Published:Updated:

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும்  சிதல்புற்று - ஜெயமோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்

ட்டியில் சென்ற ஏப்ரல் 2017-ல் ஆண்டுதோறும் நாங்கள் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச் சிந்தனைமுறை என ஒன்று உண்டா?’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆனந்த குமாரசுவாமி, அரவிந்தர் வழியாக அவ்வினாவுக்கான விடை நோக்கிச் சென்றார்.

அதில், அவர் முன்வைத்த ஆனந்தகுமாரசுவாமியின் ஒரு கருத்து இது. ‘தனிப்பட்ட வாழ்க்கை தரிசனம் அல்லது சிந்தனை என ஒன்று இல்லை. ஒரு பண்பாட்டின் பகுதியாக, அதில் முன்னரே இருந்தவற்றின் தொடர்ச்சியாகத்தான் தரிசனமும் சிந்தனையும் எழ முடியும்.’

அங்கு வந்திருந்த இளம்நண்பர் ஒருவரைச் சீண்டியது அந்த வரி. அவர் தொடர்ந்து தொலைபேசியில் என்னிடம் அதைப் பற்றிப் பேசினார். “அதெப்டிங்கா?அதெப்டி சொல்ல முடியும்?” என்றுதான் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் நம்பிவந்த எதையோ ஆட்டம் காணச் செய்துவிட்டது அந்த வரி.

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும்  சிதல்புற்று - ஜெயமோகன்

ஆனந்த கெண்டிஷ் குமாரசுவாமி (1877- 1947). இலங்கையைச் சேர்ந்த தந்தைக்கும் ஐரிஷ் அன்னைக்கும் பிறந்தவர். இந்தியக் கலை ஆய்வாளர். அமெரிக்காவில் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தில் ஆய்வுக்காப்பாளராகப் பணியாற்றினார். இந்தியவியலாளரான ஹென்ரிச் ஸிம்மர், ஆனந்த குமாரசுவாமியைப் பற்றி ‘மாபெரும் சிந்தனையாளர், அவரது தோள்களில் எங்களைப் போன்றவர்கள் நின்றிருக்கிறோம்’ என்று சொன்ன வரி அடிக்கடி மேற்கோளாக்கப்படுவது.

காலனியாதிக்கம் உருவான காலகட்டத்தில் இந்தியக் கலைகளைக் கண்ட ஐரோப்பியா, அவற்றில் தனிப்பட்ட கலைஞன் வெளிப்படவில்லை என்று கூறினார்கள். மைக்கேல் ஏஞ்சலோ போலவோ டாவின்சி போலவோ ஒரு கலைஞனையும் அவன் தனிப்பட்ட வாழ்க்கை தரிசனத்தையும் அவற்றில் காண முடியவில்லை, அவை திரும்பத் திரும்ப ஒன்றையே செய்கின்றன ஆகவே, அவை ‘அலங்காரக் கலைகள்’ மட்டுமே என்றார்கள்.

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும்  சிதல்புற்று - ஜெயமோகன்அதை மறுத்து இந்தியக் கலையின் விழுமியங்கள் என்ன என்பதை நிறுவியவர் ஆனந்த குமாரசுவாமி. இந்தியக் கலையில் தனிப்பட்ட கலைஞனைக் கண்டடைய முடியுமா? ஹொய்ச்சாளக் கலையில் சிற்பியின் பெயரும் நமக்குக் கிடைக்கிறது. பெயர் கிடைக்காதபோதுகூட சிற்பியின் தனித்தன்மையைக் கொஞ்சம் கூர்ந்தால் கண்டடைய முடியும். ஆனால், இந்தியக்கலையில் அந்தத் தனித்தன்மை முக்கியம் அல்ல.

கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கைதரிசனம் என்பது விமர்சகர்களால் உருவாக்கிக்கொள்ளப்படும் ஓர் உருவகம் மட்டுமே. ஒரு தனிமனிதனுக்கு அப்படி ஒன்றும் தனித்த வாழ்க்கை தரிசனமோ, தத்துவமோ, கலைநோக்கோ இருக்க முடியாது. அப்படி நினைப்பது ஒரு பாவனைதான். உலகச் சிந்தனையிலேயே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாகி வந்த பார்வை அது.

வாழ்க்கை தரிசனம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கூட்டாக அடைந்த ஒன்றாகவே இருக்க முடியும். ஒவ்வொரு கலைஞனும் தன் சூழலிலிருந்து அதை அறியாமலேயே பெற்றுக்கொள்கிறான். தன் வாழ்க்கை அனுபவங்களின் வழியாக அதை மீண்டும் நிறுவுகிறான். தன் வெளிப்பாடு வழியாக சற்று உருமாற்றுகிறான். அதைத் தன் சிந்தனையினூடாகக் கொஞ்சம் முன்னெடுக்கிறான். அவ்வளவுதான்.

