மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

சப்பு... கசப்பு... கசப்பு. நாக்கின் கீழ் நஞ்சுக் கசப்பு உமிழ்நீராக ஊறுவதைப்போல் கொடுமை எதுவுமில்லை. எனவே, நாக்கை அசைத்துப் பேச யாரும் ஆயத்தமாக இல்லை. தீராக்கசப்பு அடிநாக்கிலிருந்து ஊறிப்பெருகி தலையுச்சியில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் பிதுங்கின. மூச்சிழுத்து மொத்தக் குடலையும் காறி வெளியே துப்பவேண்டும்போல் இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

ஒவ்வொருவனும் குரல்வளையை முறுக்கித் திருகிக்கொண்டிருந்தான். உடல் மட்டும், தேக்கனின் பின்னால் சென்றுகொண்டிருந்தது. மற்றபடி எண்ணம் முழுவதும் தொண்டைக்குள் கட்டிநிற்கும் கசப்பில்தான் நிலைகொண்டிருந்தது.

தேக்கனின் மனமோ, கடைசியாக நடந்துவரும் சிறுவன் அலவனிடமிருந்தது. `இவ்வளவு கசப்பையும் மீறி, ‘எங்கு போகிறோம்?’ என்று எப்படி அவன் கேட்டான்? நான் சிறுவனாகக் காடறியப் போகும்போது கொடுத்த கசப்பை விழுங்கி இயல்பாகப் பேச இரு வாரங்கள் ஆகின. ஆனால், இவனால் எப்படி உடனடியாகப் பேச முடிந்தது?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த வினாவைக் கேட்டான் அலவன். “கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியச் செல்ல வேண்டுமா?”

தேக்கன் கடும் அதிர்ச்சிக்குள்ளானான். கை அசைத்து அவனை முன்னால் வரச் சொன்னான். அலவன் முன்னேறி தேக்கன் அருகில் வந்தான். அவன் தோளில் கைபோட்டபடி நடந்தான் தேக்கன். ‘ஏன் விடை சொல்லாமல் வருகிறார்?’ என்று அலவனுக்குத் தோன்றியது. தேக்கனின் மனம் சொல்லுக்காகத் திண்டாடியது. எப்படிக் கேட்பது எனச் சிந்தித்தபடியே கேட்டான், “கசப்பு உனக்குப் போதவில்லையா?”

“பெருங்கசப்பாகத்தான் இருந்தது. அப்பப்பா… இவ்வளவு கசப்பா கொடுப்பார்கள்?” என்றான் சிறுவனுக்கே உரிய வேகத்தோடு.

தேக்கன் உறைந்து நின்றான். எவ்வளவு பெருஞ்சொல்லை மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.

தேக்கன் நின்றவுடன் மற்றவர்களும் அப்படியே நின்றனர். பற்களை நறநறவென இறுகக் கடித்து, எச்சிலைத் துப்ப முடியாமல், துப்பினால் மறுபடியும் ஊறுகிறது. அதன் காட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் மற்றவர்கள் எல்லாம் விழித்து நிற்க, அலவன் மட்டும் பேசியபடி இருந்தான்.

தேக்கன், அவனின் முகத்தைப் பார்த்தான். எந்தவிதமான கடுமையும் இன்றி இயல்பாக இருந்தது. “நாக்கை நீட்டு” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

அலவன் நாக்கை நீட்டினான். அடிநாக்கில் ஒட்டியிருந்தது மலைவேம்பின் இலை. அதன் பச்சை நிறம் மாறி முழுநீலம் கொண்டிருந்தது. அதன் நுனியைப் பிடித்து வெளியே எடுத்தான். நீண்ட நேரமாக உற்றுப்பார்த்தான். இலையின் கசப்பு அலவனுக்குள் இறங்குவதற்கு மாறாக, அவன் நஞ்சு இலையில் ஏறியிருக்கிறது.

திகைப்பு நீங்கி அவன் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன். நீண்ட நேரம் கழித்து உள்ளுக்குள் இருந்த நீல வளையம் பூத்து அடங்கியது. அவனின் பாட்டன் நாகக்குடியைச் சார்ந்தவன் என்ற நினைவு அப்போதுதான் வந்தது.

