Published:Updated:

"ஒழிவுதிவசத்தே களி... நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொள்ளமுடியுமா?" - மலையாள கிளாசிக் - 20

"ஒழிவுதிவசத்தே களி... நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொள்ளமுடியுமா?" - மலையாள கிளாசிக் - 20

`மலையாள கிளாசிக்' தொடரின் 20-வது பகுதி. `ஒழிவுதிவசத்தே களி' படம் குறித்த விரிவான கட்டுரை.

Published:Updated:

"ஒழிவுதிவசத்தே களி... நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொள்ளமுடியுமா?" - மலையாள கிளாசிக் - 20

`மலையாள கிளாசிக்' தொடரின் 20-வது பகுதி. `ஒழிவுதிவசத்தே களி' படம் குறித்த விரிவான கட்டுரை.

"ஒழிவுதிவசத்தே களி... நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொள்ளமுடியுமா?" - மலையாள கிளாசிக் - 20

சமீபத்தில் `ஒழிவுதிவசத்தே களி'யெல்லாம் ஒரு படமா என்று யாரோ சொல்லியிருந்ததாகப் படித்தேன். உண்மையைச் சொல்லவா. அது படமில்லை. அதில் ஒரு சினிமாவாக நாம் காணக்கூடிய எந்தத் திருவிழா கோலாகலமும் இல்லை. ஒரு வைடு, ஒரு மிட்டு, ஒரு க்ளோசு இல்லை. நமது கண்களைப் பார்த்துக்கொண்டு ஒரு நடிகனோ, நடிகையோ சவால் வைக்கவில்லை, அல்லது உதடு நனைக்கவில்லை. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த ஒரு பாஷையில் தங்களிடம் உள்ள ஒரு கதையை தங்களிடம் இருந்த சொற்பக் காசில் படமெடுத்துக் காட்டி பாராட்டுகளை வாங்கிப் போனார்கள். மாற்று சினிமா என்றாலே மேதமையைக் காட்டுவதுதான் என்கிற சுளுவான சூத்திரத்துக்குள் கூட அவர்கள் படுத்துக்கொள்ளவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். ஆமாம், ஏதாவது நாஸ்டாலஜியா நான்சென்ஸுகளில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது எல்லாம் பழக்கமாக இருக்கிற ஒரு சில சோம்பலான ரசிகர்களுக்கு இதெல்லாம் படமாகத் தெரியாது. நாமும் இதைப் படமில்லை என்றே சொல்கிறோம். அனுபவம். படத்தில் ஆழ்ந்து இருந்து அனுபவம் கொண்டவாறு இருக்கும்போதுதான் படத்தின் இறுதியில் தாசனைக் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கச் செய்து, ஒரு கொலை செய்திருக்கிறோம் என்பதற்குத் திடுக்கிட முடியும்.

கதைப்படி படம் முழுக்க குடி.

அது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

ஒருவன் குடித்துவிட்டு அந்தக் கொடுமையைச் செய்துவிட்டான் என்கிறோம். அதைப்போல குடித்துவிட்டு வார்த்தையை விட்டுவிட்டான் என்பார்கள். அப்படி இல்லை. அந்தக் குற்றத்தைச் செய்வது குடியல்ல. அவனுக்குள்ளே இருப்பதை அது கொண்டு வருகிறது என்பதற்கு மட்டுமே குடிக்குப் பொறுப்பு இருக்க முடியும். குடி ஒரு மீடியம். பெரிய மேதையிலிருந்து தெருவில் சுற்றுகிற யாரோ ஒரு காகிதம் பொறுக்கி வரை நார்மலில் இருந்து அப் நார்மலுக்குச் சென்று தன்னைத்தானே சந்தித்து விட்டு வருகிற சாகசத்துக்கு ஆட்பட்டுதான் திரும்பத் திரும்பக் குடிக்கிறார்கள். அவர்களுக்கே அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. சொல்லப்போனால், இந்த மீடியத்தை எடுத்துக்கொண்டுதான் இப்படத்தின் போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் நமது அடியாழத்தில் எவ்வளவோ துடிப்புகளை அமுக்கித் தூங்க வைத்திருக்கிறோம். இப்படத்தில் குடி அப்படித் தூங்கிக் கொண்டிருந்தவற்றைத் தட்டி எழுப்புகிறது.

கொலை நிகழ்கிறது.

