மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!

கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

ஜெய் சார் வந்தார். டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சாரிடம், ‘‘டைரக்டர் சார், செல்வராஜ் வசனப் பேப்பரை உங்களிடம் கொடுத்ததை நான் பார்த்தேன்’’ என்றார். மீண்டும், ‘‘இல்லவே இல்லை’’ எனச் சாதித்தார் இயக்குநர். ‘‘நீங்கள் உங்கள் ஜிப்பா பாக்கெட்டில் பாருங்கள்’’ என்றார் ஜெய் சிரித்தபடி. தன் ஜிப்பா பாக்கெட்டில் பார்த்த டைரக்டருக்கு ஒரு கணம் அதிர்ச்சி. காலையில் நான் கொடுத்த பேப்பரை ஏதோ அவசரத்தில் வாங்கி ஜிப்பா பாக்கெட்டில் வைத்துவிட்டு மறந்திருக்கிறார் அவர். ஆனால், நான் கொடுத்ததையும், அவர் வாங்கி பாக்கெட்டில் வைத்ததையும் மேக்கப் போட்டுக்கொண்டிருந்த ஜெய், தன் எதிரில் இருந்த ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்திருக்கிறார்.

அவர் மட்டும் அன்று அதைச் சொல்லவில்லை என்றால், எனக்குக் கேவலமாகப் போயிருக்கும். பொய் சொன்னதாகவும் ஆகியிருக்கும். ஆனாலும், எனக்கு அது வேதனையாக இருந்தது. ‘‘நான் உடனே சென்னை கிளம்புகிறேன்... இனி இந்தப் படத்தில் வேலை பார்க்க மாட்டேன்’’ என்று கொந்தளித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைப் பஞ்சுவும் ஜெய்யும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். நானோ, ‘‘முடியவே முடியாது’’ என ஒற்றைக்காலில் நின்றேன்.

சிறிது நேரத்தில் டைரக்டர் என்னருகே வந்து, ‘‘நான் உங்களைவிட வயதில் பெரியவன்... என் மறதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா?’’ என்றார். என் வருத்தமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. பழையபடி ஷூட்டிங் வேலைகள் ஆரம்பமாயின.

கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!

ஜெய் என்ன நினைத்தாரோ, ‘‘டாக்கி போர்ஷனை இப்போது ஆரம்பித்தால் மாலைக்குள் முடிக்க முடியாது. ஆகவே நான் இன்னும் இரண்டு நாள்கள் தங்குகிறேன். பாடல் காட்சியை முடித்துவிடுவோம்’’ என்றார். அவர் விருப்பப்படி மதியத்துக்கு மேல் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தின் டான்ஸ் மாஸ்டரின் பெயர் ராமு. அவருக்கு ஒரு நடன உதவியாளர்... அவர் பெயர் சாந்தி. நடன இயக்குநருக்கு ஒரு சிரமும் வைக்காமல் சிரத்தையாக நடனக் காட்சிகளை அவர் நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அவருடைய நடன பாவனைகளும், சுறுசுறுப்பும், அழகும் கவனம் ஈர்ப்பதாக இருந்தன. ‘‘இவர் ஒரு நாள் பெரிய நடிகையாக வருவார்’’ என நான் சொன்னேன். சில ஆண்டுகளிலேயே, நான் சொன்னது நடந்தது. கேரளப் பட உலகின் முன்னணி நடிகையாக வந்தார் அவர். ‘அவளோட ராவுகள்’, அவர் நடித்த படம். இப்போது புரிந்திருக்கும். அவர்தான் நடிகை சீமா.

‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்துக்குப் பிறகு ஜெய்யை நான் சந்திக்க வாய்ப்புகள் அமையவில்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிகை நண்பர் எனக்கு போன் செய்தார். ‘‘கோலாலம்பூரில் இருந்து பேசுகிறேன்’’ என்றார். நான் அப்போது ஒரு கதை விவாதத்தில் இருந்தேன். போன் சரியாகக் கேட்கவில்லை. ‘‘உங்கள் நண்பர் பேசுகிறார், பேசுங்கள்’’ என்றார்.