தேக்கன், மீண்டும் திரும்பி நடக்கத் தொடங்கினான். இப்போது அவனின் கை அலவனின் தோளில் இல்லாமல், தலையின் மேல் இருந்தது. அவனின் உச்சந்தலையை விரல்கள் கோதியபடி மிக இணக்கமாகப் பிடித்திருந்தன. ‘பகரியின் ஈரல் தின்றே நஞ்சை வெல்லும் ஆற்றல் பெறுகிறோம். ஆனால், பிறப்பிலே அந்த ஆற்றலோடு இருக்கும் வீரர்களைப் பற்றி முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஆதியில் நாகக்குடியினர் பறம்பில் வந்து கலந்தபோது ஐந்து குடும்பங்களாக மட்டுமே இருந்தனர். ஆனால், இன்று பறம்புநாட்டின் பல ஊர்களில் கலந்து, சிம்புவெடித்துப் பரவியுள்ளனர். அவர்களின் ஆதி ஆற்றலை முழுமையாகக்கொண்டுள்ள மனிதன் பிறப்பது மிக அரிதுதான். அந்த ஆற்றல் கொண்டவனை இப்போது நான் காடறிய அழைத்துச் செல்கிறேன். காடறியப் புறப்படும்போது மனம் ஆசானாகத் தன்னை உணர்ந்து கொள்ளும். அதன்பிறகு, அது மகிழ்வை உணர்வதில்லை. கவனிப்புகளும் கண்டிப்புகளும் மட்டுமே அதன் பணிகளாக இருக்கும். ஆனால், `இம்முறை காடறியும் முதல் நாள் ஆசானாக உணர்ந்த அன்றே மனம் மகிழ்வை உணரத் தொடங்கியுள்ளது’ என்று தேக்கன் நினைத்துக் கொண்டிருக்கையில் அலவன் கேட்டான். “என் கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை.”
``எந்தக் கேள்விக்கு?’’

“கொற்றவையை வணங்கிவிட்டுத்தான் காடறியப் போக வேண்டுமா?”

“ஆம்.”

“ஏன்?”

“காட்டில் நாம் செல்கையில் விலங்குகள் நம் வாசனையை மோந்து ஒதுங்கிச் சென்றுவிடுகின்றன. சில விலங்குகள் நாம் எழுப்பும் சிற்றோசையில் விலகிவிடுகின்றன. ஆனால், விலகாத இயல்புடைய விலங்குகள் உண்டு.”

“எந்தெந்த விலங்குகள்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

``குறிப்பிட்ட விலங்குகள் அல்ல, எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட பருவத்தில் அப்படிச் செய்கின்றன. ஈன்ற  விலங்கு  தம்  இளம்குட்டியோடு போய்க்கொண்டிருக்கையில் அந்த வழியில் நாம் சென்றால், வாசனையைக் கண்டோ, ஓசையைக் கேட்டோ விலகாது. தாய்மையின் ஆவேசம்கொண்டிருக்கும். மிக வேகமாக நம்மைத் தாக்க வரும். இயல்பான காலத்தில் இருக்கும் அதன் ஆற்றல், அந்தக் காலத்தில் பலமடங்கு அதிகரித்திருக்கும். நம்மால் கணிக்கவே முடியாத தாக்குதலாக அது இருக்கும். நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டியது ஈன்ற விலங்கிடம்தான்” என்று சொன்ன தேக்கன், “அதற்காகத்தான் தாய் தெய்வமான கொற்றவையை வணங்குகிறோம்” என்றான்.

பேசியபடியே வந்தனர். எவ்வியூரைவிட்டு மிகத்தள்ளி நடுக்காட்டில் இருக்கும் கொற்றவையின் கூத்துக்களம் நோக்கிப் போனார்கள். அங்கு உள்ள காவல் வீரர்கள் பகரி வேட்டைக்குப் போயிருந்ததால், இன்னும் குடில் திரும்பவில்லை. தேக்கன், மாணவர்களோடு வந்துசேர்ந்தான். கூத்துக்களம், புல் விளைந்து கிடந்தது. பறவைகளின் ஒலி எங்கும் கேட்டது. மெல்லிதாக எதிரொலித்தது தேவவாக்கு விலங்கின் ஒலி.
மர அடிவாரத்தில் இருந்த சிறுமேட்டில் கொண்டுவந்த விலங்குக் கறியையும் உணவு வகைகளையும் இறக்கிவைத்தான்.

