. மற்றவர்கள் வியப்படைந்தனர்.

இதனை நினைவுபடுத்தியதன் மூலம் மையூர்கிழார் சொல்லவரும் செய்தி என்ன என்பதுதான் முசுகுந்தருக்குப் பிடிபடாமல் இருந்தது.

மையூர்கிழார் கேட்டார், “எத்தனை வீரர்கள்கொண்டு அந்த மதயானையை மறிக்கச்செய்தீர்கள்?”

“வீரர்கள் எண்ணற்றோர் முன்னும் பின்னுமாக ஆயுதங்களோடு சென்றனர். ஆனால், யாராலும் நெருங்கமுடியவில்லை. அல்லங்கீரன் யானைகளின் குணங்களைக் கண்டறிவதில் தேர்ந்தவன். அவன்தான் இதற்கெனவே பயிற்சி பெற்ற நான்கு யானைகளைக்கொண்டு மோதி அதனை வீழ்த்தினான்” என்றார் முசுகுந்தர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

பேரரசரின் காதுகளுக்கு எது போகக்கூடாது என நினைத்தோமோ, அந்தச் செய்தியைத் தானே சொல்லவேண்டியதாகிவிட்டதே என்று மனம் கூசினார். யானையைக் குத்திக்கொல்வதென்பது கொடும்நிகழ்வு. அது மணவிழாக்காலத்தில் நடந்ததென்பது பெரும் இக்கட்டை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், முசுகுந்தர் அந்நிகழ்வை விளக்கிக்கொண்டிருந்த இந்தக் கணத்தில் எல்லோரின் எண்ணமும் இதனைவிடக் கொடும்செயல் அரங்கேறும் போரின் மீதுதான் இருந்ததே தவிர, மணவிழாவின் மீது இல்லை.

மையூர்கிழார் சொன்னார் “எங்களின் வெங்கல் நாட்டில் நடந்த நிகழ்வொன்று. அப்பொழுது நான் இளைஞனாக இருந்தேன். எனது தந்தைதான் ஆட்சி நடத்தினார். நாட்டின் தலைநகர் இப்பொழுது இருக்கும் இடத்தில் கிடையாது. பச்சைமலையின் அடிவாரத்தில் இருந்தது. ஓர் அதிகாலையில் அரண்மனையின் பக்கத்திலிருந்த சித்தூரிலிருந்து பெரும்கூச்சல்  கேட்டது. என்ன என்று பார்க்கப்போன வீரர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். மதயானை ஒன்று ஊருக்குள் புகுந்துவிட்டது. கட்டடங்களை முட்டிச்சாய்க்கவும் மரங்களைப் பிடுங்கி எறியவுமாக இருக்கிறது என்றனர்.

தந்தை உடனே வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்விடம் சென்றார். நானும் உடன் சென்றேன். என் வாழ்வில் மறக்கமுடியாத நாளது. அந்த யானையின் உயரமும் ஆவேசமும் இன்னும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை. அவ்வளவு ஆத்திரம்கொண்ட யானையை இன்றுவரை நான் பார்த்ததில்லை. மதயானை முட்டி மரம் சாய்வதைத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முட்டிய வேகத்தில் பெரும்மரங்கள்கூட நொறுங்கிச் சரிந்ததை அன்றுதான் பார்த்தேன்.

துதிக்கையில் மண்ணள்ளி வீசிக்கொண்டு அது திடுதிடுவென வந்த வேகம் இன்னும் எனக்குள் பேரச்சத்தை உண்டு பண்ணுகிறது. பெரும்பெரும் ஈட்டிகளோடும் வில் அம்புகளோடும் வீரர்களைத் துணிந்து முன்னகரச் சொன்னார் தந்தை. ஓசையெழுப்பும் மத்தளங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், அவ்வானை  எதையும் பொருட்படுத்தவில்லை. வீரர்களின் ஆயுதங்கள் காற்றெங்கும் பறந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இனி இந்த ஊரைக் காப்பாற்றமுடியாது என்று முடிவுசெய்து எல்லோரும் அவ்விடம்விட்டு அகலுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவுக்காகக் காத்திருந்த வீரர்கள் குதிரையைத்தாண்டி முன்னால் ஓடினர்.

எல்லோரும் அரண்மனைக்கு வந்த பின்புதான் சிந்தித்தோம். அந்த மத யானை இங்குவந்தால் என்னசெய்வது? அரண்மனைக்கோட்டை திடமானதுதான். ஆனால் யானைமுட்டலில் நொறுங்கிய மரத்தின் உறுதி இதற்கு இருக்காது. எனவே, எப்பாடுபட்டாவது அதனை நெருங்கவிடாமல் தடுக்கவேண்டும் என முடிவுசெய்து முழுவீரர்களையும் அணிவகுக்கச்செய்த ஆயத்தநிலையில் இருந்தார் தந்தை.

