மற்ற எபிசோடுகள்
Published:Updated:

“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர

“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர
பிரீமியம் ஸ்டோரி
News
“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர

படங்கள் : குமரகுருபரன் - சந்திப்பு : வரவனை செந்தில்

விஞர் வசுமித்ர - எழுத்தாளர் கொற்றவை வசிக்கும் வீடு... ஓர் அறிவுசார் உலகத்தை புத்தகங்களால் மட்டுமே நிர்மாணிக்க இயலும் என உறுதியாக நம்பும் இணையரின் வீடு. அவர்களின் அரசியல் நம்பிக்கைக்கு அடித்தளமான புத்தகங்களால் நிறையப்பெற்ற வீடு. ஆயிரக்கணக்கான புத்தகங்களால் சென்னையின் பரப்புக்குள் ஊடும்பாவுமாய் அடிக்கடி வீடு மாறிக்கொண்டிருக்கும் வசுமித்ரவைச் சந்தித்தோம்.

“எழுத்து வேலைகளால் வாசிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள், சமயங்களில் வீட்டினுள் நான் கடக்கும் நேரத்தில், என்னை அவை எள்ளலாகப் பார்ப்பதைப் போல உணர்வேன். படிக்காத புத்தகங்கள் என என் சேகரிப்பில் எதுவுமே இல்லை. புத்தகங்களை வாசிக்காமல் வைத்திருப்பது அவைற்றுக்கு நாம் செய்யும் துரோகம் என்று நினைக்கிறேன்” என்கிறார் வசுமித்ர.

கொள்கையளவில் வசுமித்ரவுடன் முரண்பட்டவர்கள்கூட ஒப்புக்கொள்ளும் விஷயம், யார் கேட்டாலும் சமயங்களில் கேட்காமல்கூட புத்தகங்களை அவர் படிக்கக் கொடுத்துவிடுவதைத்தான்.

“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர

“இதுவரை புத்தகங்களாக வாங்கியது மட்டும் பத்தாயிரத்துக்கும் மேல் இருக்கும். இது கொற்றவையின் சேகரிப்பைச் சேர்க்காமல் என் கணக்கு மட்டும். தற்போது என்னிடம் ஆறாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. என்னைச் சந்திக்க வருகிறவர்கள் இந்த வீட்டைவிட்டு வெளியே போகும்போது, கையில் புத்தகங்கள் இல்லாமல் பெரும்பாலும் போனது இல்லை. வரும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்திருக்கவில்லை என்றால், அந்தப் புத்தகம் என்னிடம் இருந்தால், உடனே வாசிக்கக் கொடுத்து விடுவேன். ரொம்பச் சின்ன வயதில் கோயம்புத்தூரில் கட்டட வேலைக்குப் போய்க்கொண்டிரு ந்தேன். வேலை முடிந்த நேரத்தில் வாசிப்பதற்காக அருகில் இருந்த நூலகத்துக்குச் செல்வேன். நாளாக நாளாக அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தையுமே படித்துவிட்டேன். இன்னும் இன்னும் என என் தேடலைப் பார்த்த நூலகர், அவரின் தோழர் ஒருவரிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவர் என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு தன் சேகரிப்பை எனக்காகத் திறந்து தந்தார். யாரோ ஒரு பையனுக்காக தன் வீட்டைத் திறந்து அனுமதித்து, வாசிக்க வாய்ப்புக்கொடுத்த அவர்தான் இன்று நான் நண்பர்களுக்கு புத்தகம் வழங்குவதற்கான எண்ணத்தை என்னுள் விதைத்தவர்.

தல்ஸ்தோய் எழுதிய ‘காரின் அழிவுக்கதிர்’ என்ற புத்தகம்தான் முதன்முதலில் வணிக எழுத்துக்கு அப்பால் வேறோர் எழுத்து உலகம் இருக்கிறது என்ற உண்மையை எனக்குப் புலப்படுத்தியது. எல்லோரையும்போல ‘சிறுவர் மலர்’, ‘பாலமித்ரா’ என வாசிப்புப் பழக்கம் தொடங்கினாலும், வெகு இளம்வயதிலேயே பாலகுமாரன் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். சில புத்தகங்களிலேயே அவர் போன்ற எழுத்தாளர்கள் என்ன விஷயங்களை எழுதுகிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். என்.சி.பி.ஹெச் நிறுவனம் அப்போது ஊர் ஊருக்கு நகரும் புத்தகச் சந்தை போடுவார்கள். அப்படி என் ஊருக்கு வந்தபோதுதான்  ‘காரின் அழிவுக்கதிர்’ புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. வெறும் 10 ரூபாய்க்கு அவ்வளவு பெரிய புத்தகத்தை நண்பன் வாங்கிக்கொடுத்தான். பத்து பக்கங்கள் வரை படித்த பிறகும் புரியவே இல்லை. அது எனக்குள்ளிருந்த ஈகோவைத் தட்டி எழுப்பியது. இன்னும் மூர்க்கமாக அதைப் படிக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் பல்வேறு சோவியத் வெளியீடுகள் மிக மிக சல்லிசான விலையில் அங்கு வாசிக்கக் கிடைத்தன. ராதுகா பதிப்பகம், அயல்மொழி பதிப்பகம், போன்ற சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு மறுவிற்பனை புத்தகக் கடையில் ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ‘தாய்’ நாவல் கிடைத்தது. கார்க்கி இலக்கியத்தின் வாயிலாக மார்க்ஸ் என்கிற தத்துவவாதியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதைத்தாண்டி சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன் எனத் தமிழ் நவீன இலக்கிய வாசிப்பையும் ஒரு பக்கம் மேற்கொண்டிருந்தேன்” என்று பழைய நினைவுகளை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொடிருந்த வசுமித்ரவிடம் புத்தகங்களால் அடிக்கடி வீடு மாறும் சம்பவங்கள் பற்றிக் கேட்டபோது...