அந்த மிகச்சிறிய மாற்றம் மட்டுமே அவனுடைய பங்களிப்பு. அதை மட்டும் கூர்ந்து கவனித்து அதை ஊதிப்பெருக்கி நாம் ஒரு கலைஞனின் தனித்தன்மையை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால், அது அவனுடைய சொந்த வாழ்க்கையின் இயல்பான வெளிப்பாடு என்றும் அவனுடைய உருவாக்கம் என்றும் நினைத்துக்கொள்வோம் என்றால், மிகப்பெரிய பிழையைச் செய்கிறோம். எவ்வகையிலும் அவனுடைய உள்ளத்தை, அந்தப் படைப்புலகைப் புரிந்துகொள்ள அது உதவாது. அந்தக் கலைஞனை அவன் உருவாகிவந்த பண்பாட்டுப் பின்னணியில் வைத்து மதிப்பிட்டால் மட்டுமே அது சரியானதாக அமையும்.

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும்  சிதல்புற்று - ஜெயமோகன்

சுஜாதா ஒருமுறை சங்கப் பாடல்களை வாசிக்கையில் அனைத்தும் ஒன்றுபோலவே இருப்பதாகவும், ஒருவரே அனைத்தையும் எழுதியிருக்கலாமோ என்ற ஐயம் தனக்கு ஏற்படுவதாகவும் எழுதியிருந்தார். அந்த ஐயம் ஐரோப்பிய ஆய்வாளர்களில் சிலருக்கும் எழுந்ததுண்டு. பல்லவர் காலகட்டத்தில் மிகச் சில கவிஞர்களால் ஒரே சமயம் எழுதப்பட்டவை அவை எனச் சிலர் வாதிட்டிருக்கிறார்கள். தமிழினி வெளியீடாக ராஜமார்த்தாண்டன் தொகுத்து வெளியிட்ட ‘கொங்குதேர்வாழ்க்கை’ என்ற தொகுப்பில் நவீனக் கவிஞர்களின் ஐம்பதாண்டுகாலக் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தபோது இந்த எண்ணம் எனக்கு வந்தது.

ஆனந்த குமாரசுவாமி அதைத்தான் சொல்கிறார். நடராஜர் சிற்பம் என்பது ஒரு தரிசனம். அதை ஒவ்வொரு சிற்பியும் கொஞ்சம் மாற்றியமைக்கிறான். ஊர்த்துவத் தாண்டவம் என்றால் செங்குத்தாகக் கால் மேலெழுந்திருக்கும். சிவம் முற்றழிவை நிகழ்த்தி, தான் மட்டுமே எஞ்சும் நிலை அது. அதில் அருட்கை இருக்காது. ஏனென்றால், அங்கே அருளுக்கு ஆட்பட ஏதுமில்லை. ஆனால், ஒரு சிற்பி அதிலும் அருட்கையை வைக்கலாம். எந்நிலையிலும் சிவம் அருள் வடிவே என அவன் சொல்கிறான். இதுதான் அவனுடைய தரிசனம்.

நத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும்  சிதல்புற்று - ஜெயமோகன்எழுத்திலும் கலையிலும் தனிமனித தரிசனத்தைத் தேடிய காலகட்டத்தை நவீனத்துவக் காலகட்டம் (modernism) என்பார்கள். அந்தப் பார்வையை ஒட்டுமொத்தமாக மறுத்தது அதற்கடுத்து வந்த பின்நவீனத்துவப் பார்வை. (postmodernism) அதன் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று ரோலான் பார்த் என்னும் மொழியியலாளர் சொன்ன ‘ஆசிரியனின் இறப்பு’ என்ற கருத்து.

ஆசிரியன் என்பவன் முக்கியமல்ல அல்லது அவன் படைப்பில் அவன் வெளிப்படக்கூடாது என்பதல்ல அதன் பொருள். எந்தப் படைப்பிலும் ஆசிரியனே வெளிப்படுவான். அவனுடைய வாழ்க்கையும் தரிசனமுமே அதில் இருக்கும். ஆனால், ஆசிரியன் என்பவன் தனிமனிதன் அல்ல என்பதே பார்த் சொன்னது. அவனில் தொழிற்படும் ஒட்டுமொத்தமான மொழிப்பண்பாடுதான் அப்படைப்பை உருவாக்குகிறது. எந்த ஒரு படைப்பையும் ஊன்றி வாசிப்பவன் அந்த ஆசிரியனைச் சென்று சேர மாட்டான். அவன் ஒரு பெருக்கின் துளி என்றே கண்டுகொள்வான்.

ஆப்பிரிக்காவில் மாபெரும் சிதல்புற்றுகளை நான் கண்டிருக்கிறேன். மண்ணுக்கு அடியிலும் அவை ஆழ்ந்து சென்றிருக்கும். உண்மையில் பிரமாண்டமான நகரங்கள் அவை. மிக நுட்பமான சிற்ப அமைப்பு.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், ஒரு தனிச்சிதலின் ஆயுள் ஒரு வாரம்தான். அதன் மூளையால் அந்தச் சிதல்புற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அந்தச் சிதல் தன் உள்ளுணர்வால் மணலை அள்ளிக் கொண்டுசென்று வைத்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் புற்று அச்சிதல் வழியாக வளர்கிறது. சிதலைக் காண்பதா, பெரும்புற்றையா என்பது நம் தேர்வு.