மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி
பிரீமியம் ஸ்டோரி
News
தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

படங்கள் : ஜி.பாலாஜி

மூன்றுமுறை பாடுகள் பல பட்ட, ஒருவிதமாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, வாழ்க்கை ஒரு முட்டுச்சந்தாகி, பூச்சியைச் சீண்டி விளையாடும் சிறுவனைப்போல என்னைச் சுண்டிவிட்டு சுண்டிவிட்டு விளையாடிக்கொண்டிருந்தது. அந்த இயலாத பருவத்தில், நிலைபெற்ற திக்பிரமையுடன் தனிமை தேடி அரையிருள் புகலிடங்களில் இறுதி இதுவோ என்று குமைந்து மருகியிருக்கிறேன்; கவிதைகள் எழுதியிருக்கிறேன். அருகில் இருந்தோரால், கார் ஓட்டக் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்று டாக்ஸி டிரைவர் ஆகிவிடும்படி அறிவுறுத்தப்பட்டேன். அதற்கு வைத்த எத்தனங்கள், ஓட்டுநர் பயிற்சிக்கான பணம் இல்லாததால் பிறழ்ந்து போயின. அக்கறைகொண்டோர் அருகழைத்து, தையற்காரன் ஆகிவிடும்படி ஆற்றுப்படுத்தினார்கள். அத்துறைக் கலைஞர் எவரையும் அறியாத காரணத்தால் அதுவும் கைகூடவில்லை. அந்தக் குழப்பக் கவலைகளின் சொறி, இடையறா அச்ச நமைச்சலான காலத்தில் என் பெரியப்பா மகளின் கணவர் லெட்சுமணன் வந்தார். “வந்து சேரடா தம்பி, அங்கே இருக்கிறது  ஓர் ஓவியக் கல்லூரி; தங்குவதற்கு என் வீடும் உண்டு” என்று எனக்குத் தயாளம் தந்தருளினார். இவ்வாறு நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் மாணவனாக ஒண்டிக்கொண்டேன். முடிவில், ‘இனி நீ புறத்தேகி உலகம் பார்; பிழைத்துக்கொள். நான் உனக்குக் கால்கள் முளைப்பித்தி ருக்கிறேன்’ என்று தன் இதயத்திலிருந்து என்னைச் சென்னைக்கு விடுவித்தது கல்லூரி.

 அங்கே என் பார்வை எதிலும் காத்திரமாகப் பதியவில்லை. நகர பிரமாண்டம், முன்னறியாப் பரபரப்பு, வாகனாதிகளின் வெறிப்பிரவாகம், எக்கணமும் கவனம் – திசையெதிலும் எச்சரிக்கை எனும் அறிவுரைகள் எல்லாம் என் பார்வையை நீர்க்கச் செய்து நீர்க்கச்செய்து, பதற்றக் கலங்கலான மெல்லிய நோட்டங்களாக எதிலும் பதித்துவந்தன. உண்மையில், நகரத்திலொரு மூலையில், பழவந்தாங்கல் அறையில், இரவானது தனிமையின் முரட்டுச் செதில்களை என் மீது உராய்ந்து உராய்ந்து உதிர்த்து என்னை மூழ்கடிக்கும் அகாலங்களில், தூசுபடும் கனம்கூட தாளாமல் குமுறிக் கொந்தளித்துவிடும்படி சன்னமாகிப்போன, பச்சைநெடி வீசும் அநாதைத்துவ மனநிலையில் என் கண்ணீர் இழைகள் அறை முழுதுமான சிலந்தி வலையாகும். அந்த வலையில் உறைவதும் நானே, சிக்கி உணவாவதும் நானே என்றாகி, சிறுத்துச் சிதைந்துகொண்டிருந்த ஸ்தம்பிதம். அந்தக் காலங்களில் என் பார்வை எதிலும் காத்திரமாகப் பதியவில்லை. பார்வை என்பது, பதற்றக் கலங்கலான மெல்லிய நோட்டங்களன்றி வேறில்லை.

