மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

கூழையன் எவ்வியூருக்குள் அதிகாலையில் வந்துசேர்ந்தான். வழக்கமாகக் காட்டுப்பாதையில் நடந்து வருபவன் இம்முறை குதிரைப்பாதையில் மூன்று வீரர்களோடு வந்திறங்கினான். அதுவே அவன் வந்துள்ள வேலையின் அவசரத்தைச் சொன்னது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

“உதியஞ்சேரல் கீழ்மலையில் புதர்விலக்கிப் பாதை உருவாக்கியிருக்கிறான். அதற்கு அடுத்து பறம்புமலைத் தொடங்குகிறது. நம் பகுதியில் நுழையவில்லை. மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். கடற்கரைப் பகுதியிலிருந்து மூங்கில் நார்க்கொடிகளை எண்ணற்ற வண்டிகளில் கொண்டுவந்து தொடர்ந்து இறக்குகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை” என்று தென்திசை நிலைமையை விளக்கினான் கூழையன்.

பாரியோடு தேக்கனும், வேட்டூர் பழையனும், முடியனும் அவையில் வீற்றிருந்தனர். எப்பொழுதும் விழிப்போடு இருப்பது கூழையனின் இயல்பு. “உரிய நேரத்தில்தான் விழிப்போடு இயங்கவேண்டும், மற்ற நேரத்தில் இயல்போடு இயங்க வேண்டும் என்று அவனுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும், கேட்க மறுக்கிறான்” என்று சலித்துக்கொண்டார் வேட்டூர் பழையன்.

ஆனால், தேக்கனுக்கோ நிலைமையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது. சேரனின் வன்மம் மிக ஆழமானது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அவன் காத்திருக்கிறான். இப்பொழுது குடநாடு அவனுக்கு வாய்ப்பாக வந்தவுடன் செயலிலே இறங்கிவிட்டான் என்று தோன்றியது.

தேக்கன் என்ன சொல்லப்போகிறார் எனக் கூழையன் கவனித்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான். ``கீழ்மலைப் பாதையில் நமது எல்லைக்குள் வராமல் கவனமாக நிறுத்தியிருக் கிறான் என்றால், வேறு ஏதோ பகுதியில் பாதை ஊடுருவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அவன் கூழையனை நன்கு புரிந்து வைத்திருக்கிறான்” என்றான் பாரி.

பழையன் சொல்லியதைத்தான் பாரி வேறுவிதத்தில் சொல்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

“உதியஞ்சேரல் இம்முறை குடநாட்டைத்தான் முதலிலே உள்ளிறக்கிவிடுவான். நம் மீது கொண்டுள்ள பகையால் நடக்கும் இப்போரில் அவனது முதல் தந்திரம் சகக் கூட்டாளியைக் காவு கொடுப்பது” என்றான் பாரி. 

உதியஞ்சேரல் எப்படிச் சிந்திப்பான் என்பதை நன்கு உணர்ந்தவன் பாரி. அவனது கருத்து முற்றிலும் சரியென்று எல்லோருக்கும் தெரியும். உரையாடலின் இறுதியில் பறம்பு நாட்டின் வடமேற்கு எல்லைப்பகுதிக்குச் செல்ல முடியனுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஆனாலும், அனைவரும் வலியுறுத்தியதென்னவோ தேக்கனின் செயலைத்தான். காடறிய இப்பொழுது போகும் முடிவைப் பற்றி மீண்டும் யோசியுங்கள் என்று சொன்னார்கள். கூழையன் மிகக் கடுமையான கோபத்தைத் தேக்கனின் மீது வெளிப்படுத்தினான்.

இறுதியில் தேக்கன் தனது நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்தான். “முழுநிலவுக்கு இன்னும் மூன்று வாரங்கள்  இருக்கின்றன. அதற்குள் பகரியின் ஈரலைக் கொண்டுவர பறம்பின் மக்களுக்கு நீ உத்தரவிடு. யாராவது கொண்டுவந்துவிட்டால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்றான்.

