மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!

கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

சூர்யாவுக்காக நான்  சொன்ன கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது. தயாரிப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது. ஆனால், தங்களிடம் வேறொரு நடிகரின் கால்ஷீட் ரெடியாக இருப்பதாகச் சொன்ன தயாரிப்பாளர், ‘‘அந்த நடிகருக்கு இந்தக் கதையைச் செய்ய முடியுமா?’’ என்றார் திடீரென்று. நான் சொன்னது யூத்ஃபுல்லான கதை. இளம் கதாபாத்திரங்களுக்குத் தான் பொருந்தும். அவருக்கு கால்ஷீட் கொடுத்திருந்த நடிகருக்கு அது பொருந்தாது எனச் சொன்னேன். அந்தக் கதை அப்படியே தங்கிவிட்டது.

அதன் பிறகு நான் பாரதிராஜாவுக்காக ‘கேப்டன் மகள்’ திரைக்கதையில் மூழ்கிவிட்டேன். ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு அது. அந்தத் தலைப்பில் நாங்கள் வேறு கதையை உருவாக்கியிருந்தோம். முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப்பட  பாணியில் ஊட்டியில் செட் போட்டோம். காற்றாலை, பண்ணை வீடு எனப் பிரமாதமாக அமைந்தது செட். அப்போது தமிழ்நாட்டில் குஷ்பு மிகவும் பிரபலமாக இருந்தார். அவருக்குக் கோயில் கட்டுகிற நிலைமை எல்லாம் இருந்த நேரம். அதனால், அவரை மையப்படுத்திக் கதையை உருவாக்கச் சொல்லியிருந்தார் பாரதி. தைரியசாலிப் பெண்ணாக சண்டைக் காட்சிகளில் வெளுத்துக் கட்டியிருந்தார் குஷ்பு. குதிரை மீது அநாயாசமாக விரைந்து சென்றார். அவருடன் ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!

அந்தப் படம் வெளிவந்தபின் ஒருநாள் குஷ்பு எனக்கு போன் செய்தார். எனக்கோ ஆச்சர்யம். ‘‘என்னம்மா, எப்படி இருக்கீங்க?’’ என விசாரித்தேன். சிறிது நேரம் சம்பிரதாயமாகப் பேசியபின், கொஞ்சம் தயங்கி, ‘‘சார், நீங்கள் சூர்யாவுக்காக ஒரு கதை எழுதினீர்களே..?’’ என நிறுத்தினார்.

‘‘சொல்லும்மா... அதற்கென்ன?’’

‘‘அந்தப் படத்தின் தலைப்பை எனக்குத் தர முடியுமா?’’

‘‘தலைப்பு மட்டுமா?’’

‘‘ஆமாம் சார்.’’

படத்தை யார் எடுக்கப் போகிறார்கள், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என நானும் கேட்கவில்லை... அவரும் சொல்லவில்லை.

‘‘அதற்கென்னம்மா... யாரையாவது அனுப்பி வையுங்கள். தலைப்பை டிரான்ஸ்ஃபர் செய்து எழுதித் தருகிறேன்’’ என்றேன்.

மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு வந்தார். அவரிடம், அதற்கான பாரங்களில் கையெழுத்துப்போட்டு, தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துக் கடிதமும் எழுதிக்கொடுத்தேன். அந்தத் தலைப்பு... ‘ராஜகுமாரன்.பிரபு நடித்த படம்.ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். அந்தப் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக மீனாவும் நதியாவும்தான் நடித்தனர். குஷ்பு நடிக்கவில்லை.

நான் குரோம்பேட்டையில் இருந்த சமயம். ஒருநாள் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரங்கிமலையில் ரயில் நிறுத்தப்பட்டது.நான் சற்று நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். பட் ரோடு அருகே ஒரு தியேட்டர். ஒரு மலையாளப் படம் போட்டிருந்தார்கள். படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. சத்யன், ஷீலா, பிரேம் நசீர் நடித்திருந்ததாக நினைவு.

சத்யன், ஷீலா இருவரும் கணவன் - மனைவி. ஷீலா, திருமணத்துக்கு முன்பே பிரேம் நசீரைக் காதலித்தவர். சத்யன் தன் மனைவி மீது உயிரையே வைத்திருக்கிறார். இப்படி ஒரு முக்கோணக் காதல். சத்யன் வெளியூர் புறப்பட்டுச் செல்லும் ஒரு நாளில் நசீரும் ஷீலாவும் வீட்டைவிட்டு வெளியேறத் திட்டமிடுவார்கள். வெளியூருக்குப் புறப்பட்ட கணவன், எதனாலோ மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவான். இது தெரியாமல் பிரேம் நசீர், வெளியே காரில் வந்து நின்று ‘ஹார்ன்’ அடிப்பார். ஷீலா பதறுவார்.

