
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி
ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்காதீர்கள்!

சமீபத்தில் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். எப்போதும் பொலிவுடன் காணப்படும் அவள் முகம், காயங்களுடனும் வடுக்களுடனும் காணப்பட்டது. காரணம் விசாரித்தேன். ``டி.வி பார்த்துக்கொண்டிருந்த ஆர்வத்தில் குக்கரிலிருந்து எத்தனை விசில் வருகிறது என்பதைக் கவனிக்கவில்லை. வழக்கத்தைவிட விசிலின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பது மட்டும் புரிந்தது. ஓடிப்போய் குக்கரை அவசர அவசர மாகத் திறக்க, அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக அதன் மூடி சட்டென திறந்து, உள்ளே இருந்த சாதம் சிதறி என் முகமெல்லாம் தீக்காயம் போல ஆகிவிட்டது. பின்பு சிகிச்சை கொடுத்துப் புண்களைக் குணப்படுத்தினேன். வடுக்கள் மட்டும் இன்னும் மறையாமல் இருக்கின்றன’’ என்றாள்.
சமையலையும், பொழுதுபோக்கையும் தனித் தனியாகத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்; இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து குழப்பிக்கொண்டு ஆபத்துக்கு அழைப்பிதழ் வைக்கக் கூடாது. இது அனைவருக்குமே பொருந்தும்.
- எஸ்.சாந்தி, திருச்சி
சபாஷ்... சரியான போட்டி!

சமீபத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் பிள்ளைகள் வீட்டில் ஆளுக்கொரு அறையாகப் பிரித்துத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கவனித்த நான், ``விளையாடும் வயதில் பிள்ளைகளிடம் இப்படி வேலை வாங்குவது சரியா?’’ என அவரிடம் கேட்டேன். ``விடுமுறை நாள்களில் ஆளுக்கொரு அறையைத் தூய்மைப்படுத்தும் வேலையைப் போட்டியாக அறிவித்து, யார் சிறப்பாகத் தூய்மைப் படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பரிசளிப்பேன். இதனால் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வமாக வேலை செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு ஆரோக்கியமும் பின்னாளில் தான் இருக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டாகும். பிள்ளைப் பருவத்தில் கற்கும் விஷயம்தான், பெரியவர்களாகும் காலத்திலும் பின்பற்றத் தூண்டும்’’ எனப் பொறுமையாக விளக்கினார். இந்தப் பதிலைக் கேட்டு அவரைப் பற்றிப் பெருமிதம் அடைந்தேன்.
- ஏ.பிரியதர்ஷினி, திருப்பூர்
உடனே வாங்குங்கள் ரசீது!

நானும் என் தோழியும் ஒரு பூங்காவில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இரண்டு ஆண்கள் பேசியதைக் கேட்டோம். அவர்களில் ஒருவர், ``பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்று வரி கட்டி, ரசீது கேட்டபோது `கம்ப்யூட்டர் சரியா வேலை செய்யல. பிறகு வாங்க’ என்று சொல்லிவிட்டார். எனக்கு அங்கு சென்று ரசீது வாங்க நேரமே கிடைக்காமல் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஒரு சமயம் அரை நாள் லீவு போட்டுச் சென்று ரசீது கேட்டேன். `நீங்க எப்போ பணம் கட்டினீங்க? பணம் கட்டியிருந்தா ரசீது கொடுத்திருப்பேனே!’ என்றார். எவ்வளவு கேட்டும் அவர் பணம் கட்டவில்லை என்று சொல்லிவிட்டார். மேலும் மேலும் கேட்க விருப்பமில்லாமல் திரும்பி வந்துவிட்டேன்’’ என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இதைக் கேட்டு, `இது நமக்கும் ஒரு பாடம்தான்’ என்று உணர்ந்தோம்.
மக்களே, பணம் கட்டும் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக ரசீது வாங்க மறக்காதீர்கள்... உஷார்!
- கி.ஸ்ரீமதி மாலு, பல்லாவரம்
மனதை நிரப்பிய மகிழ்ச்சிக் காற்று!

சமீபத்தில் சைக்கிளில் காற்றடிப்பதற்காக ஒரு சைக்கிள் கடைக்கு என் மகளோடு சென்றிருந்தேன். காற்றடித்துவிட்டுக் காசு கொடுத்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கடைக்காரர். எனக்கோ குழப்பம். இதற்கு முன்பு நான் தனியாக வந்த சமயம் காற்றடித்து பைசா கொடுத்திருக்கிறேன். இப்போது வேண்டாம் என்று மறுக்கிறாரே என்று கேட்டபோது, ``அவர் என்னைப் போன்ற பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகக் காற்றடித்துக் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்’' என்று என் மகள் கூறிய விஷயம் எனக்கு மகிழ்ச்சி அளித்ததோடு, அவர் மேல் மரியாதையையும் வரவழைத்தது.
கடை நடத்துவதை வெறும் வியாபாரமாக நடத்தாமல், சேவையாகவும் நினைக்கும் இவர் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் சமூகம் சிறக்கும்.
- எஸ்.வி.எஸ். மணியன், கோவை