மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை
பிரீமியம் ஸ்டோரி
News
மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

து ஓர் ஆய்வு நூல். இதுவரை நான் என் வாழ்வில் பொறுப்பாக எதையுமே ஆராய்ந்தது இல்லை. கண்ணிடுக்கி ஆராய்ந்தபோதெல்லாம் விரும்பத்தகாத, அதிர்ச்சியூட்டும் முடிவுகளே எனக்குக் கிடைத்தன. அவை என் குளிர்தருவை ஒட்ட வெட்டி, மொட்டை வெய்யிலில் என்னை நிறுத்திவைத்தன. எனவே, நான் எதையும் ரொம்பக் கிட்டத்தில் போய்ப் பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் பத்து மீட்டர் இடைவெளியில் பயணிப்பதென்பது விபத்துகளைத் தவிர்க்க உதவும் என்பது என் எண்ணம்.  ‘கார்குழல்’ என்பது ஒரு செளகர்யம். ‘ஈறும் பேனும்’ என்பது எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும்கூட அசெளகர்யம்தானே? ‘ரஸக் குறைவும்’கூட. ஆனால், சலபதிக்குக் கார்குழலில் ‘மட்டும்’ மயங்கித் ததும்பும் பாக்கியமில்லை. அவர் ஈறையும் பேனையும் கண்டாக வேண்டும். இப்பிறப்பில் அவர் விதி அப்படி!

தகவல்கள், அதன் வழி பெறப்படும் அறிவு, அவ்வறிவின் துணையோடு நடத்தப்படும் தர்க்கங்கள் ஆகியவற்றில் ஒரு கவிஞனாக எனக்குப் பெரிய அக்கறை இல்லை. கவிதை முட்டாள்தனத்தில்தான் சுவாரஸ்யம் கொள்கிறது, உச்சமடைகிறது என்பது என் எண்ணம்.

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

நோய்நாடி நோய்முதல் நாடி
அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


என்கிற அறிவு கவிதை ஆவதில்லை. இப்பாடலை வேறு வேறு விசயங்களுக்கும் பொருத்திப் பார்த்து நாம் பெருமிதம் கொள்ளலாமே ஒழிய, இப்பாடல் ஒருக்காலும் கவிதை ஆவதில்லை... மாறாக, வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.

 (வந்த விருந்தினர்களை நல்ல முறையில் உபசரித்து அவர்களை உண்ணவைத்துப் பின் மிச்சமிருப்பதை உண்பவனின் நிலத்திற்கு வித்தும் இட வேண்டுமோ? அனைத்தும் தானே விளைந்துவிடும் என்பது குறிப்பு.)என்கிற முட்டாள்தனம் கவிதை ஆகிவிடுகிறது. 
மானுடர் உழா விடினும், வித்து நடா விடினும், அன்றி நீர் பாய்ச்சா விடினும், அன்பு மட்டும் செய்தால்போதும்; மண்மீது நெற்கள், புற்கள் வகைவகையாய் மலிந்துவிடும் என்று பாரதி நமக்கு உறுதி அளிக்கையில், பெருக்கெடுக்கும் கண்ணீர், பேரன்பின் முட்டாள்தனத்திலிருந்தே வருகிறது. முட்டாள்தனம் என்கிற சொல் உங்களைத் துன்புறுத்தினால் அதீதம், கற்பனை, தரிசனம் என்று உங்களுக்கு உகந்த கலைச்சொல்லை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கவிதை, மண்ணோடே கட்டிப் புரண்டாலும் அது ஒருவிதப் ‘பறத்தலில்’தான் உயிர்கொள்கிறது. ஆய்வோ, இன்னும் இன்னும் என ஆழக்குழி தோண்டி இறங்குகிறது. ஆனால், அப்படி இறங்குவதன் மூலம் ஓர் ஆய்வாளன் கண்டெடுத்து அளிக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். எனவே, ஒரு கவிஞன் ஓர் ஆய்வாளனைத் தாராளமாக அன்பு செய்யலாம் என்பதே என் எண்ணம்.