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

ஏறத்தாழ யாசகனாக, ஏறத்தாழ நாடோடியாக, முழுமுற்றிலும் பசித்தவனாக பருக்கைகளுக்கான மார்க்கங்கள் தேடி கனல் அளைந்து போகையில் எதிர்பட்ட ஒரு புத்தகக் கடை எனக்கு வினோதப் பிரதேசமாயிருந்தது. தி நகர், ரங்கநாதன் தெரு, ‘முன்றில்’ புத்தகக் கடை. அந்தக் கடையை வைத்திருந்தது, எழுத்தாளர் மா.அரங்கநாதனும் அவரது மகன் மகாதேவனும் (மகாதேவன் இப்போது உயர் நீதிமன்றத்தில் நீதிபதி). நாளெல்லாம் எங்கே  நொந்து அலைந்தாலும் மாலையில் அந்தக் கடை, தன் கதகதப்பால் என்னைப் பொதிந்துகொள்ளும். புத்தகங்களின் அரணுக்குள்ளிருப்பதில் அனைத்தையும் மீறியதொரு உவகை. சில சமயங்களில் முழு நாளுமே அந்தக் கடையில் கரையும். வெறுமனே உட்கார்ந்து பொழுதுபோக்கவும், பேசிக்கொண்டிருக்கவும், படிக்கவும், அமர்ந்தபடியே குட்டித் தூக்கம் போடவும் உகந்த இடம். இதை அந்தக் கடைக்காரர்களும் உவந்து அனுமதித்தார்கள் என்பதுதான் வியப்புக்குரியது. கலைஞர்களின் சங்கம ஸ்தலமாக இருந்த முன்றில்… அப்போது புத்திளைஞனாக இருந்த எனக்கு ஓர் இனிய திளைப்புக் களம். நாள்களின் அலகுகள் எங்கிருந்தெல்லாமோ கலைஞர்களைக் கவ்வி முன்றிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தன. ஒருநாள் பிரமிளைக் கொண்டுவந்தது என்றால், மறுநாள் ஜெயந்தனுடன் வரும். இன்னொன்று பிரேமை, வேறொன்று எஸ்.ராமகிருஷ்ணனை, கவிதாசரணை, லதா ராமகிருஷ்ணனை, கோணங்கியை, கோபிகிருஷ்ணனை, வண்ண நிலவனை, பா.வெங்கடேசனை… கொத்துக்கொத்தான கலைஞர்களைத் தரித்துக்கொண்டு பிரகாசமாயிருந்தது முன்றில். அறிமுகங்கள் உருவாயின, நட்புகள் முகிழ்த்தன.

 காரணங்கள் சில உண்டென்றாலும் முன்றில் அறிமுகத்தால் ஏற்பட்ட இலக்கியக் கிளர்ச்சியும் ஆதிக்கம் மிகைக்க, நான் அப்போது பார்த்துக்கொண்டிருந்த ஒரு வேலையை விட்டுவிட்டு, முன்றிலில் அமர்ந்து இச்செய்தியை அரங்கநாதன் அறியத் தந்தேன். என் சிறுபிள்ளைத்தனம் நினைத்து மிகவும் ஆதங்கம்கொண்டார்.  ‘இனி என்ன செய்யப்போகிறாய்?’ என்று பரிதவித்தார். அங்கு வருபவர் சிலரிடத்தும் ஆற்றமாட்டாமல் சொல்லிப் புலம்பினார் என்று பிறகு தெரிந்தது.

 சில தினங்கள் கடந்த மதியமொன்றில் புத்தகக் கடைப் பணியாளரும் நானும் சோம்பியிருக்கையில் ஒருவர் வந்தார். தோல் பையை ஓரத்தில் வைத்துவிட்டுச் சட்டையின் மேல் பித்தானைக் கழற்றி காலரை மேலேற்றிவிட்டபடி என் பக்கத்து நாற்காலியில் சாய்ந்தமர்ந்தார். பணியாளர் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார்: “இவர்தான் யூமா வாசுகி…”

“ஓ, தெரியும். ‘பாத்துக்கிட்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒருவன் இலக்கியவாதி ஆகணும்னு வந்து நிக்கிறான், என்னத்தச் சொல்றது’ என்று அரங்கநாதன் வருத்தப்பட்டாரே, அவர்தானே நீங்கள்?”

