மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 52 - ஜானகி ஆட்சியைக் கவிழ்க்க சதி!

சசிகலா ஜாதகம் - 52 - ஜானகி ஆட்சியைக் கவிழ்க்க சதி!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 52 - ஜானகி ஆட்சியைக் கவிழ்க்க சதி!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ல்லறையின் ஈரம் காய்வதற்கு முன்பே பதவிச் சண்டை தொடங்கிய வரலாறு, எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ஜெயலலிதா வரைக்கும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர் மறைந்தபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பலம் 131. இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர், அதாவது 97 பேர் ஆதரித்ததால் ஜானகியை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர் குரானா. எதிர்முகாமில் கடும் வெப்பம். எம்.ஜி.ஆர் இருந்தபோதே கோஷ்டிகளாகப் பிரிந்து கிடந்தவர்கள், அவர் மறைவுக்குப் பிறகு வெளிப்படை யாகவே மோதிக்கொண்டார்கள். ராஜாஜி ஹாலிலேயே அது ஆரம்பமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் தலைமாட்டில் ஜெயலலிதாவைச் சசிகலா குடும்பம் நிறுத்தியபோதே பிரச்னை வெடித்தது. கணவரை இழந்த அதிர்ச்சியில் வீட்டிலேயே இருந்த ஜானகியை, ‘‘டி.வி-யில் ஜெயலலிதா மட்டும்தான் தெரிகிறார். உடனே வந்து பக்கத்தில் அமருங்கள்’’ என்று வற்புறுத்தி அழைத்து வந்தார்கள். அவரை வைத்தே ஆர்.எம்.வீரப்பன் தரப்பு அரசியல் செய்ய ஆரம்பித்தது.    

சசிகலா ஜாதகம் - 52 - ஜானகி ஆட்சியைக் கவிழ்க்க சதி!

முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதாக ஜானகி அறிவித்ததுமே ‘ஜானகி மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது. முதல்வர் போட்டியில் இருந்து விலக மாட்டேன்’ என அறிக்கை விட்டார் நெடுஞ்செழியன். குரானா முன்பு ஆதரவு            எம்.எல்.ஏ-க்களை நிறுத்துவதற்கு முன்பு, சட்டமன்றக் குழுத் தலைவராக ஜானகியைத் தேர்வு செய்யும் வைபவம் நடைபெற்றது. அதே நேரம் நெடுஞ்செழியன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்னொரு பக்கம் கூடியது. அதில் அ.தி.மு.க-வின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். நெடுஞ்செழியன் ஆட்சியில் அமர ஆசைப்பட்டதால், கட்சியில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் நடராசன் வெற்றி பெற்றார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்தான் நடைபெற்றது. பிரஸ் மீட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். அப்போது எம்.ஜி.ஆரின் அம்மா சத்யாவின் படத்தைக் காட்டி, ஜெயலலிதா நிருபர்களிடம் பேசினார். ‘‘நான் அரசியலைவிட்டு விலக நினைத்தபோது ‘அரசியலைவிட்டுப் போகக் கூடாது’ என ஆணையிட்டு அன்னை சத்யா படத்தின் மீது எம்.ஜி.ஆர் சத்தியம் வாங்கினார்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் இருந்தபோதே துணை முதல்வர் ஆகிவிட ஜெயலலிதா முயன்றார். அதுபற்றிய விஷயங்கள் கசிய ஆரம்பித்த நிலையில்தான், அவர் மீதான இமேஜைத் தூக்கி நிறுத்த அன்னை சத்யா படத்தை ஜெயலலிதா கையில் திணித்தது சசிகலா தரப்பு.
அந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, ‘‘70 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்றது ஜெயலலிதா தரப்பு. ஆனால், உண்மையில் அவர்கள் பக்கம் இருந்தது 29 பேர் மட்டுமே. ‘‘ஜெயலலிதா தேர்வு செல்லாது’’ என்றது ஜானகி தரப்பு. 97 பேர் ஆதரவு இருந்ததால் ஜானகியைப் பதவி ஏற்க அழைத்தார் குரானா. உடனே ஜெயலலிதா, ‘நெடுஞ்செழியனுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தராதது, மெஜாரிட்டியை நிரூபிக்க ஜானகிக்கு அதிக நாள் கொடுத்தது’ பற்றி குரானாவுக்கு எழுதிய கடிதத்தில் கோபத்தைக் கொட்டினார். அதையெல்லாம் மீறி, 1988 ஜனவரி 6-ம் தேதி ஜானகி அமைச்சரவை பதவியேற்றது. ஜனவரி 28-ம் தேதி மெஜாரிட்டியை ஜானகி நிரூபிக்க வேண்டும். அதற்குள் அணி தாவி விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்த முயன்ற நடராசன், அவருடைய மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாக  செயல்பட்டார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது ராஜீவ் காந்தி வரைக்கும் மூவ் செய்த ஜெயலலிதாவும், அதற்கு உறுதுணையாக நின்ற நடராசனும் அதே அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்தார்கள். ஜானகி ஆட்சி நீடித்துவிடக் கூடாது என, உடனே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க டெல்லி சென்றார் ஜெயலலிதா. ‘‘சட்டசபையில் ஜானகி மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது எங்கள் அணியை ஆதரிக்க வேண்டும்’’ என ராஜீவ் காந்தியிடம் கேட்டுக் கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியில் 61 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அந்த எம்.எல்.ஏ-களின் ஆதரவைச் சேர்த்தாலும் 90 பேர்தான் வருவார்கள். ராஜீவ் காந்தியோ, ‘‘ஒன்றுபட்ட அ.தி.மு.க-வைத்தான் ஆதரிக்க முடியும்’’ எனச் சொல்லிவிட்டார். வேறுவழியில்லாமல் இரண்டு அணியினரும் மோதிப் பார்த்துவிடத் துடித்தார்கள்.

(தொடரும்) 

மக்கள் குரலை மாற்றினார்!

ஜெயலலிதாவுக்கு ‘மக்கள் குரல்’ பத்திரிகை ஆதரவு கொடுத்து வந்தது. ஆனால், ஆரம்பகாலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘மக்கள் குரல்’ கொண்டிருந்தது. அப்போது அதன் நிர்வாகியான ஜீவா ராமமூர்த்தியிடம் நடராசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அந்த பத்திரிகை எடுத்ததற்கு நடராசன் காரணமாக இருந்தார். அதன்பிறகு அந்தப் பத்திரிகை அலுவலக நிகழ்ச்சிகளிலெல்லாம் ஜெயலலிதா தவறாமல் பங்கேற்றார்.