பாரதி கஞ்சா புகைத்துவிட்டு ஒரு யானையிடம் போய் ‘நீ காட்டுக்கு ராஜா... நான் கவிக்கு ராஜா... என்று சொல்ல, மதம் பிடித்திருந்த அந்த யானை பாரதியை மிதித்துக் கொன்றுவிட்டது’ என்று ஒருவர் என் பிள்ளைப்பிராயத்தில் ஒரு கதை சொன்னார். அது கேட்டு நெக்குருகிப் போனேன். ‘காட்டுக்கு ராஜா சிங்கமன்றோ..?’ என்று நான் திருப்பிக் கேட்கவில்லை. இதே கதையைச் செம்மையாக்கி இன்னொருவர் இப்படிச் சொன்னார், ‘பாரதி மிருக்காட்சி சாலையொன்றில் சிங்கத்தின் கூண்டைப் பற்றியவாறு கர்ஜித்ததுதான், ‘நீ காட்டுக்கு ராஜா... நான் கவிக்கு ராஜா...’ பாரதியைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நெக்குருகத் தயார் நிலையில் இருந்ததால், இதற்கும் நெக்குருகிப் போனேன். இங்கு நாம் கவனிக்க வேண்டியது எவ்வளவு பயங்கரமான கதைகளையும் தாங்க வல்லதாய் அவன் ஆகிருதி இருக்கிறது என்பதை. பாரதியைப் பற்றிய கதைகள் ஏராளம் என்பதாலேயே அவனைப் பற்றிய ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தப் புத்தகத்தை ஒரு விதத்தில் பாரதியை மானுடனாக்கும் முயற்சி எனலாம். அர்ச்சனைப் பூக்கள், ஆராதனைத் தட்டுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பாரதி என்கிற மானுடனை உள்ளது உள்ளபடிக் காண முயன்றிருக்கிறார் சலபதி. அவன் சிந்தனையில் நேர்ந்த பிழைகள், போதாமைகள், தவிர்க்க இயலாத சமரசங்கள் போன்றவற்றைத் தக்க சான்றுகளுடனும் தர்க்க ஒழுங்குடனும் நிறுவியிருக்கிறார். கூடவே, பாரதியைப் பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களையும் சான்றுகளுடனும் சுவாரஸ்யத்துடனும் சொல்லிச் செல்கிறார். பாரதியிடம் தான் காணும் குறைகளை, போதாமைகளை நிர்தாட்சண்யமாகச் சொல்லும்போதும் அவர் ஒரு ‘பாரதி அன்பராகவே’ இருக்கிறார் என்பதில், இன்னொரு ‘பாரதி அன்பரான’ எனக்கு மகிழ்ச்சி. ஒழித்துக்கட்டலின் விரோத பாவத்துடன் இக்கட்டுரைகள் எழுதப்படவில்லை. ‘உண்மை நின்றிட வேண்டும்’ என்பதைத் தவிர, சலபதிக்கு வேறு நோக்கங்கள் இல்லை என்று நம்பலாம்.

நம் ஆதர்ஷ நாயகர்கள் ஏதோவொரு கட்டத்தில் கடவுளராகிவிடுகிறார்கள். அவர்களின் பளிங்குச் சிலையில் ஒரு சிறு கீறலையும் நம்மால் பொறுக்க முடிவதில்லை. பாரதி எனும் பளிங்குச் சிலையில் விழுந்த கீறல்களைக் குறித்துப் பேசுவதாலேயே  ‘பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு’ என்கிற கட்டுரை என்னைப் பெரிதும் ஈர்த்தது. மிகவும் சுவையான கட்டுரை இது. ஆம்.. ஆகக் கொடூரமான அவலச்சுவை.

இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் பாரதியின் முதல் படைப்பு, கல்வி கற்க உதவி கேட்டுத் தனது இளம் வயதில் எட்டயபுரம் ஜமீனுக்கு அவன் எழுதியதே என்பதை அறிவோம். பிறகு, அவன் தன் வாழ்வின் அந்திமக் காலத்திலும் மேலும் மூன்று முறை ஜமீனுக்கு எழுதியிருக்கிறான். இளவயதில் அவன் எழுதிய கடிதத்துக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. ஆனால், ஒரு விடுதலை இயக்கத்தின் மகாகவியாகத் திகழ்ந்த பிறகு, வாழ வேறு வழியின்றி எட்டயபுரம் திரும்பி அவன் எழுதிய சீட்டுக் கவிகளுக்கும் காணச் சகியாத ஒரு கடிதத்திற்கும் எதிர்மறையான முக்கியத்துவங்கள் உண்டு. இந்தக் கட்டுரை இந்தச் சம்பவங்களை விரிவாக ஆய்கிறது.

உதவி கேட்டுத் தான் எழுதிய இரண்டு கவிதைகளுக்கும் பதில் வராதது கண்டு உரைநடைக்கு மாறுகிறார் மகாகவி. ‘வம்சமணி தீபிகை’ என்பது எட்டயபுரத்து ராஜவம்சத்தின் வரலாற்றைச் சொல்லும் நூல். இது கொச்சையான தமிழில் இருப்பதாகவும் தான் அதை இனிய, தெளிந்த தமிழில் புதுக்கித் தருவதாகவும் கேட்டு விண்ணப்பிக்கிறான். அதாவது ‘ஓசிப் பணம் வேண்டாமப்பா... வேலை செய்து தருகிறேன், கூலி கொடு...’ என்று கேட்கிறான். இந்த ‘வம்சமணி தீபிகை’ எதைப் பேசுகிறது என்பதுதான் இந்தத் துயர நாடகத்தின் உச்சம். இது எட்டப்பன், கும்பினிப் படைகளோடு சேர்ந்துகொண்டு கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற பாளையக்காரர்களை அழித்தொழித்த ‘வீரவரலாற்றை’ பிரதானமாகப் பேசுகிறது. கட்டபொம்மனை ஓட ஓட விரட்டியடித்தற்காக, வெள்ளை அரசிடம் பெற்ற வெகுமானங்களைப் பெருமையுடன் பட்டியல் இடுகிறது. நல்லூழாக ஜமீன் இக்கடிதத்திற்கும் பதில் தரவில்லை. எனவே, வரலாற்றில் நமது மகாகவி மகாகவியாகவே மீசை முறுக்குக்குப் பங்கமின்றி வாழ்ந்துவருகிறார். பாரதி எழுதிய கடிதத்தை முழுக்கத் தந்திருக்கிறார் சலபதி. அதில், ரொம்பவும் கலங்கடிக்கும் வாக்கியம் அதன் பின்குறிப்பு, ‘குறிப்பு: நான் இவ்வூரிலேயே ஸ்திரமாக வசிப்பேன். கைம்மாறு விஷயம் ஸந்நிதானத்தின் உத்தரவுப்படி’ அதாவது, ‘நீங்களா பார்த்து எதாவது போட்டுக் கொடுங்க...’ என்பதுதான் குறிப்பின் பொருள். எவ்வளவு கசந்தாலும் அதுவே உண்மை. மகாகவியைத் திரும்பவும் பின்னோக்கி இழுத்துவந்து சுப்பிரமணியனாக்கி வேடிக்கை காட்டியிருக்கிறது காலம். ‘மூன்று லட்ச ரூபாய்களைக் கொடுத்து, அழகான வீட்டில் உட்காரவைத்து, ஐந்து ஆட்களை அமர்த்தி, நூலாக எழுதித் தள்ளு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் பாரதியிடம்’ என்கிறார் பாரதிதாசன். ஆனால், அப்படிச் செய்யத்தான் யாருமில்லை. ஜமீனிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், மீண்டும் சென்னை திரும்பி அடுத்த இரண்டாண்டு களுக்குள் அவன் இறந்தும் போகிறான். ‘அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’ என்று எழுதியவன் துன்புற்று மாண்டான்.