 சி.மோகனுக்கு முதலில் நான் இப்படித்தான் அறிமுகம் ஆனேன். அவருடனான தொடர்ந்த சந்திப்புகள் என்னைப் பொருட்படுத்தும்படி எனக்கு பூடக அழுத்தம் கொடுத்தபடியிருந்தன. அவருடைய உடல்மொழியும், பேச்சுத் தொனியும், தோரணையும், அவரில் தோய்ந்து ஊறி அனிச்சையாகச் சிதறித் தெறிக்கும் இலக்கியமும், அனைத்துக்கும் மேலாக உள்ளும் புறமுமான, கலைநேயச் சித்திர வேலைப்பாடுகளுடைய அவரது தனிமையும் என்னைத் தம் வசமாக்கின. பிறகு, அவரைச் சந்திப்பதற்காக மட்டுமே தினமும் முன்றில் செல்பவனானேன். என்னைப் போன்றே, மிக இயல்பாக, இலகுவாக அனேக இளைஞர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். மெத்தனமும் மேன்மையுமான அவரது மாயநுண் வசீகரம், அவர் வரவை எதிர்பார்த்து எங்களை நாள் முழுதும் காத்திருக்கச் செய்த சந்தர்ப்பங்கள் உண்டு. அல்லலுற்ற கடுங்காலத்தில் மோகனுடனும் நண்பர்களுடனும் முன்றிலில் தஞ்சமடைந்திருந்த ஒரு பொழுதை இறுத்துவைத்த கவிதை இது.

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

இப் பெருநகரில்
பூட்டப்படும்வரை அமர்ந்திருக்க அனுமதிக்கிற
ஒரு புத்தகக் கடையுண்டு.
சூரியக் கொடுக்குகள் துளையிட்டுறிஞ்சிய
வியர்வை காய்ந்து
அன்றைய தினத்தைத் துரத்திச்
சோர்ந்த கால்களுடன்
நாங்கள் மாலையில் கூடும் இடம்.
நண்பர்கள் சந்திக்கையில்
வணக்கம் சொல்லிக்கொள்வதற்குப் பதிலாக
இது எத்தனையாவது நாள் பட்டினியென்று
பரஸ்பரம் கேட்டறிகிறோம்.
ஒவ்வொருவராகச் சேர்ந்து – மேலும் யாரையோ
எதிர்பார்க்கிறோம்.
அனைவரும் தேநீர் பருகுமளவுக்குப் பணம் வைத்திருக்கிற
யாராவது ஒருவர் வந்தாகவேண்டியிருக்கிறது.
எல்லோருடைய கடைசி சில்லறைகளையும் திரட்டி

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

பசி தாங்கவியலாத அல்சர்கார நண்பனுக்கு
சிற்றுண்டி வாங்கிவர ஆளனுப்புகிறோம்.
காத்திருப்பமைதியைச் சற்று நகர்த்தி,
டிக்கட் இல்லாமல் பயணம் செய்து
பரிசோதகரிடம் சிக்கித் தப்பிய கதையை
சுய எள்ளலுடன் சொல்லிச் சிரிக்கிறான் ஒருவன்.
எதிர்காலத்தைப் பணயம்வைத்து உழைத்த சினிமா
திரைக்கு வராமலேயே முடங்கிற்றென வருந்தும்
உதவி இயக்குநன்,
சட்டைப்பையிலிருந்த கவிதை ஒன்றை மறுபடியும்
திருத்தியெழுதத் தொடங்குகிறான்.
வேலை நீக்கம் பெற்ற
மருந்து கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி
மனதில் உருவான கதையின் பரவசத்தால்
முதுகு நிமிர்த்தியமர்கிறான் – இன்னும் சிலர்
புத்தகங்களெடுத்துப் புரட்டிக்கொண்டிருக்கையில்
மழை வருகிறது.
புத்தகக் கடை மாடி விளிம்பில் நின்று
கீழே பார்க்கிறோம்.
எங்களுடைய அறைகளில்
எங்களுடைய இரவுகளில்
எவருக்கும் தொல்லையேற்படாதபடி
நாங்கள் தேர்ந்துகொண்ட தனிமையில்
ரகசியமாய் அழுத கண்ணீரில்
அழுகிக் கிடக்கிற
அசுரவித்துகளை மறந்து
முழுமனதாய்க் குளிர்ந்து
பெருங்காதலாய்
பூரண சாந்தமாய்
மழையைப் பார்க்கிறோம்.