“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர

“உடல் அளவில் அது உழைப்பு சார்ந்த வேலையாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அக்கறையுடன் புத்தகங்களை அட்டைப்பெட்டியில் துறைவாரியாக அடுக்கி, பின்னர் புது வீட்டில் அலமாரிகளை ஒழுங்குபடுத்தி மீண்டும் துறைவாரியாக அடுக்குவது மிகவும் பிடித்த வேலையாகப் போய்விட்டது. ஞாபக அடுக்குகளில் இல்லாத புத்தகங்களைத் திடீரெனப் பார்க்கும்போது, நெடுநாள் பிரிந்திருந்த நண்பனைச் சந்திக்கும் மகிழ்ச்சி வந்துவிடும்.எனவே, அது பெரிய அவஸ்தையாக எனக்குப் படவில்லை. கொற்றவைக்கு எப்படி என அவரிடம்தான் கேட்க வேண்டும். அதே நேரத்தில், பெரிய வீடுகளை வாடகைக்குப் பிடிக்க வேண்டியதாக இருப்பதால், பொருளாதாரச் சிக்கலும் ஏற்படுகிறது. இதனால், சமயங்களில் தேனியில் உள்ள வீட்டில்கூட புத்தகங்களைப் போட்டுவைக்கலாம் என யோசித்திருக்கிறோம். புத்தகம் இல்லாவிட்டால், எங்களுக்கு ஒற்றை அறை வீடுகூட போதுமானதாக இருக்கும். ஆனால், புத்தகங்கள் இல்லாமல் எங்களால் வாழவே முடியாது” என்று சிரிக்கிறார்.

“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்!” - வசுமித்ர


தான் சேகரிக்கும் புத்தகங்களில் சிறப்பானைவை எனக் கருதும் அனைத்துப் புத்தகங்களையும் நேர்த்தியாக பைண்டிங் செய்து அதற்குமேல் அட்டை போட்டும் வைத்துவிடுகிறார் வசுமித்ர. ஒவ்வொரு புத்தகங்களிலும் அதன் தலைப்பை விதவிதமான எழுத்துருக்களில் தன் கைப்பட எழுதியிருக்கிறார். தலித்தியம், மார்க்ஸியம், இந்தியவியல், பௌத்தம், ஈழம், தமிழ் இலக்கிய நூல்கள் எனத் துறைவாரியாகத் தொகுத்து வைத்திருக்கிறார். சிறப்பான மார்க்ஸிய ஆங்கில நூல்கள் பல கொற்றவையின் சேகரிப்பில் இருக்கின்றன.

“சின்னப் பிள்ளைகளுக்குத் திருவிழாக்களும் பண்டிகைகளும்  எப்படியோ எனக்கு புத்தகச்சந்தைகளும், புத்தகக் காட்சிகளும். வறுமையிலும் கடன் வாங்கியாவது வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்காகப் பண்டிகைகளைக் கொண்டாடும் பெற்றோரைப்போல,  எந்தச் சூழலிலும் அவற்றை நான் தவிர்த்ததே இல்லை. பக்கத்து ஊர்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்கும்கூட தேடிப் போய்விடுவதும் உண்டு. இதைச் சொல்லும் நேரத்தில் ‘விடியல் சிவா’ என் நினைவுக்கு வருகிறார். ‘விடியல்’ பதிப்பக்கத்தின் சார்பில் புத்தகக் காட்சிகளில் அவரின் ஸ்டால் இருக்கும். நான் உள்ளே நுழைந்ததும், ‘முதலில் மற்ற கடைகளுக்குப் போய் வாருங்கள். காசையெல்லாம் எனக்கே கொடுத்துருவீங்க’ என என்னைப் பிற புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவைப்பார். நிறையமுறை கையிலிருந்த காசெல்லாம் தீர்ந்து, அவரிடம் புத்தகங்களும் கடன் வாங்கி, ஊருக்குச் செல்ல பஸ்ஸுக்கும் காசு வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறேன்.

என் ஒட்டுமொத்த வாசிப்பனுபவத்தில்,  குறிப்பிட்ட புத்தகங்களை மட்டுமே வாசிக்கச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த ஆண்டு நீங்கள் வாசித்தே ஆகவேண்டிய புத்தகங்களாக சிலவற்றைச் சொல்கிறேன். ரங்கநாயகம்மா எழுதிய ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு: புத்தர் போதாது - அம்பேத்கரும் போதாது - மார்க்ஸ் அவசியத் தேவை!’, ‘சாதியப் பிரச்சினையில் மார்க்ஸியம்’, ‘காற்று மணல் நட்சத்திரங்கள்’, ‘தேச செல்வங்களின் கதை’, ஆல்பர்ட் காம்யூ எழுதிய ‘புரட்சியாளன்’,

ராஜ் கௌதமன் மொழிபெயர்த்துள்ள ‘மனவளமான சமுதாயம்’, தரம்பாலின் ‘அழகிய மரம்’, டாக்டர் கோவூர் எழுதியுள்ள ‘மாந்திரீக பித்தலாட்டங்கள்’, பாலகோபாலின் ‘கருத்தாயுதம்’ மற்றும் ரொமிலா தப்பாரின் ‘முற்கால இந்தியா’.”

புத்தகங்கள் குறித்துத் திகட்டத் திகட்ட பேசிய பின், கைகள் நிறைய புத்தகங்களுடன் விடைபெற்றோம்.