“தாய் தெய்வ வழிபாடுதான் எல்லாவற்றிலும் மூத்தது. கொற்றவை ஈன்ற பிள்ளைதானே முருகன். எனவே, ஆதிகாலம் தொட்டு இங்கு வழிபாடு நடந்துகொண்டிருக்கிறது. வீறுகொண்ட தாய் இவள். நம் மக்களைக் காக்க எந்தவிதப் போரிலும் நமக்கு வெற்றியைத் தருபவள். `போர் தெய்வம்’ எனப் போற்றப்படுபவள்” என்று சொல்லிக்கொண்டே பொருள்களைப் படையலிடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான் தேக்கன்.
மாணவர்கள், கசப்பைப் போக்க வழியில்லாமல் திணறிக்கொண்டிருந்தனர். அலவன் மட்டும் தேக்கன் சொல்லும் வேலைகளை இயல்பாகச் செய்துகொண்டி ருந்தான். பறித்துவந்த பழத்தைப், பெருவிரலால் அமுக்கி, கண் அமைத்தான் தேக்கன். ``நாம் கண் மூடி வழிபடும்போது நமக்காகப் பார்த்துக்கொண்டிருப்பவை அவைதான். எனவே, வழிபடும் முன் பழங்களுக்குக் கண் திறக்க வேண்டும்” என்று சொல்லியபடி கண் திறந்தான்.

``நாம் ஏன் கண் மூடி வழிபட வேண்டும்?” எனக் கேட்டான் அலவன்.

வேலைகளைச் செய்துகொண்டே தேக்கன் சொன்னான், “கண் மூடினால் இருள் வரும். இருளுக்குள்தானே நம் ஆதி அச்சங்கள் நிலைகொண்டுள்ளன. அவற்றை அங்கேயே வெற்றிகொள்ளும் ஆற்றல் நமக்கு வேண்டுமல்லவா? அதனால்தான், தெய்வங்கள் இருளுக்குள் வந்திறங்குகின்றன” எனத் தேக்கன் முடிக்கும்முன் அலவன் கூறினான்.  ``நான் இருளைக் கண்டு எப்போதும் அஞ்சியதில்லையே!”

என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை, “சரி, நீ வேண்டுமென்றால் கண் திறந்தே வழிபடு” என்றார்.

எல்லாவற்றையும் எடுத்துப் பரப்பும் வேலை முடிந்தது. தேக்கன் கைகளைக் குவித்து, கண் மூடி வழிபட்டான். மாணவர்களும் அதேபோல் வழிபட்டனர். அலவன் மட்டும் திறந்த விழிகளோடு கொற்றவையை வணங்கினான். சற்று நேரத்துக்குப் பிறகு, வழிபாடு முடித்த தேக்கன், படையலிட்ட பொருள்களை எடுத்து மாணவர்களுக்குத் தின்னக்கொடுத்தான்.

``கசப்பு மட்டுப்படும்” என்று சொல்லியபடி கொடுத்ததால், ஒரு கடி அளவு மட்டும் வாங்கிக் கடித்துக்கொண்டனர். அதை விழுங்கவே உயிர்போனது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38



எல்லா பழங்களும் கண் திறந்தே இருந்தன. ``நீதான் கண் மூடாமல் வழிபட்டவனாயிற்றே... உனக்கு எந்தப் பழம் தருவது?” எனக் கேட்டபடியே கறித்துண்டங்களை எடுத்துக் கொடுத்தான். அலவன் வாங்கிக்கொண்டான். ``கண் மூடி வணங்குகையில் நீங்கள் கண்டதென்ன?” எனக் கேட்டான் தேக்கன்.

