Published:Updated:

வெள்ளி நிலம் - 16

வெள்ளி நிலம் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 16

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெள்ளி நிலம் - 16

முன்கதை: பழங்காலத்திய மம்மி ஒன்று இமயமலைப் பகுதியில் கிடைக்கிறது. அதைத் திருடுவதற்கு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று செயல்படுகிறது. அதைக் கண்டுபிடிக்க பாண்டியன் என்ற விசாரணை அதிகாரி வருகிறார். மம்மியைத் திருட முயலும்போது அங்கு நேரடி சாட்சியாக இருந்த சிறுவன் நோர்பாவும் அவனது செல்ல நாய் நாக்போவும் பாண்டியனுக்கு உதவியாக விஞ்ஞானி நரேந்திர பிஸ்வாஸும் கொண்ட டீம் விசாரணையில் இறங்குகிறது. இவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி பூட்டான் செல்கிறார்கள். இடையில் அவர்களது ஹெலிக்காப்டர் பழுதடைவதால் பனிச்சிகரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். இவர்களை மீட்க இன்னொரு ஹெலிகாப்டர் வருகிறது...       

வெள்ளி நிலம் - 16

ஹெலிகாப்டரின் ஒலி, மலைமுகடுகளில் சுழன்று சுழன்று தலைக்கு மேல் ஒலித்தது. இடியோசைபோல அது மேகங்களில் பட்டு எதிரொலித்துச் சென்றது. அந்தச் சத்தம், மலைமுடிகள் வண்டுகள்போல ஓசையிட்டுக்கொண்டு சுற்றிவருவதுபோலத் தோன்றவே, நோர்பாவுக்குத் தலைசுற்றியது. கரும்பச்சை நிறமான ராணுவ ஹெலிகாப்டர், வானத்தில் தட்டாரப்பூச்சிபோல நின்றது. அதிலிருந்தவர்கள், இவர்களைப் பார்த்துவிட்டனர்.

“ஹெலிகாப்டர் கீழிறங்க முடியாது. பனி ஆழமாக விழுந்திருக்கிறது. சிறகுகளை ஓயவிடவும் முடியாது” என்றான் பாண்டியன்.

ஹெலிகாப்டர் மேலும் கீழிறங்கியது. அதிலிருந்து நூலேணி, சரிந்து சுருளவிழ்ந்து தரைநோக்கி வந்தது. தரையிலிருந்து நாலடி உயரத்தில் ஊஞ்சல்போல ஆடியது.

பாண்டியன் அருகே ஓடிச்சென்று, அதைப் பற்றிக்கொண்டான். “நாக்போவை வரச்சொல்” என்றான்.

நாக்போ, “நானா? நான் ஏற மாட்டேன். எனக்கு ஊஞ்சல் பிடிக்காது” என்றது.

“நாக்போ... போ” என்றான் நோர்பா.

“நான் கீழேயே ஓடிவருகிறேன்” என்றது நாக்போ.

“அறிவில்லாமல் பேசாதே… போ” என்றான் நோர்பா.

“நானா அறிவில்லாதவன்? ஹெலிகாப்டரை உடைத்தது யார்?” என்று முனகியபடியே ஹெலிகாப்டர் அருகே சென்றது. பாண்டியன் அதைப் பிடித்துத் தூக்கி, பட்டைகளால் அதன் உடலைக் கட்டினான். அது மேலேறிச் சென்றது. வாலை ஆட்டியபடி குரைத்தது.

டாக்டரும் தொடர்ந்து நோர்பாவும் ஏறிக்கொண்டனர். கடைசியாகப் பாண்டியன் ஏறினான். சரடு, மேலிருந்த ஒரு மோட்டாரால் சுழற்றி மேலேற்றப்பட்டது. மேலே சென்றதும், இருக்கையில் பட்டைபோட்டுக் கட்டப்பட்டிருந்த நாக்போ, “மிகச் சிறப்பான ஏற்றம்” என்றது.