கேரளாவில் தேர்தல் நடக்கிற ஒரு மழைக்கால நாளில் விடுமுறையைக் குடித்துக் கொண்டாட ஐந்து நண்பர்கள் ஒதுங்குகிறார்கள். அந்த இடம் அபாரமான தனிமையைக் கொண்டது. இயற்கை தனது துடிப்புமிக்க அமைதியுடன் புதிராகப் புன்முறுவலிக்கிற ஓர் இடம். பீர் குடிக்க ஆரம்பித்து, குளித்து, கூட்டு செய்வதற்குப் பலாப் பழத்தை வெட்டி, கோழியைப் பிடித்துக் கொன்று, சமையல் வேலையை நடக்கச் செய்து, நண்பர்கள் குடியைத் துவங்குகிறார்கள். பாட்டும், ஜோக்குகளும், விவாதங்களும் நடக்கின்றன. இவர்கள் சந்தோஷத்தை உருவாக்கி அதை அனுபவிப்பதற்கு நடுவே குறைந்தது மூன்று பேருக்காவது கீழே சமையல் செய்துகொண்டிருக்கிற கீதாவின் மீது பிரங்ஞை இருக்கிறது. அவள் அன்று தனது சமையலை முடித்துக் கிளம்பாமல் போயிருந்தால், அந்த விளையாட்டின் மையப் புள்ளியாய் அவளாகத்தான் இருந்திருப்பாள். என்ன விதமான விபரீதங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. நல்லவேளையாய் கூட்டத்தில் பெரும் புள்ளியான தர்மனை அறைந்துவிட்டு அவள் மறைந்து போகிறாள்.

குடியின் போதை ஏறிக்கொண்டே வருகிறது.

பல உண்மைகள் வெளி வந்தவாறு இருக்கின்றன.

எந்தப் பெண்ணையும் பலத்தைப் பயன்படுத்தி வசப்படுத்துவதுதான் அசலான ஆண்மகனின் காரியமென்று நாராயணன் சொல்லும்போது, அப்படியெனில் தினமும் உனது மனைவியைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்கிறான், வினயன். முட்டுகிறது. தர்மன் எமர்ஜென்ஸி காலத்தை நியாயப்படுத்தி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை வினயன் மறுப்பது ஒரு வர்க்கப் பிரச்னை. நான் வாங்கிக்கொடுக்கிற எச்சிலைக் குடித்துத் தின்றுவிட்டு என்னையே நீ என்கிறாயா என்று தர்மன் தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக்கொள்கிறான். கொட்டிக் கொண்டிருக்கிற பேய் மழையில் வினயன் கோபித்துக்கொண்டு கிளம்பும்போது, மற்றவர்கள் சமாதானம் செய்கிறார்கள். நம்பூதிரி சரக்கு வாங்கி வந்திருக்கிறார். அடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்த நண்பர்கள், ஏதோ ஒரு புள்ளியில் அணைத்துக்கொண்டு கண்ணே மணியே என்று கொஞ்சிக்கொள்கிறார்கள். மறுபடியும் குடிக்கிறார்கள். பலவற்றையும் விவாதிக்கிறார்கள். இறுதியில் பேச்சு மெள்ள சாதி பக்கத்தில் வருகிறது.

படத்தின் இறுதியில் சாகப்போகிற தாசன் பெயரிலேயே ஒரு சுமை இருக்கிறது. அவன் படித்துக்கொண்டு நல்ல உத்தியோகத்திலிருந்து சாதியைக் கடக்க முயல்கிறவன். சந்தடியில்லாத காட்டினுள் உள்ள நீர்நிலையை நெருங்கும்போது முதலில் சந்தோஷத்துடன் கூச்சலிடுபவன் அவன்தான். அவன்தான் அடித்துப் புரண்டு முதலில் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன்தான் பலாவை வெட்ட மரத்தின் மீது ஏற வேண்டியிருக்கிறது. அவன்தான் இறைச்சிக்கான கோழியைக் கொல்ல வேண்டியிருக்கிறது. குடி விவாதங்களில் சமரசம் செய்வதைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் எல்லாம் அவன் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு இருக்கிறான். சூடான அரசியல் விவாதங்கள். அவனுக்கு அரசியல் முக்கியம். இப்போது சாதியைப் பற்றின அந்தப் பேச்சு அவனை மௌனமாக்குகிறது. அவனைச் சரி செய்யும் பொருட்டு அவனை சாந்தப்படுத்தியவாறு அவனிடமே ஒரு பாட்டு பாடு என்று வற்புறுத்துகிறார்கள். அவனுமே பாடுகிறான். அது ஒரு கவிதை.