எல்லோர் நினைவுக்குள்ளும் இருந்தது குலநாகினியின் முகம்தான். தாடை உடைவதைப் போல அழுத்திப்பிடித்த அந்த முகம் மறைய நாளாகும் எனத் தோன்றியது. யாரும் வாய் திறந்து பேசவில்லை. அலவன் மட்டும் சொன்னான், “நான் இரு கண்களைப் பார்த்தேன்.”

தேக்கன், மீதம் இருந்தவற்றை எடுத்துக் கொடுத்தபடியே கேட்டார், ``எதனுடைய கண்கள்... தேவவாக்கு விலங்கினுடைய கண்களா அல்லது பறவையின் கண்களா?”

“இரண்டும் அல்ல, அவை மனிதக் கண்கள்.”

மாணவர்கள், அந்த இடம்விட்டுப் புறப்பட ஆயத்தமாயினர். “மனிதக் கண்கள் இதற்குள் எப்படி இருக்கும்? யாரும் உள்நுழைய முடியாத பெருமரப்புதர் அல்லவா இது? அதுவும் பறம்பின் உச்சியில்!” என்று சொல்லியபடியே அந்த இடம்விட்டு நடக்கத் தொடங்கினர்.

கூத்துக்களம்விட்டு காட்டின் தென்திசை நோக்கி நுழைந்தனர். “காடறிதல் என்பது, பச்சைமலைத் தொடரின் எல்லா பகுதிகளையும் அறிந்துவருதல். அதன் தொடக்கம் எப்போதும் தென்திசைதான். திசையறிதல் பகலில் எளிது. இரவில் அதைவிட எளிது. விண்மீன்களைப் பார்த்தாலே போதும்” என்றான் தேக்கன்.

இவ்வளவு நேரமும் பேச்சுக்கு ஈடுகொடுத்துப் பேசிவந்த அலவன், எதுவும் கேட்காமல் இருந்தான். மற்ற மாணவர்கள் கசப்புக்கு அஞ்சி இன்னும் வாய் திறக்காமல் இருந்தனர். ‘அலவன் இந்நேரம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமே, ஏன் கேட்காமல் இருக்கிறான்?’ என்று குழம்பியபடியே அவனைப் பார்த்தான். அவன் குனிந்தபடியே நடந்து வந்தான்.

“ஏன் பேசாமல் வருகிறாய்?”

“நீங்கள் சொன்னதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தேன்.”

“திசையறிதல் பற்றியா?”

“இல்லை.”

“வேறு எதைப்பற்றி?”

“கண் மூடினால் என்ன நிகழும் என நீங்கள் சொன்னதை நான் நம்பினேன். ஆனால், கண் திறந்ததால் தெரிந்தது என்னவென்று நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லையே, அதைப் பற்றித்தான்.”

தேக்கன் ஒருகணம் பதற்றமானான். “மனிதக் கண்கள் அந்த மரப்புதருக்குள் எப்படி இருக்க முடியும்?” என்றான்.

“எப்படி இருக்க முடியும் என எனக்குத் தெரியாது. ஆனால், இருந்ததை நான் பார்த்தேன்” என்றான் அலவன்.

தேக்கன் சற்றே நிதானம்கொண்டு சிந்தித்தான். நாகக்குடியினரின் பார்வை ஆற்றல் அளவிட முடியாதது என்பது நினைவுக்கு வந்தது. `ஆனாலும், அந்தப் பெரும்புதருக்குள் மனிதர்கள் எப்படி, எங்கிருந்து போக முடியும்?’ சிந்தித்தபடி நின்றான்.

கேள்விகள் உருவாகிவிட்டால், அவை பதிலின்றி உதிராது. இயல்பாக உதிராத கேள்விகளை உடைத்தால், அவை மீண்டும் தழைக்கும். தேக்கன் முடிவுக்கு வந்தான். ஆசானுடன் மாணவனோ, மாணவனுடன் ஆசானோ சொல் மறுத்துப் பயணிக்க முடியாது. ‘அலவன் கருத்தை அவனே உதிர்த்தாக வேண்டும்’ என முடிவுசெய்த கணத்தில் தேக்கனின் கால்கள் திரும்பின.