தேக்கன் தனது நிலையில் இருந்து இறங்கிவந்தது நல்லது; ஆனால், மூன்று வாரத்துக்குள் பகரியை வேட்டையாடுவதெல்லாம் நடக்காத செயல். ஆனால் வழக்கத்தை மீற முடியாததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர்.

மறுநாள் கூழையன் தென்திசைக்கும், முடியன் வடமேற்குத் திசைக்கும் புறப்பட்டனர். பறம்புநாடு முழுவதும் பகரி வேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் எல்லாம் கபிலருக்குப் பின்னர்தான் தெரியவந்தன. பகரிதான் பறவைகளின் தலைவன். அதன் வேகத்தையும் நுட்பத்தையும் வேறெந்தப் பறவைக்கும் ஈடுசொல்ல முடியாது. அது முட்டை போட்ட அன்றே குஞ்சு பொரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிற பறவைகள் பல நாட்கள் அடைகாத்து உடற்சூட்டை முட்டைக்கு இறக்கி குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் பகரி அப்படியன்று, தனது உடலின் வழி பெருவெப்பத்தைக் கடத்தக்கூடியது. பகரியின் ஈரலைச் சாப்பிட்ட மனிதனை எந்த விலங்கு தீண்டினாலும் அதன் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. சில நேரம் தீண்டிய விலங்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

பகரியைக் கண்ணிற்பார்ப்பதும் அதனை அடித்து வேட்டையாடுவதும் எளிதான செயலல்ல. பகரியின் ஈரல் உண்டவனே எவ்வியூரின் தேக்கனாகிறான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

கொடிய பாம்புகளாலும், பூச்சிகளாலும், செடிகொடிகளின் சுணைகளாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத மனிதனே காடறியும் ஆசானாகச் செயல்பட முடியும். அவனை நம்பியே பறம்பின் பிள்ளைகளைக் காட்டுக்குள் அனுப்ப முடியும். இல்லையென்றால், இவ்வடர் காட்டில் என்ன நடக்குமென அனுமானிக்கவே முடியாது. பகரியைத் தேடி பறம்பின் கண்கள் வானமெங்கும் பறந்துகொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன. அடர்மழை கொட்டித் தீர்க்க, பகற்பொழுது மிகக்குறுகியதாகவே இருந்தது. அதில்

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

பகரியைப் போன்றதொரு வீறுகொண்ட பறவையைப் பார்ப்பதே மிகவரிது. பின் எங்கே வேட்டையாடுவது? பறம்பு மலையின் எல்லா முகடுகளிலும் மக்கள் ஏறி இறங்கினர். தன்னியல்பில் எப்பொழுதோ கண்ணிற்படும் ஒரு பறவையை, தனித்து வேட்டையாடி பிடிக்குமளவிற்கு மனிதரின் கைக்குள் இயற்கை சுருங்கி விடவில்லை.

பறம்பின் மக்கள் அச்சிறு பறவையிடம் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் கடைசிப்பகலும் முடிவுக்கு வந்தது. இன்றிரவு முழுநிலவு நாள். வேட்டூர் பழையன், செய்திக்காக முன்னிரவுவரை காத்திருந்தான். எங்கிருந்தும் செய்தி வரவில்லை. பகரி அகப்படவில்லை என்பது முடிவானது. இனித் தேக்கன் காடறியப் புறப்படுதலைத் தடுக்க முடியாது எனத் தெரிந்ததும் பழையன் வேட்டுவன்பாறை நோக்கி புறப்பட ஆயத்தமானான்.

முன்னிரவில் தேக்கனைக் கண்டு பேசினான். “பிள்ளைகளை நல்லபடியாகப் பயிற்றுவித்துக் கொண்டு வா. மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவனோடு இளம் வீரர்களும் உடன் வந்தனர். அவர்கள் அடர்வனம் நோக்கி நடந்தனர். நள்ளிரவுக்குள் புலிவால் குகைக்குப் போய்விடலாம். அங்கு படுத்தெழுந்து பயணத்தைத் தொடரலாம் என்பது திட்டம்.

