மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 54 - பூனைப் படை உதயம்!

சசிகலா ஜாதகம் - 54 - பூனைப் படை உதயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 54 - பூனைப் படை உதயம்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜானகி ஆட்சி  கவிழ்ந்த பிறகு சட்டசபைக்கு உடனடியாகத் தேர்தல் நடைபெறவில்லை. சுமார் ஓர் ஆண்டு கவர்னர் ஆட்சிதான் நடைபெற்றது. ஜெயலலிதா அணியில் பிளவு ஏற்பட்டு ‘நால்வர் அணி’ ஒன்று உதயமானது. சசிகலா குடும்பம் ஜெயலலிதாவை அதிகாரம் செலுத்தும் அளவுக்கு உயர்ந்ததெல்லாம் இந்த காலகட்டத்தில்தான்.

அப்போது ஜெயலலிதாவைச் சுற்றி பாதுகாப்புப் படை  ஒன்று வளையம் அமைத்திருந்தது. சாம்பல் நிற சபாரி சூட் அணிந்த முரட்டு இளைஞர்கள் அதில் இடம்பெற்றிருந்தார்கள். வி.ஐ.பி-க்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் ‘கறுப்புப் பூனைப் படை’, பிரபலம் ஆகிக் கொண்டிருந்த நேரம் அது. பூனையின் வண்ணமான சாம்பல் நிற உடையில் சபாரி அணிந்திருந்த படைக்கு ‘பூனைப் படை’ எனப் பெயர் வந்தது. இந்தப் பூனைப் படையின் பிதாமகன் நடராசன். பூனைப் படை உருவாகக் காரணம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு மட்டுமல்ல; தங்களைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை நெருங்கிவிடக் கூடாது என்கிற அச்சமும்தான்.

கட்சியைப் பலப்படுத்த டூர் கிளம்பினார் ஜெயலலிதா. சட்டசபைக் கலவர நேரத்தில் மதுரையில் நடப்பதாக இருந்து ரத்து செய்யப்பட்ட கூட்டத்துக்கு 1988 பிப்ரவரி 9-ம் நாள் தேதி குறித்தார்கள். மதுரையில் இருந்து தேர்தல் போருக்குத் தயாரானார் ஜெ.

சசிகலா ஜாதகம் - 54 - பூனைப் படை உதயம்!

தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மறைவு இரங்கல் கூட்டம்’ எனப் பெயர் சூட்டியிருந்தாலும், வான வேடிக்கைகள் முழங்க மகிழ்ச்சிக் கொண்டாட்டமாகத்தான் நடந்தேறியது. மதுரை மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மேடையில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், எஸ்.டி.எஸ் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

எம்.ஜி.ஆருடன் மோதல் ஏற்பட்டு அ.தி.மு.க-வை விட்டு விலகி, எம்.ஜி.ஆருக்கு எதிராக கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்தவர் எஸ்.டி.எஸ். அவரை நடராசனுக்குப் பிடிக்காது. நடராசனின் சொந்த மாவட்டமான தஞ்சையைச் சேர்ந்தவர்தான் எஸ்.டி.எஸ். எல்.கணேசனுடன் நடராசன் நெருக்கமாக இருந்தபோது, எஸ்.டி.எஸ்ஸும் அரசியல் செய்து கொண்டிருந்தார். 1967-ம் ஆண்டு சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்துதான் தேர்தல் நடைபெற்றது. ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் தி.மு.க சார்பில் எல்.கணேசன் போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியை உள்ளடக்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் எஸ்.டி.எஸ்ஸை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் அண்ணா. அப்போதே
தி.மு.க-வினர் சிலர், ‘‘மேல் ஓட்டை (எம்.பி தேர்தல்) எப்படி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். கீழ் ஓட்டை (எம்.எல்.ஏ தேர்தல்) எல்.கணேசனுக்குப் போட்டுவிட வேண்டும்’’ என்றார்கள். இது தெரிந்ததும் எஸ்.டி.எஸ் வருத்தப்பட்டார். ‘‘அப்படியெல்லாம் நடக்காது. இரண்டு பேருமே ஜெயிப்பீர்கள்’’ என எல்.கணேசனுக்கு தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்த நடராசன் சொன்னார். அந்தத் தேர்தலில் இருவரும் ஜெயித்தார்கள்.

ஆனால், அதன்பிறகு நடராசனுக்கும் எஸ்.டி.எஸ்-ஸுக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டன. அண்ணா காலத்தில் மாணவர் அணியின் தலைவராக இருந்தார் எஸ்.டி.எஸ். அண்ணா முதல்வராக இருந்தபோது மாணவர்கள் குழு அவரைச் சந்தித்தது. அப்போது அவரிடம், ‘‘எத்தனை நாளைக்கு எஸ்.டி.எஸ் மாணவர் தலைவராக இருப்பார். இளைஞரை நியமியுங்கள்’’ என நடராசன் கேட்டார். ‘‘நானும் பதவி விலகும்படி சொல்லிவிட்டேன். எஸ்.டி.எஸ், பேரப்பிள்ளை எடுக்கும் வரை மாணவர் தலைவராக நீடிக்க விரும்புகிறார் போல’’ என்றாராம் அண்ணா.

அப்படிப்பட்ட எஸ்.டி.எஸுக்கு மதுரை கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டதை எரிச்சலோடு பார்த்தார்கள். ‘‘இவருக்கு எதற்கு முன் வரிசையில் இடம்?” என அவர் காதுபடவே பேசினார்கள். எஸ்.டி.எஸ் பேசும்போது மேடையிலே முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்தன. நெடுஞ்செழியனுக்கும் இதே நிலைதான். எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு முதல்வர் போட்டியில் முன்னிலைப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியனையும் பேசவிடாமல் கூச்சல் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவை ‘‘புரட்சித் தலைவி’’ எனப் பலரும் சொல்லிக் கொண்டிருந்தபோது, நெடுஞ்செழியன் மட்டும் ‘‘புரட்சிச் செல்வி’’ எனச் சொன்னதும், அவர் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்ப காரணமானது.

கூட்டத்தில் இப்படியான சலசலப்புகள் ஏற்பட்டபோது ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. மேடையில் முதல் வரிசைக்குப் பின்புறம் நிறைய நாற்காலிகள் போட்டிருந்தார்கள். பூனைப் படையினர் அந்த நாற்காலிகளை எல்லாம் அகற்றி, அதில் உட்கார்ந்திருந்தவர்களை வெளியேற்றினார்கள்.  அந்த இடத்தைப் பூனைப் படை ஆக்கிரமித்துக் கொண்டது. மேடையேறிய நிர்வாகிகளை எல்லாம் பாய்ந்து தள்ளிவிட்டது பூனைப்படை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பேசிய முதல் மேடையையே கிட்டத்தட்ட சுற்றி வளைத்துக் கொண்டது சசிகலா குடும்பம்.

எழுதி வைத்துத்தான் கூட்டத்தில் பேசினார் ஜெயலலிதா. அந்தப் பேச்சைத் தயாரித்தது சசிகலா குடும்பம். ‘‘எம்.ஜி.ஆர் இறந்ததற்குப் பிறகு நான் அநாதை ஆகிவிட்டேன். உடன்கட்டை ஏற நினைத்தேன்’’ என்ற அதிரடியான பேச்சை ஜெயலலிதா இந்தப் பொதுக்கூட்டத்தில்தான் உதிர்த்தார். எம்.ஜி.ஆர் உடலை எரிக்கவில்லை; புதைத்தார்கள். எப்படி உடன்கட்டை ஏற முடியும் என்பது எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்!

(தொடரும்)