மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 24 - ‘ஒவ்வொரு கதைசொல்லியின் கழுத்தின் மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது!’

ஒரு வரி... ஒரு நெறி! - 24 - ‘ஒவ்வொரு கதைசொல்லியின் கழுத்தின் மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 24 - ‘ஒவ்வொரு கதைசொல்லியின் கழுத்தின் மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது!’

இயக்குநர் வசந்தபாலன்

லகம் கதைகளால் நிரம்பியிருக்கிறது. எந்த நேரமும் கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எங்கோ, யாராலோ கதைகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கதைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மொத்த உலகத்தையும் கதைகளே சூழ்ந்திருக்கின்றன என்று முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையோடுதான், ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதை எழுத்தாளனாக, திரைக்கலைஞனாக இயங்கி வருகிறேன். என்ன மாதிரியான கதைகளுக்குள் இந்த உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது என்பதைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

என் முதல் படம் ‘ஆல்பம்’, என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்துப் புனையப்பட்ட கதை. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதில் துவண்டுபோய் என் சொந்த ஊருக்குப் போய்விட்டேன். பார்க்கிறவர்கள் எல்லாம் துக்கம் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். எனக்கு அந்தச் சூழலில் ஓர் அறிவுத்திறப்பு தேவைப்பட்டது. நிறைய எழுத்தாளர்களைச் சந்திக்க ஆரம்பித்தேன்.

அப்படித்தான் நாகர்கோவிலில் ஜெயமோகனைச் சந்தித்தேன். நிறைய பேசிக்கொண்டிருந்தோம். என் முகச்சோர்வைப் பார்த்து விசாரித்தார். ‘‘என் சொந்தக்கதை சார்... சுவாரஸ்யமாகச் சொன்னேன்... ஏமாத்திடுச்சு’’ என்று சொன்னதைப் புன்னகையோடு கேட்டுக்கொண்டார். அவரும் அந்தப் படத்தைப் பார்த்திருந்தார். ‘‘எல்லோருடைய வாழ்க்கையிலும் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும். அதுமாதிரி ஒரு கதையை எப்படிப் படமாக எடுத்தீர்கள்?’’ என்று கேட்டார். ‘‘கழுத்தை அறுத்துக்கொண்டு சாகிற அளவுக்கு வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தால் மட்டும்தான், அந்த உண்மையைக் கதையாக எழுத வேண்டும். அப்படி எழுதினால்தான் அந்தக் கதை ஆழமாக இருக்கும். உண்மையாக இருக்கும். கவனிக்கப்படும். ஒரு பெண்ணை ஓர் ஆண் காதலிப்பதெல்லாம் ஒரு கதையா..?’’ என்று கேட்டார் ஜெயமோகன்.

ஒரு வரி... ஒரு நெறி! - 24 - ‘ஒவ்வொரு கதைசொல்லியின் கழுத்தின் மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது!’

எனக்கு சட்டென்று மனதில் ஒரு வெளிச்சம் பிறந்தது. அதன்பிறகு, தீவிரமாக எனக்கான கதையைத் தேட ஆரம்பித்தேன். அந்தத் தருணத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திக் கொண்டிருந்த ‘அட்சரம்’ இதழில் அரேபியக் கதைகள் உருவான விதம் குறித்து ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். ஷார்யார் என்ற அரேபிய அரசன், ‘கற்பொழுக்கம் தவறிவிட்டாள்’ என்று கருதி, தன் மனைவியைக் கொலை செய்கிறான். அந்த ஏமாற்றம், பெண்கள் மீதான வக்கிரமாக மாறுகிறது. தினம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, இரவு அவளோடு வாழ்ந்துவிட்டு, காலையில் அவளைக் கொலை செய்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.

ஒருமுறை ஒரு மந்திரியின் மகளைத் திருமணம் செய்ய நேர்கிறது. அவள் பெயர் ஷீரா ஷாத். ‘இந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும், அதோடு இனி எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது’ என்று முடிவெடுக்கிறாள் ஷீரா. திருமணம் முடிகிறது. இரவு வருகிறது. தன் தங்கையைப் படுக்கையறைக்கு அழைத்துவரும் ஷீரா, ‘‘என்னிடம் கதை கேட்டால்தான் இவள் தூங்குவாள்’’ என்று கணவனிடம் சொல்லி, அனுமதி வாங்குகிறாள்.

பிறகு கதை சொல்லத் தொடங்குகிறாள். ஷீராவின் கழுத்துக்கு மேலே கத்தி தொங்குகிறது. நாளை காலை அவள் கொலை செய்யப்படப் போகிறாள். இப்போது அவள் கதை சொல்கிறாள். மன்னன் ஷார்யாரும் கேட்கிறான். காலை சூரிய உதயத்துக்கு முன்பு அழகான ஒரு திருப்பத்தோடு கதையை முடித்த ஷீரா, ‘‘இந்தக் கதையின் தொடர்ச்சியை நாளை உனக்குச் சொல்கிறேன்’’ என்று தன் தங்கையிடம் சொல்கிறாள்.

ஷார்யாருக்கு இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு. ‘சரி... கதையின் முடிவைத் தெரிந்துகொண்டு நாளை கொலை செய்வோம்’ என்று திட்டத்தைத் தள்ளி வைக்கிறான். மறுநாள் தொடரும் கதை, இன்னொரு திருப்பத்தோடு நிற்கிறது.

1001 இரவுகள் அப்படிக் கதை சொல்கிறாள். அந்தக் கதைகள்தான் இப்போதும் ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ என்ற கதைகளாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தன் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது என்பதை ஷீரா உணர்ந்தே இருக்கிறாள். அதற்கிடையில், அவள் கருவுறுகிறாள். குழந்தை பிறக்கிறது. ஷார்யாருக்குப் பெண்களைக் கொலைசெய்யும் எண்ணம் மாறிவிடுகிறது.

இந்தக் கதை எனக்கு பல திறப்புகளைச் செய்தது. ஜெயமோகன் சொன்ன, ‘கழுத்தை அறுத்துக் கொண்டு சாகும் அளவுக்கு ஒரு கதை உன் வாழ்க்கையில் நடந்தால், அதுதான் எழுதத் தகுந்த கதை’ என்ற வரியும், ஷீராவின் கதையும் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த உந்துதலில்தான் ‘வெயில்’ படத்தின் கதையை எழுதினேன். அது, ஒரு தோல்வியுற்ற மனிதனின் கதை. ஆனால், வலியோடு, வேதனையோடு, ஆத்திரத்தோடு, உக்கிரத்தோடு ஒரு கதையைச் சொல்லும்போது பார்வையாளன் அந்தக் கதையில் கலந்துவிடுவான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

ஒவ்வொரு கதைசொல்லியின் கழுத்தின் மேலும் ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கிறது. என்றைக்குச் சுவாரஸ்யம் குறைவாக ஒரு கதையைச் சொல்கிறோமோ, அன்று அந்தக் கத்தி நம் தலையை நறுக்கிவிடும். ஒரு படம் வெளியாகும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்தக் கத்தி பலரின் கழுத்தில் தொங்குகிறது. பார்வையாளனின் கைதட்டலில் அந்தக் கத்தி நழுவுகிறது.

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: க.பாலாஜி