பெ
ருகியோடும் வைகையின் இருளகற்றி சூரியக் கதிர்கள் மதுரையை எட்டிப்பார்க்கத் தொடங்கின. இருமாத காலம் விழாக்களில் மூழ்கிக்கிடந்த மதுரை, இன்று அதன் உச்சநிகழ்வைக்  காணத்தயாராகிக்கொண்டிருந்தது. மணமாலை சூடும் இந்நாளுக்காகத் தான் அவ்வளவு பெரும் கொண்டாட்டங்களும் நடந்து முடிந்துள்ளன.

கருங்கைவாணனின் திட்டம் துல்லியமாக நடைமுறையானது. அவனுக்கு வந்துள்ள தகவல்கள் மிக நல்ல செய்தியைச் சொல்லு கின்றன. இன்று பாண்டியப் பேரரசின் திருநாள். இந்நன்னாளில் பேரரசரின் முன் சொல்லப்படும் முதற்செய்தியாக இது இருக்க வேண்டும் என்று அதிகாலையே பேரரசரைக் காண வந்துவிட்டான் தளபதி கருங்கைவாணன்.

பள்ளியறையைவிட்டு எழுந்து வந்த பேரரசரை வணங்கிச் சொன்னான், “நமக்கு வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நம்மால் அனுப்பப்பட்டவர்கள், பச்சைமலைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டனர். இலக்கை அடையும் காலம் நெருங்கிவிட்டது.”

அவனைக் கட்டித்தழுவினார் பேரரசர். “மணநாளின் மகிழ்வை விஞ்சும் ஆற்றல்கொண்ட செய்தியை அளித்தாய்” எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

“பொதியவெற்பனுக்கும் தெரிவித்துவிடு. இந்நாளின் சிறப்பை முன்பே நமக்குச் சொன்ன திசைவேழருக்கும் சொல். சூல்கடல்முதுவனுக்கும் சொல். மணவிழாவின் மகிழ்வு எல்லையற்றதாய்ப் பெருகட்டும்.”

வணங்கி விடைபெற்றான் கருங்கைவாணன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

பள்ளியறைத் திரைச்சீலையை விலக்கி வெளியேறி வந்த பொற்சுவை, நீராழி அரங்கிற்குள் நுழைந்தாள்.  நீள்வட்டப் பளிங்கு நீர்க்குடுவை அவளுக்காகக் காத்திருந்தது. அதில் நாற்பத்தி ரெண்டு நறுமணப்பொருட்கள் கலக்கப்பட்ட மணநீர் நிரப்பப்பட்டிருந்தது.

பொற்சுவை அருகில் வந்தாள். சுற்றிலும் சேவைப்பெண்கள் நின்றிருந்தனர். பக்கவாட்டில் அமைந்திருந்த படிமேல் ஏறி வலதுகால் நீட்டி பெருவிரல் கொண்டு நீரினை அசைத்தாள். சிற்றலைகள் விளிம்பிற்போய் முட்டித்திரும்பின. அந்நீரலைகளைப் பார்த்தபடி கால் நுழைத்து கழுத்துவரை உள்ளிறங்கினாள்.

நீர் மெல்லிய சூடு கொண்டிருந்தது. அதிகாலைக் குளிருக்கு இதம் தர இதைவிட வேறென்ன இருக்கிறது. ஆனால், உடல்தொடும் எதுவும் சுகம் தருவதாக மாறிவிடுவதில்லை. சிந்தித்தபடியே மேலாடையைக் கழற்றி இடக்கையில் நீட்டினாள். சேவைப்பெண் அதனைப் பணிந்து பெற்றுக்கொண்டாள்.

மணநீரின் வாசனை எங்கும் பரவி மூச்சடைக்கச் செய்தது. நறுமணக்குளியல் பழகிய ஒன்றுதான். ஆனால், யவன நறுமணங்கள் மூக்கிற்குச் சற்றே கடுமையூட்டக்கூடியவை. அவற்றை அதிகமாக ஊற்றியிருக் கிறார்கள் எனத் தோன்றியது. இந்தக் கலவையை ஆண் உருவாக்கியிருக்க வேண்டும். பெண்ணின் கைப்பக்குவம் இப்படி இருக்காது. 