மறுமுனையில் இருந்து, ‘‘ஹலோ ஜெய் பேசறேன்’’ என்றது குரல். எனக்கு சட்டென யார் எனப் புரியவில்லை. போனும் கரகரவென சத்தமாக இருந்தது. நான், ‘‘யாரு... யாரு?’’ எனக் கேட்டேன். அத்துடன் லைன் கட் ஆகிவிட்டது. ஜெய்யாக இருக்கும் எனப் புரிந்தது. நான் தொடர்புகொண்டபோதும் லைன் கிடைக்கவில்லை. கதை விவாதத்தில் இருந்தேன் என்றேன், அல்லவா? அதனால், ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என விட்டுவிட்டேன். அடுத்த சில நாட்களில் ஜெய் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. என்னால் நம்பவே முடியாத மரணம் அது. எல்லா மரணங்களும் இப்படி ஒரு வடுவை ஏற்படுத்திவிடுகின்றன.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கோபித்துக்கொண்டு கிளம்புவதாகச் சொன்னேனே... அதே போல ஒரு சம்பவம் ‘தாஜ்மகால்’ படப்பிடிப்பில் நடந்தது. கர்நாடகாவின் பதாமியில் படப்பிடிப்பு. ஒரு நாள் காலை... பாரதிராஜா, பாரதியின் மகன் மனோஜ் மற்றும் பல நடிகர்கள், ஒளிப்பதிவாளர் எல்லாம் ரெடி. ஏற்கெனவே பேசியிருந்தபடி அன்றைக்கான காட்சிகளின் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டுவந்தேன்; பாரதிராஜாவிடம் கொடுத்தேன். இரண்டாக மடித்து வைத்த பேப்பர். பாரதி அந்த வசனங்களைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. வசனக் காகிதங்களை அப்படியே எடுத்து ஓர் ஓரமாகப் போட்டான். நிலைகுலைந்துபோனேன்.

கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!

ஓர் எழுத்தாளனை இதற்குமேல் யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. ‘‘நான் உடனே மெட்ராஸ் கிளம்பறேன்’’ என வேகமாக அறைக்கு வந்துவிட்டேன். என்னைச் சமாதானப்படுத்த பாரதியின் மைத்துனர் மனோஜ்குமார் ஓடி வந்தார். ‘‘முடியவே முடியாது. இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்க மாட்டேன்... லாரி பிடிச்சாவது மெட்ராஸ் போயிடுவேன்... அவ்வளவுதான்!’’ என்றேன். உடனே, ‘‘டிக்கெட் போடுகிறேன்’’ என்றார்கள். நான் கிளம்பத் தயாராகி இருந்தேன். டிக்கெட் கிடைக்காததால் இரவு தங்க வேண்டியிருந்தது.

காலையில் மொத்த யூனிட்டே ஓடி வந்தது... ‘‘யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்’’ என்றேன் நான் உறுதியாக. மனோஜ்குமார் நிதானமாக, ‘‘இல்லை சார்... மாமா ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டார். காலையில் இருந்து வெளியே வரவில்லை. எதுவுமே சாப்பிடவில்லை. நீங்கதான் அவரைச் சமாதானப்படுத்தி வெளியே கூட்டிக்கிட்டு வரணும்’’ என்றார்.

பதறிப்போனேன். ‘‘ஏன் முன்னாடியே சொல்லலை? இவ்வளவு நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே?’’ எனக் கோபமாகக் கேட்டுவிட்டு, பாரதியை இன்டர்காமில் அழைத்தேன்.

வந்தான். ‘‘சாப்பிட்டியா?’’ என்றான். முதலில் என்னைச் சாப்பிடச் சொல்லி அவனே இட்லி ஊட்டிவிட்டான். பாரதி உணர்ச்சிவசப்படும் கலைஞன்; பாசத்தைக்கொட்டும் படைப்பாளி. அவன் என் வசனப் பேப்பரைப் பார்த்ததும் கோபப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அன்று வாய்பேச முடியாத ஒருவனுடன், இன்னொருவன் பேச வேண்டிய காட்சி. அதற்கு ஏன் கற்றையாக ஒரு குயர் பேப்பருக்கு வசனம் எழுதி வந்தேன் என்ற கோபம் அவனுக்கு.

ஆனால், அதில் நான் வசனமே எழுதியிருக்கவில்லை. தாளின் இடதுபுறம் காட்சி விவரணை, ரியாக்‌ஷன் போன்றவற்றைத்தான் எழுதியிருந்தேன். பேப்பரின் கனத்தைப் பார்த்து, ‘தேவையில்லாமல் எதற்கு இவ்வளவு வசனம்’ என நினைத்துவிட்டான். நான் கோபமாகச் சென்ற பிறகு, அந்தப் பேப்பர்களை எடுத்துப் புரட்டியிருக்கிறான். அவசரப்பட்டுவிட்டதை... காயப்படுத்திவிட்டதை உணர்ந்திருக்கிறான். உண்மையை உணர்ந்தபோது இருவரின் கண்களுமே கலங்கியிருந்தன.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)