உலகெங்கும் அடித்து அமர்த்தப்பட்ட கறுப்பு மக்களின் நெஞ்சம் வீறிடும் ஒரு சவால் கவிதை அது.

ஆமாம், அதுவே தலித்தின் கவிதையும்கூட!.

கவிதை முடிந்தவுடன் அனைவரும் பால்கனிக்கு நகர்ந்து செல்கிறார்கள்.

தாசன் மன்னிப்பு கேட்கிறான்.

அப்புறம்தான் எவ்வளவோ உள்ளடுக்குகள் கொண்ட அந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு துவங்குகிறது. உடனடியாய் நம்பூதிரி நீதிமானின் இடத்தில் அமர்ந்து கொள்கிறார். தவறுகளுக்குத் தண்டனைகள் உண்டு. ஆனால், தண்டனைகள் வந்துவிடாமல் லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக் கொள்கிறார்கள். இறுதியாய் திருடனாய் எஞ்சுகிறவன், தாசன்.

இவன் நமது அமைப்பை நொறுக்கப் பார்க்கிற வஞ்சகன். தேசத் துரோகி என்று கூக்குரலிடுகிறார்கள்.

நம்பூதிரி களி கொண்டு தீர்ப்பை வெகு ஆசையுடன் சொல்கிறார். சாகும்வரை அவனைத் தூக்கிலிட்டுக் கொல்லவும்!

தாசனை முற்றுகையிட்டு அவனது கரங்களைக் கட்டி அவனது கழுத்தில் தூக்குக் கயிற்றைப் போடும்போது அவன் அதற்கு மறுப்பு சொல்லிக் கூக்குரலிடும் நியாயங்கள் வெளியே வரவில்லை. இவர்கள் தங்களை மறந்து தங்களுக்குள் இருந்து வெளிவந்தவர்களாக மாறி, பரவச நிலையை எய்தியிருக்கிறார்கள். நடப்பது விளையாட்டா, விபரீதமா என்பதை முடிவெடுக்க ஒருவருமே இல்லை. இறுதியாய் அவன் தாசன்தானே, தாசன் என்பவன் அடிமையல்லவா. அவனது உயிருக்குப் பெரிய மதிப்பை எல்லாம் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். தூக்கிப் போடுங்கடா. தொங்க விடுங்கடா.

தாசன் உடுதுணியெல்லாம் உருவப்பட்டு, அரை நிர்வாணமாக நாக்குத்தள்ளி சடலமாக தொங்கிக் கொண்டிருக்கிறான்.

நாம் நமது திடுக்கிடலை மறைத்துக்கொண்டு அடுத்தகட்டத்துக்குப் போவோம்.

வயநாடு ஓர் அற்புதம். அங்கே மழை பொழிவது என்பது எப்பேர்ப்பட்ட சம்பவம்? அதிலும், வலுவான மழை. வினயனும் தர்மனும் சண்டைபோட்டு சமாதானம் ஆகிற வரை நமக்குக் காட்டப்படும் அந்த ஆக்ரோஷமான மழைக்காகவே படத்தைப் பத்து முறை பார்க்கலாம். அதுபோல பல காட்சிகள் இருக்கின்றன. நாம் வியப்பதற்கு கீதா என்கிற அந்தப் பெண்மணியின் சீற்றம்போல படத்தில் வேறு பலவும் இருக்கின்றன. யாரும் பெரிய பிரபலங்களோ தொழில்முறை நடிகர்களோ இல்லை என்பது பல முறை சொல்லப்பட்டிருப்பதைப் படித்திருப்போம். வெட்டுகளே இல்லாத நீளமான காட்சிகளில்கூட இது நிகழ்த்திக் காட்டுவது என்கிற ஐயமே வரவிடாது, அத்தனை பேரும் தங்களுடைய குண சித்திரங்களை இழந்துவிடாமல் நடித்தவாறே இருந்தார்கள். எந்த நெருக்கடியான வளைவுகள் வந்தபோதிலும், அவர்களுடைய சிறு சிறு உடல் மொழிகள் மறக்கப்படவே இல்லை. தர்மன் என்று ஓர் ஆள் அயோக்கியன் என்றால், அந்த நடிகனே ஒரு பெரிய அயோக்கியனாகப் படுவது படத்தின் பெரிய வெற்றி. கீதாவாக நடித்த அபிஜா சிவகலா ஒரு மகத்தான நடிகை என்பது எனக்கு எப்போதுமான அபிப்ராயம்.