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

ஆனால், எல்லா ஆண்களும் இதுபோல் கடுமைகொண்ட கலவையை உருவாக்கி விடுவதில்லை. எவ்வித நறுமணப் பொருட்களும் இன்றி அவனோடு சேர்ந்து சுனை நீராடியபொழுது எழுந்த மணமும் இன்பமும் வேறொன்றிலும் ஏற்பட்ட தில்லை. கலவை, நறுமணப் பொருளோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை. விரல்தான் உடலின் கண்களைத் திறக்க வல்லது. பாலாடையின் மீது ஊர்ந்துபோகும் சிற்றெறும்பின் கால்தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும். வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியேதான் நினைவின் ஊற்று கசிந்துகொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியாமல் நினைவிற் படரும் அந்நறுமணத்துக்கு ஈடுசொல்ல என்ன இருக்கிறது?

`சுனைநீரின் குளுமையை நீ அறிய வேண்டும் என்று சொல்லித்தான் அவன் அழைத்துச் சென்றான். நீர் மேனியெங்கும் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. நீரோடும் பாறை சுடும் என்று சொன்னால், யார் நம்புவார்கள். நீர் தழுவும் எனது மேனியின் சூட்டை நான் உணர்ந்தபொழுதுதான் அந்த உண்மை உரைத்தது. சிறு மணலை அள்ளி எனது கையிற்கொடுத்து ‘பூசிக்கொள்’ என்றான். நான் மேலெல்லாம் பூசினேன். மென்மலர் மேனியில் சிறுவுராய்வுகளையும் கீறலையும் மணற்துகள்கள் ஏற்படுத்தின. மீண்டும் நீரில் மிதந்தேன். சிற்றெறும்பு கடித்ததைப் போன்ற அக்காயங்களை குளிர்நீருக்குள் உணர்ந்துகொண்டிருந்தபோது அவன் நீருள் இறங்கினான்.

மாமரத்து அடிவாரமிருக்கும் செவ்வெறும்பு கடிப்பதைப்போல உணரத் தொடங்கினேன். கடிகாயங்கள் காமத்துக்குள் மறைந்து கொண்டிருந்தபொழுதே புதிதாகத் தோன்றிக்கொண்டும் இருந்தன. சீற்றம்கொண்டு தாக்கப்படுதலின் சுவையைக் காயங்களே கற்றுக்கொடுத்தன.

நீருக்குள் நுழையும் கைகள் எவ்வளவு இழுத்தணைத்தாலும் வலிமை கூடாது. நீர் தன்னுள் விளையாடுபவர்களோடு தானும் சேர்ந்து விளையாடும். அதற்கான இடத்தைத் தந்தே ஆகவேண்டும். நீர்புகும் முழு இடத்திலும் விளையாட மனிதனால் ஒருபோதும் இயலாது.  நீருலகின் நியதி வேறு.  நிலத்தில் காதல்கொள்கையில் காற்று விலகிக்கொடுக்கும். நீரில் காதல்கொள்கையில் அது விலகிக் கொடுப்பதில்லை. நம்முள் நுழையவே பார்க்கும். சக ஆட்டக்காரனைப்போல அதுவும் பங்கெடுக்கும். நமது பொறாமையை மெல்லத் தூண்டும். நமது இயலாமையைக் காட்டிக்கொடுக்கும். 

பஞ்சுப்படுக்கையே காதலுக்கு சிறந்ததென நினைப்பவர்கள் நீர்ப்படுக்கையை அறியாதவர்களே. நீர் மட்டுமே உடலோடு உடல் கிடத்த, சாய்ந்த நிலையைக் கோருவதில்லை. அது இயற்கை மனிதனுக்கு வழங்கிய அதி சிறந்த காதற்களம். காதலில் மூழ்கித்திளைத்த மனம் தன் துணையின்றி நீர் இறங்கும் துணிவைப் பெறுவதில்லை.’