நான் காரோட்டியாக ஆகாதது, தையல் கற்றுக்கொள்ளாதது, ஓவியக் கல்லூரிக்குச் சென்றதையெல்லாம்கொண்டு காலம் நான் மோகனை வந்தடைவதற்கான வழி செய்ததாக எனக்கு விளங்கியது. அவரது அண்மையில் என் நிராதரவு குலைந்தது. தனிமை இரவின் துயர்பாடுகள் தணிந்தன. சி.மோகன், என் சென்னை இருப்பின் ஆதாரமாக  ஆனார்; மானசீகப் பரத்திலும் இக இருத்தலிலும். மேலெழுந்தவாரியாக எதிலும் பட்டும்படாமலும் வழுக்கிக் கலைந்துகொண்டிருந்த என் மருண்ட பார்வை, நடுக்கமற்று நின்று நிலைத்து அவதானம் அறிந்தது. நான் மோகனின் சொல்லிலும் செயலிலும் மிளிர்ந்த கலை நம்பிக்கையைச் சேகரித்துத் தொகுத்து, என் போக்குப் பாங்கை வடித்துக்கொண்டேன். இந்த இடத்தில், ‘குதிரைவீரன் பயணம்’, சி.மோகன் சிறப்பிதழி’ன் என் முன்னுரை வரிகள் சில, பொருத்தம் நோக்கி சேர்ந்துகொள்கின்றன:

 ‘இப்போது நினைக்கும்போது வியப்பான ஒரு சம்பவமாக இருக்கிறது; ஆயினும் அப்போது அது மிக எளிதாக நேர்ந்தது. நான் சி.மோகனைச் சந்தித்தேன். மிக இலகுவான தன்மையுடன் இதங்குளிர்ந்த பசுமையுடன் தனக்கு நிகராய் என்னை வைத்து அவர் ஓர் உரையாடலைத் தொடங்கினார். அது காலங்களில் ஊடுருவித் தொடர்ந்தது. அது என் புழுக்கத்திற்கொரு சாமரமாக அமைந்தது. அவ நம்பிக்கையில் கன்றிப்போன மனதில் வெகு ஊக்கத்தைப் பரப்பியது. கலை என்பது மனிதத்தின் பேரர்த்தங்களில் ஒன்று என்று அவர் கனிந்து தணிந்து மொழிந்தபோது, என் ஆன்மாவில் ஓர் அசரீரி ‘ஆம்!’ என்று ஒலித்தது. வெவ்வேறு கோணங்களில் வந்து ஒளியால் நிலம்  தழுவும் கிரணங்களைப்போல, ‘கலை நம்பிக்கை’ எனும் ஒரு தரிசனத்தை அவர் முன்வைத்துக்கொண்டே இருந்தார். இன்றும் அதுதான் அவரின் உள்ளும் புறமுமாக இருக்கிறது. அவரது ஜீவாதாரமாக இருக்கிறது. அது அப்பழுக்கற்ற ஓர் உண்மையாக அவரிடத்தில் எளிதே நிலைபெற்றிருக்கிறது. நான் அதிலிருந்துதான் என் கை  விளக்கை சமைத்துக்கொண்டேன். கலையின்பாற்பட்ட அந்தப் பயணத்தில் மற்ற கணங்கள் கரைந்துபோயின. இன்றும் என் இருப்பை அதுவே அடைகாக்கிறது. ஆக, அவருக்கான என் கடப்பாடு என்பது நிரந்தரமானது. இந்த என் குரல் மற்ற அனேகரின் குரலாகவும் ஒலிக்கிறது என்பதை நான் உணர்கிறேன்.’

