மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!

கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

ஒரு படைப்பின் பாதிப் பில்லாமல், ஒரு நிஜத்தின் பாதிப்பில்லாமல் இன்னொரு படைப்பு உருவாவது இல்லை. ஒரு ரஷ்யக்கதை. நிகோலய் கோகல் எழுதிய ‘தாராஸ் புல்பா’. ஆங்கிலத்தில் யூல் பிரைன்னர் நடித்து பிரமாண்டமான திரைப்படமாக வெளிவந்தது.  போலந்துக்கும் உக்ரேனிய கஸாக்குகளுக்கும் நடக்கும் போரின் பின்னணியில் அமைந்த உருக்கமான கதை. கஸாக்குகளின் தலைவன், தாராஸ் புல்பா. போலந்துகாரர்களின் ஆதிக்கம் அவர்கள் பகுதியில் ஓங்குகிறது. தாராஸ் புல்பாவுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் மூத்தவன், போலந்து நாட்டு பிரபு ஒருவரின் மகளுடைய அழகில் மயங்குகிறான். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். தந்தை தாராஸ் புல்பாவோ போலந்து நாட்டின்மீது போர் தொடுத்து அழிக்க நினைக்கிறான். கஸாக்குகள் படையெடுத்துச் சென்று ஒரு கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். தாராஸ் புல்பாவின் மூத்த மகனின் காதலி அந்தக் கோட்டைக்குள் இருக்கிறாள். அவள் பசியில் வாடுவதை அறிந்து, கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களுக்கு உதவுகிறான். அதனால் போலந்து படையின் கை ஓங்குகிறது. 

தந்தை இதையறிந்து கோபம் கொள்கிறான். கடைசியில் இது தந்தைக்கும் மகனுக்குமான போராக மாறுகிறது. சரிநிகரான யுத்தம். ‘‘நான்தான் உனக்கு உயிர் கொடுத்தேன். நானே அதை எடுத்துக்கொள்கிறேன்’’ எனக் கர்ஜிக்கும் தந்தை, மகனை வீழ்த்துகிறான். ‘தாராஸ் புல்பா’ 60-களில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம்.

என் மனத்தில் இந்தப் படத்தின் கதையை எப்படி தமிழ்ப்படுத்தலாம் என வெகுநாள்களாக ஓடிக்கொண்டிருந்தது. நாடுகளுக்கிடையான போரை, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான விரோதமாக மாற்றினேன். அப்படிப் பிறந்ததுதான், ‘புது நெல்லு புது நாத்து’. நம்முடைய கலாசாரம், பண்பாடு, கிராமம், மனிதர்கள், மொழி... என அந்தப் படத்துக்குப் புதுவண்ணம் கொடுத்தேன்.

கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!

கிராமத்தில் பெரிய மனிதராக இருக்கும் நெப்போலியன், ஊரில் பொன்வண்ணனைக் கொன்றதோடு அவருடைய சொத்துகளையும் அபகரித்தவர். பொன்வண்ணனின் மனைவி, இழந்த சொத்துகளை மீட்கும் வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள். இளையமகன் நகரத்துக்குச் சென்று படிக்கிறார். நெப்போலியன் மகளும் அங்கே படிக்கிறார். விரோதம் பாராட்டும் குடும்பத்தின் வாரிசுகளுக்குள் காதல் வளர்கிறது. விரோதியின் மகள் வயிற்றில் குழந்தையும் வளர்கிறது. மகன் அம்மாவிடம் வந்து சொல்கிறான்: ‘‘வாளெடுத்து முடிக்க வேண்டிய பகையை நூலெடுத்து முடிக்கப் போகிறேன்.’’ ஆனால், தாய் மனது அதை விரும்பவில்லை. காதலைப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பதை அவள் ஏற்கவில்லை. என்னை எழுதத் தூண்டிய கதை எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். இதுதான் கதை செய்யும் வித்தை.

இந்தப் படத்தில் இளையராஜாவின் இசை மிகச் சிறப்பாக அமைந்தது. சுகன்யாவின் நடிப்பு கலாட்டாவாக இருக்கும். துறுதுறுவென பல்வேறு முகபாவங்களைக்காட்டிய அற்புதமான நடிகை அந்தப் படத்தில் கிடைத்தார். கலாக்ஷேத்ரா மாணவி அல்லவா?

மாடர்ன் தியேட்டர்ஸ்... பல உன்னதமான கலைஞர் களைத் தமிழ்த் திரையுலகுக்குத் தந்த நிறுவனம். அந்த நிறுவனத்துக்குப் பஞ்சுவும் நானும் சேர்ந்து பணியாற்றியது இனிமையான நினைவு. ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் நாங்கள் இணைந்து எழுதினோம். நண்பர் ஜெய்சங்கர் நடித்த படம். அவருக்கு ஜோடியாக ஜெயசித்ரா.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். அசைவம் வேண்டுவோர் வெளியே ஹோட்டலுக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டும். தினமும் இரவு நேரத்தில் ஜெய்யும் நானும் வெளியே சாப்பிடக் கிளம்பிவிடுவோம். பிறகு நான், ஜெய், பஞ்சு இப்படி அசைவப் பிரியர்கள் ஒன்று சேர்ந்து ‘கறி உண்போர் கழகம்’ தொடங்கினோம். மாடர்ன் தியேட்டர்ஸ் வாட்ச்மேன், பக்கத்திலேயே ஒரு வீட்டில் இருந்தார். அவரைப் பிடித்து, ‘‘அசைவம் சமைத்துத் தர முடியுமா?’’ எனக் கேட்டேன். ‘‘சரி’’ என்றார். நாங்கள் ஆறு பேர். அவர்கள் வீட்டில் நான்கு பேர். பத்து பேருக்கான சமையலுக்குப் பணத்தைக் கொடுத்தேன்.

