
அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்
நூற்றுக்கணக்கில் படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருந்தாலும் நான் எனக்காக உருவாக்கும் கதைகள் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். இப்போது எடுத்து முடித்திருக்கும் ‘குடை’ திரைப்படம், இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதைச் சொன்னது. என்னுடைய ‘உப்பு’ திரைப்படம், நகரச் சுத்தி தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொன்னது.
அந்தப் படத்தில் ரோஜா நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவுசெய்தோம். ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் அப்போதுதான் மணம் முடித்திருந்தனர். தவிர, அப்போது ஆந்திர அரசியலில் குதித்திருந்தார் ரோஜா. நண்பர் செல்வமணி, ‘‘எப்ப ஷூட்டிங்னு சொல்லுங்க சார்’’ என்றார் பெருந்தன்மையாக.
ரோஜாவின் தந்தையாக, தயாரிப்பாளர் கே.ராஜன் நடித்தார். ‘‘நடிகர்களுக்கான சாப்பாட்டை நானே ரெடி செய்து அனுப்பட்டுமா?’’ என்பார் ஆர்வமாக. லண்டனில் வசிக்கும் வெற்றி என்பவர் ரோஜாவுக்கு கணவராக நடித்தார். உற்சாகமான டீம். வேகமாகப் படப்பிடிப்பில் இறங்கினோம். நகரைச் சுத்தம் செய்யும் பெண்ணின் வேடம் என்பதால் பெரும்பாலும் சென்னை நகரத் தெருக்களில்தான் படப்பிடிப்பு. சிரமமான காட்சிகள். ஆனால், ரோஜா ஒரு முறையும் முகம் கோணியது இல்லை. ஒரு மழைக் காட்சி. அப்பா இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, கொட்டும் மழையில் அலறி அழுதபடி ஓடிவர வேண்டும். நான், ரோஜாவுக்குக் காட்சியை விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ரோஜாவின் உதவியாளர் மெல்ல ஒரு விஷயத்தைச் சொன்னார்.

‘‘அம்மா முழுகாம இருக்காங்க சார். இப்படி மழையில ஓடி வரச் சொல்றீங்களே?’’
ஆடிப்போனேன். எனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், அவருக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்கவே மாட்டேன். ‘‘ஏம்மா சொல்லவே இல்லை?’’ என்றேன்.
‘‘இந்தக் கேரக்டருக்கு இப்படி நடிச்சாத்தானே சார் சரியா இருக்கும்?’’ என்றார் ரோஜா. டூப் போட்டு எடுக்கலாம் என்றாலும், ‘வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். நெகிழ்ந்து போய்விட்டேன். ‘‘கண்ணீரும் வியர்வையும் உப்பால் ஆனது. இந்த நகரச்சுத்தி தொழிலாளர் களிடம் இந்த உப்புக்குப் பஞ்சமே இல்லை’’ எனச் சொன்னேன்.
படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம், வைரமுத்து, பாரதிராஜா எனப் பலரும் பாராட்டுக் கடிதம் அனுப்பினர். ‘‘அந்த க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை சினிமாவில் கண்டிராதது’’ எனப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார் மணி சார்.
அந்தப் படத்துக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார். விருது பெற்ற படங்களுக்கு அரசு மானியம் ஏழு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்து, கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், என் படத்துக்கு மானியம் அறிவிக்கப்படவில்லை.
அப்போது நான் ஒரு படத்துக்கான திரைக்கதை சம்பந்தமாக பெங்களூரு சென்றபோது ஏர்போர்ட்டில், கலைஞரின் மருமகன் ‘முரசொலி’ செல்வம் அவர்களை எதேச்சையாக சந்தித்தேன். தமிழ்ப் படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேச்சு வந்தது. ‘‘பெண்களுக்கான சிறப்பைப் பேசும் பிரிவில் விருதுபெற்ற என்னுடைய திரைப்படத்துக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். ஏனோ தவிர்த்து
விட்டார்கள்’’ என்றேன். அவர் அன்பான மனிதர். உடனே, அங்கிருந்து அந்தக் குழுவில் இடம்பெற்ற யாரையோ அழைத்து டோஸ் விட்டார்.
நான் சென்னை வருவதற்குள் என் வீட்டுக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள், கலைஞர் வீட்டில் இருந்து கூப்பிட்டார்கள் என்று. பெங்களூரில் இருந்து வீட்டுக்கு வந்ததும் கலைஞரின் வீட்டுக்குப் போனேன். மானியம் வழங்கும் குழுவில் இருந்தவர் அங்கே காத்திருந்தார். ‘‘ஏதோ தவறு நடந்துவிட்டது. அதை ஏன் செல்வம் சாரிடம் சொன்னீர்கள்? ஏழு லட்ச ரூபாய்க்கு இப்படிச் செய்துவிட்டீர்களே?’’ என்றார்.