மீண்டும் மர அடிவாரம் நோக்கி வந்தனர். இலையில் பரப்பி வைக்கப்பட்ட மீதப்பழங்கள் அப்படியே இருந்தன. அவை தேவவாக்கு விலங்குக்கு மிகப்பிடித்த பழங்கள். எனவே, ‘அச்சத்தால் உள் மறைந்திருக்கும் தேவவாக்கு விலங்குகள், நாம் அந்தப் பழங்களை வைத்துவிட்டுப் போனவுடன் வேகவேகமாக வந்து சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று அந்த விலங்கு வந்து பழம் எடுக்கவில்லையே’ எனச் சிந்தித்தபடியே நின்றான் தேக்கன். சிறிது நேரமானது. மழைக்காலமாதலால் உள்ளொடுங்கிக் கிடக்கும் என நினைத்தான்.

`அலவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வேலைகொடுப்போம். நினைவிலிருந்து கசப்பு மறைய உதவியாக இருக்கும்’ என முடிவுசெய்தான். குறிப்பிட்ட இடைவெளியில் எல்லோரையும் மரப்புதருக்குள் போகச் சொன்னான் தேக்கன். ``உள்ளே போகும்போது கொடிகளையும் சிறுகொப்புகைளையும் வளைத்து ஒன்றோடொன்று முடிச்சிட்டுக்கொண்டே போங்கள். அப்போதுதான் சரியான வழி பார்த்து வெளிவர முடியும். இல்லையென்றால், வெளிவர  திசை  தெரியாமல் மாட்டிக்கொள்வீர்கள். இந்த மரப்புதர் எவ்வியூரின் பாதி அளவு பரப்புகொண்டது. எனவே, கவனமாகப் போய்த் திரும்பவேண்டும்” என்றான். “நான் சீழ்க்கை அடித்ததும் சென்ற வழியிலேயே வெளியேறுங்கள்” என்றான். மாணவர்கள் கவனமாகக் கேட்டனர்.

“ஒருவேளை, வெளிவர முடியாத சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டால் சீழ்க்கையொலி எழுப்புங்கள். நான் உள்ளே வந்துவிடுகிறேன்.”

கசப்பிலிருந்து எண்ணங்கள் மாறி உள்ளே நுழைவதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியைக் காண்பித்தான் தேக்கன். ஆசானின் முதல் பயிற்சி தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டனர். இதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களை இயக்கத் தொடங்கியது.

மரம் விலக்கி உள்நுழைந்தனர். சிலருக்கு எளிதாக உள்நுழையும்படி இடைவெளி இருந்தது. சிலருக்கு உள்நுழைவதே கடினமாக இருந்தது. ஆனாலும், அனைவரும் உள்நுழைந்தனர். அலவன் எந்த இடத்தில் மனிதக் கண்களைப் பார்த்ததாகச் சொன்னானோ, அதை நோக்கி உட்செல்ல அனுப்பப்பட்டான்.

அவர்கள் செடி கொடிகளை விலக்கி உள்நுழையும் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளொடுங்கிப் போய்க்கொண்டிருந்தது. கார் காலமாதலால், செடிகொடிகளின் அடர்த்தி மிக அதிகமாக இருந்தது. எனவே, நுழைந்த சிறிது நேரத்திலேயே பார்வையிலிருந்து மறைந்தனர். தேக்கன் வெளியில் இருந்தபடி மரக்கூட்டத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

‘இந்த முறை பயிற்சி ஏன் உன்னுள்ளிருந்து தொடங்குகிறது?’ என, மனம் கொற்றவையிடம் கேட்டுக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல, `தான் எடுத்த முடிவு சரிதானா?’ என்ற வினா எழத்தொடங்கியது. `அலவன் பார்த்தது மனிதக்கண்கள் அல்ல என்று அவனை நம்ப வைக்க எல்லோரையும் உள்ளே அனுப்பியிருக்க வேண்டுமா?’ எனத் தோன்றியது. உள்ளிருந்து பறவைகள் கலையும் ஓசை அவ்வப்போது கேட்டது. தேக்கன் வெளியே காத்திருந்தான். ‘காவல்குடி வீரர்கள் இங்கு இருந்திருந்தால், இந்தச் சிக்கலே இல்லை. அவர்கள் பகரி வேட்டைக்குப் போய் இன்னும் ஏன் திரும்பாமல் இருக்கிறார்கள்?’  என வினாக்கள் நிற்காமல் எழுந்துகொண்டே இருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