“வாயை மூடு” என்றபடி நோர்பா இருக்கையில் அமர்ந்தான். டாக்டரும் பாண்டியனும் வந்து அமர்ந்துகொண்டதும், ஹெலிகாப்டர் சுழன்று, மலைச் சிகரங்களுக்கு மேலே சென்றது.

“நீரஜ் என் தோழன்” என்றார் விமான ஓட்டுநர். “என் பெயர் சித்தலிங்கப்பா.”

பாண்டியன், “நீரஜுக்காக வருந்துகிறேன்” என்றான்.

“அது, ராணுவ வீரனின் கடமை” என்றார் சித்தலிங்கப்பா.

“இன்று மாலைக்குள் நீங்கள் திம்பு சென்றுவிடலாம். வழியில் சிக்கிம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு இறங்குவோம்.”

வெப்பக்கோப்பையில் இருந்த டீயைக் குடித்தபின், நோர்பா களைப்பில் தூங்கிவிட்டான். பனிக்குளிர் காரணமாக உடல் தன் வெப்பத்தை நிலைநிறுத்துவதற்கே ஏராளமான ஆற்றலைச் செலவிட்டுவிடுகிறது. ஆகவே, மிக எளிதில் களைப்பு வந்துவிடும்.

வெள்ளி நிலம் - 16சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமான காங்டாக் அருகே இருந்த ராணுவ விமானதளத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. அவர்கள் இறங்கி, அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். அங்கே, எரிபொருள் நிரப்பிக்கொண்டதும் ஹெலிகாப்டர் மீண்டும் வானில் ஏறியது.

அவர்கள் பூட்டானை அடைந்தபோது, அந்தியாகிவிட்டிருந்தது. பனிப்படலத்துக்கு மேலே அவர்கள் பறந்தார்கள். வானத்தில் சூரியன் மிகப்பெரிய தீக்கோளம்போலத் தெரிந்தது. மேகங்கள் எரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

பனிப்படலத்தை ஊடுருவி, திம்பு ராணுவ விமானதளத்தில் இறங்கினார்கள். விமான நிலைய விளக்குகள் மட்டும் நீருக்குள் தெரிபவைபோலத் தெரிந்தன. தரையைத் தொட்ட பின்னர்தான், இறங்கிவிட்டதையே அவர்களால் உணரமுடிந்தது. 

விமானதளத்தின் ஓடுபாதை முழுக்க பனி விழுந்திருந்தது. அதை, எந்திரங்களைக்கொண்டு அள்ளி ஒதுக்கியிருந்தார்கள். அவர்களை கேப்டன் ரந்தீர் சிங் வரவேற்றார். பாண்டியனுக்கு சல்யூட் அடித்துக் கைகுலுக்கி, தன்னை அறிமுகம்செய்துகொண்டார்.

அவர்கள் மூன்று பேருக்கும் ஒரே அறைதான் அளிக்கப்பட்டது. எரிபொருள் சேமிப்புக்காக குறைவான அறைகளை அவர்கள் பயன்படுத்திவந்தனர். அறைக்குள் மின்சாரக் கணப்பு எரிந்தது. அது செந்நிற ஒளியை அறைக்குள் நிரப்பியது. அந்த ஒளியே வெப்பத்தை உணரச்செய்தது.     

வெள்ளி நிலம் - 16

நாக்போ, “எனக்கு எலும்பு வேண்டும்” என்றது.

“கொடுப்பதைச் சாப்பிடு” என்றான் நோர்பா எரிச்சலுடன்.

“அங்கே அத்தனை எலும்புகள் இருந்தன. அதில் ஒன்றைக் கொண்டுவந்திருக்கலாம்” என்றது நாக்போ.

“நாக்போ, அதெல்லாம் மனித எலும்புகள்” என்றான் நோர்பா.

“அதனாலென்ன?” என்றது நாக்போ.

“மனித எலும்பைத் தின்னலாமா?”

“ஏன், அது நஞ்சா?” என்றது நாக்போ.