‘‘விருது, மானியம் என்பதெல்லாம் அங்கீகாரம். ஒரு கலைஞன் அதற்காகத்தான் காத்திருக்கிறான். பணத்தை வைத்து அதைத் தீர்மானிக்காதீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு வந்தேன்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுடைய திரைக்கதை, ‘அந்திமந்தாரை’. அந்தப் படத்தில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பாரதியின் ஆசை. அதனால், ஒருநாள் காலை சிவாஜி சாரைச் சந்தித்துக் கதை சொன்னேன். தியாகி பென்ஷன் வாங்க விரும்பாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் எதிர்கொள்ளும் அவமானங்கள்தான் கதையின் மையம்.
திருமணம் செய்துகொள்ளாததால், அண்ணன் மகன் வீட்டில் இருப்பார் அந்தத் தியாகி. வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் நானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள்’ என ஏற்கெனவே சொல்லியிருப்பார் அந்தத் தியாகி. மருமகள், ‘‘ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் தியாகி பென்ஷனுக்கு வழி பண்ணுங்கள்’’ எனச் சொல்வாள்.
ஜனாதிபதியைச் சந்திக்க அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வாசலில் காத்திருப்பார். அப்போது வரும் கலெக்டர், ‘யாரோ பெரியவர் நிற்கிறாரே’ என விசாரிப்பார். ‘‘நானும் ஜனாதிபதியும் நண்பர்கள்’’ என்ற தகவலைச் சொல்வார் தியாகி. கலெக்டர் உள்ளே சென்று, ‘‘கோபாலகிருஷ்ணன் என ஒருவர் உங்களைத் தெரியும் என வந்திருக்கிறார்’’ என்பார், ஜனாதிபதியிடம்.
‘‘கோபாலா வந்திருக்கிறான்?’’ என ஜனாதிபதியே எழுந்து ஓடிவந்து வரவேற்பார். இருவரும் வெகுநேரம் பேசுவார்கள். பேச்சின் இடையில் தன் தியாகி பென்ஷன் பற்றிக் கேட்கலாம் எனக் காத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். ஆனால், ஜனாதிபதியோ, ‘‘நீ எங்கே இருக்கிறாய் எனத் தேடினேன். தியாகி பென்ஷன் பட்டியலையும் வாங்கிப் பார்த்தேன். அதில் உன் பெயர் இல்லை. தியாகத்துக்கெல்லாம் பென்ஷன் வாங்குகிற ஆள் நீ இல்லை என எனக்குத் தெரியும்’’ என்பார் பெருமையாக. அதன்பிறகும் தன் பென்ஷன் பற்றிப் பேச முடியுமா? எதுவும் கேட்காமல் திரும்பிவிடுவார். மருமகள் மேலும் திட்டித் தீர்ப்பாள்.
படத்தின் முடிவில் கோபாலகிருஷ்ணன் சாலை ஓரத்தில் அநாதைப் பிணமாகக் கிடப்பார். ‘அமைச்சர் வருகிற நேரத்தில் இந்தத் தொல்லை வேற’ என அவரை லாரியில் ஏற்றி குப்பைமேட்டில் கொண்டு போய் போடுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரால் காதலிக்கப்பட்டவர், அவரை அந்தக் குப்பை மேட்டில் தேடித் தேடி அலைந்து, அவரும் அங்கேயே இறந்துபோவார். இந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் கண்கலங்கினார்.
கதையை முழுதுமாகக் கேட்டு முடித்துவிட்டு, ‘‘வேண்டாம்பா... என்னாலேயே தாங்க முடியலை. நான் நடிச்சா உங்க கதையை இன்னும் சோகக் காவியமாக்கிடுவேன். ஜனங்க தாங்க மாட்டாங்க’’ என சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார்.
சந்திப்பு: தமிழ்மகன்
(ரீல் அல்ல ரியல்)

‘அந்திமந்தாரை’யின் ஆதி!
சுதந்திரப் போராட்டத்தின்போது எரவாடா சிறையில் சஞ்சீவி ரெட்டி, காமராஜர், என் சித்தப்பா சங்கரய்யா மூவரும் ஒரே சிறை அறையில் இருந்தவர்கள். பின்னாளில் காமராஜர் தமிழகத்தின் முதல்வரானார். சஞ்சீவி ரெட்டி ஜனாதிபதியாக ஆனார். ஒரு காலத்தில் தன்னோடு சிறையில் ஒன்றாக இருந்தவர், ஜனாதிபதி ஆவதாகவும் அவரைச் சந்திக்க அந்தத் தியாகி செல்வதாகவும் கற்பனைக்கு வடிவம் கொடுத்தது அந்தச் சிறைச் சம்பவம்தான். உணர்ச்சிகரமான காட்சியாக அது அமைந்தது. என் சித்தப்பா, தியாகி பென்ஷன் வாங்காதவர். மேலும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்கான சம்பளத்தைக் கட்சிதான் கொடுக்கும். ‘அந்திமந்தாரை’ என் மனதில் பூத்தது இந்தப் பின்னணியில்தான்!