சித்தூரைச் சூரையாடிவிட்டு அது எங்களை நோக்கி வரத்தொடங்கியது. வீரர்களின் கால்நடுக்கத்தில் தரையே ஆடியது என்றுதான் சொல்லவேண்டும். அது மனித ஓசைகேட்டு வெறியேறியபடி எங்கள் திசைநோக்கித் திரும்பியது. 

இந்தக் காட்சியைப் பச்சைமலைக் குன்றின்மேல் இருந்த பெண்ணொருத்தி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறாள். அவள் பறம்புநாட்டுக்காரி. சித்தூரைச் சூறையாடிய யானை அடுத்துள்ள பெரிய ஊரினை நோக்கி நடக்கத்தொடங்கியதும் அவளுக்குக் கவலை அதிகமாகியுள்ளது. ஏனென்றால், இங்கு மக்கள் கூட்டம் அதிகம். இழப்பு அதிகமாகிவிடும் என்று முடிவுசெய்து அவள் வேகவேகமாகக் குன்றினைவிட்டு கீழிறங்கியிருக்கிறாள்.

எங்களின் கண்களுக்கு எதிரே நிலம்நடுங்க பிளிறியபடி யானை வந்துகொண்டிருந்தது. நாங்கள் உருவாக்கிய தடுப்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எத்தனை வீரர்கள் தூக்கிவீசப்பட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் அதனுடைய போக்கினை மறிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

மதயானை ஓரிடத்திலிருந்து நகரும்போது நான்கு திசையிலும் சம அளவிலான அழிவினை ஏற்படுத்தியபடியே நகரக்கூடியது. வீடுகள் இடிந்து சரிந்து நொறுங்கிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்குப் பின் நாய்கள் குரைப்பொலியை முழுமுற்றாக நிறுத்தின. அதன்பின் எங்களின்  அச்சம் பலமடங்கு அதிகமானது. நாங்கள் அரண்மனைக்குள் நுழைந்து கோட்டைக்கதவினைத் தாழிட்டோம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வலிமை இங்குள்ள எந்தக் கட்டுமானத்துக்கும் இல்லை என்பதை எல்லோரும் உணர்ந்தோம். ஆனாலும் அரண்மனைக்குள் அண்டுவதைத்தவிர வேறுவழியில்லை. நான் கோட்டையின் மேலேறி தந்தையின் அருகில் நின்று பார்த்தேன்.

செம்மண் குலைத்துக்கட்டப்பட்ட கோட்டைச்சுவர் அதன் கண்களை உறுத்துவதாக இருந்திருக்க வேண்டும். அது வேகமாகக் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கூக்குரல் வானம் தொட்டது.

அப்பொழுதுதான் இடப்புற மலையடிவாரத்திலிருந்து ஒரு பெண் கோட்டையை நோக்கி வருவதைப் பார்த்தேன். அவள் வேகவேகமாக வந்துகொண்டிருந்தாள். மதயானை ஒன்று எதிர்திசையில் வந்துகொண்டிருக்கிறது, அதனை அறியாது பெண் ஒருத்தி வந்துகொண்டிருக்கிறாளே என்று பதறினேன். அவளோ எதனையும் பொருட்படுத்தாமல் வந்துகொண்டிருந்தாள். தனது குழந்தையைப் பின்புறம் முதுகோடு சேர்த்து மேல்துணியால் கட்டியிருந்ததும் தெரிந்தது.

நெருங்கி வரவர மதயானையின் பிளிறல் பேரச்சம் தருவதாக இருந்தது. என்ன நடக்கப்போகிறதோ, என்ற அச்சத்தால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். ஆனால், எவ்வித அச்ச உணர்வுமின்றி அவள் எதிரில் நடந்துவந்துகொண்டிருந்தாள். முதுகுப்புறம் இருந்த குழந்தை அழுதிருக்க வேண்டும். முன்புறம் போட்டு மார்பில் பால்குடிப்பதற்கு ஏற்ப துணியைக் குழந்தையோடு இறுக்கக்கட்டினாள். ஆனாலும், அவள் நடையின் வேகம் குறைந்தபாடில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

அவள் கையில் ஏதோ ஒரு செடி ஒன்றை வைத்திருப்பது மட்டும் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. அவள் அரண்மனை வாசல்நோக்கி உதவிகேட்டு வருகிறாள் என்றுதான் முதலில் நினைத்தேன். அவளோ இப்பக்கம் வராமல், மதயானை வந்துகொண்டிருக்கும் திசைநோக்கிப் போனாள்.

மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ‘என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு, தன்னந்தனியாக மதயானையை நோக்கிப் போகிறாளே!’ என்று அஞ்சினோம்.

பெரும்படையையே சிதறடித்த வெறிகொண்ட அந்த யானையை நோக்கி சிறிதும் அச்சமின்றி அவள் போய்க்கொண்டிருந்தாள். ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவள் கைகளில் இருந்த செடியை நீட்டியபடி மதயானையை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளின் வேகம் அதிகமானபடியிருந்தது. மதயானையின் வேகம் குறைவதுபோல் இருந்தது. நாங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு நடந்தவைகளை எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை நூறு வீரர்களை வீசியெறிந்து, குத்தீட்டிகளையும் வேல்கம்புகளையும் சிதறடித்து, எதிரில் பட்டதையெல்லாம் முட்டித்தள்ளி மண்ணோடு மண்ணாக்கிய அந்த மதயானை, மேய்பனின் முன் பணியும் கிடை ஆடுபோல அவளின் சொல்கேட்டுப் பணிந்தது.

அந்த இலையின் வாசனையை நுகர நுகர அதன் மதம் ஒடுங்கி பின்னகரத் தொடங்கியது. அவள் தன்னந்தனியாக சிறுகுச்சியைக்கொண்டு விரட்டுவதைப்போல யானையை விரட்டிக்கொண்டு மலையிலே ஏற்றிவிட்டாள்.

எங்களின்  உயிரச்சம் கலைய நீண்ட பொழுதானது. நாங்கள் கோட்டைக்கதவைத் திறந்து அவளை நோக்கி ஓடினோம். அவள் மலைக்குள் போவதற்குள் அவளைச் சென்றடைந்தோம். பால்குடித்து முடித்த குழந்தையைப் பின்தோளிலே போட்டாள். எனது தந்தை கண்ணீர் மல்க அவளை வணங்கினார்.  “பலநூறு பேரின் உயிர்காத்த தேவி நீ” என்றார். அவள் மறுமொழியேதும் சொல்லவில்லை. அவள் கையில் இருந்தது கரந்தைச் செடி என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கரந்தையில் எண்ணற்ற வகையுண்டு. அது எந்த வகைக் கரந்தை என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அந்தச் சூழலில் அவளிடம் அதனைக் கேட்கவும் முடியாது. கேட்டாலும் பறம்பின் மக்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எங்களைக் காத்தருளிய அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தந்தை துடித்தார். அவள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களின் உயிரைக்காப்பாற்றிய அவளின் காலடியில் பணிந்து “பறம்புக்கும் பறம்பின் மக்களுக்கும் எதிராக சிறுதீங்கும் நாங்கள் என்றும் செய்யமாட்டோம்” என்றார் தந்தை.

மை
யூர்கிழார் சொன்ன கதையை அவை மிகக்கவனமாகக் கேட்டது. போருக்கான கருத்தைக் கேட்ட பேரரசரிடம், ‘நான் கருத்தை மட்டுமே வழங்க முடியும். போரிலே பங்கெடுக்க முடியாது’ என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல முடிந்தது மையூர்கிழாரால். வயதும் பட்டறிவும்கொண்ட மூத்த மனிதர்கள் இக்கட்டானச் சூழலை எவ்வளவு நுட்பமாகச் செயல்படுகிறார்கள் என்பதை எண்ணி மனதுக்குள் வியந்தார் முசுகுந்தர்.

அவையில் நீடித்த அமைதி கலைய நேரமானது. இவ்வமைதி அவ்வளவு நேரம் வாதிட்ட தளபதி கருங்கைவாணனின் கருத்துக்கு எதிரானதாக உருத்திரண்டிருந்தது. எனவே, அதனை உடைக்கவேண்டிய பொறுப்பும் தளபதியையே சார்ந்தது.

“போரிலே பங்கெடுக்க மாட்டேன் என்பதைச் சொல்லத்தான் இங்கு வந்தீர்களா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

கருங்கைவாணனின் வினாவிற்குச் சற்றும் இடைவெளியின்றி மையூர்கிழார் விடை சொன்னார், “இல்லை. அதற்கு இவ்வளவு விரிவான கதையை நான் சொல்லவேண்டியதில்லை. என் தந்தை அளித்த வாக்குறுதியை மட்டும் சென்னாலே போதுமே.”