‘‘உனக்கு அறிவில்லை” என்றான் நோர்பா.

“உனக்குத்தான் அறிவில்லை. செத்தபின் வலி தெரியுமா என்ன?” என்றது நாக்போ.

அவர்களுக்குச் சூடான சப்பாத்திகளும் பொரித்த கோழியும் பாலும் கொண்டுவரப்பட்டன. அவர்கள், உணவு உண்டதுமே படுத்துத் தூங்கினார்கள். ஹெலிகாப்டரில் இருந்த அனுபவத்தால், படுக்கை அலைபாய்வதுபோல நோர்பாவுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

காலையில் அவன் கண்விழித்து எழுந்தபோது, நாக்போ மேலே ஏறி அவன் அருகே ஒண்டிப் படுத்திருந்தது. அவன் எழுந்தது அதற்குப் பிடிக்கவில்லை. “ஏன் எழுகிறாய்? இன்னும் சமையல் மணமே எழவில்லை” என்றது.
நரேந்திர பிஸ்வாஸ் தன் கணிப்பொறியில் எதையோ படித்துக்கொண்டிருந்தார். பாண்டியன் தலையை மூடிக்கொண்டு தூங்கினான்.

‘‘நாம் இன்று எங்கே செல்கிறோம்?” என்று நோர்பா கேட்டான்.

நரேந்திர பிஸ்வாஸ், சுவரில் இருந்த ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, “இது யார் தெரியுமா?” என்று கேட்டார்.

“இல்லை” என்றான் நோர்பா. அந்த ஓவியத்தில், ஒருவர் புலியின் மேல் நின்றுகொண்டிருந்தார். அந்தப் புலியின் உடலில் இருந்த கோடுகள், தீத்தழல்போல நெளிந்தன. அவர் உடலைச் சூழ்ந்தும் தீயின் தழல் எழுந்திருந்தது. இடது கையில் மின்னலையும் வலது கையில் வாளையும் ஏந்தியிருந்தார்.

“நீங்கள் வழிபடும் தெய்வம்தான், பத்மசம்பவர்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

“முதல் குரு ரிம்போச்சேவா? அவர் இப்படி இருக்க மாட்டாரே” என்றான் நோர்பா ஆச்சர்யத்துடன்.

“லடாக்கிலும் இமாச்சலப்பிரதேசத்திலும் பத்மசம்பவர் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். அவரை நீங்கள் முதல் ரிம்போச்சே என வணங்குகிறீர்கள். அவர், பூட்டானுக்கு ஒரு புலியின் வடிவத்தில் வந்திறங்கினார் என்பார்கள். இங்கே உள்ள மலைகளை அன்று நூற்றெட்டு பூதங்கள் ஆட்சிசெய்தன. பத்மசம்பவர், அந்தப் பூதங்களைப் போருக்கு அழைத்தார். அவரை அவை பிடிக்கப்போனபோது, அவர் தீக்கொழுந்தாக எரிந்தார். அவை பயந்து அலறின. அவற்றை அடக்கி, இந்த மலைகளில் பௌத்த மதத்தை நிறுவினார். அந்தச் சித்திரத்தைத்தான் இப்படி வரைந்திருக்கிறார்கள்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

“பத்மசம்பவர் என்பவர் பௌத்த ஞானியா?” என்று ஒரு குரல் கேட்டது. நோர்பா திரும்பிப் பார்த்தான். பாண்டியன் எழுந்து, படுக்கையில் கம்பளத்தைப் போர்த்தியபடி அமர்ந்திருந்தான்.
 
நாக்போ, “ஆரம்பித்துவிட்டார்கள்” என்று அலுப்புடன் கொட்டாவி விட்டது.