இச்சிந்தனை உருவான கணத்தில் நறுமணத்தொட்டியில் இருந்து மேலேறினாள் பொற்சுவை. தோழிகள் பதறினர். ``ஒரு பொழுதாவது மணநீருக்குள் இருக்க வேண்டும் இளவரசி” என்று வேண்டினர். எச்சொல்லும் உள்நுழைய முடியாத இறுக்கம்கொண்டிருந்தாள் அவள்.

`நாற்பத்திரெண்டு நறுமணங்களையும் விஞ்சிய வாசனை என்னுள் உண்டு. அதை நுகரக்கூடியவனை நுகர்ந்தவள் நான்’ சொற்களை மனம் உச்சரிக்கும்பொழுது உள்ளுக்குள் இருந்து வாசனை மேலெழுந்து வந்தது. மேலேறும் வாசனை நினைவுக்காட்சிகளைக் கொட்டிக்க விழ்த்தது.

ஆடை அலங்காரத்துக்கும் மலர் அலங்காரத்துக்கும் எல்லோரும் தயாராக இருந்தனர். ஈரம் உலராத பொற்சுவை, இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சேவைப்பெண்கள் அருகில் வந்தனர்.

கைகளில் ஆடைகளை வைத்துக்கொண்டு அவளின் உடல் துடைக்க ஆயத்தமாக இருந்தனர். அவள் நிமிரவேயில்லை. அவளது அனுமதியின்றி யாரும் தொட்டுவிடமுடியாது. சேவைப்பெண்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.

பொற்சுவையின் எண்ணம் நீர்நிலைவிட்டு அகலாமல் இருந்தது. சுனைநீரிற் குளித்து மேலேறியவள் சொன்னாள். ``ஈரத்தை உடல்வெப்பத்தால் மட்டுமே உலரவைத்து விடுகிறது உனது  நெருக்கம்.”

உடல் உலர்ந்துவிடும். ஆனால், இதழ்கள் அப்படியல்ல; நெருக்கத்தில்தான் சுரக்கத் தொடங்கும்.

இதழ் சுரந்துகொண்டிருந்தபொழுது உடல் உலர்த்துகொண்டிருந்தது. நீருள் மூழ்குதல் மீண்டும் தொடங்கியது. நெடுநேரம் கழித்து அவன் உலர்ந்து வீழ்ந்தான். ஆனால், உடலெங்கும் ஈரம் பூத்திருந்தது.

“உள்ளும் புறமுமாக நீரைச் சுழலவிட்டு விளையாடுதலே நீர்விளையாட்டாகிறது. ஆனால், இது தெரியாத பலரும் நீரில் விளையாடுதலையே நீர்விளையாட்டு என்று நினைத்துக் கொள்கின்றனர்” என்று அவன் சொன்னபொழுது, அவள் சொன்னாள். ``இப்பொழுதாவது நான் ஆடைகொண்டு துடைத்து உடலை உலர வைக்கிறேன். நீ அருகில் வராதே.”

அவள் தலைநிமிர்ந்தபொழுது கண்பார்வையைப் புரிந்து சேவைப்பெண்கள் அருகில் வந்து மேனி துடைத்தனர். கூந்தல் உலர்த்த, நறுமணப் புகை தூவ, மேனி துடைக்கவென ஆளுக்கொன்றாய்ப் பணியாற்றினர். வணிகர்குல அலங்காரம் முடிவுக்கு வந்தது. பாண்டியர்குல வழக்கம் தொடங்கியது.

உச்சந்தலையில் மஞ்சள் மின்னும் சூடிகையை அணிவித்தாள் ஒருத்தி. அதனைத் தொடர்ந்து சூடாமணியும் கோதைச்சரமும் சூட்டப்பட்டன. கழுத்தில் கண்டிகையும், மணியாரமும் அணிவித்தனர். அவற்றின்கீழ் தாழ்வடங்கள் நூலளவுத் தொடங்கி விரல் அளவு வரை கனம்கொண்டு இறங்கின. எவ்வொளியையும் உள்வாங்கி பலவண்ணமாய் வெளி கக்கும் செவிப்பூ சூடினர் காதுகளுக்கு. ஆடகமும், வால்வளையும், மகரவாய்க்கட்டும் முன்கை மணிக்கட்டில் தொடங்கி சுற்றிச்சுற்றி மேலேறிக் கொண்டிருந்தன. விரல்களில் மணியாழியும் இடையில் எண்வகை வடமும் சூட்டினர்.