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசைஓர் ஆய்வாளனைப் பொறுத்தமட்டில், அவன் புதிதாகக் கண்டுசொல்லும் ஒன்றைச் சான்றுகளுடனும் தர்க்கத் திறனுடனும் நிறுவ வேண்டும். அப்படி நிறுவிவிட்டால், அது அவன் வெற்றியாகவே கொள்ளப்படும். ஆனால், சலபதி இக்கட்டுரையை அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் மனோநிலையில் எழுதவில்லை. மாறாக, பாரதி மீதான மிகுந்த கரிசனத்துடன், துயரார்ந்த சொற்களைக்கொண்டே எழுதிச்செல்கிறார்.

‘நமக்குத் தொழில் கவிதை’ என்று எழுதியவன் வறுமையுற்றதை அந்தக் காலகட்டத்தின் பதிப்புச் சூழல், வாசகத்தன்மை ஆகியவற்றின் பின்னணியில் ஆய்கிறார் ஆசிரியர். பாரதி எழுதவந்த காலத்தில் ‘புரவலர் மரபு’ கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதைச் சொல்கிறார். ‘1880-கள் தொடங்கி ஒரு கால் நூற்றாண்டுக் காலம் பிரபுக்கள், சமய மடங்கள் உதவியோடு தமிழ்ப் பதிப்புப் பணியில் முனைப்புடன் செயல்பட்ட உ.வே.சா, 1906–ல் அரசாங்கத்தின் பொருள் ஆதரவை வேண்டி விண்ணப்பிக்க வேண்டியவரானார்’ (பக்.116).

பாரதியின் ‘கண்ணன் பாட்டு’க்கு முன்னுரை எழுதிய வ.வே.சு. ஐயர் இப்படிச் சொல்கிறார்... ‘முன்காலத்தில் ஆசிரியர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருள் உதவி செய்து, அவர்கள் மனதைச் சிறிய விசாரங்கள் பீடிக்காமல் காத்து வந்து, அவர்களுடைய ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்படி செய்துவந்தார்கள். தற்காலத்தில் கல்வியபிமானமுள்ள பொது ஜனங்கள்தான் அக்காலத்து அரசரின் ஸ்தானத்தை வகிக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமானத்தை, விலையைப் பொருட்படுத்தாமல் நூல்களின் யோக்கியதையைக் கருதி ஆதரித்துத்தான் காட்டமுடியும்’.

‘இப்போது உலகம் முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும்... ஊர்தான் ராஜா...’ என்று எழுதிய பாரதியைப் பொது ஜனங்களால் காப்பாற்றக்கூட முடியவில்லை. ஜமீனை நம்பி, புரலர்களை நம்பி, மனம் கசந்து, கடைசியில் தன் நூல்களைத் தானே வெளியிடத் திட்டமிட்டான். தன் திட்டப்படி வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 100 ரூபாய் கடன் கேட்டான். அதற்கு 24 விழுக்காடு வட்டியும் தருவதாகச் சொன்னான். அப்போதும் யாரும் பணம் அனுப்பியதாகத் தெரியவில்லை.

வ.வே.சு. எழுதுகிறார்... ‘ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாருக்குத் தமிழ்நாட்டில் நிகரற்றுயர்ந்த கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இவர் நூல்களை வாங்காமல் ஜனங்கள் வேறு யாருடைய நூல்களை வாங்கப்போகிறார்கள். இந்த நூல்கள் மிகவும் நீண்டபட்சம் இரண்டு வருஷங்களில் விலையாகிவிடும். அதற்குள்ளேயே இரண்டாம் பதிப்புகளும் புதிய நூல்களுக்கும் வேண்டுதல் ஏற்படுமென்பது மிகவும் நிச்சயம்’.

தன் புத்தகங்கள் ‘மண்ணெண்ணெய்த் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதரணமாகவும், அதிக விரைவாகவும் விலைபட்டுப் போகும்...’ என்றவன் நம்பினான். மகாகவிகளின் புத்தியிலும் மடமை உண்டு என்பதை நம் மக்கள் நிரூபித்துக்காட்டினர். இப்போதுபோல புத்தகங்களை விற்கப் பதிப்பகம் போன்ற அமைப்புகள் தோன்றாத சூழலையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் சலபதி.