அவருடைய சம்சாரம் மிக அருமையாகச் சமைக்கக்கூடியவர். இந்தக் கறி உண்போர் கழகம் பெரிதாக வளர ஆரம்பித்தது. ஆளுக்குப் பத்து ரூபாய் போட்டு வாட்ச்மேனிடம் கொடுத்துவிடுவோம். அவர் கறி, மீன் வாங்கி அவற்றைச் சமைத்துக் கொண்டுவருவார். நிறுவனத்தின் சட்டதிட்டங் களுக்குக் கட்டுப்பட்டு, இந்த வேலை நடந்து கொண்டிருந்தது. ஜெய், ‘‘இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?’ எனச் சந்தோஷமாகக் கலந்துகொள்வார்.

ஒருநாள் ஜெய் என்னை அழைத்து, ‘‘நாளை இரவு நான் சென்னை கிளம்ப வேண்டும். எடுக்க வேண்டிய காட்சிகளைக் கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டால் நன்றாக இருக்கும்’’ எனச் சொன்னார். ‘‘நாளைக்கு எடுக்கப் போகும் காட்சிக்கான வசனங்களை உடனே தயார் செய்துவைக்கிறேன்’’ என்றேன். காலையில் பஞ்சு கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருப்பார். நான் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். வசனத்தோடு தயாராக இருந்தேன்.

பத்து மணிக்கு மேல் ஒவ்வொருவராக செட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். மேக்கப் ரூமில் ஜெய்க்கு மேக்கப் நடந்துகொண்டிருந்தது. அப்போது படத்தின் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அங்கே வந்தார். நான் வசன பேப்பரை இயக்குநரிடம் கொடுத்தேன். ஓகே என வாங்கிக்கொண்டார். ஆனால், அன்று அவர் என்ன மூடில் இருந்தாரோ... படப்பிடிப்புக்கான எந்த வேலையும் நடக்கவில்லை.

ஜெய் அழைத்து, ‘‘நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றேனே... எந்த வேலையும் நடக்கவில்லையே’’ என்றார். ‘‘சார்... என் வேலையை முடித்துக் கொடுத்து விட்டேன். டைரக்டர்தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும்’’ என்றேன்.
அதற்குள் பஞ்சு வந்தார். ‘‘ஏன் ஷூட்டிங் ஆரம்பமாகவில்லை’’ என்றார். டைரக்டர் கடுங்கோபமாக, ‘‘வசனம் எழுதித் தந்தால்தானே ஷூட்டிங் ஆரம்பிக்க முடியும்?’’ என்றார்.

நான் பதறிப்போய், ‘‘சார், காலையிலேயே உங்களிடம் வசன பேப்பரைக் கொடுத்துவிட்டேனே?’’ என்றேன். டைரக்டரோ, ‘‘நீங்கள் கொடுக்கவே இல்லை’’ என்றார் உறுதியாக.

இந்த நேரத்தில் ஜெய் வந்தார். உண்மையிலேயே அவர் சி.ஐ.டி சங்கர்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!

ரோமியோ - ஜூலியட்!

காதல் கதைகளில் ரோமியோ - ஜூலியட்டுக்கு தனியிடம் உண்டு. இதுவும் பகைக் குடும்பங்களின் காதல் கதைதான். உயிருக்கு உயிரான காதலர்கள், ரோமியோவும் ஜூலியட்டும். விருப்பத்துக்கு மாறான ஒரு திருமணத்திலிருந்து தப்பிக்க, விஷம் குடித்து இறந்ததுபோல் நாடகமாடுவாள் ஜூலியட். உண்மையில், அவள் குடித்தது, சில மணி நேரங்கள் மட்டுமே மயக்கத்தில் வைத்திருக்கும் ஒரு மருந்து. இந்தத் தகவலை வீரன் ஒருவனிடம் சொல்லி, ரோமியோவிடம் தெரிவிக்கக் கட்டளையிடுவாள். தகவல் சொல்லப் போன வீரன் இடையில் தாமதிக்க, உண்மை தெரியாமல் ஜூலியட்டை பார்க்க வருவான் ரோமியோ. அவள் மரணமடைந்து விட்டதாகக் கருதிக் கலங்குவான். அந்த இடத்திலேயே உயிர் துறப்பான். மயக்கத்திலிருந்து எழுந்த காதலி, ரோமியோ இறந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு உயிர் துறப்பாள். ஷேக்ஸ்பியரின் மொத்தக் காவிய சாதுர்யமும் செறிவாகச் சொன்ன திருப்புமுனைக் காட்சி அது.