மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 25 - “எழுதினா மட்டும் போதுமா?”

ஒரு வரி... ஒரு நெறி! - 25 - “எழுதினா மட்டும் போதுமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 25 - “எழுதினா மட்டும் போதுமா?”

நித்தியானந்த் ஜெயராமன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

மெரிக்காவில் படித்திருக்கிறேன். சர்வதேச ஊடகவியலாளர்களுடன் பணி செய்திருக்கிறேன். சூழலியல் கூட்டங்களில் பங்கெடுப்பதற்காகக் கண்டங்கள் தாண்டிப் பயணித்திருக்கிறேன். ஆனால், உங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு வரியைச் சொல்லுங்கள் என்றால், இந்த வரியைத்தான் சொல்வேன். திருவாரூர் மாவட்டத்தின் ஒரு உள்ளடங்கிய சிறு கிராமத்தில், 90-களில் ஒரு பாட்டி சொன்ன வரி இது.  

1994-ம் ஆண்டு, காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி நிலங்களெங்கும் புற்று போல இறால் பண்ணைகள் படர்ந்திருந்தன. வழக்கம்போல முதலில் வளர்ச்சியாக - லாபத்துக்கான வழியாகப் பார்க்கப்பட்ட பண்ணைகள், சிறிது காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கின. ஒரு பத்திரிகையாளனாக இது தொடர்பாகச் செய்தி சேகரிப்பதற்காக நான் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன். திருவாரூர் மாவட்டத்தின் உப்பு பூத்த பல கிராமங்களையும், அதற்குக் காரணமான பண்ணைகளையும் பார்வையிட்டுவிட்டு, வெயில் படர்ந்த மதிய வேளையில் ஒரு பாட்டியிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். “இதை எழுதினா உனக்கு எவ்வளவு கிடைக்கும்?” என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டே, “நிறைய கிடைக்கும் பாட்டி” என்றேன். அந்தப் பாட்டி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை... சிறிதும் யோசிக்காமல், ‘‘எழுதினா மட்டும் போதுமா?” என்று கேட்டார்.

நான்கே வார்த்தைகள்தான். அதுவும், சர்வ சாதாரணமாகக் கேட்டுவிட்டார். ஆனால், என்னைச் சில நாள்கள் முற்றும் இயங்கவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டன அந்த வார்த்தைகள்.

ஒரு வரி... ஒரு நெறி! - 25 - “எழுதினா மட்டும் போதுமா?”

எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்து தினம் தினம் நாள்களை நகர்த்துவதற்குப் போராடுகிறார்கள். உண்மையில், அது அவர்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம் மட்டும் இல்லை; அந்தப் பகுதியின் சூழலியலுக்கான போராட்டமும்தான். இவை அனைத்தும் நமக்குப் புரிந்தும் ‘எழுதுவது மட்டும்தான் நம் வேலை’ என்று பாதுகாப்பான கோட்டில் நின்றுகொண்டிருக்கிறேன் என்ற உண்மை என்னை நிலைகுலையச் செய்தது.

அந்தப் பாட்டியின் வார்த்தைகள் என்னை சுயபரிசீலனை செய்யவைத்தன. அந்த மக்களுடன் போராட்டத்தில் கரம்கோக்க வைத்தன. பின் என்னைச் செயல்பாட்டாளராகவும் மாற்றி, நர்மதை ஆற்றுக்கானப் போராட்டம், கொடைக்கானலில் விஷம் பரப்பிய யூனிலீவர் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், போபால் போராட்டம் என்று எல்லைகள் தாண்டி தினம் தினம் என்னை அலைய வைத்துக்கொண்டும் இருக்கின்றன.

ஒரு ஊடக மாணவனாக நான் அமெரிக்காவில் கற்றதைவிட, நர்மதை ஆற்றைக் காப்பாற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டபோது அந்த எளிய மக்களிடம் கற்றதுதான் அதிகம். என்னுடைய எண்ண ஓட்டத்தை அந்த மக்கள் மாற்றினார்கள். ‘உண்மையில் இந்தத் தேசத்தின் பிரச்னை என்ன... வளர்ச்சி என்றால் என்ன’ என்று அந்த மக்கள்தான் புரிய வைத்தார்கள். எழுதிக்கொண்டு மட்டும் இருந்திருந்தால், எனக்கு அந்தப் பாடம் கிடைத்திருக்காது. களத்தில் மக்களோடு மக்களாக நின்றபோது கிடைத்த பாடங்கள் அவை.

அதுபோல, 2009 - 2011  காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட கடற்கரைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகர் மக்களும், ஊரூர் குப்பம் மக்களும் இணைந்து போராடினார்கள். நானும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். வெற்றி பெற்றோம். ஒரு பத்திரிகையாளனாக அந்தப் போராட்டத்தைப் பற்றி எழுதிக்கொண்டு மட்டும் இருந்திருந்தால், அந்த வெற்றி என்னைக் களிப்படைய செய்திருக்குமா என்று தெரியவில்லை. எல்லாப் போராட்டங்களிலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பல்கலைக்கழகங்கள் கற்றுத் தராத விஷயத்தைக் கற்றுத் தந்ததும், ஆன்மாவுக்கு மகிழ்வைத் தந்ததும் இந்தப் போராட்டங்களும் அவற்றோடு சேர்ந்த எழுத்துகளும்தான்.

‘ஒரு  ஊடகவியலாளன்  செயல்பாட்டாளனாக இருக்கலாமா? அப்படி இருந்தால் நடுநிலையான செய்திகளைத் தர முடியாதே’ என்று கேட்கிறார்கள். உண்மையில் இங்கு நடுநிலை என்ற ஒன்றே இல்லை. ஒரு பன்னாட்டு நிறுவனம் நம் நிலத்தை விஷமாக்கும்போது... வளர்ச்சியின் பெயரால் ஆற்றுப்படுகைகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படும்போது..., எளிய மக்களின் குரலாக, ஒரு சார்பாகத்தான் ஊடகவியலாளன் இருக்க முடியும்; இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் நடுநிலை என்பது ஏமாற்று வேலை. ஊடகவியலாளன் எல்லா சமயங்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும்; மாற்றுக் கருத்துகளையும் பதிவுசெய்ய வேண்டும். மற்றபடி ஒரு சார்பாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இப்போது எண்ணூர் கடல் படுகையைக் காக்கும் போராட்டத்தில் மீனவ மக்களுடன் இணைந்து களத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதிக்கொண்டும் இருக்கிறேன். இந்தப் போராட்டங்களில் என்னை உத்வேகத்துடன் வைத்திருப்பது, தொடர்ந்து இயங்கச்செய்வது எல்லாம் முகத்தில் கோடுகள் விழுந்த அந்தப் பாட்டி சொல்லிய வார்த்தைகள்தான்... ‘எழுதினா மட்டும் போதுமா?’

- மு.நியாஸ் அகமது
படம்: பா.காளிமுத்து