“பத்மசம்பவர் என்றால், ‘தாமரையில் பிறந்தவர்’ என்று பொருள். அவரை இரண்டாவது புத்தர் என்றே திபெத்திய புத்த மதத்தில் வழிபடுகிறார்கள். திபெத்திய பௌத்த மதத்தின் ஞான ஆசிரியர்களின் வரிசையை அவர்தான் தொடங்கிவைத்தார். அவரை முதலாம் ரிம்போச்சே என்று கூறுகிறார்கள்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

‘‘பத்மசம்பவரைப் பற்றிய கதைகள் பல உள்ளன. கி.பி எட்டாம் நூற்றாண்டில், இன்றைக்குப் பாகிஸ்தானில் உள்ள ஸ்வாத் சமவெளியில் அவர் பிறந்தார். ஒரு சிற்றரசர், அவரை அங்குள்ள ஓர் ஏரியில் மலர்ந்திருந்த தாமரையின் மீது கண்டெடுத்து வளர்த்தார். இளம் வயதிலேயே அவருக்கு மாய மந்திரங்கள் தெரிந்திருந்தன. உள்ளூர் அரசரின் மகளான மந்தாரவாவுக்கு, அவர் அவற்றைக் கற்றுத்தந்தார். அதை அறிந்த அரசன், அவரைப் பிடித்துத் தீயிலிட ஆணையிட்டான். ஆனால், தீ அவரை எரிக்கவில்லை. தாமரை மலரின் இதழ்கள் மேல் இருப்பவர்போல அவர் அந்தத் தீயில் அமர்ந்திருந்தார். அரசன், தன் நாட்டையும் மகளையும் அவருக்கு அளித்தான் என்கின்றன புராணங்கள்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

“அதன்பிறகு, அவர் அங்கிருந்து கிளம்பி, மராதிகா குகைகளைச் சென்றடைந்து தவம் செய்தார். அங்கே தன் தவத்துக்கு உதவிசெய்த மலைசாதிப் பெண்ணாகிய யேஷ்கி த்ஸொக்யால் என்பவரை மணந்தார். அவருக்கு ஞானம் கிடைத்ததும் அங்கிருந்து திபெத்துக்குச் சென்றார். திபெத்தில் மாய மந்திரங்கள்கொண்ட பௌத்த மதப் பிரிவாகிய வஜ்ராயணத்தை நிறுவியவர், பத்மசம்பவர்தான்” என்று நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார்.

“அன்று திபெத்திய மலை உச்சிகளை ஏராளமான பூதங்கள் ஆட்சிசெய்தன. அவை சுழற்காற்றாகவும் பனிப்புயலாகவும் பனிப்பெயர்வாகவும் வந்து மக்களை அழித்தன. முதல் ரிம்போச்சே அவற்றையெல்லாம் அடக்கி, திபெத்தை விடுவித்தார். தன் வித்தைகளை எல்லாம் தன் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் ரிம்போச்சே என்று அழைக்கப்படுகிறார்கள். இப்போது, சோக்யால் ரிம்போச்சே, பத்மசம்பவரின் வழியில் இருக்கிறார்” என்றபின் நோர்பா, “பத்மசம்பவர் ஒரு போதிசத்வர்” என்று கைகூப்பி வணங்கினான்.

“திபெத்தில் இருந்த அந்தப் பூதங்கள் உண்மையில் என்ன?” என்று கேட்ட நரேந்திர பிஸ்வாஸ், “அவை அங்கே வாழ்ந்த மக்களின் தொன்மையான தெய்வங்கள்தான். மனிதனை மீறிய அளவில்லாத ஆற்றல் எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ, அதையெல்லாம் தெய்வத்தின் தோற்றமாகத் தொன்மை மக்கள் வழிபட்டார்கள்” என்றார்.

“பாலைவனமாகிய எகிப்தில், சூரியன் தெய்வ வடிவமானது அவ்வாறுதான்” என்று நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்து சொன்னார். “பாலைவனத்தில் தன்னந்தனிமையில் வாழும் ஓநாயும் தெய்வ வடிவமாகியது. பாலைவன மக்கள், வானத்தில் இருந்து தீயாக இறங்கும் தெய்வம் ஒன்றை வணங்கினார்கள். ஏனென்றால், உண்மையில் வெப்பம் வானிலிருந்து இறங்கி நகரங்களைப் பொசுக்குவதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதை யெகோவா என்று வழிபட்டார்கள்.”