மனைவியின் பதற்றம்... வெளியே காத்திருக்கும் கார்... ஒரு நொடியில் சத்யனுக்குச் சகலமும் புரிந்துவிடும். ‘‘எனக்கு ஒரு காபி போட்டுக் கொண்டுவா’’ என்பார் மனைவியிடம். ஷீலா காபியுடன் வருவார். சத்யன் நிதானமாகக் காபியை உதட்டில் வைத்து ஒரு முறை உறிஞ்சிவிட்டு, டேபிளின் மீது கப்பை வைத்துவிட்டு ஷீலாவைப் பார்ப்பார். கதைப்படி சத்யன், காபியில் சர்க்கரைச் சேர்த்து கொள்ள மாட்டார். பதற்றத்தில் ஷீலா சர்க்கரை போட்டுக் கொண்டு வந்துவிடுவார். ஷீலாவுக்குச் சட்டெனத் தவறு உறைக்கும். ‘‘இருங்கள், வேறு காபி கொண்டு வருகிறேன்’’ என்பார். அந்த இடத்தில் சத்யன் ஒரு வசனம் சொல்வார்: ‘‘இல்லா... இல்லா... நின்ட மனசில் ஞான் இல்லா.’’

அப்படியே ஆடிப்போய்விட்டேன். மனசெல்லாம் அந்தக் கதை ஓடிக்கொண்டே இருந்தது. பஞ்சு சாரிடம் சொன்னேன். அது போல ஒரு கதையைத் தமிழில் செய்யலாம் எனத் திட்டமிட்டோம். கதையைக் காப்பியடிப்பதோ, தழுவி எடுப்பதோ அல்ல. கணவன் - மனைவிக்குள் ஒரு முன்னாள் காதலன் வருவதுதான் கதையின் சரடு. ‘மயங்குகிறாள் ஒரு மாது’ அந்தப் பாதிப்பால் உருவானதுதான். முத்துராமன், சுஜாதா, விஜயகுமார் நடித்திருந்தனர். தமிழில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தோம். கதாநாயகி காதலனோடு வீட்டைவிட்டுப் போக நினைக்க மாட்டார். மாறாக, இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த ஒருவன், கதாநாயகியை ப்ளாக் மெயில் செய்வான். கணவனுக்குத் தன் காதல் விஷயம் தெரிந்துவிடக் கூடாதே என்ற பதற்றமும் பயமும் நாயகியை வாட்டி எடுக்கும். மலையாளக் கதைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்குக் கதை மாறியபின்னும் எனக்கு ஓர் உறுத்தல். படம் தயாரானதும் என் பெயரை டைட்டிலில் போட வேண்டாம் எனப் பஞ்சு சாரிடம் சொல்லிவிட்டேன். என் பெயர் இல்லாமல்தான் அந்தப் படம் வெளியானது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!

எது குற்றம்?

‘போல்’ என்றொரு பாகிஸ்தானியப் படம். ‘போல்’ என்றால் ‘சொல்லு’ என அர்த்தம். அப்பாவைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண். தண்டனை நிறைவேற்றப்படும் முன்பாக, ‘‘சொல்லுங்க... உங்க அப்பாவை ஏன் கொன்னீங்கன்னு சொல்லுங்க’’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்பதாகப் படம் தொடங்கும்.

அந்தப் பெண்ணின் அப்பா ஊரில் பெரிய தாதா; வீரர். ஆண் சிங்கம் என்பார்களே அப்படி. அவருக்கு ஏழு பெண்கள். இவள் மூத்தவள். ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டு, எட்டாவதாக பெற்றுக்கொள்வார் தந்தை. வளர்ந்தபிறகு அவன் திருநங்கை என்பது தெரிந்ததும் அவர் துடித்துப்போவார். ‘என் வித்துக்குப் பிறந்தவன் இப்படியா இருக்க வேண்டும்?’ என்ற வெறியோடு நாட்களை நகர்த்துகிறார். சகோதரிகள், உண்மை தெரிந்தபிறகும் அவன் மீது பாசம் காட்டுகிறார்கள். ஒருநாள் தூங்கும்போது மகனைக் கொன்றுவிடும் அப்பா, ரகசியமாக அவன் உடலைப் புதைத்தும் விடுகிறார்.

இடையில் பணத்துக்காக ஆசைப்பட்டு ஒரு பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொள்ளும் அப்பா, அவள் மூலமாக ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறார். முதல் மனைவியின் குடும்பமே இடி விழுந்தது போல ஆகிறது. ‘பாலியல் தொழிலாளிக்குப் பிறந்த தன் குழந்தை, எதிர்காலத்தில் பாலியல் தொழிலாளியாக ஆகிவிடக்கூடாது’  என்று, அதைக் கொல்லப் பார்க்கிறார். இதைப் பார்த்து கோபம் கொண்டு தந்தையையே சாகடிக்கிறாள் மூத்த மகள். ‘‘கொலை செய்வது குற்றம் என்றால், கட்டுப்பாடு இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதும் குற்றம்தானே?’’ என்று அந்தப் பெண் கேட்பதோடு படம் முடியும்.

பாகிஸ்தானில் மிக அதிக வசூல் செய்த படம் இது!