காகவிகள் என்கிற அடிப்படையில் தாகூர், பாரதி இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவது இங்கு நடந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி ஒப்பிடும்போதெல்லாம் சொல்லப்படும் ஒரு கதை, தாகூரின் மேல் பாரதிக்குப் பொறாமை இருந்தது என்பது. பாரதி என்றொரு கவிஞன் இருப்பதாகவே தாகூர் கண்டுகொள்ளாதபோதும், பாரதி எவ்விதம் தாகூரை வியந்து வியந்து போற்றினான் என்பதை விளக்கிவிட்டு ஒரு சாபம் இடுகிறார் சலபதி...

‘தன் சமகாலக் கவிஞனை இந்த அளவுக்கு வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றிப் புகழ்ந்த இன்னொரு கவிஞன் வேறு எவனும் இருந்திருக்கமாட்டான். அதுவும் தன் வாழ்நாளில் தான் துய்த்தறியாத புகழை இன்னொரு கவிஞன் அடைந்ததை நிபந்தனையின்றிப் பாராட்ட எவ்வளவு பரந்த மனமும், பெருங்கண்ணோட்டமும் இருந்திருக்க வேண்டும்’.

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை

தாகூரின் மேல் பாரதி பொறாமை கொண்டிருந்தான் என்னும் அற்பர்கள் நரகத்தில் உழல்க!

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் தாகூருக்குக் கிட்டியவற்றையும் பாரதிக்குக் கிட்டாதவற்றையும் பட்டியலிடுகிறார் சலபதி. அந்த நீண்ட பத்தியை வாசித்து முடிக்கும்போது பாரதிக்குப் பொறாமையே இருந்திருந்தாலும் அது நியாயம் என்றே எனக்குப் பட்டது. ஆனாலும், ஒரு
மொழிபெயர்ப்பாளனாக தாகூரின் படைப்புகளில் பாரதி நிகழ்த்திய குறுக்கீடுகள், செய்த பிழைகள் ஆகியவற்றையும் குறிப்பிடத் தவறவில்லை கட்டுரை.

கைச்சுவை தீவிரத்திற்கு எதிரானது என்று நம் மூளையில் எங்கோ பதிந்துகிடக்கிறது. ஒரு நல்ல நகைச்சுவையால் தீவிரத்தை மேலும் தீவிரமாக்கவும் முடியும் என்பதை நாம் நம்ப வேண்டும். ``நெஞ்சில் கனல் மணக்கும் பூக்களை’’  ஏந்தியிருந்த அதே பாரதிதான், தமிழ் இதழியலில் கேலிச்சித்திரங்களின் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கிறான். பாரதியின் கவிதைகளில் நகை குறைவுதான். ஆனால், அவனது கட்டுரைகளில் வயிற்றைப் பதம் பார்க்கும் நகைச்சுவைகள் உண்டு. குறிப்பாக, அவனது சுயசரிதையாகக் கருதப்படும் ‘சின்னசங்கரன் கதை’  முழுக்கப் பகடி மொழியிலேயே இயங்குகிறது. ஊரைக் கேலி செய்வதோடு நில்லாமல் பாரதி தன்னையும் கேலி செய்துகொள்கிறான். சலபதி ‘சின்னசங்கரன் கதை’ பற்றி ஆர்வத்தோடு நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சின்னசங்கரன் கதை’ பற்றி வ.ரா சொல்வது... “சிரித்துச் சிரித்து வயிறு அறுந்து போவது மாதிரி இருக்கும். சிரிப்பினால் குடல் ஏற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பலகாலம் பயந்ததுண்டு. படீர், படீர் என்று வெடிக்கும் ஹாஸ்யமும், அந்தக் கதையில் நிறைந்து கிடந்தது. கிண்டல் என்றால் சாதாரணத் தெருக்காட்டுக் கிண்டலா? நமது ஜனங்கள் இப்படியும் வாழத் தகுமோ என்ற துக்கம் தோய்ந்த கிண்டலாகத்தான் நாங்கள் அந்தப் புத்தகத்தில் கண்டோம்”