“எனக்கே, நேற்று பனிப்புயலைப் பார்த்தபின் அந்தக் குகைக்குள் ஷென்ராப் மிவாச்சேயின் சிலையைக் கண்டபோது, தெய்வத்தைப் பார்ப்பதுபோல இருந்தது” என்றான் பாண்டியன்.

“திபெத்தியர், பனிப்புயலையும் பனிமலைப்பிளவையும் தெய்வங்களாக வழிபட்டது அச்சத்தால் அல்ல; ஞானத்தால்தான். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்ற நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்தார். “அவர்கள் வழிபட்டது அந்தப் பனிப்புயலை அல்ல, அதன் வடிவாக வெளிப்படும் தெய்வத்தைத்தான். அந்தத் தெய்வம், நுண்ணிய வடிவில் பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கிறது என்று அவர்கள் உருவகித்துக்கொண்டார்கள். நாம் அறிந்ததைக் கொண்டுதானே அறியாததைக் கற்பனை செய்யமுடியும்?”

“அறிவியலும் அப்படித்தான். நாம் சந்திரனை அறிவோம். அதைவைத்து, கோள்களை யூகித்து அறிகிறோம்” என்றான் பாண்டியன்.    

வெள்ளி நிலம் - 16

‘‘மதங்களின் தொடக்கம், இப்படி இயற்கையில் தெய்வங்களைக் காண்பது. இவற்றைக் குறுமதங்கள் என்கிறோம். குறுமதங்களில் சில மதங்கள் மட்டும் அந்தத் தெய்வ உருவகத்தை தத்துவரீதியாக வளர்த்தெடுக்கின்றன. அவற்றைப் பெரிய தெய்வங்களாக ஆக்குகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் தெய்வங்களாக மாற்றுகின்றன. பெருந்தெய்வங்களை வழிபடும் மதங்கள்தான் பெருமதங்கள்” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

“பெருமதங்கள், குறுமதங்களுடன் மோதுகின்றன. அதில் இரண்டு வழிகள் உள்ளன. குறுமதங்களை அழித்து, பெருமதம் மட்டும் நின்றிருப்பது. சில மதங்கள் அதைச் செய்கின்றன. ஐரோப்பாவில் இருந்த குறுமதங்களை ‘பாகன் மதங்கள்’ என்கிறோம். அவை இன்று இல்லை. எகிப்து போன்ற ஊர்களில் இருந்த சூரிய மதமும் இன்று இல்லை. ஆனால், இந்து மதமும் பௌத்த மதமும் குறுமதங்களை உள்ளே எடுத்துக்கொள்கின்றன. அந்தக் குறுமதங்களின் தெய்வங்களை உருமாற்றி, தங்கள் தெய்வங்களாக ஆக்கிக்கொள்கின்றன” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் தொடர்ந்து சொன்னார்...

“இந்து மதத்தில் நாம் வணங்கும் ஆதிசேஷன், காலபைரவன், சண்டீஸ்வரர் போன்ற பல தெய்வங்கள், இப்படி இந்து மதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். பௌத்தமும் அப்படி தெய்வங்களை எடுத்து உருமாற்றிக்கொள்கிறது. அதை, திபெத்தில் செய்தவர்தான் பத்மசம்பவர். அவர், திபெத்தில் இருந்த மலைதெய்வங்களைத்தான் பௌத்த தெய்வங்களாக ஆக்கினார். அந்தத் தெய்வங்கள், பல வடிவில் பௌத்த மடாலயங்களில் இன்றும் உள்ளன” என்றார் டாக்டர்.

“அப்படியென்றால், படைப்புத் தெய்வமான சான்போ பூமித்ரி, ஞானத்தின் தெய்வமான ஷெராப் சம்மா, கருணையின் தெய்வமான ஷென்லா ஓகார் போன்றவற்றை பௌத்த மதத் தெய்வங்களாக ஆக்கியவர், பத்மசம்பவர்தான் இல்லையா?” என்றான் பாண்டியன்.

