
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
எம்.ஜி.ஆருக்கும் தொண்டர்களுக்கும் இடையே இரும்புத் திரை என்ற ஒன்று இருந்ததே இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் கைக்கு கட்சி போன பிறகு, சீனப் பெருஞ்சுவரையே கட்டியெழுப்பினார்கள் சசிகலா குடும்பத்தினர். ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே அது நடந்தேறிவிட்டது. ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த காலகட்டத்திலேயே ஜெயலலிதாவை மறைத்து திரை எழுப்பிவிட்டார்கள் புதுப் பூசாரிகள்!

ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டபோது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த 23 நாள் குருக்ஷேத்திர யுத்தத்தில் அதர்மம் வீழ்ந்தது. இருள் விலகி ஒளி பிறந்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையின் ஆரம்பத்திலேயே, ‘நெடுஞ்செழியன் தலைமையில் புரட்சித்தலைவரின் ஆட்சி தொடர்ந்து இருந்திருக்குமேயானால், அ.தி.மு.க-வின் பெரும்பான்மை பலம் அப்படியே இருந்திருக்கும்’ எனச் சொல்லியிருந்தார். ஆனால், நாள்கள் நகர ஆரம்பித்த பிறகு நெடுஞ்செழியன் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்தது. ‘ஜெயலலிதாவே வருங்கால முதல்வர்’ என்ற முடிவுடன் புதுப் பூசாரிகள் கோஷம் எழுப்பினார்கள்.
அரசியலில் ஆத்திச்சூடிகூட தெரியாத சசிகலா குடும்பம், நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ் போன்ற சீனியர்களையே விரட்ட நினைத்தது. ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில்தான் சசிகலா, ஜெயலலிதாவோடு ஒட்ட ஆரம்பித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு என ஒரு பெண் செயலாளர் தேவைப்பட்ட நேரத்தில், எஸ்.டி.எஸுக்கு வேண்டப்பட்ட சசிகலாதான் நியமிக்கப்பட்டார். அந்த எஸ்.டி.எஸ்-ஸை பிறகு சசிகலா குடும்பம் வளரவிடவில்லை.
புதுப் பூசாரிகளின் வரவால் கார்டனில் அதுவரை வேலை பார்த்தவர்கள் விரட்டப்பட்டார்கள். சசிகலாவின் உறவினர்களே சுற்றி நின்றனர். ‘வருங்கால முதலமைச்சர்’, ‘தெய்வத்தாய்’, ‘நிரந்தரப் பொதுச்செயலாளர்’ என்றெல்லாம் துதி பாடி, ஜெயலலிதாவைக் கடவுளாக்கி, போயஸ் கார்டனை கோயிலாக்கி, சந்நிதியை மூடினார்கள் அடாவடிப் பூசாரிகள். இவர்களின் அருள் பெற்றவர்களே ஜெயலலிதாவுடன் பேச முடியும். சசிகலா குடும்பம் உருவாக்கிய ‘பூனைப் படை’, போயஸ் கார்டனின் கதவைத் தொட்ட தொண்டர்களை உருட்டித் தள்ளியது. பண்ருட்டியார், அரங்கநாயகம் போன்றவர்கள்கூட காத்துக் கிடந்துதான் ஜெயலலிதாவையே பார்க்க முடிந்தது. முக்கியமான வி.ஐ.பி-க்களும் இன்டர்காமில்தான் பேச முடியும்.
மதுரை கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதா, அசோகா ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். அங்கேயும் ‘பூனைப் படை’ பாதுகாப்பு போட்டிருந்தது. அங்கே ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்ற கட்சியின் சீனியர்கள், பத்திரிகையாளர்கள் பந்தாடப்பட்டனர். மதுரை கூட்டத்துக்குப் பிறகு அடுத்த கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. அங்கேயும் பூனைப் படை தன் வேலைகளை காட்டியது. தொடர் ஓட்டம் மூலம் ‘ஜோதி’ ஒன்றைக் கொண்டு வந்த நிர்வாகியை மேடையிலேயே தாக்கியது. பண்ருட்டி ராமச்சந்திரனின் உதவியாளரையும் விட்டு வைக்கவில்லை.
1988 பிப்ரவரி 14-ம் தேதி ஜெயலலிதா அணியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஜெயலலிதா வந்தபோது, தொண்டர்களை மூட்டைகள் போல் தூக்கி எறிந்தார்கள். தலைவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
ஒரு கூட்டத்தில் நெடுஞ்செழியனையும் வயிற்றில் இடித்துத் தள்ளினார்கள். வலி தாங்க முடியாத நெடுஞ்செழியன் பூனைப் படை வீரர் ஒருவரை கோபத்தில் அடித்தே விட்டார்.
(தொடரும்)
‘‘என் ஜாதகத்தைக் கணிக்க முடியாது!’’
சிறு வயதில் நடராசன் படுசுட்டி. சமாளிக்க முடியாமல் பள்ளியில் சேர்க்க நினைத்தார் தாய் மாரியம்மாள். அந்தக் காலத்தில் ஆறு வயது நிரம்பியவர்களைத்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வார்கள். நான்கு வயது நடராசனுக்கு ஆறு வயது எனப் பொய் சொல்லி சேர்த்தனர். இதனால், பள்ளி சான்றிதழில் நடராசனின் பிறந்த நாள் 1942 அக்டோபர் 23-ம் தேதி என்று இருக்கும். தன்னுடைய உண்மையான வயது என்ன என்பதை அறிந்தகொள்ள அம்மாவிடம் பலமுறை கேட்டும் அவர் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்டால், ‘‘வீட்டு எறவாணத்தில் உன் ஓலைக் குறிப்பை சொருகி வச்சிருந்தேன். புயல் வந்தப்ப பறந்து போச்சு’’ என்பார் மாரியம்மாள். ‘‘ஓலைதான் பறந்துபோச்சு. என் பிறந்த நேரத்தையாவது சொல்லு’’ எனக் கேட்டிருக்கிறார் நடராசன். அதற்கு ‘‘ஒன்பது பேரைப் பெத்த எனக்கு, நீ பொறந்த நேரம் ஞாபகத்தில் இல்ல’’ எனப் பதில் வந்ததாம்.
‘தான் பிறந்த நேரம் எது’ என்பதை அறிந்துகொள்ள நடராசன் முயன்றது இருக்கட்டும். அவரின் உண்மையான பிறந்த தேதியை அறிந்து, ஜாதகத்தைக் கணிக்க சிலர் முயன்றார்களாம். அப்போது நடராசன் சொன்ன பதில் இது. ‘‘என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும், என்னை ஆபத்தாக எண்ணி அஞ்சுகிறவர்களும், என் ஜாதகத்தைக் கணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எவராலும் என்னையும் என் ஜாதகத்தையும் கணிக்க முடியாது.’’