ஒளிப்பதிவு பற்றிச் சொல்வதற்கு, விவரிப்பதற்கு, விதந்தோதுவதற்கு எதுவுமே இல்லை. மிகச் சுருக்கமாய் அதை நான் ஓர் அர்ப்பணிப்பு என்று சொல்ல விரும்புகிறேன். இந்திரஜித் தன்னுடைய படமாகவே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உன்னி.ஆர் எழுதிய சிறுகதை.

`காளி ஆட்டம்' என்கிற சிறு தொகுப்பில் இந்தக் கதை இருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்தவர், சுகுமாரன். இப்போதுதான் நண்பர் ஜெகா ஜெகதீசன் ஒரு குறிப்பில், `கதையின் க்ளைமாக்ஸில் இருந்த வீரியம் படத்தில் இல்லை' என்றார். எனக்குமே அதில் உடன்பாடுண்டு. ஆனால், ஒன்றை மற்றொன்றாக மறுபடைப்பு செய்வதே அசல் கலைஞனின் வேலை. வேறு ஒரு கோணத்தில் உன்னியை இயக்குநர் சிறப்பு செய்திருக்கிறார் என்று நம்புகிறேன். நண்பரிடம் முடிந்தால் இன்னுமொரு முறை படத்தைப் பார்க்க வேண்டிக்கொள்கிறேன். நான் இப்போதுமே படம் முடிந்தவுடன் உன்னியைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதால், சொல்கிறேன். பல விதத்திலும் அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

அடுத்ததாய், தாசன் அந்தக் கவிதையைச் சொல்லும்போது பின்னணியில் இசை மிக மெதுவாக உறுமுவதைக் கேட்கமுடியும்.

அதைத் தொடர்ந்து நாம் இசையைக்கூட பின்தொடர்ந்து செல்கிறோம்.

பாசில் ஜோசப்புக்கு நன்றி.

முதலில் 1000 பேர் வந்து தங்கிப்போகிற சத்திரம், சாவடி இவற்றில் இருந்தெல்லாம் வெளியேறி, பழக்கங்களை முற்றிலுமாக அறுத்துக்கொண்டு, நான் விரும்பிய சினிமாவை நான் விரும்பும் விதத்தில் எடுப்பது என்கிற தீரம் இருக்கிறது இல்லையா... அதற்கே ஒரு கும்பிடு!. சனல் குமார் சசிதரன் ஓர் அலை. ஓர் ஆரம்பம். நினைத்தால் சாக்லேட் படங்களை எடுத்துக் காசு பார்த்திருக்கலாம். புதிய கரு, புதிய மொழி, புதிய அனுபவம் இவற்றுடன் அவர் பயின்ற படிப்பும் அனுபவமும் படத்தில் இருக்கிறது. அகங்காரம் இருக்கிறது. எல்லாவற்றையும் அணுகிவிடக்கூடிய மன மொழியைப் பலருக்கும் கடத்துகிறார் என்று நினைக்கிறேன். `எஸ்.துர்கா' கூட நமக்கு உண்டாக்கின அலுப்புக்கு, நமது சோம்பேறித்தனம்தான் காரணமாக இருக்கமுடியுமே தவிர, அவருடைய தீவிரத்தன்மைக்கு எந்தக் குறைச்சலும் கிடையாது. அவரது அடுத்த படத்துக்காகப் பல மக்களைப்போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

காடு சூழ்ந்த இடத்துக்கு வந்து சேர்ந்து குளிக்கப்போகிற இடத்தின் நிசப்தத் தன்மையை உணர்ந்த உடனேயே தன்னையறியாமல் தர்மன் ஒரு வசனம் சொல்கிறான், அப்போது போதைகூட இல்லை. அது இப்படி வரும்.

எவனையாவது கொன்று முடித்து இங்கே முழ்கடித்தால் கடவுளுக்குக்கூட தெரியாது!.

உள்ளே இருக்கிற மிருகம் எப்போது வெளியேறி வேட்டை நிகழ்த்துமோ, நமக்கு அந்தத் தருணம் எப்போது வாய்த்துவிடுமோ, ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால், நமக்கான பலி மிருகங்களாய் கொஞ்சம் அடிமைகளையும், பெண்களையும்தாம் தேர்வு செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இன்று வரையில் நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொண்டு விடலாமா என்பதும் தெரியவில்லை.