‘பாரதி அங்கம் வகித்த இந்திய தேசியம் பெரிதும் இந்து சமயம் சார்ந்ததாக இருந்தது என்பதும் இன்று பெரிதும் நிறுவப்பட்டுவிட்டது. பாரதியின் சொல்லாடலில் இந்து சமயக் கூறுகள் மேலோங்கி இருந்தன என்பதும் உண்மை. சுதேசி இயக்க காலத்தில் (1905-1911) அவன் எழுதிய தேசியப் பாடல்கள் இதற்குச் சான்று. அவ்வகையில் அவனது சொல்லாடல் பிற சமயங்களைப் புறக்கணித்தது என்றும் கூறலாம்’ என்று எழுதியிருக்கிறார் ஆசிரியர் (பாரதியும் மொழியின் நவீனமயமாக்கமும்).

பாரதியின் படைப்புகளில் இந்து மதக்கூறுகள் அதிகம் என்பது உண்மைதான். ‘சிவாஜி தன் சைநியத்தாருக்கு கூறியது’ கவிதையில் முகமதியர்களைக் குறித்த வசைகள் உண்டுதான். ஆனால், சிவாஜி தன் சைநியத்தாருக்கு அப்படித்தான் கூற முடியும் என்பதை நாம் மறுக்க இயலாது. அப்படித்தான் கூற முடியும் எனும்போது, மதவாதப் பிரிவினைகளுக்கு வாய்ப்பிருக்கும் காலத்தில் பாரதி ஏன் அதை எழுதினான் என்று வேண்டுமானால் நாம் கேள்வி எழுப்பலாம். ஒரு பகுதிக்கு மேல் இப்பாடல் வெளியாகவில்லை என்பதாகவும் எனக்கு ஒரு நினைவு. மேலும், பாரதி பிற மதக் கடவுளரைச் சேர்த்துக்கொண்டு எழுதிய பாடல்களும் அளவிற் குறைவெனினும் உண்டுதான்.

எந்த இந்து மதத்தின் கூறுகளை அதிகம் பயன்படுத்தியதாகச் சலபதி சொல்கிறாரோ, அதே இந்து மதப் புராணங்கள் வெறும் கற்பனைகள் என்று அவன் தெளிவாகக் குறிப்பிட்டதை மறந்துவிட முடியுமா?

கடலினைத் தாவும் குரங்கும்

மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் !’ நூலை முன்வைத்து) - இசை


வெம்கனலில் பிறந்தோர் செவ்விதழ்ப்
பெண்ணும்/ வடமலை தாழ்ந்ததனாலே – 
தெற்கில் வந்து சமன் செயும் குட்டை
முனியும்/ நதியின் உள்ளே முழுகிப் போய்
அந்த நாகர் உலகில் ஓர் பாம்பின் மகளை
விதி உறவே மணம் செய்த/ திறல் வீமனும்
கற்பனை என்பது கண்டோம்

............ நன்று புராணங்கள் செய்தார்
அதில் நல்ல கவிதை பலபல தந்தார்
கவிதை மிக நல்லதேனும்/ அக்கதைகள்
பொய் என்று தெளிவுறக் கண்டோம்..


என்கிற பாடலை நாம் எங்குவைத்து, எப்படி நோக்குவது?

ஆனால், இக்கட்டுரையில் சலபதி குறிப்பிடும் இன்னொரு அம்சத்தோடு முழுக்க உடன்படுகிறேன். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதியிடம் வடமொழி மீதான காதல் இருக்கவே செய்கிறது.