“ஆம், அவர்தான் கொடூரமான கொலைத் தெய்வமாகிய ஷென்ராப் மிவாச்சேயை முக்தியின் தெய்வமாக ஆக்கியவர்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “எவர் கண்ணுக்கும் படாத ஒரு ஷென்ராப் மிவாச்சேயின் கோயில்தான் நாம் மலைக்கு மேல் பார்த்தது. பத்மசம்பவரின் காலத்துக்கு முன்னரே அந்தக் கோயில் இருந்திருக்கிறது.”

“நாம் அதைத் தற்செயலாகக் கண்டது ஒரு நல்ல விஷயம்தான்” என்றான் பாண்டியன்.

“இங்கே புலிக்குகை மடாலயம் என்று ஒரு பௌத்த மடாலயம் உள்ளது” என்றார் நரேந்திர பிஸ்வாஸ். “அது ஒரு மலைமேல் உள்ளது. அந்த மலையுச்சியில்தான் பூதங்களின் தலைமையகம் அமைந்திருந்தது. அங்குதான் பத்மசம்பவர் ஒரு பறக்கும் புலிமீது வந்திறங்கினார் என்பது பூட்டானில் உள்ள புராணம். இங்கே, நேரடியாக திபெத்திலிருந்த தலைமை லாமாவின் ஆட்சி நடக்கவில்லை. ஆகவே, இங்கே பான் மதத்தின் தெய்வங்கள் உருமாறாமல் எங்கேயாவது இருக்கக்கூடும். குறிப்பாக, புலிக்குகை மடாலயத்துக்கு மேலே சில குகைகள் உள்ளன. அங்கே சென்று பார்த்தால், ஏதாவது தடயம் கிடைக்கும். நாம் அதற்காகத்தான் வந்தோம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

‘‘நாம் சென்று பார்ப்போம்” என்றான் பாண்டியன். “இங்கே ஒரு பெரிய திறப்பு எனக்குக் கிடைக்கும் என்று ஓர் உள்ளுணர்வு எனக்குச் சொல்கிறது” என்றார் நரேந்திர பிஸ்வாஸ்.

நாக்போ கொட்டாவி விட்டு, “பேசி முடித்துவிட்டீர்கள் என்றால், நாம் போய் சாப்பிடலாமே? நல்ல மாட்டிறைச்சியின் மணம் எழுகிறது” என்றது.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 16

போதிசத்வர்கள்:

பௌத்த மதத்தில், போதிசத்வர்கள் முக்கியமான தெய்வங்கள். ஆரம்ப காலத்தில் ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை, பௌத்தர்கள் தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். அவர்களை புத்தரின் முந்தைய பிறப்புகள் என்று சொன்னார்கள். அவ்வாறு புத்தர் பல வகையாகப் பிறந்ததைப் பற்றிய கதைகளைத்தான் ‘ஜாதகக் கதைகள்’ என்கிறார்கள். புத்தராக ஆவதற்கு முந்தைய பிறப்பில் அவர் போதிசத்வர் எனப்பட்டார்

புத்தருக்குப் பின்னால் பிறந்து, புத்தநிலையை அடையும் தருவாயில் இருப்பவர்களையும் பின்னாள்களில் போதிசத்வர்கள் என்றனர். போதிசத்வர்கள், தவம் மூலம் இந்த உலகத்துடனான உறவை முறித்து, தெய்வநிலை நோக்கிச் சென்றவர்கள். போதிசத்வ வழிபாடு, இந்தியா முழுக்க பிரபலமாக இருந்தது. போதிசத்வர்களின் ஏராளமான சிலைகள் இன்று கிடைக்கின்றன.

தென்னிந்தியாவில் உள்ள பழைமையான சாஸ்தா, அய்யனார் போன்ற தெய்வங்கள், ‘போதிசத்வர்கள்’தான் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.