‘தான் எடுத்த முடிவின்மீது இவ்வளவு மறுசிந்தனை இதுநாள்வரை வந்ததில்லை. இப்போதே வருகிறது? வயதானால் உறுதிப்பாடு அதிகரிக்கத்தானே வேண்டும்’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பொழுதும் கடந்துகொண்டிருந்தது. `உள்ளே சென்றவர்களை வெளியேறி வரச்சொல்லலாம்’ எனத் தோன்றியது.

குறுங்கட்டிதான் முதலில் உள்ளே போனவன். அவன் போன இடத்திலிருந்து முதல் சீழ்க்கையொலியை எழுப்பினான் தேக்கன். அடுத்து ஒவ்வொரு மாணவரும் உள்ளே நுழைந்த இடத்திலிருந்து சீழ்க்கை அடித்தான். சீழ்க்கையொலி ஈட்டிபோல சல்லெனக் காற்றில் பாய்ந்து செல்லக்கூடியது. அதுவும் தேர்ந்தவனின் அடிநாக்கிலிருந்து கிளம்பும் ஒலி மலைமுகட்டுக்குக்கூட கேட்கும். தேக்கன் மிகவும் கட்டுப்படுத்திக் குறிப்பொலியாக அதைப் பயன் படுத்தினான். சீழ்க்கையொலியைப் பல்வேறு முறையிலும் ஏற்ற இறக்கத்துடனும் பயன்படுத்தப் பழகியவன் அவன்.

மாணவர்கள் திரும்பும் ஓசை எதுவும் கேட்கிறதா எனக் கவனித்தபடி இருந்தான். அவர்கள் அதிகத் தொலைவு உள்நுழைந்துவிடவில்லை. மூன்று பனை தொலைவைக் கடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வேகமாக வந்து விடுவார்கள் எனக் காத்திருந்தான் தேக்கன்.

பறவைகள் கலையும் ஒலியும் பிற ஓசைகளும் கேட்டபடி இருந்தன. மாணவர்களின் சீழ்க்கையொலி எதுவும் கேட்காததால், ஆபத்து எதுவும் இல்லை என்பது புரிந்தது. தேக்கனின் கண்கள் வழிபார்த்துக் காத்திருந்தன.

குறுங்கட்டிதான் முதலில் வெளிவந்தான். மேலெல்லாம் செடி கொடிகள் சுற்றிக்கிடந்தன. எல்லாவற்றையும் இழுத்துப் பிய்த்துக்கொண்டிருந்தான். அடுத்து சிறிது நேரத்தில் மடுவன் வந்தான். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கியது. அவனைத் தொடர்ந்து அவுதி வந்தான். ஒருவர் பின் ஒருவராக வெளிவந்தனர். எட்டாவது ஆளாக அலவன் வந்தான். இன்னும் மூன்று பேர் வெளிவரவேண்டியிருந்தது.

அலவன் சொல்ல ஒன்றும் இருக்காது எனத் தேக்கனுக்குத் தெரியும். அதனால், வெளிவரவேண்டிய மூன்று பேரை நோக்கியே அவன் கவனம்கொண்டிருந்தான். ‘அவர் கேட்காததனாலேயே புரிந்துகொண்டார்’ என்பது அலவனுக்கும் தெரிந்தது. அவன் எவ்வளவு முயன்றும், உள்ளுக்குள் யாரும் தட்டுப்படவில்லை. உடலில் அங்குமிங்கும் கிழிபட்டாலும் உள்ளுக்குள் சிக்கிக் கொண்டால், இரவெல்லாம் அங்கேயே கிடக்க வேண்டியதாயிருக்கும். பொழுதுக்குள் வெளியேறி வந்தது, எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