ஓர் ஆய்வாளன் தண்ணீர் வந்தவுடன் தோண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மேலும் தோண்டினால் ‘பாதாள லோகம்’ வந்துவிடும். பாதாள லோகத்தின் நியதிகள் வேறு. சலபதி, பாரதியின் கருத்துப்படங்கள் விசயத்தில் சற்று அதிகமாகவே ஆராய்ந்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

‘பாரதியின் கருத்துப் படங்கள் வகைமாதிரிகளைச் சீராகக் கையாளுகின்றன. இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்தவர், பார்சிகள் என எளிதில் இனம்காணும் வண்ணம் இச்சமூகத்தவர் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர் எப்போதும் தாடியுடனும் குல்லாவுடனும் காட்சி தருகின்றனர். இஸ்லாமியர்கள் மத அடிப்படைவாதிகளாகப் பொதுப்புத்தியில் பதிவதற்கு இவ்வகை சித்திரிப்புகள் துணை செய்கின்றன. இந்துக்கள் பெரும்பான்மையும் குடுமியுடன் காணப்படுகின்றனர். இவ்வாறான வகைமாதிரிகள் ஒரு வகையில் வெள்ளையர் வற்புறுத்திய அடையாளங்களை ஏற்பதாகவே அமைந்துவிட்டன. இந்திய தேசியம் மதங்களைக் கடந்தது என்ற தேசியவாதிகளின் வாதத்தை இது குலைக்கின்றது’.

எனக்குப் புரியவில்லை. நான்கு மனிதர்கள் இடம் பெறும் ஒரு கருத்துப் படத்தில் அந்த நால்வரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதைத் தனியே பிரித்துக் காட்ட மத அடையாளங்களைத் தவிர வேறு எதைப் பயன்படுத்த முடியும்? பாரதியின் கருத்துப் படங்களில் இந்து மதத்தின் கூறுகள் அதிகம் என்றும், அதனால் முஸ்லீம்கள் அயன்மைப்பட்டுப் போனதாகவும் சொல்கிறார் சலபதி. இங்கு கலை குறித்தும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. ஒரு கலைமனம் தன் நினைவுகள், அனுபவங்கள், வாசிப்புகள் இவற்றினோடு சேர்ந்துதான் இயங்க முடியும். இதுவே இயல்பானது. எனவே, இந்திய தேசியக் கிளர்ச்சியை, சிறையில் கண்ணன் பிறப்போடு இணைத்துத்தான் பாரதியால் கற்பனை செய்ய முடியும். அந்தக் கற்பனைதான் அவனது கருத்துப் படங்களில் வெளிப்படவும் செய்யும். தேர்ந்த வாசகரான சலபதி இதை அறியாதவரல்ல. ஆனால், இங்கு அவ்வாசகர், சலபதி என்னும் வரலாற்றாசிரியரால் பலமாகத் தாக்கப்பட்டு மூலையில் சுருண்டு கிடக்கிறார். எனவே, அவரால் கண் விழித்துக் காண இயலவில்லை. சலபதி சொல்வதுபோல் அவனது கருத்துப் படங்கள் முஸ்லீம்களை அயன்மைப் படுத்தியது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும், அதன் நிமித்தம் பாரதியைக் குற்றம்சாட்டும் தொனியை ஒருக்காலும் ஒப்ப இயலாது.

சென்ற முறை திருநெல்வேலி செல்லும் போது மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சியின் நினைவுகளோடு நெஞ்சு விம்ம அமர்ந்திருந்தேன். இனி அந்த நெஞ்சு விம்மல் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆஷைக் கொல்வதற்கான காரணங்களாக வாஞ்சி சொல்வது...

‘ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். எங்கள் இராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட.... பெருமுயற்சி நடந்துவருகிறது.’

வாயிற்குள் துப்பாக்கியைவைத்துச் சுட்டுக்கொள்ளும் ஆன்ம பலத்தை அளித்தது பரிசுத்த விடுதலை வேட்கையல்ல, கேவலம் மதாபிமானம் என்று அறிய நேர்கையில் வருத்தமே எஞ்சுகிறது.

நமது கற்பனைகள் இதமானதாக இருக்க, வரலாறுதான் எவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது?

கட்டுரையின் முடிவில் சலபதி அளிக்கும் சான்றுப் பட்டியல்கள் என்னை மிரளவைக்கின்றன. வெறும் ஆதாரங்கள் என்பதைத் தாண்டி, அவை இன்னொரு செய்தியை நமக்கு வலுவாகச் சொல்கின்றன.

கல்லாதது உலகளவு!