அவளது கண்கள் சுகமதியைத் தேடின. அலங்காரம் நடக்கட்டும் என்று விலகி நின்ற அவள், பொற்சுவையின் கண்கள் தேடுவதைக் கண்டாள்.

அலங்காரப் பணியாளர்களை விலக்கி அருகில் வந்த சுகமதியின் காதோடு சொன்னாள். “எனது உடல் திருமணத்திற்குத் தயாராகிவிட்டது சுகமதி.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

தேக்கன் பதினோரு சிறுவர்களோடு புறப்படத் தயாரானான். சிறுவர்களைக் காடறிய அனுப்பும் நாள் எவ்வியூரின் உணர்ச்சிப் பெருநாள். தன் மகனைக் காட்டுக்குக் கொடுத்தனுப்பும் பெண்களின் ஆவேசம் அடங்கா எழுச்சி கொள்ளும். குலவை யொலியால் காடு கிடுகிடுக்கும். பறம்பின் தலைவன் குருதிப்பலி ஈந்து சிறுவர்களை அனுப்பினான். பாரியின் மனை நீங்கி குலநாகினிகளின் முன்வந்து அமர்ந்தனர் சிறுவர்கள். 

உடல்வலுவிலும் வயதிலும் மூத்தவனாக கீதானி முன்னிருந்தான். அவனை அடுத்து குறுங்கட்டி, முடிநாகன், அவுதி, மடுவன், இளமன் என வரிசையாக இருந்தனர். வயதில் மிகச்சிறியவன் அலவன்தான்.

ஆனாலும், அவனின் வேகம் இணைசொல்ல முடியாது. எல்லோருக்கும் குலநாகினி பச்சிலைச்சாறு கொடுத்தாள். குடித்து முடித்தனர். அதன்பின் கீதானியை உள்தாழ் வாரத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

குலநாகினி சிறுகுடுவை ஒன்றை எடுத்துவந்தாள். அதன் உள்ளே மிகக்கெட்டியான வடிவில் ஏதோ இருந்தது. மலைவேம்பின் இலையைப் பறித்துவைத்திருந்தனர். அந்த இலையைக் குடுவைக்குள் நுழைத்தாள். அதன் சாறு இலையில் படிய அவ்விலையைக் கையில் எடுத்தாள். கீதானியை நாக்கை நீட்டச்சொன்னாள். அவன் `ஆ’ வென வாய் பிளந்து நாக்கை நீட்டினான். “போதாது” என்று சொல்லி தலையை மறுத்து ஆட்டினாள். இன்னும் வாய் பிளந்து நாக்கை நீட்டினான். மீண்டும் மறுத்து தலையை ஆட்டினாள். இன்னும் முயற்சித்தான். வாயோரத்து தசை கிழிந்துவிடும்போல் இருந்தது. அடித்தாடை வலித்தது.

“இன்னும் நாக்கை நீட்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த இலையைச் சாறோடு எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அடிநாக்கில் வைத்து இருகையாலும் வாயை இழுத்து மூடிப் பிடித்துக்கொண்டாள். மற்ற நாகினிகள் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் பல்லைக்கடித்து, துடித்துத் துள்ளினான். ஏதேதோ செய்து பார்த்தான். சிறு சத்தங்கூட வெளிவராத அளவிற்கு வாய்த்தாடையை அடைத்து அமுக்கி இருந்தாள் குலநாகினி. தாழ்வாரத்தின் வெளியில் நின்றிருந்த மற்ற சிறுவர்களுக்கு உள்ளே ஒருவன் துடியாய்த் துடிப்பது சிறிதும் தெரியாது.

