
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கவர்னர் குரானா, மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லியிருந்தார். அதற்குக் குறிக்கப்பட்ட நாள், 1988-ம் ஆண்டு ஜனவரி 28. கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆனது.
97 பேரின் ஆதரவை வைத்திருந்த ஜானகிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதைத் திரட்ட களமிறங்கினார். ஜெயலலிதாவைப் போலவே ராஜீவ் காந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் ஜானகி. அவருக்கு, ‘‘ஒன்றுபட்ட அ.தி.மு.க-வைத்தான் ஆதரிக்க முடியும்’’ என்று பதில் வந்தது. 24 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த தி.மு.க-வின் ஆதரவை நாடினார்கள். அவர்களும் கையை விரித்தனர். வேறு வழியில்லாமல் அடுத்த அஸ்திரத்தை வீசினார் ஜானகி. ‘ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வேறுபாடுகளை மறந்து தன்னை ஆதரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இதனால் அவர்கள் தாவி விடுவோர்களோ என்ற கலக்கம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நடராசன் மேற்கொண்டார். கே.கே.எஸ்.எஸ்.ஆர், செளந்தரராஜன், திருநாவுக்கரசர் ஆகியோரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தார் நடராசன். கே.கே.எஸ்.எஸ்.ஆர் அதைப் பிரதானமாகச் செய்தார்.
ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அடையாறு பார்க் ஹோட்டலிலும், ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பிரசிடென்ட் ஹோட்டலிலும் ‘பாதுகாப்பில்’ வைக்கப்பட்டனர். அடிக்கடிவந்து எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து ஆலோசனை செய்தார் ஜெயலலிதா. இந்த ஃபார்முலாவை அன்றைக்குப் போட்ட நடராசன்தான், இன்றைய கூவத்தூருக்கும் சூத்திரதாரி. அன்றைக்கு ஜெயலலிதாவைப் பார்க் ஹோட்டலுக்கு அனுப்பியவர், இன்றைக்கு சசிகலாவைக் கூவத்தூருக்கு அனுப்பிவைத்தார்.

‘ஜானகியின் ஆலோசகர்’ என ஆர்.எம்.வீரப்பனின் பெயர் அன்றைக்கு மீடியாவில் அடிபட ஆரம்பித்தது. அதேபோல ‘ஜெயலலிதா வின் அரசியல் ஆலோசகர்’ என நடராசனின் பெயரைக்கட்டி எழுப்பியிருந்தார்கள். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பிறகு வட மாநிலங்களில் டூர் அடித்துவிட்டு, கேரளா வழியாகத் தமிழகத்துக்குள் நுழைந்தார்கள். அவர்களைத் தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு அழைத்துச்சென்று, அங்கே ஒரு நூற்பாலையில் தங்கவைத்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சட்டசபை கூடும் நாளில் சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.
இதற்கிடையே, ‘ஜனவரி 13-ம் தேதி செயற்குழு கூடும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் அ.தி.மு.க அலுவலகத்தை ஜானகி கோஷ்டி முந்தைய நாளே பூட்டிவிட்டது. நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், பண்ருட்டி ராமச்சந்திரன் புடைசூழ வந்த ஜெயலலிதா, தடையை மீறி நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதனால் அ.தி.மு.க அலுவலகம் எதிரில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா.
அடுத்தடுத்து பரபரப்புகள் அதிகரிக்க, ஜனவரி 28-ம் தேதி காலையில் சட்டசபை கூடியது. அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தையே முதலில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், ‘‘ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தொலைபேசியில் சொன் னார்கள்’’ எனச் சொல்லி அவையை 12 மணிக்குத் தள்ளிவைத்தார். பி.ஹெச்.பாண்டியன், ஜானகிக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மீண்டும் அவை கூடியதும், கட்சித்தாவல் தடை சட்டப்படி ஜெயலலிதா அணியைச் சேர்ந்த நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம். கே.கே.எஸ்.எஸ்.ஆர், செளந்தரராஜன், திருநாவுக்கரசர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்தார். இதனால் சட்டசபையில் கலவரம் வெடித்தது. மைக்குகள் உடைக்கப்பட்டன. சோடா பாட்டில்கள், செருப்புகள் பறந்தன. வரலாறு காணாத அளவுக்கு ரணகளமானது.

இப்படியான சூழலில், 33 எம்.எல்.ஏ-க்களைப் பதவி நீக்கம் செய்திருப்பதாகச் சொன்ன பி.ஹெச்.பாண்டியன், ‘‘ஜானகி கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது’’ என அறிவித்தார். ஆனால், சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜானகி ஆட்சியை ஜனவரி 30-ம் தேதி கலைத்தது மத்திய அரசு. ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது. சட்டசபை கலைப்பை ஆதரித்து ஜெயலலிதா அறிக்கை விட்டார். ‘‘என் கணவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியவர்களே என் அரசைக் கவிழ்க்க முயல்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை’’ என்றார் ஜானகி.
ஜெயலலிதா வெற்றி பெற்றார்; பின்னால் இருந்த நடராசனும்!
(தொடரும்)