சுதந்திர ஓவியனாக நான் பத்திரிகைப் பக்கங்களில் கருங்கோடுகள்கொண்டு மட்டுமே சித்திரம் கூறிவந்தபோது மோகன், கதையாகவும் கவிதையாகவும் ஓவிய ரசனையாகவும் தோழமையாகவும் தன் வாழ்வைச் சீராட்டிக்கொண்டிருந்தார். ஆனால், வாழ்க்கை அவருக்குச் சிறுமை செய்ய பெருஞ்சிரத்தை கொண்டதுதான். அவர் இதயத்தில் ஆணிகளறைந்து துயராடைகளைத் தொங்கவிடுதற்கு பிரயத்தனப்பட்டது. பயணிக்கும் பாதங்கள் வைக்கும் அடிகளில் எவற்றையெல்லாம் வீழ்ச்சியாக்கலாம் என்று, அவரது குதிகால்களைப் பின்தொடரும் கொடூர ஒற்றனாக உற்று நோக்கியிருந்தது. இடர்களின், இழப்புகளின், வறுமை அலைக்கழிப்புகளின் விதானம் ஒளி மறைத்து வெளியில் கவிந்திருந்தபோது, தன் அகம் திறந்து பூத்த கலையின் சுடர்கொண்டு அவர் கடந்து சென்றார். கலைஞரவர், அவர் காண்பதும் கருதுவதும் கனவும் அதுவாயிருக்கிறது. மலினங்கள் சூழச்சூழ எகிறி மகத்துவம் பற்றி மேவிக்கொள்ளும் மனமது; அந்த ஞானத்தின் களிப்புகூடியது.

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

புத்தகக் காட்சித் திடலிலொரு இரவு. காட்சி முடிந்து கதவு பூட்டும் நேரம்.  போதையின் ஆசி செறிந்து மோகன் தன் ஆழ் சுயத்தில் நின்று சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தன் ஒட்டுமொத்த ஜீவிதம் படர்ந்திருக்கும் கலையெனும் கொழுகொம்பில் மிக்கத் துயருற்றமர்ந்திருக்கும் சிறு பறவையாயிருந்தார். தான் ஆத்மார்த்தம்கொண்டு பின்தொடர்ந்திருந்த முன்னோடி ஒருவரின் மீதான தன் விமர்சன மனத்தாங்கல்களை, அந்த ஆளுமையின் பீடத்தில் சிறுதூசும் சேராதவாறு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சொற்களெல்லாம் அவர் கண்களிலிருந்து கண்ணீர் சுரக்கச் செய்தன. ஆள்களெல்லாம் கலைந்துபோன அந்த முன்னிரவு அமைதியில், சில நண்பர்கள் நாங்கள் இருக்க அந்தத் துளிகள் அவரது எழுத்து உறவின் தூயத் தழல்கள் திகழும் அகல்களாகி அமைந்தன. அந்த நிலை, பெரும்புனைவாளர்  ஒருவரின் தெள்ளத்தெளிவான சாராம்சத்தையும் இலக்கியத்திற்கொண்ட மோன ஆவேசத்தையும் உரித்துவைத்த நிலை. நான் என் மானசீக  வந்தனங்களை அவருக்கு அர்ப்பித்தேன்.

வைக்கம் முகம்மது பஷீர் இடம் மாறிச் செல்லும்போது, தன் கிராமபோனையும் சாய்வு நாற்காலியையும் சைக்கிளில்வைத்து எடுத்துச் செல்வார் என்று படித்திருக்கிறேன். தான் மாறும் அறைகளுக்கெல்லாம் மோகன் ஓவியங்களைக் கொண்டுசெல்கிறார். சட்டகங்களுக்குள் ஓவியங்கள் இடையறாது நிகழ்ந்துகொண்டிருக்கும் அறையில்,  ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரங்கள்’ உருவாகின்றன.