“வேறென்ன சொல்ல வந்தீர்கள்?”

“நீங்கள் சொன்ன கணக்குத் தவறானது என்று சொல்ல வந்தேன்.”

தளபதிக்குப் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. “விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றனர்.

“ஒரு பேரரசுக்கு, மதங்கொண்ட யானையை அடக்க பலநூறு வீரர்களும் பயிற்சிகொண்ட நான்கு யானைகளும் காலமெல்லாம் யானைப் படையில் பணியாற்றிய கட்டுத்தறியின் பொறுப்பாளனும் தேவைப்பட்டுள்ளனர். ஆனால் பறம்பின் மக்களுக்கு அப்படியல்ல, ஒரு பெண்ணும் கையில் ஒரு செடியும் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. அவள் ஒருத்தி நீங்கள் சொன்ன இத்தனை நூறு வீரர்களுக்குச் சமம் என்றால், பறம்பில் இருக்கும் மக்களையும், செடி கொடிகளையும் கணக்கிட்டு நம் பேரரசில் இருக்கும் நிலைப்படை வீரர்களின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள் பார்ப்போம்?”

மையூர்கிழார் எழுப்பிய வினாவைக்கேட்டு அவையின் நாவு துடிப்படங்கி ஒடுங்கியது.

“மற்ற நாடுகளின் ஆற்றல் அங்குள்ள வீரர்களைப் பொறுத்தது. ஆனால் பறம்பின் ஆற்றல் மனிதர்களை மட்டும் சார்ந்ததல்ல, எனவே வெறும் மனிதர்களைக்கொண்டு படைநடத்திப் போனால், பறம்பு நாட்டின் சிறுகுன்றினைக்கூட கடந்து உள்நுழைய முடியாது” மையூர்கிழாரின் குரல் கணீரென அரங்கு முழுவதும் ஒலித்தது. சிறுசெடிக்கு ஒடுங்கிய மதயானைபோல் அவரின் குரல்கேட்டு ஒடுங்கியது அவை.

பறம்பின்மீது படைதிரட்டிப் போர்புரிவதில் பேரரசரின் மனம் உடன்பாடு கொள்ளாமல் இருந்தது. போரில் ஒருமுறை தோல்வி ஏற்பட்டால், அது அரசின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் என்பதைக் குலசேகர பாண்டியன் நன்கு அறிவார். அதனால்தான் இவ்வுரையாடலை இவ்வளவு தொலைவு வளரவிட்டு அமைதி காத்தார். அவர் எண்ணிய கருத்தே அவையிலும் நிலைநிறுத்தப்பட்ட கணத்தில் சட்டென எழுந்தார். எல்லோரும் பதறி எழுந்தனர்.

“மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது” என்று சொல்லியபடி அவை நீங்கினார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

பொதியவெற்பன் அவருக்கு முன்பே போய் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வுரையாடலை இந்தத் தன்மையில் விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், வேறு வழியே இல்லை. மனமின்றிப் புறப்பட்டுப் போனான். பொற்சுவையும் அவ்வாறே அங்குவந்து காத்திருந்தாள்.

டங்கு முடிய இரவானது. பேரரசர் தனது பள்ளியறைக்குத் திரும்பும்பொழுது, “தளபதி உடனடியாகக் காணஅனுமதி கேட்கிறார்” என்று பணியாளன் தெரிவித்தான். வரச்சொல்லி அனுமதி கொடுத்தார் பேரரசர்.
நள்ளிரவு வரை அவர்கள் பேசினர். முற்றிலும் புதியதொரு திட்டத்தைத் தளபதி கொண்டு வந்திருந்தார். அது பேரரசருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அதுபற்றி மிக விரிவாக அவர் வினாக்களை எழுப்பினார். அத்திட்டத்தை முழுமையாகக் கருங்கைவாணன் விளக்கினான். இதுவரை ஏற்படாத நம்பிக்கை இப்பொழுது ஏற்பட்டது. இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்று மனதில் எண்ணம் தோன்றிய கணத்தில் அத்திட்டத்துக்கான அனுமதியை வழங்கினார் பேரரசர்.

தேவாங்கைக் கொண்டுவர வழியின்றிப் போய்விடுமோ என்ற தவிப்பு நீங்கிய மகிழ்வோடு தனது பள்ளியறைக்குள் நுழைந்தார் பேரரசர். அதனைவிட பலமடங்கு மகிழ்வோடு புறப்பட்டுப் போனான் கருங்கைவாணன்.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...