சற்று நேரம் கழித்து இளமன் வந்தான். அவனைத் தொடர்ந்து முடிநாகன் வந்தான். மூத்தவனான கீதானியைத் தவிர எல்லோரும் வந்துவிட்டார்கள். பொழுதாகிக் கொண்டிருந்தது. கீதானி உள்ளே நுழைந்த இடத்தில் நின்று புதருக்குள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். வருவதற்கான ஓசை எதுவும் கேட்கவில்லை. தேக்கன் சற்றே புதர் விலக்கி உள்ளே பார்த்தான். இடைவெளியற்று இருப்பதால், எதுவும் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை சீழ்க்கை அடித்தான். மாணவர்கள் எல்லோரும் தேக்கனை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நேரமாகிக்கொண்டிருந்தது. தேக்கனின் முகக்குறிப்பு மாறத் தொடங்கியது. ‘இன்னும் சற்றுநேரத்தில் பொழுது மறைந்துவிடும். அதற்குள் அவன் வெளிவந்தால்தான் உண்டு. வர முடியாவிட்டால் அவன் சீழ்க்கை அடித்திருப்பானே, ஏன் அடிக்காமல் இருக்கிறான்? ஒருவேளை விலங்கால் கடுமையாகத் தாக்கப் பட்டிருப்பானோ! என்ன செய்வது, நாம் உடனே உள்ளே போகலாமா, உள்ளே போனால் எவ்வளவு தொலைவு போவது? இருட்டிவிட்டால், வெளியே புற்களுக்கிடையில் விழுந்து கிடப்பவனைத் தேடுவதே கடினம், இந்த அடர்புதருக்குள் எப்படித் தேட முடியும்?’ தேக்கன், முடிவெடுக்க முடியாமல் திணறினான்.

பறவைகள் அடையும் நேரமாகி விட்டதால், ஓசை அதிகமாகவே இருந்தது. ஆனாலும், தேக்கன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. மாணவர்களிலேயே கீதானிதான் மூத்தவன். உடல் வலுவில் மிகச் சிறந்தவன். அவன் எளிதில் விழுந்துவிட மாட்டான் எனத் தோன்றியது. ஆனாலும், அவன் ஓசை எழுப்பாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனம் திணறத் தொடங்கியது. எந்த முடிவு என்றாலும் விரைவில் எடுத்தாக வேண்டும். நேரம் கடந்துகொண்டிருக்கிறது. முடிவெடுக்க முடியாத தேக்கனின் தயக்கம் நீண்டு கொண்டி ருந்தது. மரங்களில் அடையும் பறவைகளின் ஓசை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

‘சரி, இனியும் காலம் தாழ்த்தவேண்டாம்’ என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளுக்குள் ஏதோ ஓசை கேட்பதுபோல் இருந்தது. தேக்கன் கூர்ந்து கவனித்தான். மாணவர் களும் உற்றுக் கவனித்தனர். உள்ளுக்குள்ளிருந்து செடி கொடிகளை விலக்கி நகரும் ஓசை துல்லியமாகக் கேட்கத் தொடங்கியது. அது, ஒருவன் நடந்துவரும் ஓசையல்ல; ஓடிவருபவனின் காலடியோசை என்பது புரியத் தொடங்கியது.

‘கீதானிதான் ஓடிவருகிறான். ஆனால், ஏன் ஓடிவர வேண்டும்? எதுவும் விலங்கு துரத்துகிறதா... அப்படியென்றால் சீழ்க்கை அடிக்கலாமே! நாம் உடனடியாக உள்ளே போய் உதவ  முடியும். ஏன் சீழ்க்கை அடிக்காமல் வருகிறான்? பலவற்றையும் சிந்திக்கும் ஆற்றல்கொண்டவன் தானே அவன். நிதானமாக வராமல், அவசரப் பட்டு ஓடத் தொடங்கினால் செடி கொடிகளை இங்கும் அங்குமாக விலக்கிப் போகும்போது ஏற்படுத்திவிட்டுப்போன முடிச்சுகளைப் பார்க்காமல் விட்டுவிடுவோம். வழி தெரியாமல் உள்ளுக்குள்ளே சுற்றவேண்டியிருக்கும்’ எனச் சிந்தித்தபடி பதற்றத்தோடு தேக்கன் நின்றுகொண்டிருந்தான். ஓசை நெருங்கத் தொடங்கியது. அவன் வேகம் மிகவும் கூடியது. எல்லோரும் உள்ளுக்குளிருந்து கீதானி என்னவாக வெளிவரப்போகிறான் என்ற பதற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38



