மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கீதா பிரகாஷ்:

``உலகின் பேரதிசயங்களில் ஆகப்பெரிய அதிசயம் குழந்தையே என்பது என் கருத்து. குழந்தைகளின் சிருஷ்டிப்புகள், இதுவரை எவரும் காணா உலகங்களைக்கொண்டது. அந்த உலகத்தில் உலவித் திரிந்து, அதன் உயிர்ப்பில் கலந்துவிடுவதற்கான எத்தனிப்புகள்தான் என் கவிதைகள். நம் ஆதித் தாய்ச் சமூகத்தின் தொன்மங்களைத் தேடி ஒரு குழந்தையின் தேடலாக நீள்கிறது என் எழுத்தும் வாசிப்பும்.”

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர், நடன ஆசிரியையாகப் பணிபுரிகிறார். குழந்தைகள், பெண்களின் உரிமைகள் சார்ந்து தீவிரமாக இயங்கிவரும் இவர், `ஜனுக்குட்டியின் பூனைக் கண்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

மு.வித்யா பெனோ:

“என் எழுத்து, ரசவாத சித்து விளையாட்டு; என் ஆழ்மனக் கிளர்ச்சியில் சிதறித் தெளிக்கும் துளி. அடர்த்தியான அதன் ஒவ்வொரு புள்ளியிலும் நான் அடங்கியிருப்பேன். ஒளவை, ஆண்டாள் என என் மூதாதைக் கிழவிகள் பாடி வைத்தவற்றின் வெளிச்சத்தில் நான் பயணிக்கும் தடம் நெடுக, உயிர்ப்புள்ள சில கவிதைகளைப் பதியம் போட்டபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் அடுத்த தலைமுறை அந்த வெம்மையில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும்.”

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மு.வித்யா பெனோ, சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார். `அடையாளம் தேடி’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். சில திரைப்படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

வ.சிங்காரவேலு:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்


``எழுத்தை உயிராகச் சுமந்துகொண்டிருக்கும் எளிய மனிதன் நான். பட்டெனக் கண் சிவக்கும் உணர்ச்சிக்காரனான நான், தீவிர வாசிப்பின் வழியே வந்தடைந்த களம், எழுத்து. என்னிலிருந்து கவிதையைக் கழித்தால் மிஞ்சப்போவது ஏதுமில்லை. கொஞ்சம் புத்தகங்களும் கொஞ்சம் நம்பிக்கையும்தான் கையிருப்பு. உணவக அடுப்பு புகையாவிட்டால், வயிற்றின் புகை பற்றி எரியும். வாழ்வின் பெரும்பொதி உடலேறி நசுக்க, அதற்கொரு கவிதையை உதிர்த்துவிட்டு என்போக்கில் நடக்கிறேன். நான் எடுத்த எல்லாத் தொழில்களையும் தின்று தீர்த்துவிட்டது எழுத்து. நான் எழுத்தைச் சுமக்க, என்னை வலிந்து சுமந்துகொண்டிருக்கிறது சுற்றம்.”

`நெருப்பறை’, `நிலவுப்பால்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், சங்க இலக்கியம் சார்ந்த ஆராய்ச்சி நூல் ஒன்றையும் எழுதியிருக்கும் வ.சிங்காரவேலு, பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியில் சிற்றுண்டிக் கடை நடத்துகிறார். வேளாண் தொழிலின் பின்னடைவைக் களமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிவருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

யாழி:

``காதலின் பொருட்டு நீளும் என் இந்தப் பயணம், வாழ்வு குறித்த புரிதலைக் கற்றுத்தருகிறது. எழுத்து, என் இருப்பின் அடையாளம். எழுத்து, என் வாழ்வின் காரணி. எழுத்து என்ற கலைடாஸ்கோப்பின் துளை வழியே வாழ்வைக் காண்கிறேன். அது எனக்கு சகல நிறங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அகத்தின் சலனங்களும் புறத்தின் புலம்பல்களும் மட்டுமல்லாது, அனுபவத்தின் சாரமும் வியர்வையின் வாசமும் கலந்து புனையப்படும் கவிதைகள் என்னை அதன் பக்கம் ஈர்த்து அதற்குள்  உழலச்செய்கின்றன.”

நாகப்பட்டினம் மாவட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  யாழி, சிதம்பரத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருந்தாளுநராகப் பணிபுரிகிறார். ‘என் கைரேகை படிந்த கல்’, `முத்த தாண்டவம்’, `மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்’, `கேவல் நதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளிவர உள்ளன. யாழியின் இயற்பெயர் கிரிதரன்.