இலையோடு உள்ளே வைக்கப்பட்ட சாறு என்னவென்று குலநாகினிகள் வெளியே சொல்வதில்லை. செடிகொடிகளில் விளையும் மொத்தக்கசப்பும் கலக்கப்பட்டச் சாறு என்று சிலர் கருதுகின்றனர், பதப்படுத்தப்பட்ட பாம்பின் நஞ்சு என்று சிலர் சொல்லுகின்றனர். நாகப்பச்சை வேலியின் நச்சுக்கொடிகள் கக்கும் பிசின் என்று சொல்லுகின்றனர். எது உண்மை என்று தெரியாது. இந்தச் சாறு கசிந்து, உணவுக்குழல் முழுவதும் இறங்கி முடியும்வரை அவன் கைகளின் பிடி தளர்த்தப்படுவதில்லை.

நாவின் சுவை நரம்புகள் முழுவதும் நஞ்சுக்கசப்பின் சாறு உள்ளிறங்கிய பின்னே அவன் வாய்திறந்து மூச்சுவிட அனுமதிக்கப் படுகிறான். நரம்பில் தேங்கிய கசப்பு நீங்க மாதங்கள் ஆகும். மேல்தோலில் விழும் தழும்பு மறையாததைப்போல அடிநாக்கில் நிலைகொண்ட கசப்பு எளிதில் மறையாது. அவனது நாவு சுவையுணவு தேட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

அறுபதாங்கோழிக்கறி முதல் அத்திமது வரை அனைத்தின் சுவையும் துளியாவது நாக்கில்பட்டு வளர்த்த இவர்களின் நினைவில் இருந்தே சுவை அகலும். காடறிந்து வீடுவந்த பின்னும் சில ஆண்டுகள் ஆகும் இக்கசப்பு மறைய.

இக்கசப்பின் வாடை காட்டுப்பயணத்துக்கு மிக முக்கியமானது. காட்டின் எல்லா விலங்குகளும் இவ்வாடையை அறியும்.  சிறுவர்கள் பேசியபடி நடந்து செல்ல இவ்வாடையை நுகர்ந்து அவை விலகிச்செல்கின்றன. விலங்குகளை விலக்க இக்கசப்பின் மனமே மொழியாகிறது.

பதினோறு பேரும் மலைவேம்பின் இலையை  விழுங்கி, துடித்து அடங்கினர். அதன்பின் அவர்கள் புறப்பட்டனர். யாரிடமும் பேச அவர்கள் ஆயத்தமாயில்லை. வாய்திறந்து பேசப்பேச கசப்பு உள்ளிறங்கும். இக்கசப்புக்குப் பழகி அவர்கள் இயல்பாய்ப் பேசத்தொடங்க சில வாரங்களோ மாதங்களோ ஆகலாம். அதுவரை மிகமிகக் குறைவாகவே அவர்கள் பேசுவர். பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடம் வேம்பின் சாற்றைக் குடித்ததற்குச் சமம்.

அடித்தொண்டை முழுவதும் தேங்கிய கசப்பு நிற்க, அதன்பிறகு யாரிடமும் பேசாமல் எவ்வியூர் விட்டு வெளியேறினர். சிலர் வில் அம்பு வைத்திருந்தனர். சிலர் ஈட்டியை ஏந்திப்பிடித்திருந்தனர். சிலரிடம் கவண்கல் இருந்தது. அவரவர்களுக்கான ஆயுதத்தை எடுத்துவந்தனர். ஆனால், இதுவெல்லாம் தொடக்க நிலைக்குத்தான். அவர்கள் பயன்படுத்த வேண்டிய வலிமை மிகுந்த ஆயுதங்களை இனி அவர்களே காட்டில் உருவாக்கிக்கொள்வார்கள். தங்களுக்கான தனித்துவம்மிக்க ஆயுதம் எதுவென்று அவர்கள் கண்டறியும் வரை இவ்வாயுதம் அவர்களின் கையில் இருக்கும்.

தேக்கன் வழக்கம்போல தனக்கான ஆயுதத்தை வீட்டில் இருந்து எடுத்துவந்தான். அது பன்றியின் கடவாய்க்கொம்பு. இக்காட்டில் மிக வலிமை வாய்ந்த பொருள் எதுவெனக்கேட்டால், அது பன்றியின் கடவாக்கொம்புதான். அதனை உடைக்கவோ, நொறுக்கவோ எதனாலும் முடியாது. அதன் அடிப்பகுதிக்கு என்ன வலிமை இருக்கிறதோ, அதே வலிமை கூர்மை மிகுந்த முனைப்பகுதிக்கும் உண்டு. எனவே, முனையின் கூர்மை ஒருபோதும் சிதைவுறாது.