ஒருகணத்தில் மர இடைவெளிகளைப் பிய்த்துக்கொண்டு வெளியே விழுந்தான் கீதானி. அவன்மேல் நூற்றுக்கணக்கான கொடிகள் சுற்றிக்கிடந்தன. ஓடிப்போய்ச் சூழ்ந்தனர் மாணவர்கள். மரத்துக்குள்ளிருந்து அவன் வந்த திசை நோக்கி முழு ஆவேசத்தோடு மறித்து நின்றான் தேக்கன். உள்ளுக்குள்ளிருந்து எந்த விலங்கு வந்தாலும், ஒரே அடியில் வீழ்த்தும் வெறிகொண்டு நின்றான் தேக்கன்.

வெளியில் வந்து விழுந்த வேகத்தில் ஏதோ சொல்ல வந்தான் கீதானி. கசப்பு, தொண்டையில் நஞ்சாய் இறங்கிக்கொண்டிருந்தது. அதையும் மீறி, ``தேக்கனைக் கூப்பிடு” என்று மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனைக் கைகாட்டிச் சொன்னான்.

மாணவர்கள் தேக்கனை உடனே அழைத்தனர். உள்ளுக்குள் இருந்து பார்வையை விலக்காமல் அரை மனத்தோடு கீதானியின் அருகில் வந்தான் தேக்கன். அவரைப் பார்த்து மூச்சிரைக்கச் சொன்னான், ``அவர்கள் வெளியேறுகிறார்கள்.”

தேக்கனுக்கு அவன் சொல்வது புரியவில்லை. கீதானியால் தெளிவாகப் பேச முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ பிரச்னை, அதைப்பற்றிச் சொல்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவன் வெளியேறிய பாதையிலிருந்து ஏதோ ஒன்று வரப்போகிறது எனத் தோன்றியது. கீதானியையும் மரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 38

தான் சொல்லவருவது தேக்கனுக்குப் புரியவில்லை என்பது கீதானிக்குத் தெளிவாக விளங்கியது. மூச்சிரைப்பை முயற்சிகொண்டு கட்டுப்படுத்தியபடி, நஞ்சுக் கசப்பை எவ்வளவு குடித்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்துக் கத்தினான்,  ``கிழவா… அவர்கள் எதிர்திசையில் வெளியேறி ஓடுகிறார்கள்.”

தேக்கன் அதிர்ச்சி அடைந்தான். அலவனுக்குப் புரியத் தொடங்கியது. சொல்லி முடித்த கீதானி, கசப்பின் கொடுமையைத் தாங்க முடியாமல் சுற்றியிருந்த செடி கொடிகளை வாயில் போட்டு அமுக்கிக் கடித்தான். கண்கள் பிதுங்கி நீர் தாரைதாரையாக வழிந்துகொண்டிருந்தது.

தேக்கனின் கைகள் முதன்முறையாக நடுங்கின. அவன் சொல்லவருவதை அறிவு நம்ப மறுத்தது. ஆனால், இனியும் நம்பாமல் இருக்க முடியாது. பன்றியின் கிடைவாய்க்கொம்பை இரு உள்ளங்கைகளிலும் இறுக்கிப் பிடித்தபடி, மரக்கூட்டத்தின் பின்புறம் நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். வாய் பிளந்து அவன் கத்திய ஓசையில் மரமெங்கும் இருந்த பறவைகள் படபடத்தன.

`நாமும் அவரைப் பின்தொடரலாம்’ என மாணவர்கள் எழுந்தபோது, அவர்களின் பார்வையிலிருந்து தேக்கன் மறைந்து நீண்ட நேரமாகியிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...