ராயப்பேட்டையில் அவர் தங்கியிருந்த காலம் குறித்த மனப்பதிவு இது: இருவர்கூட வசதியாகப் படுக்க இடமற்ற அந்தச் சிற்றறையில், புத்தகங்களுக்குக் கொடுத்தது போக மீந்த இடத்தில்தான் அவரது வசித்தல். அவ்வளவு சிறு இடம் அழகானதொரு நேர்த்தியின் பராமரிப்பிலிருந்தது. மிகச்சிறிய வாழ்க்கையை ஆன்மாவால் அழகுபடுத்துவது போல. எந்த ஆயத்தமுமற்று அணுக முடிகிற அவரைத் தேடிச் செல்கையில், அவரது அறையில் தொடங்கியது உரையாடல். பிறகு அங்கிருந்து வெளியேறி தேநீர்க்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம், கடல் நோக்கிய நடை. இரவு வர, கடற்கரைப் புல்மேட்டில் நிலவு பார்த்துப் படுத்தோம். இதமான குளிர், மேலே நட்சத்திரச் சிணுங்கல், தரையில் சில்வண்டுகளின் கீச்சிடல். அவர் வார்த்தைகளில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ விரிந்தது. அந்தப் பரவச மலைப்பில், நூதனப் புதிர் உணர்வில் எனக்குக் குளிரேறியதோ, நேரம் கடந்ததோ தெரியவில்லை. அங்கிருந்து எழும்போது ஏறத்தாழ அதிகாலைக்குச் சமீபம். அரவமற்ற அகாலப் பாதையில் அவர் காலடிகளின் லயத்தோடு என் பாத ஒலி சேர்த்தவாறு திரும்பினேன். இப்படிப் பல இரவுகள். பல இடங்கள். அன்று அவர் அறையில் தூங்கினோம். மறுநாள் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடைபெற்ற அவர், சென்று தெரு முடிவில் மறைவதுவரை பார்த்துக் கொண்டிருத்தேன். அந்தப் பிரிதல் மிகத் தற்காலிகம்தான் எனினும் அது மறுநாள் என் குறிப்பேட்டில் இப்படித் திரிந்தது:

பள்ளம்
உன் இறுதி வார்த்தை விழுந்த பள்ளத்தில்
நான் நின்றிருக்கிறேன்.
நிகழ்வுக் கென்னை மறுத்து கடந்ததையும்
தாண்டிப் போகிறது விரைவு நடை.
உடையின் நிறம் அசைந்து
அடையாளமாகிறது ஜனங்களுக்கிடையில்.
என் நம்பிக்கையின் நிறம்.
இந்தத் தெருவின் முனைவரையிலும்
உனக்கு வாய்ப்பிருக்கிறது,
ஒரு தடவை திரும்பிப் பார்ப்பதற்கு.
தெரு நீளத்தில் நிறம் சிறுக்கிறது.

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

இதைவிடவும் அற்புதமான சூழல்
உனக்கு
ஒருபோதும் வாய்க்கப்போவதில்லை,
தலை திருப்புவதற்கு.
தெருமுனையில் திரும்பிய பின் நீ
தொலை தூரப் பிரதேசத்துக்கு
இரண்டு டிக்கட்டுகள்
பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கலாம்.
விடுதியொன்றில்
இரண்டு குவளை தேநீருக்கு
ஆர்டர் கொடுத்துவிட்டு
இரண்டில் ஒரு சிகரெட்டை
புகைத்தபடிக் காத்திருக்கலாம்.
குழிந்துகொண்டே போகும்
இந்தப் பள்ளத்திலிருந்து
எதுவும் தெரியப்போவதில்லை,
எப்போதும் எனக்கு.

தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி

  ‘விஷ்ணுபுரம்’ வந்தபோது அந்த நாவல் தமிழிலக்கியத்தின் சாதனைத் திருப்பமென்று போற்றி ஜெயமோகனின் ஊருக்குச் சென்று அவர் சிலாகித்ததும், ‘அவுட் லுக்’ பத்திரிகை கோணங்கியை இந்தியாவின் 50 சிறந்த ஆளுமைகளில் ஒருவராகவும் ‘கதை சொல்லி’யாகவும் அறிவித்திருந்தபோது, கோணங்கியின் புகைப்படத்தை நடுவில்வைத்து நண்பர்களுக்கு மது விருந்தளித்து அகம் மகிழ்ந்ததையும் நான் நினைக்கிறேன். அது, தன்னை ஈந்து கனிந்த கலைத்துவத்தின் வெளிப்பாடு.

 நகரத் தெருக்களில் அவருடன் அலைந்தது நிறைய; எல்லாம் படைப்பனுபவம்தான். வேலை தேடி இருவரும் பத்திரிகைகளுக்குப் படையெடுத்த முயற்சிகள் சில; அந்தக் காலத்தின் கதிக்கேடு.