தேக்கன் இருகொம்புகளின் அடிப்பகுதியில் துளையிட்டு அறுந்துபடாத நார்கொண்டு இரண்டு கையின் மணிக்கட்டோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காடறிதல் பயணக்காலம் முழுமைக்கும் அவன் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அது மட்டுந்தான்.

மணிக்கட்டில் கட்டி உள்ளங்கைக்குள் மடக்கிக்கொண்டால், இப்படி ஓர் ஆயுதம் இருப்பதே வெளியில் தெரியாது. இதுகொண்டு எந்த மரத்தின் அடிப்பகுதியையும் குத்தி இழுத்தால், நரம்புச் செதில்கள் பிய்ந்து நொறுங்கும். இறுகிய மரத்தின் தூரையே பிய்த்து எடுக்குமென்றால், விலங்குகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

காடறிந்து, சிறந்த போர்வீரனாக விளங்கி, தனது திறமையால் பல வலிமை மிகுந்த பணிகளைச் செய்து இறுதியில் பகரியை வேட்டையாடி ஈரலைத் தின்றவன்தான் தேக்கன் ஆகிறான். எனவே அவன் தனது உடலசைவையோ ஆற்றலையோ துளியும் வீணாகச் செலவிட மாட்டான். எந்தவொரு விலங்கின் தாக்குதலையும் சமாளிக்க மிகச் சில அடிகள் போதும். குத்திக்கொன்று வீழ்த்துவதெல்லாம் வீரர்களின் தொடக்ககால வாழ்வில் நிகழ்த்தும் செயல். ஆனால், வாழ்வு முழுவதும் காடு பார்த்து, பட்டறிவின் உச்சத்தில் நிற்கும் தேக்கனுக்குத் தேவை மிகச்சிறிய சில அசைவுகள்தான். எந்த விலங்கின் நரம்பை எங்கு தட்டினால் போதும் என்று தெரியும். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

கைப்பிடி அளவு கோரைப்புற்களின் முனையில் முடிச்சிட்டு, அதனைக்கொண்டு அடித்தால், யானை நகரமுடியாமல் உட்காரும். அவன் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதன் எல்லாவற்றையும் நரம்புகள்கொண்டு அறிந்தவனாகிறான். எனவே நரம்புகளின் இயங்குவிசை அவனுக்குப் பிடிபட்டுவிடுகிறது. விலங்குகளின் வலிமை, ஆற்றல் மீதான கருத்தெல்லாம் நினைவில் இருந்தே உதிர்ந்துவிடுகிறது.

காடறியும் நான்காவது பயணத்தை மேற்கொள்ளும் தேக்கனின் முதல்நாள் நினைவில் கடந்தகாலம் எதுவும் வந்து செல்லவில்லை. வழக்கம்போல் இன்றைய நாளின் நிகழ்வு மட்டுமே அவன் மனதில் ஓடியது. சாமப்பூவின் வாசனை வந்துசென்றது.

முன்னால் சென்றவனைத் தொடர்ந்து பதினோறு பேரும் வந்துகொண்டிருந்தனர். யாரும் வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை, வாயைத் திறந்தாலே காற்று உள்ளே போய் ஒருகுடம் நஞ்சை அடிவயிற்றில் கொட்டிக்கவிழ்ப்பதுபோல் இருக்கிறது. எனவே, பேச்சின்றிப் பின்தொடர்ந்தனர் அனைவரும். நீண்டநேரத்துக்குப்பின் சிறியவன் அலவன் கேட்டான், ``எதை நோக்கிப் போகிறோம்?”

நடந்தபடியே தேக்கன் சொன்னான் ``கொற்றவையை வழிபட, கூத்துக்களம் நோக்கிச் செல்கிறோம்.”

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...