ஏதுமற்ற அவர் எளிமையழகில் ஆனந்திக்கிறார். நான் என் நகைச்சுவைகளை ஏசுவிடம் பகிர்ந்துகொள்வதுண்டு என்று ஒரு பிஷப் கூறியது, மோகனது இயல்புக்கும் இசைகிறது. அது, உரசி ரத்தக்கீறல்கள் உண்டாக்கக்கூடிய மிக இடுக்கமான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தளர்த்திப்போடுகிறது. வலுத்த கிலேசம் இது என்று பாரம் தாளாது கொண்டு போவதையெல்லாம் பகடிகளிலும் தமாஷ்களிலும் பலவீனப்படுத்திய நாள்கள் பல. வேறு யாரைப் பற்றியும் என்னால் இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆயினும் இந்த வரிகளை நான் எழுதும்போது துன்பகரமாக உணர்கிறேன். ஏனெனில், மோகனின் இன்றியமையாமை குறித்து, அந்தச் சர்வ மலர்ச்சி குறித்து, தன் இயக்கத்தில் படைப்பு மனங்களைத் தோற்றுவித்துக்கொண்டி ருக்கும் இயற்கை குறித்துச் சொல்ல என் முனைப்புகள் இயன்றவரை முட்டிமோதுகின்றன. இயலா வெறுமை கணிப்பொறியின் முன்னே என்னை நிராதரவாக்குகிறது. பல வருடங்களாகத் தொடரும் எந்தச் சிறுபிணக்கும் அற்ற அந்த நட்பை நான் பாடுகிறேன். பகட்டுகளும் பாசாங்குகளுமற்ற அந்த மனப்பூர்வத்தையும் குழந்தமையையும் கொண்டாடுகிறேன். சில வருடங்களுக்கு ஓர் இடமென நிர்பந்தக் குடிப்பெயர்ச்சியில் அறைகள் மாறிக்கொண்டிருக்கும் வறிய தனியர், எல்லாம் திகைந்த அரசனைப்போல அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அந்த அருமையைச் சித்திரிக்கிறேன்.

 ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ (நாவல்), ‘ரகசிய வேட்கை’, ‘கடல் மனிதனின் வருகை’ (சிறுகதைத் தொகுப்புகள்), ‘தண்ணீர் சிற்பம்’, ‘எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை’ (கவிதைத் தொகுப்புகள்), ‘நடைவழிக் குறிப்புகள்’, ‘காலம் கலை கலைஞன்’, ‘சி. மோகன் கட்டுரைகள்’ (கட்டுரை நூல்கள்), ‘ஜி. நாகராஜன்’ (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை), ‘அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாகக் கலைஞன் இருக்கிறான்’ (உரையாடல்), ‘நவீன உலகச் சிறுகதைகள்’, ‘பியானோ’ (மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்கள்), ‘ஓநாய் குலச் சின்னம்’ (மொழிபெயர்ப்பு நாவல்), ‘ஜி. நாகராஜன் படைப்புகள்’, ‘சவாரி விளையாட்டு’, ‘கோபிகிருஷ்ணன் படைப்புகள்’, ‘ஆசை முகங்கள்’ (தொகுப்பு நூல்கள்), ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ (பொருள்ரீதியான பகுப்பு)…

 ஏகாந்தக் கூடுகளிலிருந்து மன முகடுகளில் அடைகாத்துப் பிறப்பூட்டி, சி.மோகன் இவற்றைக் காலகாலங்களில் பறந்தலைய வைத்திருக்கிறார். உரையாடியும், தான் தோய்ந்த கலையைப் பற்றிப் படர்ந்தோங்கச் செய்திருக்கிறார்.

 சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, சம்பத்தின் ‘இடைவெளி’ ஆகிய நாவல்களும் மற்றும் பலரது படைப்புகளும் சி. மோகன் மேற்கொண்ட ஆசிரியத்தால் சிறந்திருக்கின்றன. பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர். கலை இலக்கியத்தின் மிகத் தேர்ந்த விமர்சகர். நவீன ஓவியத்தையும் நவீன ஓவிய ஆளுமைகளையும் தொடர்ந்து துலக்கிக் காட்டி தமிழுக்கு அணுக்கமாக்கி வருபவர்.

 புதுமைப்பித்தன் நினைவு ‘விளக்கு’ விருது உட்பட பல அங்கீகாரங்கள் இவரைச் சேர்ந்திருக்கின்றன. நம் கலாசாரத்தின் கவினுறு உப்பரிகையானவர். அங்கிருந்து நோக்கும்போது நம் பார்வையின் எல்லைகள் விரிகின்றன.